உள்ளடக்கத்துக்குச் செல்

நக்கோன் சி தாமரத் மாகாணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நக்கோன் சி தாமரத்
Nakhon Si Thammarat
นครศรีธรรมราช
இடமிருந்து வலமாக: நக்கோன் சி தாமரத் நகர மதில் சுவர், வாட் பிரா மகா தத், நக்கோன் சி தாமரத் அரங்கம், நக்கோன் சி தாமரத் வானூர்தி நிலையம், தலும்புகு முனை

கொடி

சின்னம்
அடைபெயர்(கள்): Muangkon; Nakhon
குறிக்கோளுரை:
பௌத்த நகரமான நக்கோன் மக்கள் நாங்கள்; அறநெறி, நல்வினை, விடாமுயற்சியில் உறுதியானவர்கள்; ஒருபோதும் பிறர் உரிமையில் தலையிடுவதோ அல்லது யாருக்கும் தீங்கு விளைவிப்பதோ இல்லை
เราชาวนครฯ อยู่เมืองพระ มั่นอยู่ในสัจจะศีลธรรม กอปรกรรมดี มีมานะพากเพียร ไม่เบียดเบียนทำอันตรายผู้ใด
தாய்லாந்தில் நக்கோன் சி தாமரத்
தாய்லாந்தில் நக்கோன் சி தாமரத்
ஆள்கூறுகள்: 8°25′7″N 99°57′49″E / 8.41861°N 99.96361°E / 8.41861; 99.96361
நாடு தாய்லாந்து
மாகாணம்நக்கோன் சி தாமரத் மாகாணம்
தலைநகரம்நக்கோன் சி தாமரத்
பரப்பளவு
 • மொத்தம்9,885 km2 (3,817 sq mi)
 • பரப்பளவு தரவரிசை18-ஆவது[1]
மக்கள்தொகை
 (2024)[2]
 • மொத்தம்▼5,19,440
 • தரவரிசை9-ஆவது
 • அடர்த்தி155/km2 (400/sq mi)
  அடர்த்தி தரவரிசை25-ஆவது
மனிதச் சாதனை குறியீடு [3]
 • HAI (2022)0.6263 
61-ஆவது
மொத்த உள்நாட்டு உற்பத்தி[4]
 • மொத்தம்பாட் 154 பில்லியன்
(US$ 5.3 பில்லியன்) (2019)
நேர வலயம்தாய்லாந்து நேரம் +7
அஞ்சல் குறியீடு
80xxx
தொலைபேசி075
ஐஎசுஓ 3166 குறியீடுTH-80
இணையதளம்nakhonsithammarat.go.th

நக்கோன் சி தாமரத் மாகாணம் (ஆங்கிலம்: Nakhon Si Thammarat Province; தாய்: นครศรีธรรมราช) என்பது தாய்லாந்து மாகாணங்களில் ஒன்றாகும். வரலாற்று மாகாணங்களில் ஒன்றாகத் தடம் பதிக்கும் இந்த மாகாணம் தாய்லாந்து வளைகுடாவின் மேற்கு கடற்கரையில் அமைந்துள்ளது. 2018-ஆம் ஆண்டின் நிலவரப்படி, இது சுமார் 1.5 மில்லியன் மக்கள் தொகையுடன் தெற்கு தாய்லாந்தின் அதிக மக்கள் தொகை கொண்ட மாகாணமாகத் திகழ்ந்தது. இந்த மாகாணத்தின் அண்டை மாகாணங்களாக சொங்கலா மாகாணம், பத்தலுங் மாகாணம், திராங் மாகாணம், கிராபி மாகாணம், சூராட் தானி மாகாணம் எனும் 5 மாகாணங்கள் உள்ளன.

