உள்ளடக்கத்துக்குச் செல்

த டேலண்டட் மிஸ்டர் ரிப்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
த டேலண்டட் மிஸ்டர் ரிப்ளி
சுவரொட்டி
இயக்கம்அந்தோனி மிங்கெல்லா
தயாரிப்பு
  • வில்லியம் ஹார்பர்க்
  • டாம் ஸ்டெர்ன்பெர்க்
திரைக்கதைஅந்தோனி மிங்கெல்லா
இசைகேப்ரியல் யாரெட்
நடிப்பு
ஒளிப்பதிவுஜான் சீல்
படத்தொகுப்புவால்டர் மர்ச்
கலையகம்
விநியோகம்
வெளியீடுடிசம்பர் 12, 1999 (1999-12-12)(பாக்ஸ் ப்ரூயின் தியேட்டர்)
திசம்பர் 25, 1999(United States)
ஓட்டம்139 நிமிடங்கள்[1]
நாடுஅமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$40 மில்லியன்[2]
மொத்த வருவாய்$128.8 மில்லியன்[2]

தி டேலன்டட் மிஸ்டர் ரிப்ளி (The Talented Mr. Ripley) என்பது 1999ஆம் ஆண்டு வெளியான ஒரு அமெரிக்க உளவியல் பரபரப்பூட்டும் திரைப்படமாகும். இது பேட்ரீஷியா ஹைஸ்மித் 1955-ஆம் ஆண்டு எழுதிய தி டேலன்டட் மிஸ்டர் ரிப்லி என்ற புதினத்தை அடிப்படையாகக் கொண்டு, அந்தோனி மிங்கெல்லாவால் திரைக்கதை எழுதப்பட்டு இயக்கப்பட்டது. 1950களில் நடப்பதாக அமைக்கப்பட்ட இக்கதையில், மேட் டாமன் டாம் ரிப்லியாக நடித்தார். இவர் ஒரு அமெரிக்க மோசடிக்காரராக நடித்துள்ளார். வெளிநாட்டில் இருக்கும் பணக்காரனும் கெட்டுப்போனவனுமான டிக்கி கிரீன்லீஃபை ( ஜூட் லோ ) சொந்த ஊருக்குத் திரும்பிவரச் சம்மதிக்க வைப்பதற்காக இத்தாலிக்கு அனுப்பபடுகிறான். இருப்பினும், ரிப்லி அவனிடனுன் அவனது வாழ்க்கை முறைமீதும் ஆபத்தான முறையில் ஆசை கொள்கிறான். கிவ்வினெத் பேல்ட்ரோ, கேட் பிளான்சேட் , பிலிப் சீமோர் ஹாப்மன் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர்.

தி டேலண்டட் மிஸ்டர் ரிப்லி திரைப்படம், 1999 திசம்பர் 12 அன்று பாக்ஸ் புரூயின் திரையரங்கில் முதன்முதலில் திரையிடப்பட்டது. பின்னர், 1999 திசம்பர் 25 அன்று அமெரிக்காவில் பாரமவுண்ட் பிக்சர்ஸ் நிறுவனத்தாலும், மற்ற பிராந்தியங்களில் மிராமாக்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தாலும் வெளியிடப்பட்டது. இப்படம் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்றதுடன், $40 மில்லியன் செலவில் தயாரிக்கப்பட்டு, உலகளவில் $128.8 மில்லியன் டாலர்களை வசூலித்தது. சிறந்த தழுவல் திரைக்கதை மற்றும் 'லா' கதாபாத்திரத்திற்கான சிறந்த துணை நடிகர் விருது உட்பட ஐந்து அகாதமி விருது பரிந்துரைகளைப் பெற்றது.

