த. மாதவ ராவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராஜா, சர்
தஞ்சாவூர் மாதவ ராவ்
இந்தியப் பேரர்ரசின் ஒழுங்கின் நட்சத்திரம்
த. மாதவ ராவின் உருவப்படம்
பரோடா அரசு
பதவியில்
1875 மே 10 – 1882 செப்டம்பர் 28
ஆட்சியாளர் மூன்றாம் சாயாஜிராவ் கெய்க்வாட்
முன்னையவர்தாதாபாய் நௌரோஜி
பின்னவர்காசி சகாபுதீன்
இந்தூர் அரசு
பதவியில்
1873–1875
ஆட்சியாளர்இரண்டாம் துக்காஜி ராவ் கோல்கர்
முன்னையவர்இரண்டாம் துக்காஜி ராவ் கோல்கர்
பின்னவர்ஆர். இரகுநாத ராவ்
திவிதாங்கூரின் திவான்
பதவியில்
1857 – 1872 மே
ஆட்சியாளர்கள்உத்திரம் திருநாள் மார்த்தாண்ட வர்மா,
ஆயில்யம் திருநாள்
முன்னையவர்கிருட்டிணா ராவ்
பின்னவர்அ. சேசையா சாத்திரி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1828 நவம்பர் 20 [1]
கும்பகோணம், சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்
இறப்பு1891 ஏப்ரல் 4
மயிலாப்பூர், சென்னை, பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்
துணைவர்யமுனா பாஇ
பிள்ளைகள்த. ஆனந்த ராவ்
பெற்றோர்
 • த. இரங்கா ராவ் (தந்தை)
முன்னாள் கல்லூரிசென்னைப் பல்கலைக்கழகம்
வேலைஅரசியல்வாதி, நிர்வாகி
தொழில்வழக்கறிஞர்

ராஜா சர் தஞ்சாவூர் மாதவ ராவ் (Raja Sir Tanjore Madhava Rao) (1828 நவம்பர் 20 - 1891 ஏப்ரல் 4 ) மேலும் சர் மாதவ ராவ் தஞ்சாவூர்காரர் அல்லது வெறுமனே மாதவராவ் தஞ்சாவூர்காரர் எனப்படும், இவர் ஓர் இந்திய இராஜதந்திரியும், அரசு ஊழியரும், நிர்வாகியும் மற்றும் அரசியல்வாதியும் ஆவார். மேலும் இவர் 1857 முதல் 1872 வரை திருவிதாங்கூரின் திவானாகவும், 1873 முதல் 1875 வரை இந்தோரின் திவானாகவும் மற்றும் 1875 முதல் 1882 வரை பரோடாவின் திவானாகவும் பணியாற்றியுள்ளார். [2] இவர், திருவிதாங்கூர் முன்னாள் திவானான ஆர். வெங்கட ராவ் என்பவரது மருமகனும் இரங்கா ராவ் என்பவரது மகனும் ஆவார். [3] [4] [5]

மாதவ ராவ் 1828 ஆம் ஆண்டில் கும்பகோணத்தைச் சேர்ந்த ஒரு முக்கிய தேசஸ்த் பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். மேலும் சென்னையில் கல்வியைப் பெற்றார். [6] சென்னை அரசுப் பணியில் இரண்டு ஆண்டுகள் பணியாற்றிய பிறகு, மாதவ ராவ் திருவிதாங்கூர் இளவரசர்களுக்கு ஆசிரியராக நியமிக்கப்பட்டார். இவரது திறாமையால் ஈர்க்கப்பட்ட மாதவ ராவ் வருவாய் துறைக்கு மாற்றப்பட்டார். அதில் இவர் படிப்படியாக உயர்ந்து 1857 இல் திவான் ஆனார்.

மாதவ ராவ் 1857 முதல் 1872 வரை திருவிதாங்கூர் திவானாக பணியாற்றினார். கல்வி, சட்டம், பொதுப்பணி, மருத்துவம், தடுப்பூசி மற்றும் பொது சுகாதாரம் மற்றும் வேளாண்மை ஆகியவற்றில் முன்னேற்றங்களைக் கொண்டு வந்தார். திருவிதாங்கூரின் பொதுக் கடன்களைத் தீர்ப்பதற்கும் இவர் பொறுப்பேற்றார். மாதவ ராவ் திருவிதாங்கூரின் திவான் பதவியில் இருந்து விலகி 1872 இல் சென்னைக்குத் திரும்பினார். இவரது பிற்கால வாழ்க்கையில், மாதவ ராவ் அரசியலில் தீவிரமாக பங்கேற்றார். மேலும் இந்திய தேசிய காங்கிரசின்ன் ஆரம்ப முன்னோடிகளில் ஒருவராகவும் இருந்தார். மாதவ ராவ் 1891 இல் தனது 63 வயதில் சென்னையில் மைலாப்பூரில் காலமானார்.