நக்கோன் சி தாமரத் மாகாணத்தின் தலைநகரமான நக்கோன் சி தாமரத் நகரம்; தாய்லாந்தின் மிகப் பழைமையான நகரங்களில் ஒன்றாகும். இந்த மாகாணத்தின் மலைப் பகுதிகளில் உள்ள சமசுகிருத கல்வெட்டுகள், ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என அறியப்படுகிறது. மேலும், 13-ஆம் நூற்றாண்டிலிருந்து நக்கோன் சி தாமரத் இராச்சியம் (Nakhon Si Thammarat Kingdom), தாய்லாந்தின் சும்போன் (Chumphon) முதல் தெற்கே மலேசியாவின் பகாங் வரை பரவியிருந்த 12 துணை நகரங்களின் குழுவைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. 7-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட வாட் பிரா மகாநாத் ஓரமகாவிகான் (Wat Phra Mahathat Woramahawihan) நினைவுச்சின்னம், இன்றும் தெற்கு தாய்லாந்தின் முதன்மையான பௌத்த நினைவுச் சின்னமாகத் திகழ்கிறது.

பெயரியல்

[தொகு]

நக்கோன் சி தாமரத் என்பது சமசுகிருத சொல்லான நகர செரி தருமராஜா என்பதன்[5] தாய்லாந்து வடிவமாகும்; புனித தரும ராஜாவின் நகரம் என பொருள்படும்.[5] மேலும் இந்தப் பெயர் சில கட்டங்களில் சுருக்கமாக நக்கோன் சி (Nakhon Si ; นครศรีฯ) அல்லது நக்கோன் (Nakhon; นครฯ) என்றும் அழைக்கப்படுகிறது.

நக்கோன் சி தாமரத் மாகாணம் பேச்சுவழக்கில் முயாங் கோன் (Mueang Khon) என்றும்; அங்கு வாழும் மக்களால் கோன் கோன் (Khon Khon) என்றும் அழைக்கப்படுகிறது.

வரலாறு

[தொகு]

நக்கோன் சி தாமரத் நகரம் என்பது வளமான வரலாற்றைக் கொண்ட தாய்லாந்தின் பழைமையான நகரங்களில் ஒன்றாகும். வாட் மகேயோங் (Wat Maheyong) கல்வெட்டு (K. 407) நக்கோன் சி தாமரத்தில் இருந்து வந்ததாக அறியப்படுகிறது. இந்தக் கல்வெட்டு சமசுகிருதத்தில் செதுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அங்கு கிடைத்த கல்வெட்டுகள், ஏறக்குறைய் ஏழாம் அல்லது எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகவும் கணிக்கப்படுகிறது. அந்தணர்களும், பௌத்தர்களும் ஒரே சடங்கில் பங்கேற்றதற்கான தாய்லாந்தின் மிக தொடக்ககாலச் சான்றாக இவை அமைலாம். இப்பகுதியில் பழம் பெரும் வரலாற்றுச் சான்றுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.[6]:409 சிச்சோன் மாவட்டத்தில் உள்ள காவ் பிலி முவெங் (Khao Phli Mueang) பகுதியிலிருந்து கி.பி. 6-ஆம் நூற்றாண்டு அல்லது 7-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு சிறிய தங்க சிவலிங்கச் சிலை[7]:39, 43 கண்டெடுக்கப்பட்டுள்ளது.

பண்டைய காலத்தில் நக்கோன் சி தாமரத் மாகாணம் செரி விஜயப் பேரரசின் ஆட்சியின் கீழ் இருந்தது. அதன் மன்னர் கி.பி.775-ஆம் ஆண்டளவில் மலாய் தீபகற்பத்தின் லிகோர் (Ligor) பகுதியில் ஆட்சி செய்ததாகக் கூறப்படுகிறது. மேலும், அவர் அங்கு புத்தருக்கும், பத்மபாணி மற்றும் வச்ரபானி போதிசத்துவர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு வழிபாட்டுத் தலத்தையும் கட்டியுள்ளார்.