கதை

[தொகு]

1958 ஆம் ஆண்டு நியூயார்க் நகரில், கப்பல் கட்டும் நிறுவன தொழிலதிபர் ஹெர்பர்ட் கிரீன்லீஃப், டாம் ரிப்லி என்ற இளைஞனைச் சந்திக்கிறார். அவன் அவரின் மகன் டிக்கியுடன் பிரின்ஸ்டனில் படித்தவன் என்று அவரை நம்பவைக்கிறான். இத்தாலியின் வாழ்ந்துகொண்டிருக்கும் தன் மகன் டிக்கியை மீண்டும் அமெரிக்காவில் உள்ள தன்னிடமே அழைத்துவந்து சேர்குமாறு சொல்கிறார். அதற்காக அவனுக்கு $1,000 பணம் கொடுக்கிறார். சொகுசுப் கப்பலின் முதல் வகுப்பில் பயணம் செய்யும் டாம், தன்னை டிக்கியாகவே காட்டிக்கொண்டு, அமெரிக்காவின் உயர்தட்டு சமூகத்தைச் சேர்ந்த மெரிடித் லோகுவுடன் நட்பு கொள்கிறான்.

கடலோர கிராமமான மோங்கிபெல்லோவில், டிக்கியுடனும், அவனின் அமெரிக்கக் காதலியான மார்ஜ் ஷெர்வுட் ஆகியோருடன் டாம் வலியவந்து நட்பாகிறான். டிக்கியின் ஆடம்பரமான வாழ்க்கை முறையை கவனிக்கும் டாம், அதேபோல வாழவேண்டும் என்று எண்ணுகிறான். ஆனால், டிக்கியின் பணக்கார நண்பனான பிரெடி மைல்சுக்கு டாம் மீது சந்தேகம் இருந்துகொண்டே இருக்கும். உரோமிலிருந்து திரும்பிய பிறகு, டிக்கிக்கு டாமின் நடவடிக்கைகள் மேலும் எரிச்சலூட்டுவதாக உள்ளது.

டிக்கி, சில்வானா என்ற உள்ளூர் பெண்ணைக் கர்ப்பமாக்கிவிட்டு, பின்னர் அவளை ஏற்க மறுக்கிறான். அதன் பிறகு சில்வானா நீரில் மூழ்கி தற்கொலை செய்துகொள்கிறாள். குற்றவுணர்வில் தவிக்கும் டிக்கியிடம், அந்த மரணத்தை இரகசியமாக வைத்திருப்பதாக டாம் உறுதியளிக்கிறான். டாமிற்கான பயணச் செலவுப் பணத்தை ஹெர்பர்ட் நிறுத்திய பிறகு, டிக்கி வெனிஸ் சுற்றுலா பயணத்தை இரத்து செய்துவிட்டு, இருவரும் பிரிந்து செல்ல வேண்டும் என்று டாமிடம் கூறுகிறான். இருப்பினும், சான் ரெமோவிற்குத் தன்னுடன் ஒரு கடைசிப் பயணம் மேற்கொள்ளுமாறு டிக்கி டாமை சம்மதிக்கவைக்கிறான்.

