த ராங் மேன்
| த ராங் மேன் | |
|---|---|
சுவரொட்டி | |
| இயக்கம் | ஆல்பிரட் ஹிட்ச்காக் |
| தயாரிப்பு | ஆல்பிரட் ஹிட்ச்காக் |
| திரைக்கதை | மேக்ஸ்வெல் ஆண்டர்சன் ஆங்கஸ் மெக்பெயில் |
| இசை | பெர்னார்ட் ஹெர்மன் |
| நடிப்பு | ஹென்றி ஃபோன்டா வீரா மைல்ஸ் |
| ஒளிப்பதிவு | ராபர்ட் பர்க்ஸ் |
| படத்தொகுப்பு | ஜார்ஜ் டொமாசினி |
| கலையகம் | வார்னர் புரோஸ். பிக்சர்ஸ் |
| விநியோகம் | வார்னர் புரோஸ். பிக்சர்ஸ் |
| வெளியீடு | டிசம்பர் 22, 1956 (US) |
| ஓட்டம் | 105 நிமிடங்கள் |
| நாடு | அமெரிக்கா |
| மொழி | ஆங்கிலம் |
| ஆக்கச்செலவு | $1.2 மில்லியன்[1] |
தி ராங் மேன் என்பது 1956 ஆம் ஆண்டு ஆல்பிரட் ஹிட்ச்காக் இயக்கி, ஹென்றி ஃபோன்டா , வேரா மைல்ஸ் ஆகியோர் நடித்த ஒரு அமெரிக்க ஆவண நாடக ஃபிலிம் நோயர் திரைப்படம் ஆகும். மேக்ஸ்வெல் ஆண்டர்சன் எழுதிய தி ட்ரூ ஸ்டோரி ஆஃப் கிறிஸ்டோபர் இம்மானுவேல் பலெஸ்ட்ரெரோ என்ற புத்தகத்திலும்,[2] [3] ஹெர்பர்ட் பிரீன் என்பவரால் 1953 ஜூனில் லைஃப் இதழில் வெளியிடப்பட்ட "எ கேஸ் ஆஃப் ஐடென்டிட்டி" [4] என்ற கட்டுரையிலும் விவரிக்கப்பட்டுள்ளபடி, குற்றம் சாட்டப்பட்ட ஒரு நிரபராதியின் உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் எடுக்கப்பட்டது. தவறாக அடையாளம் காட்டபட்ட ஒரு குற்றவம்மவரின் மொத்த குடும்பமும் சிதைந்து போவதுதான் இப்படத்தின் கதை.
உண்மை நிகழ்வை அடிப்படையாகக் கொண்டதும், அதன் கதைக்களம் நிஜ வாழ்க்கை நிகழ்வுகளை மிக நெருக்கமாக்க் கொண்டிருப்பதுமான ஒரே ஹிட்ச்காக் திரைப்படமாக இது அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
தி ராங் மேன் திரைப்படம் இரண்டு குறிப்பிடத்தக்க இயக்குநர்கள் மீது ஒரு குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியது: ஒரு விமர்சகராக ஜீன்-லூக் கோடார் செயல்பட்ட காலகட்டத்தில், அவர் எழுதிய மிக நீண்ட விமர்சனக் கட்டுரையை எழுத இத்திரைப்படம் தூண்டியது, [5] மேலும் இது மார்ட்டின் ஸ்கோர்செசியின் டாக்ஸி டிரைவர் திரைப்படத்தின் மீது செல்வாக்கு செலுத்திய ஒரு படைப்பாகவும் இது குறிப்பிடப்படுகிறது. [6]
கதை
[தொகு]ஆல்ஃபிரட் ஹிட்ச்காக் (அல்லது அவருக்குப் பதிலாக வேறொருவர்; அவர் நிழல் உருவத்தில் தோன்றுகிறார்) திரையில் தோன்றி, இத்திரைப்படத்தின் "ஒவ்வொரு வார்த்தையும் உண்மை" என்று பார்வையாளர்களிடம் கூறுகிறார்.
நியூயார்க் நகரத்தின் ஸ்டோர்க் கிளப்பில் ஸ்ட்ரிங் பேஸ் என்ற இசைக்கருவியை வாசிக்கும் இசைக்கலைஞராக கிறிஸ்டோபர் இம்மானுவேல் "மேனி" பலெஸ்ட்ரெரோ. அவரின் மனைவி ரோஸின் பல் சிகிச்சைக்காக 300 டாலர்கள் பணம் தேவைப்படுகிறது. ஆனால் வாரத்திற்கு 58 டாலர் சம்பளம் வாங்கும் பலெஸ்ட்ரெரோவுக்கு இது பெரும் தொகை. அடுத்த நாள் ரோஸின் காப்பீட்டு பாலிசியில் கடன் கேட்பதற்காக அவர் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் அலுவலகத்திற்குச் செல்லுகிறார். அவரைக் காணும் அங்குள்ள ஊழியர்கள் அவரை, தங்களை இரண்டு முறை கொள்ளையடித்த ஒருவர் என்று தவறாகப் புரிந்துகொள்கிறனர்.