நக்கோன் சி தாமரத் இராச்சியம்

[தொகு]
நக்கோன் சி தாமரத் நகரத்தின் நினைவுச்சின்னம்
நக்கோன் சி தாமரத் நகரம் (2007)
நக்கோன் சி தாமரத் கடற்கரை (2012)

நக்கோன் சி தாமரத் இராச்சியம் (Nakhon Si Thammarat Kingdom) என்பது தற்போதைய தெற்கு தாய்லாந்தில் (மலாய் தீபகற்பத்தில்) அமைந்திருந்த ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க பழைமையான அரசு ஆகும். இது லிகோர் இராச்சியம் (Kingdom of Ligor) என்றும் அழைக்கப்பட்டது. தென்கிழக்கு ஆசியாவின் பண்பாடு, சமயம் மற்றும் வணிக மையமாக இந்த அரசு திகழ்ந்தது.

தொடக்கக் காலத்தில் இந்த இராச்சியம் செரி விஜயப் பேரரசின் பெரும் செல்வாக்கின் கீழ் இருந்தது. கி.பி. 775 ஆம் ஆண்டைச் சேர்ந்த புகழ்பெற்ற லிகோர் கல்வெட்டு, சிறிவிஜய மன்னர் இங்கு புத்தர் மற்றும் போதிசத்துவர்களுக்காக ஒரு வழிபாட்டுத் தலத்தை நிறுவியதை விவரிக்கிறது. பௌத்த சமயத்தின் மையம்: தொடக்கத்தில் இந்து சமயம் மற்றும் மகாயான பௌத்த சமயத்தின் தாக்கத்தைப் பெற்றிருந்த இந்த இராச்சியம், பிற்காலத்தில் தேரவாத பௌத்தத்தின் மிக முக்கிய கோட்டையாக மாறியது.

பிற தாய்லாந்து இராச்சியங்களுக்கு பௌத்த மதத்தைப் பரப்புவதில் நக்கோன் சி தாமரத் இராச்சியம் முதன்மைப் பங்கு வகித்தது. 13-ஆம் நூற்றாண்டில் தன்னாட்சி பெற்ற அரசாகச் செயல்பட்டாலும், பின்னர் சுகோத்தாய் இராச்சியம் (Sukhothai) மற்றும் அயூத்தியா இராச்சியம் (Ayutthaya) ஆகிய தாய்லாந்து இராச்சியங்களுக்குக் கப்பம் கட்டும் ஒரு சிற்றரசாக மாறியது. இறுதியாக 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் நவீன தாய்லாந்துடன் (சயாம்) முழுமையாக இணைக்கப்பட்டது.

செரி தம்மசோகராசா

[தொகு]

செரி தம்மசோகராசா என்பவர் இந்த இராச்சியத்தின் முதல் மன்னர் ஆவார்; மற்றும் மிக முக்கியமான மன்னராகவும் கருதப்படுகிறார். இவருடைய பெயரிலிருந்தே "நக்கோன் சி தாமரத்" (நீதிநெறி மிக்க மன்னனின் கம்பீரமான நகரம்) என்ற பெயர் உருவானது. இவர் தேரவாத பௌத்த மதத்தைப் பரப்புவதில் முக்கிய பங்காற்றினார்.

சந்திரபானு செரி தர்மராசா

[தொகு]

சந்திரபானு செரி தர்மராசா என்பவர் 13-ஆம் நூற்றாண்டில் தாமிரலிங்கத்தை (Tambralinga) ஆண்ட தாமரை மரபுவழியைச் சேர்ந்த புகழ்பெற்ற மன்னர் ஆவார். இவர் புகழ்பெற்ற 'ப்ரா தாத் சேதி' (Phra That Chedi) கோபுரத்தைக் கட்டிய பெருமைக்குரியவர். மேலும், இவர் இலங்கை மீது படையெடுத்து அங்கு பௌத்த மதத் தொடர்புகளை ஏற்படுத்தினார்.

