தொல்மரபியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தொல்மரபியல் (Archaeogenetics) என்பது மாந்தரினக் கடந்த காலத்தை ஆய்வுசெய்ய மக்கள்தொகை மரபியல், மூலக்கூற்று முறைகளைப் பயன்படுத்தும் தொல்லியலின் பிரிவு ஆகும். இச்சொல் மாபெரும் பிரித்தானிய தொல்லியலாளரும் தொல்மொழியியல் வல்லுனருமான காலின் இரென்ஃபிரூவ் அவர்களால் உருவாக்கப்பட்டது. இப்புலத்தில் பின்வரும் உட்பிரிவுகள் அடங்கும்:

  • தொல்லியல் எச்சங்கள்வழி பெறப்படும் டி.என்.ஏ பகுப்பாய்வு, அதாவது பண்டைய டி.என்.ஏ ஆய்வு;
  • இக்கால மாந்தரினம், விலங்கு, தாவரத் திரள்களின் டி.என்.ஏ பகுப்பாய்வு. இதனால் மாந்தரின, உயிர்க்கோள ஊடாட்டத்தை அறிதல்;
  • தொல்லியல் தரவுகளுக்கு மூலக்கூற்று மரபியலாளர்கள் உருவாக்கிய புள்ளியியல் முறைகளைப் பயன்படுத்தல்.

வரலாறு[தொகு]

தொல்மரபியல் மாந்தக் குருதிக் குழுக்கள் ஆய்வில் தோற்றங் கண்டது எனலாம். இந்தச் செவ்வியல் மரபுக் குறிப்பான் மொழியியல், இனக்குழுக்களை இனங்காண உதவியது. இந்தப் புலத்தின் தொடக்கநிலை ஆய்வுகள் உலூத்விக் கிர்சுழ்ஃபெல்டு, அன்கா இசுழ்ஃபெல்டு, வில்லியம் பாய்டு, ஆர்த்தர் மவுரந்த் ஆகியோரால் மேற்கொள்ளப்பட்டது.. 1960களுக்குப் பிறகு ஐரோப்பாவின் முந்து வரலாற்று மக்கள்தொகை ஆய்வுக்கு உலூகி உலூகா காவல்லி-சுஃபோர்ழா இந்தச் செவ்வியல் குறிப்பான்களைப் பயன்படுத்தி, 1994இல் மாந்த மரபன்களின் வரலாறும் புவிப்பரப்பியலும் என்ற நூலை எழுதினார்.

இதற்குப் பிறகு கோதுமை, அரிசி ஆகிய வீட்டுப் பயிர்களைப் பற்றியும் கால்நடைகள், ஆடுகள், பன்றிகள்,குதிரைகள் போன்ற விலங்குகள் பற்றியும் மரபியலாய்வுகள் தொடர்ந்தன. கால்நடை வளர்ப்பு தோன்றிய கால ஆய்வும் புவிஉயிர்ப் பரவலியலும் அவற்றின் ஊன்குருத்து மரபன் வேறுபாட்டு ஆய்வின் வழியாக மேற்கொள்ளப்பட்டன. அண்மையில் இம்மரபியல் விளக்கத்தை உறுதிபடுத்தவும் ஆண் கால்வழி வரலாற்றை விளக்கவும் ஒய் குறுமவக மரபன் சார்ந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதே கோவைகள் மாந்தரின வரலாற்றுக்கான மரபியல் சான்றை விளக்கவும் 1999இல் அண்டோனியோ அமோரிம் அவர்களால் பயன்படுத்தப்பட்டன.இதேபோன்ற கருத்துப்படிமத்தை 1963இல் இலினசு பாலிங்கும் சுக்கெர்லாந்தும் (பண்டைய அரசுகளின் அழிவை மீளக் கண்டுபிடிக்கவும் மிகுந்த ஆர்வத்தோடு) மரபனின் (டி.என்.ஏ வின்) கண்டுபிடிப்புக்கு முன்பே உருவாக்கினர்.

தொல்மரபியல் வழியாக வரலாற்றுக்கு முந்தைய மொழிகளின் தோற்றத்தையும் உலகப் பரவலையும் அறியலாம்.[1] மேலும் தொல்லியல் காலத்தில் மக்கள்தொகைப் பெருக்கத்தால் ஏற்பட்ட விளைவுகள்சார்ந்த சிக்கல்களை ஆய்வுசெய்ய தொல்லியல் வல்லுனருக்கு உதவலாம். அண்மைய ஆய்வுகளால், நுண்கற்காலத் தொழில்நுட்பம் உருவாவதற்கு முன்பே மக்கள்தொகை பேரளவில் பெருகியமை தெற்காசியா, கிழக்காசியா, சார்ந்த இக்கால மக்கள்தொகையின் எம்ட்டி டி,என்.ஏ ஆய்வு முடிவுகளால் தெரிய வந்துள்ளது. இப்போது மூலக்கூற்றுக் கடிகாரம் என்ற முறைவழியாக, 38-28 ஆயிரம் ஆண்டுகள் கால அளவில்மக்கள்தொகை வேகமாகப் பெருகியமை கண்டறியப்பட்டுள்ளது. உடனே விரைவாக அண். 35–30 ஆயிரம் ஆண்டுகள் கால அளவில் இருந்து முன்னைப் புத்தூழி வரை நுண்கற்காலத் தொழில்நுட்பம் வளரலானது. நுண்கற்காலத் தொழில்நுட்பம் உருவாக இதையே மட்டுமே காரணமாக கூறமுடியாதென்றாலும் இத்தகவல் தொல்லியலாளருக்கு பழங்காலத்தைக் காணும் சாளரமாக உதவுகிறது. மற்றவழிகளில் இவ்வகைத் தகவல் கிடைத்திருக்க முடியாது.[2]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

பார்வைகள்[தொகு]

  1. Forster & Renfrew 2006; Gray & Atkinson 2003, ப. 435–439.
  2. Petraglia 2009, ப. 12261–12266.

தகவல் வாயில்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தொல்மரபியல்&oldid=2982348" இலிருந்து மீள்விக்கப்பட்டது