நட்சத்திரங்களின் சாலை

ஆள்கூறுகள்: 22°17′35.15″N 114°10′29.14″E / 22.2930972°N 114.1747611°E / 22.2930972; 114.1747611
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிம் சா சுயி இல் நட்சத்திரங்களின் சாலை தொடங்கும் இடத்தில் கட்டப்பட்டிருக்கும் திரைப்படச் சுருளை ஆடையாக உடுத்திய சினிமா தேவதைச் சிலையின் காட்சி
கடல்மேல் கட்டப்பட்டிருக்கும் நட்சத்திரங்களின் ஒழுங்கை காட்சி

நட்சத்திரங்களின் சாலை அல்லது நட்சத்திரங்களின் ஒழுங்கை (Avenue of Stars) என்பது ஹொங்கொங், சிம் சா சுயி நகரில், விக்டோரியா துறைமுகத்தின் கவுலூன் பக்கக் கரையோரமாக, கடல்மேல் கட்டப்பட்டுள்ள, ஒரு அகன்ற உலாச்சாலையாகும். இதன் நீளம் 440 மீட்டர்களாகும். இது ஹொங்கொங்கின் திரைப்பட சினிமா நட்சத்திரங்களை கௌரவிக்கும் வகையில் 2004 ஆம் ஆண்டு கட்டப்பட்டதாகும். இந்த உலாச்சாலை ஹொங்கொங் வாழும் மக்களை மட்டுமல்லாமல், ஹொங்கொங் வரும் சுற்றுலா பயணிகளையும் கவர்ந்திழுக்கும் முதன்மையான இடங்களில் ஒன்றாகும். இரவு நேரத்தில் மின்மினி மின்சார விளக்குகள், சாலையின் நிலத்தில் மிளிர, உலாச்சாலை நெடுகிலும் பட்டொளி வீசி பார்ப்போரை பரவசப்படுத்தும். அத்துடன் ஹொங்கொங்கின் வரலாற்று புகழ்பெற்ற துறைமுகமான விக்டோரியா துறைமுகமும், அந்த துறைமுகக் கடல் பரப்புக்கு எதிரே தென்படும் ஹொங்கொங் தீவின், வானளாவிகளின் அழகியக் காட்சியும் காண்போர் எவரையும் கவரச்செய்யும். இதனால் ஒவ்வொரு நாளும் உலகெங்கும் இருந்து ஹொங்கொங் வரும் பல்லாயிரக் கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்துப்போகும் இடம் இந்த நட்சத்திரங்களின் சாலை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நட்சத்திரங்களின் சாலையில் மக்கள் கூடுவதற்கான இன்னொரு சிறப்புக் காரணமும் உண்டு. அது ஹொங்கொங்கில் ஒவ்வொரு நாளும் பின்னேரம் 7:55 க்கு காட்டப்படும், உலகப் பிரசித்திப்பெற்றதும், கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றதுமான கதிரியக்க மின்னொளி வீச்சை[1] இந்த நட்சத்திரங்களின் சாலையில் இருந்தே முழுமையாக பார்க்கக்கூடியதாக இருக்கும். இதனை காண்பதற்கென்றும் பின்னேரங்களில் மக்கள் கூட்டம் இந்த உலாச்சாலையில் குவிந்துவிடுவர்.

சிறப்பு நாட்களில்[தொகு]

ஹொங்கொங்கில் சிறப்பு நாட்களில் வண்ண வான்வெடி முழக்கம் இடம்பெறும் போது மக்கள் வெள்ளம், இந்த நட்சத்திர சாலை முழுதுமாக நிரம்பி, மேலும் சில கிலோ மீட்டர் தூரங்களுக்கு நெரிசலை ஏற்படுத்தும். அவ்வாறான நாட்களில் இந்த உலாச்சாலை ஹொங்கொங் காவல் துறையினாரால், மக்கள் நெரிசல் கட்டுப்படுத்தலும் இடம்பெறும். இதனால் இரவுநேர வண்ண வான்வெடி முழக்கத்தைக் காண மக்கள் மாலை 4:00 மணிக்கே இந்த சாலை நெடுகிலும் இடம் பிடிக்கத் தொடங்கிவிடுவர். அதனால் தாமதமாகச் செல்வோருக்கு இந்த நட்சத்திரங்களின் சாலை அருகாமைக்கேனும் செல்ல முடியாத நிலை ஏற்படும்.