இரத்தனகோசின் இராச்சியம்

[தொகு]
இரத்தனகோசின் இராச்சியத்தின் மன்னர் இரண்டாம் ராமா அவர்களின் உருவப்படம். (1910)

பலாத் நு (Palat Nu) 18-ஆம் நூற்றாண்டில் (1767-1769), அயூத்தியா பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு, தன்னை அந்தப் பிராந்தியத்தின் தன்னாட்சி மன்னராக அறிவித்துக் கொண்டார். 1769-இல் தோன்புரியின் மன்னர் தக்சின், பிரா பலாத் நூ அல்லது சாவ் பிராயா நக்கோன் நூவை அடக்குவதற்காக தெற்கு நோக்கிப் படையெடுத்துச் சென்றார். அந்தப் படையெடுப்பில் பலாத் நூ தோல்வி அடைந்தார். பின்னர் அவர் தோன்புரிக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனாலும் 1776-இல், பலாத் நூ; நக்கோன் சி தாமரத் மாகாணத்தின் ஒரு கப்பம் கட்டும் ஆட்சியாளராக நியமிக்கப்பட்டார்.

பலாத் நூவிற்கு பிறகு, அவருடைய மகனும் பேரனும் நக்கோன் சி தாமரத் மாகாணத்தின் அடுத்தடுத்த ஆளுநர்களாகப் பொறுப்பு வகித்தனர். மன்னர் சுலலாங்கொர்னின் சீர்திருத்தங்களின் போது, நக்கோன் சி தாமரத் மாகாணத்தின் பாரம்பரிய ஆளுநர் பதவி நீக்கப்பட்டது. 1896-இல் இந்த நக்கோன் சி தாமரத் நகரம் மொன்தோன் நக்கோன் சி தாமரத் மாகாணத்துடன் இணைக்கப்பட்டது. 1932-இல் மொன்தோன் முறை நீக்கப்பட்டபின்னர், நக்கோன் சி தாமரத் மாகாணம் இன்று வரையில் ஒரு மாகாணமாக இயங்கி வருகிறது.

தொல்பொருள் கண்டுபிடிப்புகள்

[தொகு]
தோன்புரி மன்னராக தக்சின் முடிசூடல்; 28-திசம்பர்–1768
தோன்புரி மன்னர் தக்சின் அவர்களின் சிலை

தெற்கு தாய்லாந்தின் மிக முக்கியமான ஆன்மிக மற்றும் வரலாற்றுத் தலமான இந்த பௌத்த விகாரத்தின் பிரா தாத் சேதி கோபுரம் 9 முதல் 13-ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்டதாக ஆய்வுகள் கூறுகின்றன. லிகோர் கல்வெட்டு (Ligor Inscription) கி.பி. 775-ஆம் ஆண்டில் மலாய் தீபகற்பத்தில் சிறீவிஜயம் கால் ஊன்றியதையும், அங்கு புத்தர் மற்றும் போதிசத்துவர்களுக்காக (பத்மபாணி, வஜ்ரபாணி) வழிபாட்டுத் தலம் கட்டப்பட்டதையும் உறுதிப்படுத்தும் மிக முக்கிய கல்வெட்டு சான்றாகும்.

லீகோர் கல்வெட்டு இரண்டு பக்கங்களிலும் எழுதப்பட்டு செதுக்கப்பட்டுள்ளது. முதல் பகுதி லிகோர் ஏ கல்வெட்டு (Ligor A inscription) என்று அழைக்கப்படுகிறது.[8] இது வியாங் சா கல்வெட்டு (Viang Sa inscription) என்றும் அழைக்கப்படுகிறது. கல்வெட்டின் மறுபக்கம் லிகோர் பி கல்வெட்டு (Ligor B inscription) என்று அழைக்கப்படுகிறது. இந்தக் கல்வெட்டு காவி எழுத்து முறையில் (Kawi script) எழுதப்பட்டுள்ளது.[9]

லிகோர் பி கல்வெட்டு சைலேந்திர அரச மரபைச் சேர்ந்த மன்னர் பனங்கரன் (Mahārāja dyāḥ Pañcapaṇa kariyāna Paṇaṃkaraṇa) (Panangkaran), என்பவரால் எழுதப்பட்டது. அத்துடன் இந்த லிகோர் பி கல்வெட்டு சிறீவிஜயம் மற்றும் சைலேந்திர வம்சம் ஆகிய இரு அரச மரபினருடன் தொடர்புடையது.

