நடாதூர் அம்மாள்
நடாதூர் அம்மாள் (Nadadur Ammal) (இயற்பெயர்:வரதராஜன்) (1165–1275) என்பவர் சித்திரை மாதத்தில் சித்திரை நட்சத்திரத்தில் காஞ்சிபுரம் அருகில் உள்ள நடாதூர் கிராமத்தில் பிறந்தவர். ஸ்ரீவைஷ்ணவ ஆச்சார்யர்களில் ஒருவர். நடாதூராழ்வான் என்னும் ஆசார்யரின் பேரன் ஆவார். இவரது குரு எங்களாழ்வான் மற்றும் இவரது சீடர்கள் சுதப்ரகாசிகா பட்டர் மற்றும் கிடாம்பி அப்புள்ளார். ஸ்ரீபாஷ்யத்தின் வியாக்யான சிம்மம் என்று போற்றப்பட்டவர். தத்வ சாரம், பரத்வாதி பஞ்சகம் போன்ற நூல்களை அருளிச்செய்துள்ளார். இவர் காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் உபந்யாசம் செய்து வந்தார்.வேதாந்த தேசிகர் சிறு குழந்தையாக இருந்தபோது, நடாதூர் அம்மாளிடம் ஆசி பெற்றார்.[1] [2][3][4]
பெயர்க் காரணம்
[தொகு]நடாதூர் வரதராஜன் காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் பெருமாள் சன்னிதியில் கைங்கர்யங்கள் செய்து கொண்டிருந்தார். அப்போது மடைப்பள்ளியைச் சேர்ந்த ஒருவர் இரவு பூஜையின்போது பெருமாளுக்கு நிவேதனம் செய்ய சூடான பாலைக் கொண்டு வந்து கொடுத்தார். அர்ச்சகரும் அந்த சூடான பாலை பெருமாளுக்கு நிவேதனம் செய்ய ஆயத்தம் செய்தார். இதைக்கண்டு பதறிய வரதராஜன் அர்ச்சகரிடம், “சூடான பாலை பெருமாளுக்கு நிவேதனம் செய்கிறீரே. சூடான பாலைப் பருகினால் வரதராஜப் பெருமாளின் திருவாய்க்கு தீங்கு நேரும் என்பது உமக்குத் தெரியாதா?” என்று கோபித்தவாறு அர்ச்சகரிடமிருந்து பாலை வாங்கி பதமாக ஆற்றி மிதமான சூட்டை அடைந்ததும் அதை பெருமாளுக்கு ஒரு தாயின் பாசத்தோடு நிவேதனம் செய்தார்.
வரதராஜனின் பாசம் ஒரு தாயின் பாசத்திற்கு ஈடானது என்பதை அறிந்து நெகிழ்ந்த வரதராஜப்பெருமாள், “என் அம்மாவே” என்று அழைத்தார். இதைக் கேட்டு அங்கிருந்தவர்கள் மெய்சிலிர்த்துப் போனார்கள். அன்று முதல் நடாதூர் வரதராஜன், நடாதூர் அம்மாள் என்று அழைக்கப்பட்டார்.
முக்கிய நிகழ்வுகள்
[தொகு]- நடாதூர் வரதராஜன் காஞ்சிபுரம் வரதராஜர் கோயிலில் உபந்யாசம் செய்யும்போது, உரை நிறுத்தப்பட்ட இடத்தை மறந்தார். அப்போது அங்கு வந்த ஐந்து வயது சிறுவனான கிடாம்பி அப்புள்ளார், நடாதூர் அம்மாள் விட்ட இடத்திலிருந்து தொடர உதவினான். அந்த சிறுவனின் முகப்பொழிவைக் கண்டு வியந்த நடாதூர் அம்மாள், "பெருமாளே, என் அம்மாவே!" என்று கிடாம்பி அப்புளாரை அழைத்ததாக ஒரு கதை உண்டு.
- வரதராஜன் தனது பாட்டனாரான நடாதூராழ்வானிடம் ஸ்ரீபாஷ்யம் கற்றுக்கொள்ள விரும்பினார். ஆனால், அவருக்கு வயதாகி விடவே, அவர் வரதராஜனிடம் எங்களாழ்வானை ஆச்சார்யராக ஏற்று அவரிடம் ஸ்ரீபாஷ்யம் கற்றுக்கொள்ளும்படி பணித்தார். இதை ஏற்று ஒரு நாள் எங்களாழ்வான் இல்லத்தை அடைந்து கதவைத் தட்டினார். ‘வந்திருப்பது யார்’ என்று கேட்டார். அதற்கு வரதராஜன் ‘நான் வரதன் வந்திருக்கிறேன்’ என்று சொன்னார். இதைக் கேட்ட எங்களாழ்வான் உடனே, “நான் செத்தவுடன் திரும்பி வா” என்று கூறி அனுப்பினார். அம்மாள் தனது இல்லம் திரும்பி நடாதூராழ்வானிடம் இது குறித்து கூறினார். அதற்கு நடாதூராழ்வான், “அவர் சொன்னது சரிதான். நம்மை பிறரிடம் அறிமுகப்படுத்திக் கொள்ளும்போது நான் என்று கூறக் கூடாது. நான் என்பது அகந்தையின் வெளிப்பாடு. அடியேன் என்று பணிவுடன் கூறுவதே சரி” என்றார். அவ்வாறே மறுநாள் எங்களாழ்வானின் இல்லம் சென்ற வரதன், அவர் வீட்டுக் கதவினைத் தட்ட, “வந்திருப்பது யார்?” என்று எங்களாழ்வான் வினவினார். அதற்கு வரதன், “அடியேன் வரதன் வந்துள்ளேன்” என்று பதிலுரைக்க, எங்களாழ்வான் மகிழ்ச்சியோடு வரதனை வரவேற்று தனது சிஷ்யனாக ஏற்றுக்கொண்டு வைணவ சம்பிரதாங்களைக் கற்பித்தார்.
இயற்றிய நூல்கள்
[தொகு]- தத்துவ சாரம்
- ஸ்ரீபாஷ்ய விளக்க உரை
- பிரமேயமாலை
- எதிராஜ விஜயாபநம்பரத்வாதி பஞ்சகம்
- பரமார்த்தச்லோக த்வயம்
- கஜேந்திர மோக்ஷ ஸ்லோகத்வயம்
- பிரபன்ன பாரிஜாதம்
- சரமோபாய சங்கிரகம்