மாதவ ராவ் தனது நிர்வாகத் திறன்களுக்காக மதிக்கப்பட்டார். பிரிட்டிசு அரசியல்வாதி ஹென்றி பாசெட் இவரை "இந்தியாவின் துர்கோட்" என்று அழைத்தார். 1866 ஆம் ஆண்டில், இவர் பேரரசின் நட்சத்திர ஒழுங்கு ஆனார் .

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் தொழில்[தொகு]

மாதவ ராவ் 1828 நவம்பர் 20 ஆம் தேதி ஒரு முக்கிய தஞ்சாவூர் மராத்தி தேசஸ்த் பிராமண குடும்பத்தில் பிறந்தார். [7] இவரது தந்தையின் தாத்தா கோபால் பந்த் மற்றும் அவரது மகன் குண்டோ பந்த் ஆகியோர் பிரிட்டிசாரின் கீழ் பல்வேறு இந்திய இளவரசர்களின் நம்பிக்கை மற்றும் அதிகாரத்தையும் கொண்டிருந்தனர். இவரது தந்தைவழி மாமா இராய் இராய இராய் வெங்கட ராவ் திருவிதாங்கூரின் முன்னாள் திவான் ஆவார். பின்னர் இவரது தந்தை இரங்கா ராவ் கூட சிறுது காலம் திருவிதாங்கூரின் திவானாக இருந்தார். மாதவ ராவிற்கு இரண்டு மூத்த சகோதரர்கள் இருந்தனர்.

மாதவ ராவ் தனது ஆரம்ப வாழ்க்கையை சென்னையில் கழித்தார். அங்கு இவர் அரசு உயர்நிலைப் பள்ளியில் (பின்னர் சென்னை மாநிலக் கல்லூரியானது ) படித்தார் ஒரு மாணவராக, மாதவ ராவ் கணிதத்திலும் அறிவியலிலும் விடாமுயற்சியும் கவனமும் வலிமையும் கொண்டிருந்தார். 1846 ஆம் ஆண்டில், இவர் தனது பேராசிரியர் பட்டத்தை உயர் கௌரவங்களுடன் பெற்றார். பின்னர், இவர் உயர்நிலைப் பள்ளியில் கணிதம் மற்றும் இயற்பியல் ஆசிரியராக நியமிக்கப்பட்டார். இருப்பினும், மாதவ ராவ் ஆளுநரின் அலுவலகத்தில் கணக்காளர் பணியில் சேருவதற்காக ஆசிரியர் பணியிலிருந்து வெளியேறினார். 1848 ஆம் ஆண்டில், இவர் திருவிதாங்கூர் இளவரசர்களுக்கு ஆசிரியராக நியமிக்கப்பட்டார். மாதவ ராவ் திருவிதாங்கூர் இளவரசர்களுக்கு ஆசிரியராக நான்கு ஆண்டுகள் பணியாற்றினார். இவரது திறமையால் ஈர்க்கப்பட்டு இவருக்கு திருவிதாங்கூர் வருவாய்த் துறையில் ஒரு பதவி வழங்கப்பட்டது. குறுகிய காலத்தில், மாதவ ராவ் தெற்கு பிரிவின் திவான் பேசுகராக உயர்ந்தார்.

இந்த காலத்தில், திருவிதாங்கூர் கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொண்டது. மேலும் கருவூலம் காலியாக இருந்தது. சென்னை அரசு மானியம் செலுத்தவில்லை. தனது பிரபலமற்ற அவகாசியிலிக் கொள்கை அறிவித்த சிறிது காலத்திலேயே, டல்ஹெளசி பிரபு திருவிதாங்கூரையும் இணைக்க எதிர்பார்த்திருந்தார். இந்த நேரத்தில், திருவிதாங்கூர் ராஜா உத்திரம் திருநாள் மார்த்தாண்ட வர்மன் மாதவா ராவை பிரிட்டிசு அரசாங்கத்துடன் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொண்டார். இதன் விளைவாக, திருவாங்கூரின் அடுத்த திவானாக மாதவ ராவ் நியமிக்கப்பட்டார்.

