தொல்காப்பியம் பிறப்பியல் செய்திகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் என்ற மூன்று அதிகாரங்கள் கொண்டது. அவற்றில் முதலாவதான எழுத்ததிகாரத்தில் மூன்றாவது இயல் 'பிறப்பியல்'. அந்த இயலில் 20 நூற்பாக்கள் இடம்பெற்றுள்ளன. இந்த இயலே இவ்வதிகாரத்தில் மிகக்குறைந்த நூற்பாக்களைக் கொண்ட இயல் ஆகும்.

தொல்காப்பியர் கணக்கில் தமிழ் எழுத்துகள் 33. அவை எவ்வாறு பிறந்து ஒலிக்கும் என்று இங்கு கூறப்படுகிறது.

பிறக்கும் நிலைகள்[தொகு]

வளி என்பது உலகைச் சூழ்ந்துள்ள காற்று. நாம் பேசும்போது வளி உந்தியிலிருந்து தோன்றும்.

(உந்தி என்பது காற்றை உந்தும் diaphragm. உந்தி உறுப்பானது அடிவயிற்றுக்கும் மூச்சுப்பைக்கும் இடையில் உள்ளது)

உந்தியில் தோன்றும் வளி தலையிலும், மிடற்றிலும், நிலைகொள்ளும்.

மிடறு என்பது தொண்டையில் உணவுக்குழாயையும், காற்றுக்குழாயையும் மிடைந்துவைக்கும், அதாவது மடைமாற்றும் pharynx.

அங்கிருந்து பாய்ந்து பல், இதழ், நாக்கு, மூக்கு, அண்ணம் ஆகியவற்றில் ஒலியைத் தோற்றுவிக்கும்.
ஆக நிலைகொண்டு பாயும் ஒலியுறுப்புகள் 8.
இந்த எழுத்துச்செல்வத்தைத் திறப்படக் காணின் அவற்றின் வெவ்வேறு தன்மை புலப்படும்.

உயிரெழுத்துகள்[தொகு]

  • 12 உயிரெழுத்துகளும் மிடற்று வளியில் இசைக்கும். இந்த இசையுடன் ...,
  • அ, ஆ வாய் அங்காந்து பிறக்கும்.
  • இ, ஈ, எ, ஏ, ஐ ஆகியவை அங்காப்புடன் அண்பல் முதலை நாவிளிம்பு தொடப் பிறக்கும்.
  • உ, ஊ, ஒ, ஓ, ஔ ஆகியவை அங்காப்புடன் இதழ் குவியப் பிறக்கும்.
இவற்றில் திரிபில் சிறு மாறுதலும் நிகழும்.

மெய்யெழுத்துகள்[தொகு]

வாய் அங்காப்போடு ...,

  • க, ங - முதல்நா அண்ணத்தைத் தொடப் பிறக்கும்.
  • ச, ஞ - இடைநா அண்ணத்தைத் தொடப் பிறக்கும்.
  • ட, ண - நுனிநா அண்ணத்தைத் தொடப் பிறக்கும்.

இவை ஆறும் ஒருவகைப் பிறப்பு.

  • த, ந - நாநுனி அண்ணமும் பல்லும் பொருந்துமிடத்தில் விரிந்து ஒற்றப் பிறக்கும்.
  • ற, ன - நுனிநா மேலெழுந்து அண்ணத்தை ஒற்றப் பிறக்கும்.
  • ர, ழ - நுனிநா மேலெழுந்து அண்ணத்தை வருடப் பிறக்கும்.
  • ல - நாவிளிம்பு வீங்கி அண்பல் அடியை நா நுனி தொடுகையில் அண்ணத்தை ஒற்றப் பிறக்கும்.
  • ள - நாவிளிம்பு வீங்கி அண்பல் அடியை நா நுனி தொடுகையில் அண்ணத்தை வருடப் பிறக்கும்.
  • ப, ம - இதழோடு இதழ் பொருந்தப் பிறக்கும்.
  • வ - மேல் பல்லும் கீழ் இதழும் இயையப் பிறக்கும்.
  • ய - மிடற்றில் எழுந்த ஒலி அண்ணத்தில் அடைபடும்போது பிறக்கும்.

மெல்லின எழுத்து ஆறும் மூக்கில் இசைக்கும்.

சார்பெழுத்துகள்[தொகு]

குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம் ஆகிய மூன்றும் சார்பெழுத்துகள். இவற்றிற்கு என்று தனி ஒலி இல்லை. எந்த எழுத்தோடு சார்ந்து வருகிறதோ அந்த எழுத்தின் ஒலியைப் பெறும்.

அந்தணர் மறை[தொகு]

எழுத்து பிறக்கும் பள்ளிகள் தலை, மிடறு, நெஞ்சு என்று கூறிய தொல்காப்பியர் எந்தெந்த எழுத்துகள் அவற்றில் பிறக்கும் என்று காட்டவில்லை.

"பள்ளிகளில் வளி எழும். சொல்லிய 5 இடங்களில் எழுத்தாகப் பிறந்து வளி விடுபடும். எழுத்தானது பிறந்து, எழுந்து, விடுபடும் அளபு அந்தணர் மறையில் உள்ளது. அகத்தே தோன்றும் அதனை இங்குச் சொல்லாமல், புறத்தே வெளிப்படும் பாங்கை மட்டும் கூறியுள்ளேன்" என்று தொல்காப்பியர் குறிப்பிடுகிறார்.

வல்லின எழுத்துகள் நெஞ்சிலும், ஆய்த எழுத்து தலையிலும், ஏனையவை மிடற்றிலும் பிறப்பதை அறிஞர்கள் உணர்ந்து கூறியுள்ளனர்.

இணைப்பு[தொகு]

தொல்காப்பியம் பிறப்பியல் நூற்பாக்கள்

வெளிப் பார்வை[தொகு]