தொல்காப்பியம் வேற்றுமையியல் செய்திகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் என்று மூன்று அதிகாரங்களைக் கொண்டது. ஒவ்வோர் அதிகாரமும் 9 இயல்களாகப் பகுக்கப்பட்டுள்ளது. இரண்டாவது சொல்லதிகாரத்தில் இரண்டாவது இயல் வேற்றுமை-இயல்.

எழுவாயும் பயனிலையும் தொடரும் பாங்கு கிளவியாக்கத்தில் சொல்லப்பட்டது. இங்கு எழுவாயோடு வேற்றுமை தொடரும் பாங்கு சொல்லப்படுகிறது.

வேற்றுமை என்பது பெயரை வேறுபடுத்திக் காட்டுவது.
பெயர் மாற்றமின்றி எழுவாயாக நிற்பது முதல் வேற்றுமை
எழுவாய் செயப்படுபொருளோடு தொடர்வது இரண்டாம் வேற்றுமை
எழுவாய் கருவியோடு தொடர்வது மூன்றாம் வேற்றுமை
எழுவாய் கொடை நல்குவது நான்காம் வேற்றுமை
எழுவாய் பிறவற்றைப் பொருத்திப் பார்ப்பது ஐந்தாம் வேற்றுமை
எழுவாய் மற்றொன்றை உடைமையாக்கிக்கொள்வது ஆறாம் வேற்றுமை
எழுவாய் ஓரிடத்தில் அல்லது காலத்தில் செயல்படுவது ஏழாம் வேற்றுமை
எழுவாய் விளிக்கப்படுவது எட்டாம் வேற்றுமை

தொல்காப்பியத்தில் வேற்றுமை விளக்கம்[தொகு]

பெயர்ச்சொல்லோடு வேற்றுமையும் case, வினைச்சொல்லோடு காலமும் tense இயைந்து வருவது தமிழ் மொழியின் மரபு.

வேற்றுமை வரும் செய்திகளைத் தொல்காப்பியர் 4 இயல்களில் குறிப்பிடுகிறார்.

முதலாவது எழுத்ததிகாரம் நான்காவது புணரியலில் வேற்றுமை உருபு புணரும் பாங்கு கூறப்பட்டுள்ளது. இவையிவை வேற்றுமை உருபுகள், இவை பெயர்ச்சொல்லைத் தொடர்ந்து வரும், இவை சாரியை இல்லாமல் எவ்வாறு புணரும், சாரியை பெற்று எவ்வாறு புணரும் என்னும் செய்திகள் இதில் சொல்லப்பட்டுள்ளன.

சொல்லதிகாரத்தில் உள்ள 9 இயல்களில் வேற்றுமையியல், வேற்றுமை மயங்கியல், விளிமரபு ஆகிய 3 இயல்கள் வேற்றுமை பற்றிய செய்திகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்த மூன்றில், வேற்றுமையியலில் வேற்றுமை 8 வகைப்படும், அவை ஒவ்வொன்றும் இன்னின்ன பொருளை உணர்த்தும், இன்னின்ன வேற்றுமைகள் இன்னின்ன பொருளுடைய பயனிலைகளைக் கொள்ளும் என்னும் செய்திகள் சொல்லப்படுகின்றன.

இந்த இயலில் சொல்லப்பட்டுள்ள செய்திகள் நூற்பா வரிசை-எண் குறியீட்டுடன் இங்குத் தொகுக்கப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டுகள் பெரும்பாலும் தொல்காப்பிய உரையாசிரியர் இளம்பூரணரைத் தழுவியவை.

தொல்காப்பியர் செய்த புதுமை[தொகு]

முன்னோர் வேற்றுமை 7 என்றனர் -1
பெயர் விளிக்கப்படுவதைச் சேர்க்கும்போது 8 ஆகிறது -2

எட்டு வேற்றுமைகள்[தொகு]

1.பெயர், 2.ஐ, 3.ஒடு, 4.கு, 5.இன், 6.அது, 7.கண், 8.விளி ஆகியவை இவற்றின் ஈறுகள் -3
புணரியலில் பெயர்-வேற்றுமை, விளி-வேற்றுமை இரண்டையும் விடுத்து உருபு கொள்ளும் 6 வேற்றுமைகள் சுட்டப்பட்டுப் புணரும் பாங்கு கூறப்பட்டுள்ளது.