திருவிதாங்கூரின் திவான்[தொகு]

மாதவ ராவ் (இடமிருந்து) நேரடி வாரிசு- விசாகம் திருநாள் மற்றும் திருவிதாங்கூர் மகாராஜா, ஆயில்யம் திருநாள்

அந்த நேரத்தில் மாநிலத்தின் முழு நிர்வாகமும் ஒழுங்கற்ற நிலையில் இருந்தது. பொது கருவூலங்கள் காலியாக இருந்தன. சம்பள வழியில் பெரும் நிலுவைத் தொகைகள் இருந்தன. மகாராஜா ஏற்கனவே திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயிலிலிருந்து கடன் வாங்கி, பிரிட்டிசு அரசாங்கத்திற்கு வழங்க வேண்டிய மானியத்தை வழங்கி வந்தார். திவான் பதவியை எவரும் ஏற்கத் த்யங்கும் அளவுக்கு விவகாரங்கள் மோசமாக இருந்தன. மாதவ ராவின் நியமனம் முடிந்த உடனேயே திருவிதாங்கூரில் சானார் போராட்டங்கள் நடந்தன. இது மாநிலத்தின் பிரச்சினைகளை மேலும் அதிகரித்தது.

1860 ஆம் ஆண்டில், மகாராஜா இறந்தார். மாதவ ராவின் மாணவரும், மறைந்த மகாராஜாவின் மருமகன் ஆயில்யம் திருநாள் அடுத்து ஆட்சிக்கு வந்தார். புதிய மற்றும் ஒப்பீட்டளவில் குறைவான மகாராஜாவின் கீழ் மாதவ ராவின் நிர்வாகம் அதன் முன்னேற்றத்தைத் தொடங்கியது. ஏகபோகங்கள் மற்றும், ஏராளமான சிறு வரிகள் ரத்து செய்யப்பட்டு நில வரியும் குறைக்கப்பட்டது. 1863 வாக்கில் திருவிதாங்கூர் அரசாங்கத்தின் கடன்கள் குறைந்து, "திருவிதாங்கூருக்கு இப்போது பொதுக் கடன் இல்லை" என்ற நிலையை எட்டியது. அரசு ஊழியர்களின் சம்பளம் 50 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்த்தப்பட்டது. மேலும் அவர்களின் மன உறுதியும் செயல்திறனும் மேம்படுத்தப்பட்டது. மாதவ ராவின் முற்போக்கான நிதி நடவடிக்கைகள் சாட்சியம் அளித்தன. இவர் திவான் பதவியை ஏற்றுக்கொண்டபோது அரசின் கருவூலம் கடன்பட்ட மற்றும் வெற்று கருவூலமாக இருந்தது. ஆனால் 1872 இல் இவர் மாநிலத்தை விட்டு வெளியேறியபோது மாநிலத்தில் நாற்பது லட்சம் ரூபாய் கையிருப்பு இருந்தது, அந்த காலகட்டத்தில் இது ஒரு பெரும் தொகையாகும். [8] மாதவ ராவ் அடிப்படையில் ஒரு நிதியாளராக வர்ணிக்கப்படுகையில், கல்வி, சட்டம், பொதுப்பணி, மருத்துவம், தடுப்பூசி மற்றும் பொது சுகாதாரம், விவசாயம் போன்றவற்றிலும் பெரும் வளர்ச்சியைக் கொண்டுவந்தார். ஆண்டுதோறும் இவரது பணியை சென்னை அரசு பாராட்டியது. எல்லை தகராறுகள், வர்த்தக அறிக்கைகள் போன்ற சிறப்பு பாடங்களில் மாநில ஆவணங்களையும் இவர் வரைந்தார். மேலும் ஒவ்வொரு துறையின் பதிவுகளையும் பராமரிக்கத் தொடங்கினார். இவரது சேவைகளை அங்கீகரிக்கும் விதமாக, பொதுமக்களின் நன்கொடைகள் மூலம், திருவிதாங்கூரில் மாதவ ராவின் வெண்கல சிலை ஒன்று அமைக்கப்பட்டது. [9]