அமைவிடம்[தொகு]

இந்த நட்சத்திரங்களின் சாலையின் அமைவிடம் ஹொங்கொங், கவுலூன் தீபகற்ப நிலப்பரப்பில், கவுலூனில், தமிழர்கள் செறிந்து வாழும் நகரமான சிம் சா சுயி நகரில் உள்ளது. ஹொங்கொங்கில் தமிழர்கள் அடிக்கடி கூடும் இடமான சுங்கிங் கட்டத்திலிருந்து சில மீட்டர்கள் தூரம் மட்டுமே ஆகும்.

சட்டம்[தொகு]

புகைத்தலுக்கான குற்றக்காசு HK$5000.00

இந்த நட்சத்திரங்களின் உலாச்சாலையில் உலாவுவோர், புகைப்பிடிக்கக் கூடாது. ஈருருளி போன்ற வண்டிகளை ஓட்டிக்கொண்டோ, தள்ளிக்கொண்டோ என்றாலும் போவதற்கு அனுமதியில்லை. செல்லப்பிராணிகளான நாய், பூனை போன்றவற்றை இங்கு அழைத்துச்செல்ல முடியாது. அவற்றை மீறினால் தண்டக் கட்டணம் அறவிடப்படும். ஆனால் மாற்று வழுவுள்ளோர் தமது முச்சக்கர வண்டிகளில் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு உதவி புரிவதற்கு என்றும் உதவியாளர்கள் உள்ளனர். வெண்சுருட்டு புகைத்தால், அதற்கான தண்டக் கட்டணம் HK$5000.00 அறவிடப்படும். எவரேனும் புகைத்தால் தயங்காமல் குறிப்பிட்ட இலக்கத்திற்கோ அல்லது 999 இலக்கத்திற்கோ அழைத்து புகார் கொடுக்கலாம். சில நிமிடங்களில் காவல் துறையினர் அருகில் நிற்பர். இருப்பினும் இங்கு வாழ் மக்கள் ஹொங்கொங் சட்டத் திட்டங்களை மீறினால் என்ன நடக்கும் எனும் விழிப்புணர்வு பெற்றவர்களாகவே உள்ளனர்.

ஹொங்கொங் நாட்டு மக்களை பொருத்த வரையில், அவர்கள் இந்த நாட்டை காதலிப்பவர்களாகவே உள்ளனர். இங்கு அநேகமான இடங்களில் "I LOVE HONG KONG", "WE LOVE HONG KONG" எனும் வாசங்களை காணலாம். ஹொங்கொங்கில் வளர்ந்து வரும் இளம் சமுதாயமானது, (ஹொங்கொங்கில் வளரும் தமிழ் குழந்தைகள் உட்பட) தூய்மைப் பேனல் குறித்த விழிப்புணர்வு கொண்டவர்களாகவும், ஹொங்கொங் சட்டங்களை மதிக்கும் மனப்பான்மை கொண்டவர்களாவும் வளர்ந்து வருவதைக் காணலாம். இதனை அறிந்த தென்னாசிய மக்கள் கூட இச்சட்டங்களை இங்கு மதித்து நடப்பவர்களாக இருப்பதைக் காணலாம்.

தூய்மை பேனல்[தொகு]

ஹொங்கொங்கில் ஏனைய இடங்களைப் போன்றே, இந்த நட்சத்திரங்களின் சாலையிலும் தூய்மை பேனலைப் பார்க்கலாம். குளிர்களி, பொறியல் வகை போன்ற, சிற்றுணவு அழகு வண்டிகள் சில இந்த உலாச்சாலையில் காணப்படுகின்றன. அவ்வுணவு வகைகளை வாங்கி உண்போர், அதன் எச்சங்களை அதற்கான குப்பைத் தொட்டிகளில் கண்ணியமாக போட்டுச்செல்வதைக் காணலாம். இந்த உலாச்சாலையில் எந்த இடத்திலும் எச்சில் துப்பிக் கிடப்பதையேனும் காண்பதற்கில்லை. இன்னும் கூறப்போனால், இங்கு வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டிகள் கூட கலைநயத்துடன் அழகாகவும், சுத்தமாகவும் உள்ளன.

