நந்தினி சேவியர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நந்தினி சேவியர்
நந்தினி.jpg
பிறப்புமே 25, 1949(1949-05-25)
மட்டுவில், யாழ்ப்பாண மாவட்டம், இலங்கை
இறப்பு16 செப்டம்பர் 2021(2021-09-16) (அகவை 72)
திருகோணமலை, இலங்கை
தேசியம்இலங்கைத் தமிழர்
அறியப்படுவதுஈழத்து எழுத்தாளர்

தே. சேவியர் என்ற இயற்பெயர் கொண்ட நந்தினி சேவியர் (25 மே 1949 – 16 செப்டம்பர் 2021) ஈழத்துப் படைப்பாளிகளில் ஒருவர். கவிதை, சிறுகதை, நாவல், பத்தி, விமர்சனக்கட்டுரை ஆகிய துறைகளில் தமது ஆளுமையைச் செலுத்தியவர்.

வாழ்க்கைச் சுருக்கம்[தொகு]

சேவியர் யாழ்ப்பாணம் தென்மராட்சி மட்டுவிலைப் பிறப்பிடமாகக் கொண்டவர். திருகோணமலையில் வசிக்கிறார். பாடசாலைக்கல்வியை மட்டுவில் கல்வயல் சைவப்பிரகாச வித்தியாசாலை, மட்டுவில் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை,சுழிபுரம் விக்டோரியாக் கல்லூரி, வதிரி திருஇருதயக் கல்லூரி ஆகியவற்றில் கற்றார். பின்னர் யாழ் தொழில்நுட்பக் கல்லூரியிலும் பயின்றார். இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி (சீனச்சார்பு) வாலிப சங்க இயக்கத்தில் இணைந்து செயற்பட்டவர். இலக்கியச் செயற்பாடுகளுடன் சமூகச்செயற்பாடுகளிலும் முன்நின்று உழைத்தவர்.

இலக்கியப் பங்களிப்பு[தொகு]

சிறுகதைத்துறையிலேயே நன்கு அறியப்பட்டவர். நந்தினி சேவியர் என்ற பெயரிலேயே அதிகமும் எழுதிவந்தார். இவருடைய பத்தி எழுத்துக்கள் மற்றும் கட்டுரைகள் சில வ.தேவசகாயம், தாவீது கிறிஸ்ரோ ஆகிய பெயர்களிலும் வெளிவந்துள்ளன. நாவல்கள் குறுநாவல்கள் கட்டுரைகள், பத்தி எழுத்துக்கள் ஆகியவற்றை எழுதியிருந்தாலும் அவை இன்னமும் நூல்வடிவம் பெறவில்லை. இவரின் சிறுகதைகள் மாத்திரமே இரண்டு தொகுதிகளாக வெளிவந்துள்ளன. இவருடைய படைப்புக்கள் தாயகம், மல்லிகை, வாகை, அலை, புதுசு, இதயம், ஒளி,சிந்தாமணி, வீரகேசரி, தொழிலாளி, சுதந்திரன், ஈழமுரசு, ஈழநாடு ஆகிய சஞ்சிகைகளிலும் பத்திரிகைகளிலும் வெளிவந்துள்ளன. இலங்கை வடமாகாண கல்வி அமைச்சு கலை இலக்கியச் செயற்பாடுகளுக்கு இவர் செய்த பங்களிப்பு முக்கியமானது.

மேகங்கள், கடற்கரையில் தென்னை மரங்கள் நிற்கின்றன ஆகிய நாவல்களையும் ஒரு வயதுபோன மனிதரின் வாரிசுகள் என்ற குறுநாவலையும் எழுதியுள்ளார். ஆனால் அவை இன்னமும் பிரசுர வடிவம் பெறவில்லை.

பாடநூலில் பங்களிப்பு[தொகு]

2012 ஆம் ஆண்டிலிருந்து 'தரம் 10 தமிழ்மொழியும் இலக்கியமும்' என்ற பாடநூலில் "நந்தினிசேவியர் சிறுகதைகள்" என்ற முருகையனின் கட்டுரை சேர்க்கப்பட்டுள்ளது.

ஆய்வரங்கு[தொகு]

தமிழ்நாட்டில் செப்ரெம்பர் 2000 இல் காலச்சுவடும் சரிநிகரும் இணைந்து நடாத்திய தமிழினி 2000 மாநாட்டில் கலந்து கொண்டு 'இருபதாம் நூற்றாண்டில் ஈழத்துத் தமிழ் மார்க்சிய இலக்கியம்' என்ற கட்டுரையை சமர்ப்பித்து உரை நிகழ்த்தினார்.

வெளிவந்த நூல்கள்[தொகு]

  • அயல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் (சிறுதைத் தொகுப்பு) பதிப்பு 1993, வெளியீடு - தேசிய கலை இலக்கியப் பேரவை
  • நெல்லிமரப் பள்ளிக்கூடம் (சிறுகதைத் தொகுப்பு) பதிப்பு 2011, வெளியீடு கொடகே.
  • நந்தினி சேவியர் படைப்புகள், 2014 டிசம்பர், விடியல் பதிப்பகம், சென்னை.

பெற்ற கெளரவங்கள்[தொகு]

  • ஈழநாடு பத்திரிகையின் 10வது ஆண்டு நிறைவையொட்டி அகில இலங்கை ரீதியில் நடத்தப்பட்ட நாவல் போட்டியில் ‘மேகங்கள்’ என்ற நாவல் இரண்டாம் பரிசு பெற்றது.
  • பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்ச்சங்கம் 50 வது ஆண்டு நிறைவையொட்டி நடத்திய நாவல் போட்டியில் ‘ஒரு வயதுபோன மனிதரின் வாரிசுகள்’ என்ற குறுநாவல் தங்கப் பதக்கத்தை முதற்பரிசாகப் பெற்றது.
  • 1993 இல் வெளிவந்த சிறந்த சிறுகதைத்தொகுப்புக்கான முதற்பரிசை விபவி சுதந்திர இலக்கிய அமைப்பு 'அயல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள்' என்ற நூலுக்கு வழங்கியது.
  • உள்ளுராட்சித் திணைக்களம் நடத்திய ‘தமிழின்பக் கண்காட்சி’ யில் 'அயல்கிராமத்தைச் சேர்ந்தவர்கள்' நூலுக்கு முதற்பரிசு வழங்கியது.
  • இவரது இலக்கியப் பங்களிப்புக்காக 2011 இல் கிழக்கு மாகாண முதலமைச்சர் விருது கிடைத்தது.
  • 2015 கொடகே வாழ்நாள் சாதனையாளர் விருது[1]
  • வடமாகாண சிறந்த நூல் பரிசு, 2012 - நெல்லிமரப்பள்ளிக்கூடம் (சிறுகதைத் தொகுதி)
  • சாகித்திய மண்டலப் பரிசு, 2012 - நெல்லிமரப் பள்ளிக்கூடம் (சிறுகதைத் தொகுதி)
  • கிழக்குமாகாண சிறந்த நூல் பரிசு (பல்துறை) - நந்தினி சேவியர் படைப்புகள்
  • கலாபூஷணம் விருது - 2013
  • பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்ச் சங்கம் 2014-2015 ஆம் ஆண்டுக்கான "சங்கச் சான்றோர் விருது" வழங்கிக் கெளரவித்தது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "நந்தினி சேவியருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது". 12 செப்டம்பர் 2015. 2015-09-16 அன்று மூலம் பரணிடப்பட்டது. 13 செப்டம்பர் 2015 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நந்தினி_சேவியர்&oldid=3587310" இருந்து மீள்விக்கப்பட்டது