தங்க சிவலிங்கம்

[தொகு]

தாய்லாந்து சிச்சோன் மாவட்டத்தில் உள்ள காவோ பிலி முவெங் (Khao Phli Mueang) பகுதியில் கண்டெடுக்கப்பட்ட பொ.ஆ. 6-ஆம் நூற்றாண்டு அல்லது 7-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிறிய தங்க சிவலிங்கம், இப்பகுதியில் தொடக்கக்கால இந்து சமயத்தின் (சைவ சமயம்) தாக்கத்தை வெளிப்படுத்துகிறது.

நக்கோன் சி தாமரத்தின் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் 5-ஆம் நூற்றாண்டு முதலே வழிபடப்பட் 90-க்கும் மேற்பட்ட பிராமண மற்றும் சைவ சமய வழிபாட்டுத் தலங்களின் எச்சங்களும், விசுணு சிலைகளும் கண்டறியப்பட்டுள்ளன.

12 நட்சத்திர நகரங்கள்

[தொகு]

இந்த 12 நட்சத்திர நகரங்கள் (Naksat Cities) எனும் இராச்சியத்தின் கீழ் 12 சிற்றரசுகள் இருந்தன. அந்த 12 நகரங்களும் சீன சோதிடத்தின் 12 விலங்குச் சின்னங்களால் (எலி, காளை, புலி, முயல் போன்றவை) குறிக்கப்பட்டன இதில் தற்போதைய மலேசியாவின் சில பகுதிகளும் (கெடா, கிளாந்தான், பகாங் போன்றவை) அடங்கும்.

இப்பகுதியில் சீன சொங் அரசமரபு மற்றும் தாங் (Tang) அரச மரபு காலத்து மண்பாண்டங்கள் மற்றும் சீன நாட்டின் மண்பாண்ட எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இது சீனா, இந்தியா மற்றும் பிற தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு இடையே ஒரு முக்கிய கடல்வழி வணிகப் பாதையாக நக்கோன் சி தாமரத் விளங்கியதை உறுதிபடுத்துகிறது.

புவியியல்

[தொகு]

இந்த மாகாணம் மலாய் தீபகற்பத்தின் கிழக்குப் பகுதியில், தாய்லாந்து வளைகுடாவில் அமைந்துள்ளது. இதன் நிலப்பரப்பு பெரும்பாலும் கரடுமுரடான மலைக்காடுகளைக் கொண்டது. தெற்கு தாய்லாந்தின் மிக உயர்ந்த சிகரமான 1,835 மீட்டர் (6,000 அடி) உயரமுள்ள காவோ லுவாங் (Khao Luang) இந்த மாகாணத்தில் தான் உள்ளது. இந்த மாகாணத்தின் மொத்த வனப்பகுதி 1,820 சதுர கிமீ (700 சதுர மைல்) ஆகும்; இது மாகாணத்தின் மொத்தப் பரப்பளவில் 18.4 விழுக்காடு[10] ஆகும்.