இருப்பினும், திவானுக்கும் மகாராஜாவுக்கும் இடையில் ஏற்பட்ட தவறான புரிதல்களால், மாதவ ராவ் 1872 பிப்ரவரியில் ஓய்வு பெற்றார். [10] எவ்வாறாயினும், மகாராஜா இவரது பணிக்கு மதிப்பளித்து இவருக்கு ரூ. 1000, அளித்து அனுப்பி வைத்தார். அந்த நாட்களில் இது ஒரு நல்ல மதிப்பான தொகையாகும். இவரது ஆரம்பத் திட்டம் சென்னைக்குச் சென்று ஓய்வு பெறுவதாக இருந்தது. ஆனால் அதற்கு பதிலாக இந்திய இளவரசர்களிடையே இவரது சேவைகளுக்கு பெரும் தேவை இருந்தது. ஏனெனில் இவர் திருவிதாங்கூருக்கு பிரிட்டிசு அரசாங்கத்தால் "இந்திய மாதிரி மாநிலம்" என்ற பாராட்டைப் பெற்றார். ஹென்றி பாசெட் என்பவர் 1872 இல் மாதவ ராவ் ஓய்வு பெற்றதைக் கேள்விப்பட்டபோது, இவ்வாறு விவரித்தார்:

திருவனந்தபுரம் செயலகத்தில் சட்டம்பி சுவாமியை அங்கீகரித்து பணியமர்த்துவதில் மாதவ ராவ் முக்கிய பங்கு வகித்தார் . [11]

இந்தோர் மற்றும் பரோடா[தொகு]

மாதவ ராவ் மற்றும் பரோடாவின் அமைச்சரவைக் குழுவின் உருவப்படம் (சுமார் 1880)
தஞ்சை மாதவ ராவ் (சி .1880)

1872 ஆம் ஆண்டில், இந்தோரைச் சேர்ந்த இரண்டாம் துகோஜிராவ் ஹோல்கரின் வேண்டுகோளின் பேரில், இந்திய அரசு மாதவ ராவை ஓய்வுபெறுவதிலிருந்து தடுத்து இந்தூரின் திவானாக பொறுப்பேற்க தூண்டியது. மாதவ ராவ் 1873 முதல் 1875 வரை இந்தோரின் திவானாக பணியாற்றினார். இந்த சமயதில் இவர் இந்திய தண்டனைச் சட்டத்தின் வரைவைத் தொடங்கினார். மேலும் அபினியை ஒழிப்பது மற்றும் இந்தூரில் இரயில்வே விரிவாக்கம் குறித்து திட்டங்களைத் தீட்டினார். சிறிது காலத்திற்குப் பிறகு, பரோடாவின் திவான்-அரசப்பிரதிநிதியாக பதவியேற்குமாறு இந்திய அரசு மாதவ ராவைக் கேட்டுக்கொண்டது. அதன் ஆட்சியாளர் மல்கர் ராவ் கெய்க்வாட் மோசமான நிர்வாகத்திற்காக அப்போது பதவி நீக்கம் செய்யப்பட்டிருந்தார்.

மாதவ ராவ் பரோடாவின் வருவாய் நிர்வாகத்தை சீர்திருத்தியதோடு, சிரசுதார்கள் எனப்படும் வருவாய் அதிகாரிகளின் அதிகாரத்தையும் கட்டுப்படுத்தினார். சிரசுதார்களின் நில உரிமைகள் ரத்து செய்யப்பட்டு அவர்களின் நிலங்கள் அரசால் கையகப்படுத்தப்பட்டன. மேலும், மாதவ ராவ், பரோடாவின் இராணுவம், பள்ளிகள், நீதிமன்றங்கள் மற்றும் நூலகங்களை திறம்பட மறுசீரமைத்தார். நகர திட்டமிடல் நடவடிக்கைகளையும் இவர் அறிமுகப்படுத்தினார்.