ஒரு நாள் சிறிய துடுப்புப் படகில் டிக்கியுடன் ​​டாம் பயணிக்கிறான். அப்போது அவர்களுக்கு இடையே ஒரு வாக்குவாதம் ஏற்பட்டு அது கைகலப்பாக மாறுகிறது. அப்போது டாம், துடுப்பாலேயே டிக்கியை அடித்துக் கொன்றுவிடுகிறான். பின்னர் டிக்கின் அனைத்து ஆவணங்களையும் எடுத்துக்கொண்டு அந்தப் படகை மூழ்கடிக்கிறான். உள்ளூர் மக்கள் தன்னை அடிக்கடி டிக்கி என்று தவறாக நினைத்துக்கொள்வதை உணரும் டாம், அவனது அடையாளத்தைத் தனதாக்கிக்கொண்டு வசதியான வாழ்கையை வாழ்கிறான். டிக்கியின் நண்பர்கள் அவனைத் தேடாதவாறு டிக்கி எங்கேயோ இருப்பதாக நம்பவைத்துக் கொண்டிப்பான். டிக்கி தன் காதலியான மர்ஜை விட்டுவிட்டு உரோமுக்குச் சென்றுவிட்டதாக அதை நம்பவைக்கும் வகையில் மார்ஜுக்கு டிக்கி பெயரில் ஒரு போலி கடிதத்தை எழுதுகிறான். ஒரு ஓட்டலில் டிக்கியாகவும் மற்றொரு ஓட்டலில் தன் பெயரில் தங்குவதன் மூலமும், இருவருக்கும் இடையே தகவல் பரிமாற்றம் நடந்தது போன்ற தோற்றத்தை உருவாக்குவதன் மூலமும் டிக்கி இன்னும் உயிருடன் இருப்பது போன்ற மாயையை டாம் உருவாக்குகிறான். போலி ஆவணங்களைப் பயன்படுத்தி, டிக்கிக்குக் கிடைக்கும் பணத்தை (allowance) எடுத்து, அதன் மூலம் ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்கிறான்.

உரோமில், தன்னை டிக்கி என்றே அறிந்திருக்கும் மெரிடித்தை டாம் சந்திக்கிறான். மேலும் அவளுடைய குடும்பத்துடன் ஒரு இசை நிகழ்ச்சிக்குச் செல்கிறான். அதே இசைநிகழ்ச்சியில் எதிர்பாராதவிதமாக மார்ஜையும் அவளின் நண்பன் பீட்டர் ஸ்மித்-கிங்ஸ்லியையும் சந்திக்கும்போது அவனது வேடம் கலைகிறது. டாம் மெரிடித்தை இசை அரங்கத்திலிருந்து அவசரமாக வெளியேற்றி, அவளுடைய முயற்சிகளிலிருந்து தப்பிக்கிறான். பின்னர், டிக்கியைத் தேடி அன் நண்பன் பிரெடி டாமின் அடுக்குமாடி குடியிருப்புக்கு வருகிறான். வீட்டு உரிமையாளர் டாமை டிக்கி என்று அழைப்பதைப் பார்த்து, பிரெடி அந்த ஆள்மாறாட்ட மோசடியை உணர்ந்துகொள்கிறான். அதனால் டாம், ஒரு மார்பளவு சிலையைக் கொண்டு பிரெடியை அடித்துக் கொன்று, அவனது உடலை அப்புறப்படுத்துகிறான். பிரெடியின் உடல் கண்டெடுக்கப்பட்டதும், காவல்துறையினர் "டிக்கி"யிடம் விசாரணை செய்ய அந்த குடியிருப்புக்கு வருகிறனர். பிரெடியின் மரணத்திற்குத் தானே பொறுப்பேற்பதாகக் கூறி, டிக்கிக்காக ஒரு தற்கொலைக் கடிதத்தை டாம் போலியாக உருவாக்குகிறான். தனது உண்மையான பெயரில், டாம் வெனிசுக்குப் பயணிக்கிறான், அங்கு அவன் மீண்டும் பீட்டரைச் சந்திக்கிறான்.

தனியார் துப்பறிவாளர் ஆல்வின் மெக்கரானுடன் ஹெர்பர்ட் கிரீன்லீஃப் இத்தாலிக்கு வருகிறார். டிக்கியின் மோதிரம் டாம் வசம் இருப்பதை மார்ஜ் கண்டுபிடித்துவிடுவதால், அவளைக் கொல்ல டாம் முற்படுகிறான். ஆனால், அதே நேரத்தில் பீட்டர் அங்கு வந்து அவர்களைத் தடுக்கிறான். டாம்தான் குற்றவாளி என்று மார்ஜ் உறுதியாக நம்புகிறாள், ஆனால் ஹெர்பர்ட் அவளது சந்தேகத்தை நிராகரிக்கிறார். வன்முறைப் பின்னணி கொண்ட டிக்கி, பிரெடியைக் கொன்று அதன் பிறகு தற்கொலை செய்துகொண்டான் என்று காவல்துறை நம்புவதாக மெக்காரன் டாமிடம் கூறுகிறார். மேலும், டிக்கி மீதான டாமின் விசுவாசத்தைப் பாராட்டுவதற்காக டிக்கியின் அறக்கட்டளை நிதியில் பெரும் பகுதியை அவனுக்கு வழங்க ஹெர்பர்ட் திட்டமிட்டுள்ளதாக மெக்காரன் அவனிடம் தெரிவிக்கிறார்.