முதல் வேற்றுமை எனப்படும் எழுவாய் வேற்றுமை[தொகு]

முதல்-வேற்றுமையில் பெயர் தான் தோன்றிய நிலையிலேயே இருக்கும். -4

பெயர்ப்பயனிலை -5

பொருண்மை சுட்டல் \ ஆ உண்டு
வியங்கொள வருதல் \ ஆ செல்க
வினைநிலை உரைத்தல் \ ஆ கிடந்தது
வினாவிற்கு ஏற்றல் \ ஆ எவன் (=எங்கே)
பண்பு கொள வருதல் \ ஆ கரிது
பெயர் கொள வருதல் \ ஆ பல

பெயரினாகிய தொகையும் இந்தப் பயனிலைகளிக் கொள்ளும் -6

யானைக்கோடு உண்டு
யானைக்கோடு செல்க
யானைக்கோடு வீழ்ந்தது
யானைக்கோடு யாது
யானைக்கோடு வெளிது
யானைக்கோடு பத்து
கொல்யானை உண்டு
கொல்யானை செல்க
கொல்யானை வீழ்ந்தது
கொல்யானை யாது
கொல்யானை வெளிது
கொல்யானை பத்து

பெயர் தோன்றிய நிலையில் மாற்றம் இல்லை -7

இந்தப் பெயர் பிற வேற்றுமை இறுதிகளுக்கு முதலாக அமையும் -8

பெயர்நிலைக்கிளவி காலம் காட்டாது -9

உண்டல், தின்றல்

இரண்டாவது ஐ-வேற்றுமை[தொகு]

வினைமுற்று, வினைக்குறிப்பு எனப் பயனிலை இருவகைப்படும்.

இரண்டாம் வேற்றுமை இந்த இரண்டினுள் யாதானும் ஒன்றைக் கொள்ளும். -10

மரத்தைக் குறைத்தான், குழையை உடையன்

இரண்டாம் வேற்றுமை தழுவும் வினைகள்:

காப்பு – ஊரைக் காக்கும்
ஓப்பு – கிளியை ஓப்பும்
ஊர்தி – யானையை ஊரும்
இழை – எயிலை இழைக்கும் (கட்டும்)
ஒப்பு – தாயை ஒக்கும்
புகழ் – ஊரைப் புகழும்
பழி – நாட்டைப் பழிக்கும்
பெறல் – ஊரைப் பெறும்
இழவு – ஊரை இழக்கும்
காதல் – மனைவியைக் காதலிக்கும்
வெகுளி – மாற்றானை வெகுளும்
செறல் – ஊரைச் செறும் (திட்டும்)
உவப்பு – தாயை உவக்கும்
கற்பு – நூலைக் கற்கும்
அறுத்தல் – ஞாணை அறுக்கும்
குறைத்தல் – மரத்தைக் குறைக்கும்
தொகுத்தல் – நெல்லைத் தொகுக்கும்
பிரித்தல் – வேலியைப் பிரிக்கும்
நிறுத்தல் – பொன்னை நிறுக்கும்
அளவு – அரிசியை அளக்கும்
எண் – பழத்தை எண்ணும்
ஆக்கல் – ஊரை யாக்கும் (ஒன்றுபடுத்தும்)
சார்தல் – வாய்க்காலைச் சாரும்
செலவு – நெறியைச் செல்லும்
கன்றல் – சூதினைக் கன்றும் (விரும்பும்)
நோக்கல் – செய்யை நோக்கும் (செய் = வயல்)
அஞ்சல் – கள்வரை அஞ்சும்
சிதைப்பு – நாட்டைச் சிதைக்கும்

அன்ன பிற

விரலை முடக்கும்,
நாவினை வளைக்கும்

மூன்றாவது ஒடு-வேற்றுமை[தொகு]

இதன் வினையானது வினைமுதலையும் கருவியையும் தழுவும் -11

நாயால் கோட்பட்டான் – வினைமுதலைத் தருவியது
வாளால் எறிந்தான் – கருவியைத் தழுவியது
அதனின் இயறல் – தச்சனால் செய்யப்பட்டது
அதன் தகு கிளவி – வாயால் தக்கது வாய்ச்சி (வாய்ச்சி = வாய்மை)
அதன் வினைப்படுதல் – நாயால் கோட்பட்டான்
அதனின் ஆதல் – வாணிகத்தால் ஆயினான்
அதனிற் கோடல் – காணத்தால் அரிசி கொண்டான் (காணம் = பணம்)
அதனொடு மயங்கல் – பொறியொடு கலந்த கடலை
அதனோடு இயைந்த ஒருவினைக் கிளவி – சாத்தனொடு வந்தான் கொற்றன்.
அதனோடு இயைந்த வேறுவினைக் கிளவி – பகையொடு பொருத பாண்டியன்
அதனோடு இயைந்த ஒப்பல் கிளவி – முத்தொடு முழாக் கோப்பதா?