தேசிய பூங்காக்கள்

[தொகு]

நக்கோன் சி தாமரத் மாகாணத்தில் ஆறு தேசிய பூங்காக்கள் உள்ளன. அவற்றில் ஐந்து பூங்காக்கள், வேறு இடங்களிலுள்ள பதினைந்து பூங்காக்களுடன் சேர்த்து, தாய்லாந்தின் பாதுகாக்கப்பட்ட பகுதிகளின் மண்டலம் 5-இன் கீழ் வருகின்றன. காவோ பு-காவோ யா பூங்கா மண்டலம் 6 இன் கீழ் வருகிறது. (2024-ஆம் ஆண்டின் வருகையாளர்கள்)[11]

காவ் பு-காவ் யா தேசியப் பூங்கா694 சதுர கிமீ  (87,155)
காவ் லுவாங் தேசியப் பூங்கா570 சதுர கிமீ  (83,309)
காவோ நான் தேசிய பூங்கா410 சதுர கிமீ  (11,259)
ஆத் கானோம்-மு கோ தாலே தாய் தேசிய பூங்கா  312 சதுர கிமீ  (35,585)
நாம்தோக் யோங் தேசிய பூங்கா205 சதுர கிமீ  (87,369)
நாம்தோக் சி கித் தேசிய பூங்கா145 சதுர கிமீ  (14,293)

சமயம்

[தொகு]
சமய வாரியாக மக்கள் தொகை
பௌத்தம்
 
92.08%
இசுலாம்
 
7.03%
வேறு
 
0.89%

நக்கோன் சி தாமரத் மக்களில் பெரும்பாலோர் பௌத்த சமயத்தைப் பின்பற்றுகின்றனர். இது ஏறக்குறைய 92.08% ஆகும். அடுத்தபடியாக இசுலாம் சமயம் ஏறக்குறைய 7.03% ஆகவும், பிற மதங்களுடன் சேர்த்து கிறித்தவ சமயம் ஏறக்குறைய 0.89% ஆகவும் உள்ளது. (மக்கள் தொகை தரவு: 2009-இல் 1,516,499 மக்கள்)

மாகாண நிருவாகம்

[தொகு]

மாகாண அரசு

[தொகு]

நக்கோன் சி தாமரத் மாகாணம் 23 மாவட்டங்களாகப் (ஆம்போ) பிரிக்கப்பட்டுள்ளன. இம்மாவட்டங்கள் மேலும் 165 துணை மாவட்டங்களாகவும் 1428 கிராமங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளன.

நக்கோன் சி தாமரத் மாகாணத்தின் 23 மாவட்டங்கள்
  1. முவெங் நக்கோன் சி தாமரத் மாவட்டம்
  2. புரோம் கிரி மாவட்டம்
  3. லான் சாகா மாவட்டம்
  4. சவாங் மாவட்டம்
  5. பிபூன் மாவட்டம்
  6. சியான் யாய் மாவட்டம்
  7. சா-உவாத் மாவட்டம்
  8. தா சாலா மாவட்டம்
  9. துங் சோங் மாவட்டம்
  10. நா போன் மாவட்டம்
  11. துங் யாய் மாவட்டம்
  12. பாக் பனாங் மாவட்டம்
  13. ரோன் பிபூன் மாவட்டம்
  14. சிச்சோன் மாவட்டம்
  15. கானோம் மாவட்டம்
  16. உவா சாய் மாவட்டம்
  17. பாங் கான் மாவட்டம்
  18. தாம் பன்னாரா மாவட்டம்
  19. சுலாபோன் மாவட்டம்
  20. பிரா புரோம் மாவட்டம்
  21. நோபிதாம் மாவட்டம்
  22. சாங் கிளாங் மாவட்டம்
  23. சலெம் பிரா கியாத் மாவட்டம்

மனித மேம்பாட்டுச் சுட்டெண் 2022

[தொகு]
உடல்நலம் கல்வி வேலைவாய்ப்பு வருமானம்
49 23 73 41
வீட்டுவசதி குடும்பம் போக்குவரத்து பங்கேற்பு
52 50 24 51
மனித மேம்பாட்டுச் சுட்டெண் (2022) குறியீட்டில் 0.6263 என்ற மதிப்புடன் "குறைந்த" நிலையில் உள்ள நக்கோன் சி தாமரத் மாகாணம், தாய்லாந்து நாட்டின் தரவரிசையில் 61-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

