நண்டு லுங்கிகள்
நண்டு லுங்கிகள் (Nandu Brand Lungi) என்பது ஆண்களுக்கான ஒரு இந்திய ஆடை வணிகக்குறி ஆகும். இது சிறீ மாதங்கி டெக்ஸ்டைல்சு நிறுவனத்தின் தலைவர் கடிகாச்சலத்தின் முயற்சியினால் உருவானது. நண்டு லுங்கிகள் நிறுவனம், இராணிப்பேட்டை மாவட்டம், நெமிலியை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. இது பருத்தியில் நெய்யப்பட்ட கைலிகளை விற்பனை செய்துவருகிறது. நண்டு லுங்கிகள் நிறுவனம் ஆடைத் துறையில் கணிசமான சந்தையைப் பிடித்துள்ளது. இந்த நிறுவனம் பிரீமியம் லுங்கி, எலைட் லுங்கி, எலைட் கைக்குட்டை, குளியல் துண்டு, வண்ண வேட்டிகள் என தனித்துவமான துணி வகைகளை தயாரித்து வருகிறது.[1]
நிறுவன வரலாறு
[தொகு]துவக்க ஆண்டுகளில்
[தொகு]நண்டு லுங்கிகள் வணிகக்குறியின் நிறுவனரான கடிகாச்சலம், தமிழ்நாட்டின் இராணிப்பேட்டை மாவட்டம், நெமிலியைச் சேர்ந்தவர். இவர் கைலி வணிகத்தை பின்னணியாக கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர். 10 ஆம் வகுப்பு வரை படித்த கடிகாச்சலம், பின்னர் தந்தைக்கு உதவியாக கைலி தொழிலை கவனித்து வந்தார். இவரது குடும்பத்தினர் நெமிலியில் இருந்து சென்னை மண்ணடி, குடியாத்தம் போன்ற பகுதிகளில் செயல்பட்ட பெரிய நிறுவனங்களுடன் கைலி வணிகத்தை செய்துவந்தனர். இவர்களின் தயாரிப்புகளை பெரிய நிறுவனங்கள் தங்கள் வணிகக் குறியை இட்டு, அதை விற்றுவந்தனர். தரமான கைலிகளை தயாரிக்கும் நாம் ஏன் தனியாக ஒரு வணிக் குறியை உருவாக்கக்கூடாது என்ற எண்ணத்துக்கு கடிகாச்சலம் வந்து சேர்ந்தார். தன் 30 ஆவது வயதில் கடிகாச்சலம் ஒரு வணிக்குறியை உருவாக்கும் முயற்சியில் கடிகாச்சலம் ஈடுபட்டார். தன் இராசியான கடகத்தையே வணிக் குறியாக மாற்றினார்.[1]
நண்டு வணிகக் குறியில் கைலிகளை தரமாகவும், நியாயமான விலையிலும் சந்தையில் விற்கத் தொடங்கினர். துவக்கத்தில் வாடிக்கையாளர்கள் தயங்கினாலும், பின்னர் விற்பனை சூடுபிடிக்கத் தொடங்கியது. தமிழ்நாட்டில் வணிகம் நல்லமுறையில் வளர்ந்ததைத் தொடர்ந்து, ஆந்திரம், தெலங்காணா, ஒடிசா, மேற்கு வங்கம் உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு நண்டு லுங்கிகள் விற்பனைக்கு வந்தன.
பிற வணிகக்குறிகள்
[தொகு]புதிய கைலியை வாங்கினால் சிலவருக்கு அதை அப்படியே உடுத்துவதில் வசதியாக இருப்பதில்லை. நான்கைந்துமுறை துவத்த பிறகே உடுத்த நன்றாக இருக்கும். இதை கவனத்தில் கொண்டு எலைட் வாசபல் நண்டு லுங்கிகளை நிறுவனம் அறிமுகப்படுத்தியது. மேலும் கைலிகளை வாங்கிய பிறகு ஓரம் தைக்கவேண்டிய சூழல் இருந்த நிலையில் இந்நிறுவனம் ஓரம் தைத்தே கைலிகளை விற்பனைக்கு அனுப்புகிறது. பின்னர் இதையே பிற கைலி நிறுவனங்களும் பின்பற்றத் தொடங்கின.[1]
இவர்களின் எலைட் லுங்கிகள் மெல்லியதாகவும், உடுத்த வசதியாகவும் நிறம், தரம், வடிவமைப்பு நேர்தியாக உள்ளதாக உருவாக்கபட்டன. கைலி தயாரிப்பில் மட்டும் நிற்காமல் எலைட் துண்டு என்ற வணிகக் குறியில் துண்டுகளும், 2017 இல் எலைட் கர்ச்சிப் என்ற வணிகக் குறியில் கைகுட்டைகள் அறிமுகப்படுத்தினர். கைலிகளைப் போல கைகுட்டையிலும் துவைத்த கைகுட்டைகளை வாசபல் கர்சிப் என அறிமுகப்படுத்தினர். வெண்மை நிறமான பாரம்பரிய வேட்டிகளுக்கு மாற்றாக, வண்ண வேட்டிகளை இந்த நிறுவனம் தயாரித்து விற்கிறது.[1]
நிலைத்தன்மை முயற்சிகள்
[தொகு]ஒரு கட்டத்தில் நண்டு லுங்கிகள் பாரம்பரிய கைலி தயாரிப்பில் மாற்றங்களைச் செய்ய விரும்பியது. அதன் படி வழக்கமான நிற வடிவமைப்புக்கு பதிலாக புதிய வடிவமைப்புகளையும், வண்ணங்களையும் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. நண்டு வணிகக் குறியில் சட்டைகளை அறிமுகப்படுத்தவும் நிறுவனம் திட்டமிட்டு வருகிறது.[1]
தற்போது, இந்த வணிகக்குறி வங்கதேசம், இலங்கை, மியான்மர், மலேசியா, இந்தோனேசியா, மத்திய கிழக்கு, பிரான்சு உள்ளிட்ட நாடுகளில் தனது பொருட்களை விற்கிறது.[1]