வரலாறு[தொகு]

"நட்சத்திரங்களின் ஒழுங்கை" உலாச்சாலை

1982ல் "புதிய உலக மேம்படுத்தல் கூட்டுத்தாபனம்" அல்லது "புதிய உலகக் குழுமம்" என அழைக்கப்படும் நிறுவனம், சிம் சா சுயி கிழக்கில், கடலையொட்டிய நிலப்பரப்பில், ஒரு உலாச்சாலையை நிறுவியிருந்தது. 2003 ஆம் ஆண்டு இந்த உலாச்சாலையை மேலும் மேம்படுத்தி, ஹொங்கொங் சினிமா நட்சத்திரங்களை கௌரவிக்கும் வகையில் நட்சத்திரங்களின் ஒழுங்கை ஒன்றை அமைக்கும் திட்டத்தை இந்த நிறுவனம் முன்வைத்தது. இந்த நட்சத்திரங்களின் சாலைக்கான கட்டுமானப் பணிச் செலவு HK$40 மில்லியன் டொலர்கள் தேவைப்படும் என்றும் அறிவித்தது. அதனைத் தொடர்ந்து இத்திட்டத்தை ஹொங்கொங் சுற்றாலா சபை, ஹொங்கொங் சுற்றுலா சபை ஆணையம், ஓய்வாற்றல் மற்றும் பண்பாட்டு சேவைத் திணைக்களம், ஹொங்கொங் அரசு மற்றும் ஹொங்கொங் திரைப்பட விருது வழங்கல் சபை போன்றனவும் இணைந்து பொறுப்பேற்றன.

இந்த நட்சத்திரங்களின் சாலையின் கட்டுமானப் பணிகள் நிறைவுபெற்று, 2004 ஏப்பிரல் 28 ஆம் திகதி பொது மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது. எனினும் அதற்கு முதல் நாளான, 27 ஆம் திகதி ஹொங்கொங் அரச தலைவர்கள் மற்றும் ஹொங்கொங் திரைப்பட விருது வழங்கல் சபையினரின் தலைமையின் கீழ் வைபவ ரீதியான திறப்பு விழா இடம்பெற்றது.

சிறப்புத் தகவல்கள்[தொகு]

நட்சத்திரங்களின் சாலையில் வைக்கப்பட்டிருக்கும் புரூசு லீயின் வெங்கலச் சிலை
புரூசு லீயின் நினைவுத் தடம்
யக்கிச்சானின் நினைவுத் தடம்
யெட் லீயின் நினைவுத் தடம்

இந்த நட்சத்திரங்களின் சாலையின் அருகாமையில் உல்லாசப் பயணிகளைக் கவரும் வேறு சில இடங்களும் உள்ளன. அவைகளாவன, ஹொங்கொங் கலை அருங்காட்சியகம், ஹொங்கொங் பண்பாட்டு மையம், வான்வெளி அருங்காட்சியம், ஹொங்கொங்கின் பழமையான நினைவு சின்னங்களில் ஒன்றான சிம் சா சுயி மணிக்கூட்டு கோபுரம் போன்றவைகளாகும். அத்துடன் புதிய உலக மையக் கட்டடமும் இந்த உலாச்சாலையை அண்மித்தே உள்ளது.

இந்த நட்சத்திரங்களின் உலாச்சாலை நிலப்பரப்பின் மேல், ஹொங்கொங்கின் பிரசித்திப்பெற்ற சினிமா நட்சத்திரங்களின் நூற்றாண்டு வரலாற்றை நினைவு கூறும் வகையில், நட்சத்திரங்களின் கை தடங்கள் பொதிக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஹொலிவூட் திரைப்படங்களிலும் நடித்து உலகப்புகழ் பெற்ற புரூசு லீ, யக்கிச்சான், யெட் லீ போன்ற நட்சத்திரங்களின் தடங்களும் அடங்கும். பலவற்றில் குறிப்பிட்ட நட்சத்திரங்கள் தங்களின் கையெழுக்களையும் பொதித்துள்ளனர். அவர்கள் இந்த நட்சத்திரங்களில் சாலையின் கட்டுமாணப் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது உயிருடன் இருந்தவர்களாகும். அதேவேளை முன்னாள் நட்சத்திரங்களின் தடங்களில் அவை இருக்காது.

கை தடம் காணமுடியாத, நட்சத்திரங்களின் நினைவுத்தடங்களில் பெயர்கள் மட்டுமே பொறிக்கப்பட்டுள்ளன. அவற்றில் கை தடமோ, கையெழுத்து பதிப்போ இருக்காது. எடுத்துக்காட்டாக புரூசு லீயின் தடத்தில் அவரின் பெயர் மட்டுமே உள்ளது.

சாலையின் கடலோரமாக புரூசு லீயை நினைவு கூறும் வகையில், ஒரு வெங்கலச் சிலையும் இந்த நட்சத்திரங்களின் சாலையில் வைக்கப்பட்டுள்ளது. மற்றும் புரூசு லீயின் நினைவுப் பொருள் விற்பனையகம் ஒன்றும் உள்ளது.

