த. நா. குமாரசுவாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search


தண்டலம் நாராயண குமாரசுவாமி (T. N. Kumaraswami) (1907 - 1982), தண்டலம் சங்கர நாராயண சாஸ்திரி - ராஜம்மாள் இணையருக்கு 24 டிசம்பர் 1907 அன்று சென்னையில் பிறந்தவர். சென்னை முத்தியால்பேட்டை உயர்நிலைப் பள்ளியில் பயிலும் போதே தமிழ் மொழியுடன், சமஸ்கிருதம், தெலுங்கு மொழிகளையும் கற்றார். கல்லூரிப் படிப்பில் தத்துவம் மற்று உளவியல் பாடங்களில் 1928ல் பட்டம் பெற்றார்..

1930ம் ஆண்டில் கொல்கத்தா சென்று வங்காள மொழி பயின்ற பின், இரவீந்திரநாத் தாகூரை சந்தித்து, அவரது நூல்களை தமிழில் மொழிபெயர்ப்பதற்கு அனுமதி பெற்றார். நாட்டுப்பற்றின் காரணமாக, நேதாஜி எழுதிய இளைஞன் கனவு, புதுவழி முதலிய நூல்களை தமிழில் மொழிபெயர்த்தார்.

த.நா. குமாரசுவாமி எழுதிய முதல் சிறுகதை கன்யாகுமரி 1934 ஆம் ஆண்டு தினமணி நாளிதழில் வெளியானது. பின்னர் அவரது சிறுகதைகள் சுதேசமித்திரன், கல்கி, அமுதசுரபி, ஆனந்த விகடன், கலைமகள் முதலிய இதழ்களிலும் வெளியானது.

1960-61களில் நடைபெற்ற சாகித்திய அகாதமியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, இரவீரந்திரநாத் தாகூரின் சில நூல்களை தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டார்.

1962 ஆம் ஆண்டு எழுத்தாளர்கள் பரிவர்த்தனத் திட்டப்படி தமிழ் எழுத்தாளர், மொழி பெயர்ப்பாளர் என்ற தகுதியில், வங்க மொழி எழுத்தாளர் நிகார் ரஞ்சன் ரே, அசாமிய எழுத்தாளர் ஹேம் காந்த் பரூவா ஆகியோருடன் இரண்டு மாதம் சோவியத் நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட போது லியோ டால்ஸ்டாய், மாக்சிம் கார்க்கி, ஆன்டன் செக்கோவ் எழுத்தாளர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

த.நா. குமாரசுவாமி வங்க மொழி இலக்கியங்களின் தமிழ் மொழிபெயர்ப்புத் தொண்டினைப் பாராட்டிப் போற்றி ‘நேதாஜி புரஸ்கார்’ (நேதாஜி இலக்கிய விருது) விருது அளிக்கப்பட்டது. நாட்டுப்பற்றின் காரணமாக, நேதாஜி எழுதிய ‘இளைஞன் கனவு’, ‘புதுவழி’ முதலிய நூல்களை தமிழில் மொழிபெயர்த்தார்.

கன்யாகுமரி, சந்திரகிரகணம், நீலாம்பரி, இக்கரையும் அக்கரையும், கற்பவல்லி முதலிய சிறுகதை தொகுப்புகளை எழுதி வெளியிட்டு உள்ளார்.

விடுதலை, ஒட்டுச்செடி, குறுக்குச் சுவர், வீட்டுப்புறா, அன்பின் எல்லை, கானல் நீர் முதலிய நாவல்களையும் படைத்துள்ளார். ஒட்டுச் செடி நாவல் ஆனந்த விகடன் இதழில் தொடராக வெளியானது.

மொழிபெயர்ப்பு நூல்கள்[தொகு]

த.நா. குமாரசுவாமியின் இலக்கியப் பணிகளில் மிகவும் முக்கிய இடத்தை வகிப்பது அவருடைய மொழிப்பெயர்ப்பு பணியாகும். 1930களில் தொடங்கிய அவரது மொழிபெயர்ப்புப் பணி 1980 வரை 50 ஆண்டு காலம் தொடர்ந்தது. இவரது தம்பி த. நா. சேனாபதியும் இவரைப் போன்றே வங்க மொழி இலக்கியங்களை தமிழில் மொழிபெயர்த்தவர் ஆவார்.