தன் மீதான குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்பட்டு, டிக்கியின் வாழ்க்கை முறையைத் தனக்கே உரிய பாணியில் வாழ்வதற்கான வருவாயையும் பெற்ற நிலையில், டாம் தன் காதலனாகக் கருதப்படும் பீட்டருடன் கிரேக்க நாட்டிற்குச் செல்லும் கப்பலில் பயணிக்கிறான். பயணத்தின்போது, ​​தன் குடும்பத்தினருடன் வந்துகொண்டிருக்கும் மெரிடித்தை டாம் சந்திக்கிறான்; அவளை முத்தமிட்டு, பின்னர் பேசுவதாக கூறுகிறான். பின்னர் பீட்டரின் அறைக்குச் செல்லும் டாம், மெரிடித்தை முத்தமிட்டதை தான் பார்த்ததாகக் கூறி பீட்டர் அதற்கான விளக்கத்தைக் கேட்கிறான். பொய் சொன்னதற்காக மன்னிப்பு கேட்ட பிறகு, தேம்பி அழுதபடியே பீட்டரின் கழுத்தை நெரித்துக் கொல்லும் டாம், தனியாகத் தன் அறைக்குத் திரும்புகிறான்.

தழுவல்கள்

[தொகு]

தி டேலண்டட் மிஸ்டர் ரிப்லி, பர்பிள் நூன் (1960), தி அமெரிக்கன் ஃப்ரெண்ட் (1977) படங்களைத் தொடர்ந்து வந்த மூன்றாவது ரிப்லி திரைப்படத் தழுவலாகும். இதைத் தொடர்ந்து ரிப்லீஸ் கேம் (2002), ரிப்லி அண்டர் கிரவுண்ட் (2005) வந்தன, ஆனால் இந்தப் படங்கள் எதுவும் இப்படத்தின் அதிகாரப்பூர்வ தொடராக அமையவில்லை. 2024 ஏப்ரலில், ஹைஸ்மித்தின் 1955 புதினத்தின் தழுவலான ரிப்லி தொலைக்காட்சித் தொடர் வெளியிடப்பட்டது. [3] 2012 ஆம் ஆண்டு வெளியான இந்தியத் தமிழ்த் திரைப்படமான நான் படத்தின் கதைக்களம், வேறு ஒரு பின்னணியில், இந்தப் படத்தை ஓரளவு தழுவி எடுக்கப்பட்டது.[4]

குறிப்புகள்

[தொகு]
  1. Since the acquisition of Miramax by ViacomCBS (now Paramount Skydance), Paramount owns the worldwide rights to the film.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "The Talented Mr. Ripley (15)". British Board of Film Classification. Archived from the original on July 11, 2021. Retrieved July 11, 2021.
  2. 1 2 "The Talented Mr. Ripley (1999)". பாக்சு ஆபிசு மோசோ. Retrieved March 11, 2024.
  3. Hudspeth, Christopher (March 4, 2024). "In 'Ripley', Andrew Scott Reinvents Himself: Get to Know the Cast and Story". Netflix. Retrieved April 5, 2024.
  4. ராஜேஷ், கருந்தேள் (2026-07-10). "'நான்' படத்துக்குள் ஒரு ரகசியம்! | சுட்ட கதை 37". Hindu Tamil Thisai. Retrieved 2026-07-20.