காவல்துறையினர் அவரை மேனி என்பதற்குப் பதிலாக 'கிறிஸ்' என்று அழைத்து விசாரிக்கின்றனர். காப்பீட்டு நிறுவனம் மற்றும் பிற வணிக நிறுவனங்களில் கொள்ளையடித்த ஒருவரைத் தாங்கள் தேடுவதாகவும், அது நீங்களாக இருக்கலாம் என்று கூறுகின்றனர். அதே மனிதரால் கொள்ளையடிக்கப்பட்ட ஒரு மதுக்கடை மற்றும் ஒரு உணவுக்கடைக்குள் சென்று வருமாறு மேனிக்கு அறிவுறுத்தப்படுகிறது. காப்பீட்டு நிறுவனக் கொள்ளையில் கொள்ளையன் எழுதிய ஒரு குறிப்பில் உள்ள சொற்களை எழுதுமாறு அவருக்கு கூறுகின்றனர். அவர்கள் சொல்லச் சொல்ல பலெஸ்ட்ரெரோ எழுதுகிறார். கொள்ளையன் எழுதிய குறிப்பில் இருந்த அதே எழுத்துப் பிழையுடனே, அதாவது 'drawer' என்ற சொல்லை 'draw' என்று தவறாக எழுதுகிறார். கொள்ளை நிகழ்வை நேரில் கண்ட காப்பீட்டு நிறுவன ஊழியர் ஒருவர் அடையாள அணிவகுப்பில் அடையாளம் காட்டிய பிறகு, ஆயுதமேந்தி கொள்ளையடித்த குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்படுகிறார்.
அடுத்தநாள் நீதிமன்றத்துக்கு வந்த ரோசைப் பார்த்து பலெஸ்ட்ரெரோ உணர்ச்சிவசப்படுகிறார். அவரை தங்கையின் கணவர் பிணையில் எடுக்கிறார். வழக்கில் வாதாட ஃபிராங்க் ஓ'கானர் என்ற வழக்கறிஞர் ஏற்பாடு செய்யப்படுகிறார். மேனி குற்றவாளி அல்ல என்பதை நிரூபிக்க வழக்கறிஞர் முற்படுகிறார். முதல் கொள்ளையின் போது, அவர் தனது குடும்பத்துடன் விடுமுறையில் இருந்தார்; இரண்டாவது கொள்ளையின் போது, அவரது தாடை மிகவும் வீங்கியிருந்ததால், சாட்சிகள் அதை நிச்சயமாகக் கவனித்திருப்பார்கள். அந்த விடுமுறையின்போது விடுதியில் தம்பதியினருடன் சீட்டு விளையாடிய மூவரில், இருவர் இறந்துவிட்டனர், மூன்றாமானவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. எங்கு அலைந்தும் சாட்சிகள் கிடைக்காதது ரோஸை நிலைகுலையச் செய்கிறது, அதன் விளைவாக ஏற்படும் மனத்தளர்ச்சியால் அவளின் மனநலம் பாதிக்கபடுகிறது. கசையில் அவளை மனநோய் மருத்துவமனையில் சேர்க்கின்றனர்.
விசாரணையின் போது, பலெஸ்ட்ரெரோவின் தாய் அவருக்கு வலிமை வேண்டி செபிக்குமாறு வற்புறுத்தியதால், அவர் செபமாலை கொண்டு செபிக்கிறார். ஒரு நீதிபதியின் கருத்தால் விசாரணை ரத்து செய்யப்படுகிறது. இரண்டாவது விசாரணைக்காகக் காத்திருக்கும் வேளையில், ஒரு மளிகைக் கடையைக் கொள்ளையடித்த உண்மையான கொள்ளையன் கைது செய்யப்பட்டதால், பலெஸ்ட்ரெரோ குற்றமற்றவர் என விடுவிக்கப்படுகிறர். இந்த நற்செய்தியைக் கூற பலெஸ்ட்ரெரோ மருத்துவமனையில் ரோஸைச் சந்திக்கிறார், ஆனால் அவள் கடுமையான மன அழுத்தத்தில் மன நோயாளியாகவே இருக்கிறாள். இருப்பினும், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவள் குணமடைந்ததாகக் கூறப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Billheimer, John (2019). Hitchcock and the Censors. Lexington, Kentucky: University Press of Kentucky. p. 214. ISBN 978-0813177410.
- ↑ Harris, R.A.; Lasky, M.S. (2003). The Complete Films of Alfred Hitchcock. Citadel. p. 183. ISBN 9780806524276.
- ↑ "The Wrong Man". Turner Classic Movies. Archived from the original on July 28, 2011. Retrieved April 10, 2016.
- ↑ Brean, Herbert (June 29, 1953). "A Case of Identity". Life. Vol. 34, no. 26. pp. 97–100, 102, 104, 107. ISSN 0024-3019 – via Google Books.
- ↑ Kenny, Glenn (February 17, 2016). ""The Wrong Man": Hitchcock's Least "Fun" Movie Is Also One Of His Greatest". RogerEbert.com. Retrieved May 21, 2024.
- ↑ Christie, Ian; Thompson, David, eds. (1989). Scorsese on Scorsese. Faber & Faber. ISBN 978-0571141036.