அத்துடன் யக்கிச்சானின் நினைவுப் பொருள் விற்பனையகம் ஒன்றும், ஹொங்கொங்கில் பிரசித்திப் பெற்ற இன்னொரு நட்சத்திரத்தின் நினைவுப் பொருள் விற்பனையகம் ஒன்றும் கூட உள்ளது. மொத்தம் மூன்று நினைவுப் பொருள் விற்பனையங்கள் உள்ளன.

மேலும் திரைப்பட துறைச் சார்ந்த, படப்பிடிப்பாளர் சிலை, மின்விளக்கை ஏந்தி நிற்கும் உதவியாளர் சிலை, படப்பிடிப்பின் போது நடிகைகள் அமருவதற்கான வெங்கலக் கதிரை, மற்றும் திரைப்பட படப்பிடிப்புகளின் போது பயன்படும் உபகரணங்களின் மாதிரி வடிவங்கள், தூபிகள் என, இந்த நட்சத்திர ஒழுங்கை நெடுகிலும் காணப்படுகின்றன. நட்சத்திரங்களின் ஒழுங்கையின் ஆரம்பப் பகுதியில் ஒரு திறந்தவெளி அரங்கம் ஒன்றும் உள்ளது. சில நேரங்களில் அந்த அரங்கில் கலை நிகழ்ச்சிகள் இடம் பெறும். இந்த திறந்தவெளி அரங்கின் முன்பாக உள்ள கட்டடத்தில் பொதிக்கப்பட்டுள்ள ஒரு பெரிய தொலைக்காட்சியில் ஹொங்கொங் நட்சத்திரங்கள் தொடர்பான நிகழ்வுகள் காண்பிக்கப்பட்ட வண்ணமே இருக்கும்.

ஹொங்கொங் தீவின் அகலப்பரப்பு காட்சி[தொகு]

இந்த நட்சத்திரங்களின் சாலையில் இருந்து பார்த்தால் விக்டோரியா துறைமுகத்தின் எதிரே, ஹொங்கொங் தீவில் உள்ள வானளாவி கட்டடங்களின் காட்சி காண்போரின் கண்களை கொள்ளைகொள்ள வைக்கும். இரவு நேர காட்சி வண்ண மின்னலங்காரங்களுடன் மிளிரும். ஹொங்கொங் வரும் சுற்றுலா பயணிகள், இந்த அருமையானக் காட்சியை அநேகமாக காணத் தவறுவதில்லை. இதனால் இந்த நட்சத்திரங்களின் ஒழுங்கை ஹொங்கொங்கில் காண்போர் கவரிடங்களில், பிரசித்திப்பெற்ற இடங்களில் ஒன்றாகும்.

சிம் சா சுயி நட்சத்திரங்களின் சாலையில் இருந்து ஹொங்கொங் தீவின் இரவுநேர அகலப்பரப்பு காட்சி

மேலதிகத் தகவல்கள்[தொகு]

நட்சத்திரங்களின் ஒழுங்கையின் தொடர்ச்சியாக, மணிக்கூட்டு கோபுரம் பக்கம் செல்லும் உலாச்சாலை நெடுகிலும் நிழல்படப் பிடிப்பாளர்கள் கூவியழைத்த வண்ணம் இருப்பார்கள். HK$10.00 இலிருந்து HK$60.00 டொலர்கள் வரை நிழல்படத்தின் அளவிற்கு ஏற்ப விலை கூறுவார்கள். விலைய சற்று குறைத்தும் கேட்கலாம். இரண்டு நிமிடங்களில் நிழல் படத்தைப் பெற்றுக்கொள்ளலாம். அதே இடத்தில் சில உருவம் வரையும் ஓவியர்களும் உள்ளனர். 20 நிமிடங்களில் ஒருவரின் மாதிரிப் படத்தை வரைந்து கொடுக்கும் வல்லவர்கள் அவர்கள். அதற்கான கட்டணமாக HK$90 டொலர் அறவிடுகின்றனர்.

அத்துடன் உலாச்சாலையின் சிம் சா சுயி மணிக்கூட்டு கோபுரம் முன்பாக விக்டோரியா துறைமுகத்தை கடல் வழியாக ஒரு சுற்று சுற்றி வருவதற்கான உல்லாசப் படகும் சேவையும் உள்ளது. அதற்கான கட்டணம் வயது வந்தோருக்கு HK$350.00, சிறியோருக்கு HK$270.00 டொலரும் ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Guinness world record for harbour show (21 Nov 2005)". Archived from the original on 17 ஜனவரி 2006. பார்க்கப்பட்ட நாள் 5 ஜனவரி 2011. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)

வெளியிணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=நட்சத்திரங்களின்_சாலை&oldid=3559898" இலிருந்து மீள்விக்கப்பட்டது