வங்க இலக்கியத்தில் முன்னோடிகளாக விளங்கிய சரத் சந்திரர், பங்கிம் சந்திர சட்டர்ஜி, இரவீந்திரநாத் தாகூர், தாராசங்கர் பானர்ஜி முதலியவர்களின் நாவல்களையும், சிறுகதைகளையும் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.

இரவீந்திரநாத் தாகூரின் புயல், சதுரங்கம், ராஜகுமாரி விபா, ராஜரிஷி, கோரா, பூந்தோட்டம், இரு சகோதரிகள், லாவண்யா, சிதைந்த கூடு, மூவர், விநோதினி முதலிய புதினங்களையும், காரும் கதிரும், கல்லின் வேட்கை, மானபங்கம், போஸ்ட் மாஸ்டர், பத்தினிப் பெண், நெற்றிப் பொட்டு, வெற்றி முதலிய சிறுகதைகளையும், மகுடம், புலைச்சி முதலிய நாடகங்களையும், தாகூர் சிறுகதைகள் இரண்டு தொகுதிகளையும், தாகூர் கவிதைகளையும், பயணக் கட்டுரைகளையும் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். [1]

பங்கிம் சந்திரரின் விஷ விருட்சம், ஆனந்தமடம்[2], கிருஷ்ண காந்தன் உயில், மாதங்கினி, கபால குண்டலா முதலிய நூல்களை தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.

சரத் சந்திரரின் பைரவி, அமூல்யன், சௌதாமினி, மருமகள் முதலிய நூல்களையும் தமிழில் மொழி பெயர்த்துள்ளார்.[3]

கிழக்கோடும் நதி எனும் சீன மொழி நாவலை ஆங்கிலத்திலிருந்தும், துர்லக் எனும் செக்கோஸ்லோவாகிய மொழிக் கதையை ஆங்கிலத்திலிருந்தும், காதலர் எனும் பர்மிய மொழிக் கதையையும் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.

நாட்டுப் பணிகள்[தொகு]

நாட்டுப்பற்றுடன், சமுதாயத்தின் மீதும் பற்று கொண்ட குமாரசுவாமி, சென்னை அருகே பாடி எனும் கிராமத்தில் நலிந்தவர்களுக்காக, தனது சொந்த நிலத்திலிருந்து ஒரு ஏக்கர் நிலத்தை சாதி கலவரத்தினால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த ஆதிதிராவிட மக்களுக்கு இலவசமாக வழங்கினார். பாடி கிராம மக்கள் த.நா. குமாரசுவாமியை காந்தி ஐயர் என்று போற்றினர்.

குடும்பம்[தொகு]

த.நா. குமாரசுவாமி 1925 ஆம் ஆண்டு காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ருக்மணியை திருமணம் செய்து கொண்டார். த. நா. குமாரசுவாமியின் மகன் த. கு. அஸ்வின்குமார் ஆங்கில இலக்கியத்தில் முதுகலை பட்டம் பெற்றவர். இவர் எழுதிய சிந்தனை செயல் சாதனை எனும் நூலிற்கு, 1987ல் தமிழக அரசின் முதல் பரிசு பெற்றது. அஸ்வின்குமார் சென்னை வானொலி நிலைய உதவி இயக்குநராக உள்ளார்.[4]

மறைவு[தொகு]

தமிழ்மொழி பெயர்ப்பு உலகில் சிறந்து விளங்கி, தமிழுக்குத் தொண்டு செய்த த.நா. குமாரசுவாமி 17-09-1982 அன்று, தமது 75 ஆவது வயதில் காலமானார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Propagators of Tagore's works in Tamil
  2. ஆனந்த மடம் (மொழிபெயர்ப்பு நூல்)
  3. [ https://sites.google.com/site/ref4rsr/home/sarathchandra-by-t-n-kumarasamy SARATHCHANDRA by T.N.KUMARASAMY]
  4. த. நா. குமாரஸ்வாமி - வரலாறு

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=த._நா._குமாரசுவாமி&oldid=2919434" இருந்து மீள்விக்கப்பட்டது