புதிய மகாராஜா மகாராஜா மூன்றாம் சாயாஜிராவ் கெய்க்வாட்டுனான கருத்து வேறுபாடு காரணமாக மாதவ ராவ் 1882 செப்டம்பரில் அங்கிருந்து வெளியேறி, சென்னை, மைலாப்பூரில் உள்ள தனது வீட்டிற்குத் திரும்பி ஓய்வு பெற்றார். [12] [13] [14]

இந்திய தேசிய காங்கிரசு[தொகு]

மாதவ ராவ் தனது வாழ்க்கையின் பிற்காலங்களில் அரசியலில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். இந்திய தேசிய காங்கிரசு உருவான இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, 1887 இல் அதில் சேர்ந்தார். 1887 சென்னை அமர்வின் போது வரவேற்புக் குழுவின் தலைவராக பணியாற்றினார். 1888 ஆம் ஆண்டில், அப்போதைய இந்தியாவின் த்லைமை ஆளுநர் டபெரின் பிரபுவால் பேரரசின் சட்டமன்றத்தில் இவருக்கு ஒரு இடம் வழங்கப்பட்டது. ஆனால் மாதவ ராவ் உடல்நலத்தின் அடிப்படையில் இந்த வாய்ப்பை மறுத்துவிட்டார்.

1887 அமர்வின் போது தொடக்க உரையை நிகழ்த்தியபோது, மாதவ ராவ் இந்திய தேசிய காங்கிரசு என்று விவரித்தார் சீர்திருத்த சட்டமன்ற சபைகளில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பாக மற்ற உறுப்பினர்களுடனான கருத்து வேறுபாடு காரணமாக மாதவ ராவ் 1889 இல் நிலைக்குழுவில் இருந்து விலகினார். [15]

பிற்கால வாழ்வு[தொகு]

தனது பிற்காலத்தில், மாதவ ராவ் கல்வி முறையை சீர்திருத்த முயன்றார். பரோடாவின் திவானாக பணியாற்றியபோதும், ராவ் சென்னைப் பல்கலைக்கழகத்தின் சக ஊழியராக நியமிக்கப்பட்டார். இவர் பெண்களின் கல்விக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து குழந்தை திருமணத்தைத் தீவிரமாக எதிர்த்தார். இந்து சாத்திரங்களின் நேரடி விளக்கத்தையும் இவர் விமர்சித்தார். இருப்பினும், மாதவ ராவ், இறுதி வரை, ஒரு சமாதானவாதி, சமூக சீர்திருத்தங்கள் குறித்த தனது கருத்துக்களில் மிதமான மற்றும் எதிர்வினையற்றவராக இருந்தார். [16] [17]

மாதவ ராவ் பிரிட்டிசு சமூகவியலாளரும் அரசியல் கோட்பாட்டாளருமான எர்பர்ட் இஸ்பென்சரிடம் தனது விருப்பத்தை வளர்த்துக் கொண்டார். மேலும் தனது வாழ்க்கையின் கடைசி நாட்களை தனது படைப்புகளைப் படித்து வந்தார். அரசியல் மற்றும் மதம் முதல் வானியல் வரை பல்வேறு தலைப்புகளில் செய்தித்தாள்களுக்கு கட்டுரைகளை வழங்கினார். "நேட்டிவ் திங்கர்" மற்றும் "நேட்டிவ் அப்சர்வர்" என்ற புனைப்பெயர்களின் கீழ், மாதவ ராவ் ஆப்பிரிக்காவின் ஜெர்மன் ஆக்கிரமிப்பு மற்றும் இந்து பெண்கள் பொதுவில் ஏற்றுக்கொண்ட ஆடைக் குறியீடு குறித்து கருத்து தனது கருத்துகளை எழுதினார். ஆப்பிரிக்காவின் ஜெர்மன் ஆக்கிரமிப்பு குறித்த தனது கட்டுரையை ஜெர்மன் அதிபர் பிஸ்மார்க்கிற்கு அனுப்பினார். அவர் ஒப்புதல் மற்றும் பாராட்டு கடிதத்துடன் பதிலளித்தார். 1889 ஆம் ஆண்டில், குசராத்தி, மராத்தி மற்றும் மலையாளம் என பல்வேறு இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட "ஒரு சொந்த சிந்தனையாளரால் பூர்வீக குழந்தைகளுக்கு பயிற்சி அளிப்பதற்கான குறிப்புகள்" என்ற தலைப்பில் ஒரு துண்டு பிரசுரத்தை வெளியிட்டார். தமிழில் சில சிறிய கவிதைகளையும் இயற்றினார். [18]

தனது வாழ்நாளின் முடிவில், மாதவ ராவ் உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டார். 1890 திசம்பர் 22 அன்று, தனது மைலாப்பூர் வீட்டில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். மாதவ ராவ் மூன்று மாதங்களுக்குப் பிறகு, 1891 ஏப்ரல் 4, அன்று தனது அறுபத்து மூன்று வயதில் இறந்தார்.

