தோமாவின் பணிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தோமாவின் பணிகள் (Acts of Thomas) என்பது கிபி 2ஆம் நூற்றாண்டின் இறுதியில் அல்லது மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சிரியாக் மொழியில் எழுதப்பட்ட கிறித்தவ நூல் ஆகும். இயேசுவின் பன்னிரு திருத்தூதர்களில் ஒருவரான புனித தோமாவின் வரலாற்றை கதை வடிவில் கூறுகின்ற நூலாக இது அமைந்துள்ளது. இந்தோ-பார்த்திய அரசரான கொண்டபோரசை தோமா மனந்திருப்பி கிறித்தவராக மாற்றியது குறித்தும், மஸ்டாய் என்ற (மயிலாப்பூர்) அரசரின் தூண்டுதலால் கொலை செய்யப்பட்டது குறித்தும் இதில் தகவல்கள் உள்ளன. சலாமிஸ் ஆயரான எபிபானியுஸ், இந்த கிபி 4ஆம் நூற்றாண்டில் பரவலாக புழக்கத்தில் இருந்ததாக குறிப்பிடுகிறார். இதன் விரிவாக்கப்பட்ட கிரேக்க மொழிபெயர்ப்பு 6ஆம் நூற்றாண்டுக்கு பிறகு உருவானதாக அறிகிறோம்.

நூலின் உள்ளடக்கம்[தொகு]

இயேசு கிறித்து உயிர்த்தெழுந்து விண்ணகம் சென்ற பிறகு, அவரது சீடர்கள் எந்த நாட்டில் சென்று பணியாற்ற வேண்டும் என்பது குறித்து சீட்டுப் போட்டு பார்த்தனர். அப்போது, தோமாவுக்கு விழுந்த சீட்டில் இந்தியாவின் பெயர் வந்தது. அதிக தொலைவில் உள்ள இந்தியாவுக்கு செல்ல அவர் விரும்பவில்லை. அப்போது இந்தோ-பார்த்திய அரசரான கொண்டபோரஸ் அனுப்பிய ஹப்பான் என்பவர், கட்டடக் கலைஞர் ஒருவரை எதிர்பார்த்து பாலஸ்தீன் சென்றிருந்தார். அவருக்கு தோன்றிய இயேசு தமது பணியாளரை அழைத்து செல்லுமாறு கூறி, தோமாவை அவருடன் அனுப்பி வைத்தார்.[1]

கொண்டபோரஸ் அரசவைக்கு வந்த தோமா, மாளிகை கட்டுவதாகக் கூறி பணத்தை வாங்கிக் கொண்டு, அதை ஏழைகளுக்கு உதவி செய்ய செலவிட்டார். குறிப்பிட்ட காலத்திற்கு பின் மாளிகையைப் பார்க்கச் சென்ற அரசர், அங்கு ஒரு சிறிய கல் கூட இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். தோமா தம்மை ஏமாற்றி விட்டதாகக் கூறி, அவரை அரசர் சிறையில் அடைத்தார். அப்போது, அரசரின் தம்பி காத் திடீரென நோய்வாய்ப்பட்டு இறந்து போனார். அவருக்கு இறுதிச் சடங்குகள் நடத்த ஏற்பாடு செய்து கொண்டிருந்த வேளையில், அவர் திடீரென எழுந்து விண்ணகத்தில் தமது அண்ணன் பெயரில் உள்ள மாளிகையைத் தமக்கு தருமாறு கேட்டார். இதையடுத்து, தோமா மாளிகை கட்டுவதாக கூறியது உண்மை என்று நம்பிய அரசர் கொண்டபோரஸ், அவரது குடும்பத்துடன் திருமுழுக்கு பெற்று கிறிஸ்தவரானார். அதன் பிறகு, சிறிது காலம் அந்த நாட்டில் உள்ள மக்களுக்கு இயேசுவைப் பற்றிய நற்செய்தி அறிவித்து, பலரை மனந்திருப்பினார்.[2]

பின்னர் மற்றொரு நாட்டுக்கு (மயிலாப்பூர்) சென்ற தோமா, காரிஷ் (தமிழ்: காரி) என்ற அரசவை பணியாளரின் மனைவியின் நோயை குணப்படுத்தினார். இதையடுத்து, தோமா அப்பகுதியில் இயேசுவைப் பற்றிய நற்செய்தியை மக்களுக்கு அறிவித்து பல்வேறு அற்புதங்கள் செய்து வந்தார். இதை அறிந்த அரசர் மஸ்டாயின் (தமிழ்: மகாதேவன்) மனைவி மிக்தோனியா (தமிழ்: மகதோனி) தோமாவின் போதனைகளை ஏற்றுக்கொண்டு கிறிஸ்தவராக மனந்திரும்பினார். மிக்தோனியா கிறிஸ்தவ நம்பிக்கையை கைவிட அரசர் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அரசர், தோமாவைக் கொலை செய்ய ஆணையிட்டார். அதன்படி, அரசரின் காவலர்கள் தோமாவை ஈட்டியால் குத்தி கொலை செய்தனர். அவரது உடல் புதைக்கப்பட்ட இடத்திலும் அற்புதங்கள் நிகழ்ந்ததைக் கண்ட அரசர் மஸ்டாயும் இறுதியில் கிறிஸ்தவரானார்.[3]

குறிப்புகள்[தொகு]

  1. The Legacy of St Thomas, Vijayan P. Bhaskaran
  2. புனித தோமா, வே. ஜான் பிரான்சிஸ்
  3. A Saga of Faith, S.J. Anthonysamy
"https://ta.wikipedia.org/w/index.php?title=தோமாவின்_பணிகள்&oldid=2288411" இருந்து மீள்விக்கப்பட்டது