தொழில்சார் கழகம்
தொழில்சார் கழகம் (Professional association) அல்லது தொழில்சார் அமைப்பு என்பது, ஒரு குறிப்பிட்ட தொழிலை முன்னேற்றுவதற்கும், அத்தொழிலில் ஈடுபட்டிருப்போரின் நலன்களையும், பொதுமக்கள் நலன்களையும் பேணுவதற்குமாக இலாப நோக்கற்ற முறையில் உருவாக்கப்படும் ஒரு அமைப்பு ஆகும்.
தொழில்சார் கழகங்களின் பங்கு
[தொகு]தொழில்சார் கழகங்கள் என்பன, "ஒரு குறிப்பிட்ட தொழில் முறையாகச் செய்யப்படுவதை மேற்பார்வை செய்வதற்கும், அதனைக் கட்டுப்படுத்துவதற்குமான அதிகாரம் அளிக்கப்பட்ட, அத்தொழிலைச் சார்ந்த ஒரு குழுவினர்" எனவும், "இத்தொழில் தொடர்பில் மக்களின் நலன்களைக் காப்பதற்கு நடவடிக்கை எடுப்போர்" எனவும், "அத் தொழில் புரிவேரின் நலன்கள் தொடர்பில் சார்பாளர்களாகத் தொழிற்படும் ஒரு குழு" எனவும் இவற்றின் பங்கு பல்வேறு விதமாக நோக்கப்படுகின்றது. அத்துடன், ஒரு தொழிலைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் கொண்ட அமைப்பு என்ற வகையில், அதன் சலுகைகள் கொண்ட வலுவான நிலையைப் பேணிக்கொள்வதையும் அது நோக்கமாகக் கொண்டிருக்கும்."[1]
இத்தகைய கழகங்கள், தமது உறுப்பினர்களுக்கான நெறிமுறைகளை விதிப்பதன் மூலமும், அத்தொழில்சார் கல்விப் பயிற்சிகளுக்கான தரத்தைப் பேணுவதன் மூலமும் பொதுமக்களின் நலன்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை எடுக்கின்றன. எனினும் பல வேளைகளில் இக் கழகங்களின் உறுப்பினர்களுக்குப் பணம் கொடுத்துச் சேவைக்கு அமர்த்தும் வாடிக்கையாளர்களின் நலன்களும் பொதுநலன்களும் முரண்படுகின்றபோது, தொழில்சார் கழகங்கள் தமது வாடிக்கையாளர்களின் நலனைக் காக்கவே முற்படுவதாகக் குற்றச்சாட்டுகளும் உள்ளன. இவ்வாறு நோக்கங்கள் முரண்படுவது தொடர்பில் பொதுவாகத் தொழில்சார் கழகங்கள் சமநிலையைப் பேணுவதற்குப் பெரும் முயற்சி எடுக்கின்றன. உறுப்பினர்களின் நலன்கள் என்று வரும்போது சில தொழில் கழகங்கள், தொழிலாளர் சங்கங்களைப் (labor union) போல் நடந்து கொள்வதான குற்றச் சாட்டுகளும் உண்டு.
செயற்பாடுகள்
[தொகு]பல தொழில்சார் கழகங்கள், அத் தொழிலுக்கான கல்வித் திட்டங்களை உருவாக்குவதிலும், அவற்றை மேற்பார்வை செய்வதிலும், தொழில் திறமைகளை வளர்த்தெடுப்பதிலும் ஈடுபடுகின்றன. அதனால், பல தொழில்சார் கழகங்கள், அத்தொழில் புரிவோர் தேவையான தகைமைகளைக் கொண்டுள்ளார்கள் என உறுதிப்படுத்துவதற்காகச் சான்றளிக்கும் நடைமுறைகளையும் வகுத்துள்ளன. சில கழகங்களைப் பொறுத்தவரை அக் கழகங்களில் ஒருவரை உறுப்பினராக ஏற்றுக்கொள்வதும், சான்றளிப்பதும் ஒன்றே. ஆனால், வேறு சில கழகங்கள் இவற்றை வேறு வேறான நடவடிக்கைகளாகக் கொள்கின்றன. அத்துடன், சில தொழில்துறைகளைப் பொறுத்தவரை, தொழில்சார் கழகங்களில் உறுப்புரிமை பெறுவது அத் தொழிலைப் புரிவதற்கான அனுமதியாகவும் அமைகின்றது. ஆனால் வேறு சில துறைகளில் இத்தகைய தொழில் புரிவதற்கான அனுமதி வழங்கும் அதிகாரம் தனியான அமைப்புக்களிடம் உள்ளன.