நான்காவது கு-வேற்றுமை[தொகு]

எழுவாய் ஈவதை ஏற்கும் -12

அதற்கு வினை உடைமை – கரும்புக்கு வேலி
அதற்கு உடம்படுதல் – சாத்தற்கு மகளுடம்பட்டார் சான்றோர்
அதற்குப் படுபொருள் – சாத்தற்குப் படுபொருள் கொற்றன் (படுதல் = ஒத்துப்போதல்)
அதுவாகு கிளவி – தாலிக்குப் பொன்
அதற்கு யாப்புடைமை – கைக்கு யாப்புடையது கடகம்
அதன்பொருட்டு ஆதல் – கூலிக்கு வேலை
நட்பு – நாய்க்கு நட்பு
பகை – எலிக்குப் பகை பூனை
காதல் – தாய்க்குக் காதலன்
சிறப்பு – அறத்திற்குச் சிறப்பு அன்பு

பிற

பண்ணுக்குத் தக்கது பாடல்.
கண்ணுக்குத் தக்கது கண்ணோட்டம்.

ஐந்தாவது இன்-வேற்றுமை[தொகு]

இதனின் இற்று இது (இப்பொருளின் இத்தன்மைத்து இப்பொருள்) என்பதனைப் பயப்ப வரும் -13

(ஐந்தாம் வேற்றுமை பொரூஉ, நீக்கம், எல்லை, ஏது என நான்கு பொருளை உடையது.

தலைமை பற்றித் தொல்காப்பியர் பொரூஉப்-பொருளை மட்டும் கூறினார் என்கிறார் இளம்பூரணர்)

வண்ணம் - காக்கையிற் கரிது களம்பழம் (=களாப்பழம்) (காக்கையைக் காட்டிலும்)
வடிவு – இதனின் வட்டம் இது
அளவு – இதனின் நெடிது இது
சுவை – இதனின் தீவிது(இனிப்பானது) இது
தண்மை – இதனின் தண்ணிது இது
வெம்மை – இதனின் வெய்யது இது
அச்சம் – கள்ளரின் அச்சம் (கள்ளரைக் காட்டிலும்)
நன்மை – இதனின் நன்று இது
தீமை – இதனின் தீது இது
சிறுமை – இதனின் சிறிது இது
பெருமை – இதனின் பெரிது இது
வன்மை – இதனின் வலிது இது
மென்மை – இதனின் மெல்லிது இது
கடுமை – இதனின் கடிது இது
முதுமை – இவனின் மூத்தான் இவன்
இளமை – இவனின் இளையான் இவன்
சிறத்தல் – இவனின் சிறந்தான் இவன்
இழித்தல் – இவனின் இழிந்தான் இவன்
புதுமை – இவனின் புதியன் இவன்
பழமை – இவனின் பழையன் இவன்
ஆக்கம் – இவனின் ஆயினான் இவன்
இன்மை – இவனின் இலன் இவன்
உடைமை – இவனின் உடையன் இவன்
நாற்றம் – இதனின் நாறும் இது
தீர்தல் – ஊரின் தீர்ந்தான் (ஊரிலிருந்து போய்விட்டான்) – இது நீக்கப் பொருள்
பன்மை – இவரின் பலர் இவர்
சின்மை – இவரின் சிலர் இவர்
பற்றுவிடுதல் – ஊரின் பற்றுவிட்டான் (ஊரிலிருந்து விலகினான்) – நீக்கப்பொருள்

அன்ன பிற

எல்லை – கருவூரின் கிழக்கு
ஏது – முயற்சியிற் பிறத்தலின் ஒலி நிலையாது

ஆறாவது அது-வேற்றுமை[தொகு]

இதனது இது என்பது இந்த வேற்றுமைக்கு உரிய பொருள் - 14

(ஒன்று பல குழீஇய தற்கிழமை,
வேறுபல குழீஇய தற்கிழமை,
ஒன்றியல் கிழமை,
உறுப்பின் கிழமை,
மெய் திரிந்து ஆய கிழமை

என்று இதன்பொருள் 5 வகைப்படும் என்று விரித்துக் காட்டுகிறார் உரையாசிரியர் இளம்பூரணர்)
எட் குப்பை – ஒன்றுபல குழுமிய தற்கிழமை
படையது குழாம் – வேறுபல குழுமிய தற்கிழமை
நிலத்தினது அகலம் – உறுப்பின் கிழமை
எள்ளினத் சாந்து – எள்ளின் மெய் சாந்து ஆகிய கிழமை

