நடுகுப்பம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நடுகுப்பம் என்பது தமிழ்நாடு, கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிற்றூர். நடுகுப்பம் என்ற பெயரில் வேறு சில ஊர்களும் உள்ளன. அதனால் இந்த ஊரைக் குறிப்பிட வல்லம் நடுகுப்பம் என்று குறிப்பிடுவது வழக்கம். இந்த ஊரைச் சுற்றிலும் வல்லம், கீழக்குப்பம், மேட்டுகுப்பம், பாப்பங் கொல்லை ஆகிய ஊர்கள் உள்ளன. இந்த ஊர்களுக்கு நடுவில் அமைந்துள்ளதால் நடுகுப்பம் ஆயிற்று.

மக்கள்[தொகு]

இங்கு ஏறக்குறைய 500 குடும்பங்கள் உள்ளன. இதில் 5 சலவை தொழிலாளர் குடும்பங்களும், 3 செட்டியார் குடும்பங்களும் உள்ளன. இது தவிர மற்ற குடும்பங்கள் அனைத்தும் வன்னியர் குடும்பங்கள்.

தொழில்[தொகு]

இங்கு வேளாண்மையே முக்கிய தொழில். இந்தியா விடுதலை அடைந்த காலத்தில் புன்செய் தானியங்களான கம்பு, கேழ்வரகு, கொள்ளு, வரகு, தினை, சாமை, துவரை, கடலை, எள்ளு, தட்டை பயறு, உளுந்து ஆகியவை பயிரிடப்பட்டன. சில ஆண்டுகளில் மழை சரியாக பெய்யாவிட்டால் அந்த ஆண்டு மக்கள் வறுமையில் வாடினர். சிறிதளவு பயிரிடப்பட்டு வந்த முந்திரி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வெளிநாட்டு செலாவணி ஈட்டத் தொடங்கிய பின் புன்செய் தானியங்கள் பயிரிடுவதைத் தவிர்த்து முந்திரியை பயிரிட தொடங்கினர்.

முந்திரி பங்குனி, சித்திரை, வைகாசி ஆகிய மூன்று மாதங்களில் அறுவடை நடை பெறும். மற்ற மாதங்களில் முந்திரி சார்ந்த கொட்டை உடைத்தல், முந்திரி பருப்பின் மீதுள்ள தோலை உரித்தல்,தரம் பிரித்தல் போன்ற வேலைகளில் மக்கள் ஈடுபட்டு சம்பாதிப்பர். வியாபாரிகள் நவீன இயந்திரத்தின் மூலம் பருபபை பக்குவம் செய்து வெளிநாடுகளூக்கு ஏற்றுமதி செய்கின்றனர். 2011 ல் வீசிய தானே புயலில் சுமார் 30 ஆண்டுகள் வயதான நன்கு காய்க்கும் முந்திரிகள் அனைத்தும் புயலால் வேருடன் பிடுங்கி எறிந்து விட்டது. எஞ்சிய மரங்கள் தண்டு துளைப்பான் பூச்சிகளால் பட்டு போயிற்று.

நீர் ஆதாரம்[தொகு]

இங்கு சுமார் 600 அடிக்குக் கீழ் தான் நீர் உள்ளது. ஊருக்கு நடுவில் ஒரு குளம் உள்ளது. இதை சக்கரை குளம் என அழைக்கின்றனர். பெயருக்கு ஏற்ப அக்குளம் இல்லை அதை குட்டை என்றே அழைக்கின்றனர். அக்குட்டையில் துணி துவைப்பது மாடுகளை குளிப்பாட்டுவது, மக்கள் குளிப்பது, வீட்டு விலக்கான பெண்களும் கூட அதில்தான் குளிப்பார்கள். இந்த ஊரை சேர்ந்த வடிவேல் படையாச்சி ஊராட்சி ஒன்றியத் தலைவராக இருந்த காலத்தில் இங்கு ஆழ்துளை கிணறு அமைத்து மேல்நிலை தொட்டி மூலம் குடிநீர் வழங்கப்பட்டது. அக்குடிநீர்த் தொட்டியை அப்போது காங்கிரஸ் கட்சி ஆட்சியில் மந்திரியாக இருந்த கக்கன் 1963 இல் திறந்து வைத்தார்.

கல்வி[தொகு]

நாடு விடுதலை அடைந்த காலத்தில் மக்கள் சுமார் 2 சதவீதம் பேர் மட்டுமே எழுத்தறிவு பெற்றிருந்தனர். வல்லம் கிராமத்தை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் இங்கு ஒரு உதவிபெறும் தொடக்கப்பள்ளியை நடத்திவந்தார். பஞ்சாயத்து யூனியன் மூலம் நடுநிலைப்பள்ளி திறக்கப்பட்டது. மருத்துவர்கள், ஆசிரியர்கள், கிராம நிர்வாக அலுவர்கள் ஆகிய பணிகளில் பலர் உள்ளனர்.

கோவில்கள்[தொகு]

ஊரின் நடுவே மாரியம்மன் கோவில் உள்ளது. ஆடி மாதத்தில் சாகை வார்த்தல் (கூழ் வார்த்தல்) நடைபெறும். தை மாதத்தில் கருநாள் அன்று தொடங்கி கன்னி ஆட்டம் நடைபெறும்.

ஏரிக்கு அருகில் திரௌபதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. சித்திரை மாதத்தில் செவ்வாய் கிழமையில் கொடியேற்றம் நடைபெறும். 18 நாட்கள் உற்சவம் நடைபெறும். பகாசூரன் சோறு படைத்தல், அர்ச்சுனன் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளும், கடைசி 3 நாட்களில் தெருக்கூத்தும் நடைபெறும். 18 ம் நாளில் காலையில் அரவான் கடபலியும் மாலையில் அக்கினி மிதித்தலும் நடைபெறும்.

ஊரிலுள்ள பங்காளி உறவுமுறை குடும்பங்கள் குலதெய்வங்களை தங்கள் நிலங்களில் வைத்து வழிபடுகின்றனர். வீரகம்பத்து அய்யனார் கோயில், பெரியாண்டவன் கோயில், வீரன் கோயில், அரசியம்மன் வீரன் கோயில்களும் இவ்வூர்மக்களுக்கு குலதெய்வங்களாக உள்ளன

தெருக்கள்

      1.கிழக்கு தெரு
      2.மேற்கு தெரு
      3.தெற்கு தெரு
      4.மாம்பட்டான் தெரு

என நான்கு தெருக்கள் இவ்வூரில் உள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நடுகுப்பம்&oldid=3109611" இலிருந்து மீள்விக்கப்பட்டது