குடும்பம்[தொகு]

மாதவ ராவ் யமுனா பாய் என்பவரை மணந்தார். தம்பதியருக்கு த. ஆனந்த ராவ், இரங்கா ராவ், இராம்சந்திர ராவ் என்ற மூன்று மகன்களும் மற்றும் பாலுபாய் மற்றும் அம்பாபாய் என்ற இரு மகள்களும் இருந்தனர். [19] மாதவ ராவின் மூத்த மகன் த. ஆனந்த ராவ் 1909 முதல் 1912 வரை மைசூர் திவானாக பணியாற்றினார். மாதவ ராவின் உறவினர் ஆர்.ரகுநாத ராவ், பரோடாவின் திவானாக பணியாற்றினார். மேலும் இந்திய தேசிய காங்கிரசின் ஆரம்ப தலைவராகவும் இருந்தார். [20] இவரது மற்றொரு உறவினர், T. ராமா ராவ் 1892 முதல்1887 வரை திருவிதாங்கூர் திவானாக இருந்தார். த.ஆனந்த ராவ் இராம ராவின் மகள் சௌந்தர பாய் என்பவரை மணந்தார்.

குறிப்புகள்[தொகு]

 1. Lal 2015, ப. 20.
 2. Solomon & Bond 2006, ப. 24.
 3. Buckland 1971, ப. 28.
 4. Lethbridge 2005, ப. 292.
 5. Aiyangar 1995, ப. 106.
 6. Hemingway 2002, ப. 220.
 7. https://books.google.com/books?redir_esc=y&id=WxPmlV2KMu4C&focus=searchwithinvolume&q=brahmin A National Biography for India, Volume 1 By Jyotis Chandra Das Gupta, Page 64
 8. Indian Magazine and Review, Issues 241-252 By National Indian Association in Aid of Social Progress and Education in India., 1891 - Education, Page 310
 9. Educational Development in South India By K. G. Vijayalekshmy,Mittal Publications, 1993,Page-6
 10. Indian Magazine and Review, Issues 241-252 By National Indian Association in Aid of Social Progress and Education in India., 1891 - Education, Page 310
 11. Raman Nair, R and Sulochana Devi, L (2010). Chattampi Swami: An Intellectual Biography. Trivandrum,. Chattampi Swami Archive, Centre for South Indian Studies, Trivandrum
 12. Nationalism and Social Reform in [sic] Colonial Situation By Aravind Ganachari, pages 163-170
 13. Princely India and the British: Political Development and the Operation of Empire By Caroline Keen, page 242
 14. The Indian Princes and their States By Barbara N.Ramusack, Cambridge University Press page 185
 15. The Indian Nation Builders, Volume 2 By Mittal Publications,Pages 347-352
 16. Pathways to Nationalism: Social Transformation and Nationalist Consciousness in Colonial Tamil Nadu, 1858–1918 By S. Ganeshram, SOCIAL REFORMS - Movements Against Child Marriage
 17. Indian Nationalism and Hindu Social Reform By Charles Herman Heimsath, pages 112,163,193
 18. A history of Indian English literature By M. K. Naik, Sahitya Akademi,1982, page 90
 19. "How Bengaluru's Choc-a-bloc Junction is linked to Travancore Royalty". Economic Times. https://www.economictimes.com/magazines/panache/how-bengalurus-choc-a-bloc-junction-is-linked-to-travancore-royalty/articleshow/60206712.cms. பார்த்த நாள்: 24 August 2017. 
 20. Raghoonath Rao: A Sketch of His Life and Career By G. A. Natesan, 1918 - 48 pages

நூலியல்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
த. மாதவ ராவ்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
 • Travancore State Manual by V. Nagam Aiya, Vol II, pages 559–568
 • D.Ghai (1999). Social Development and Public Policy. Springer. pp. 66–70.
 • Colonial Modernities: Building, Dwelling and Architecture in British India and Ceylon. British India: Peter Scriver, Vikramaditya Prakash. pp. 143, 266.
 • Govinda Parameswaran Pillai (1897). Representative Indians. Routledge. pp. 101–113.
 • The Indian Nation Builders, Part II. Madras: Ganesh & Co. pp. 332–358.
"https://ta.wikipedia.org/w/index.php?title=த._மாதவ_ராவ்&oldid=3286698" இலிருந்து மீள்விக்கப்பட்டது