2003 ஆம் ஆண்டு முதல், தாய்லாந்திலுள்ள ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம் (UNDP) மனித மேம்பாட்டின் எட்டு முக்கிய பிரிவுகளை உள்ளடக்கிய ஒரு கூட்டு குறியீடான மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணை (Human achievement index - HAI) பயன்படுத்தி, தேசிய அளவில் மனித மேம்பாட்டின் முன்னேற்றத்தைக் கண்காணித்து வருகிறது. 2017-ஆம் ஆண்டு முதல் தாய்லாந்தின் தேசிய பொருளாதார சமூக மேம்பாட்டு வாரியம் (National Economic and Social Development Board) இப்பணியை ஏற்றுக் கொண்டுள்ளது.[3]

நிலைவகைப்பாடு
  1 - 13உயர்வு
14 - 29சற்று உயர்வு
30 - 45சராசரி
46 - 61சற்று குறைவு
62 - 77குறைவு

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1 2 "Table 2 Forest area Separate province year 2019". Royal Forest Department. Retrieved 6 April 2021.
  2. ↑ "Official statistics registration systems". Department of Provincial Administration (DOPA). Retrieved 10 February 2025. , year 2024, provincial level, Excel File, no.80
  3. 1 2 "Human Achievement Index Statistics, 2022 (PDF) page 35". Office of the National Economic and Social Development Council (NESDC). Retrieved 12 March 2024.
  4. ↑ "Gross Regional and Provincial Product, 2019 Edition" (in en). Gross Regional and Provincial Product (Office of the National Economic and Social Development Council (NESDC)). July 2019. பன்னாட்டுத் தர தொடர் எண்:1686-0799. https://www.nesdc.go.th/ewt_dl_link.php?nid=5628&filename=gross_regional. பார்த்த நாள்: 22 January 2020.
  5. 1 2 "Thailand : A Travel Survival Kit]. (5th ed). Hawthorn, Vic., Australia; Berkeley, CA : Lonely Planet Publications. pp. 64, 548.". Lonely Planet. Retrieved 19 September 2026.
  6. ↑ Revire, Nicolas (2016). "Dvāravatī and Zhenla in the seventh to eighth centuries: A transregional ritual complex". Journal of Southeast Asian Studies 47 (3): 393–417. doi:10.1017/S0022463416000254. https://hal.science/hal-04145042v1/document.
  7. ↑ Ueasaman, Phanuwat (2019). "Ancient Hill Temples and Holy Caves in Upper Southern Thailand and the Trans-peninsular Route Connection". In Amara Srisuchat; Wilfried Giessler (eds.). Ancient Maritime Cross-cultural Exchanges: Archaeological Research in Thailand (PDF) (in ஆங்கிலம்). Bangkok: Fine Arts Department, Ministry of Culture. pp. 34–53. ISBN 978-616-283-434-9. Archived (PDF) from the original on 2 September 2026. Retrieved 3 September 2026.
  8. ↑ J. G. de Casparis (1975). Indonesian Palaeography: A History of Writing in Indonesia from the Beginnings to C. A.D. 1500, Volume 4. BRILL. p. 29. ISBN 9789004041721.
  9. ↑ Poesponegoro, M.D. (1992). Sejarah nasional Indonesia: Jaman kuna. PT Balai Pustaka. ISBN 979-407-408-X.
  10. ↑ "Table 2: Forest Area by Province, 2019". Royal Forest Department. 2019. Retrieved 6 April 2021.
  11. ↑ "Statistics of tourists entering national parks, fiscal year 2024" [Statistics of tourists visiting national parks in fiscal year 2024]. Department National Parks, Wildlife and Plant Conservation. Retrieved 6 September 2025.

மேலும் படிக்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]