தொல்காப்பியம் சொல்வது

இயற்கை – சாத்தனது இயற்கை
உடைமை – சாத்தனது உடைமை
முறைமை – ஆவினது கன்று
கிழமை – சாத்தனது கிழமை (கிழமை = உரிமை)
செயற்கை – சாத்தனது செயற்கை (செயற்கை = செய்த பொருள்)
முதுமை – அவனது முதுமை (முதுமை சாத்தனது செயல் அன்று)
வினை – அவனது வினை (வினை என்னும் ஊழ் சாத்தனது செயல் அன்று)
கருவி – சாத்தனது வாள்
துணை – அவனது துணை (எனக்குத் துணை பிறரால் வருவது)
கலம் – சாத்தனது கலம் (இது சாத்தன் ஒற்றிக்கு வைத்த பண்டம்)
முதல் – சாத்தனது முதல் (முதலீடு)
ஒருவழி உறுப்பு – யானையது கோடு
குழூஉ – படையது குழு
தெரித்து மொழிச் செய்தி – கபிலரது பாட்டு
நிலை – சாத்தனது நிலை
வாழ்ச்சி – சாத்தனது வாழ்ச்சி (வாழ்ச்சி = வாழ்க்கை, ஒருவனுக்கு வாழ்வு தானே அமையும். வாழ்க்கையை அவன் அமைத்துக்கொள்வான்)
திரிந்து வேறுபட்டது – எள்ளினது சாந்து, சாத்தனது சொல்
("ஆறன் பால" = போன்று வருபவை, போன்றவை)

ஏழாவது கண்-வேற்றுமை[தொகு]

வினை செய்யும் இடம், நிலம், காலம் என்னும் மூன்று பொருட்கண் வரும் -15

தட்டுப்புடைக்கண் வந்தான் – வினைசெய்யுமிடம் (நெல்லைத் தட்டித் தூற்றிப் புடைக்கும் களத்தின்கண் வந்தான்)
மாடத்துக்கண் வந்தான் – நிலம்
மாரியுள் வந்தான் – காலம்

உருபுகள்

கண் – ஊர்க்கண் இருந்தான்
கால் – ஊர்க்கால் இருந்தான் (ஊரின் நுழைவாயில்)
புறம் – ஊர்ப்புறத்து இருந்தான்
அகம் – ஊரகத்து இருந்தான்
உள் – ஊருள் இருந்தான்
உழை – சான்றோருழைச் சென்றான்
கீழ் – மாடத்தின்கீழ் இருந்தான்
மேல் – மாடத்தின் மேல் இருந்தான்
பின் – ஏர்ப்பின் சென்றான்
சார் – காட்டுச்சார் ஓடும்
அயல் – ஊரயல் இருந்தான்
புடை – ஊர்ப்புடை இருந்தான்
தே – வடக்கண் வேங்கடம், தெற்கண் குமரி (தே = திசை)
முன் – தேர்முன் சென்றான்
இடை – சான்றோரிடை இருந்தான்
கடை - கோயிற்கடைச் சென்றான்
தலை – தந்தைதலைச் சென்றான்
வலம் – கைவலத்து உள்ளது கொடுக்கும்
இடம் - கையிடத்து இருந்தான் (கை = பக்கம்)

பிற

தேஎம் - கிழவோள் தேஎத்து

பெயரில் வேற்றுமை உருபு தொகையாகவும் வரும் -16

வேற்றுமையானது பலவாறாகப் பொருள் பிரிந்து இசைக்கும் -17

குதிரைத்தேர் என்னும்போது குதிரையாற் பூட்டப்பட்ட தேர் என விரியும். இங்கு மூன்றாம் வேற்றுமை ஆன்-உருபு (ஆல்-உருபு) புதியதோர் பயனோடு சேர்ந்து வந்துள்ளது. (இதனைப் பிற்காலத்தில் ‘உருபும் பயனும் உடன்தொக்க தொகை’ என்றனர்.

எட்டாம் வேற்றுமை விளி[தொகு]

இது விளிமரபு என்னும் தனி இயலில் சொல்லப்படுகிறது.

இவற்றையும் காண்க[தொகு]

கருவிநூல்[தொகு]

  1. தொல்காப்பியம் சொல்லதிகாரம் இளம்பூரணர் உரை, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடு, 1963
  2. தொல்காப்பியம் சொல்லதிகாரம் சேனாவரையர் உரை, ஆறுமுகநாவலர் பதிப்பு, 1934
  3. தொல்காப்பியச் சொல்லதிகாரக் குறிப்பு, டாக்டர் P.S. சுப்பிரமணிய சாஸ்திரி எழுதியது, பிரமோத ஆண்டு, 1932
  4. தொல்காப்பியம் சொல்லதிகாரம் நச்சினார்க்கினியர் உரை, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடு, 1962
  5. தொல்காப்பியம் சொல்லதிகாரம் கல்லாடனார் விருத்தி உரையும் பழைய உரையும், சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடு, 1964
  6. தொல்காப்பியம் சொல்லதிகாரம் தெய்வச்சிலையார் உரை, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடு, 1963

வெளிப் பார்வை[தொகு]

  1. தொல்காப்பியம் மூலம்
  2. தொல்காப்பியம் மூலம் பரணிடப்பட்டது 2011-07-24 at the வந்தவழி இயந்திரம்
  3. தொல்காப்பியம் வேற்றுமையியல் மூலம் விளக்கம்