தொல்காப்பியம் வினையியல் செய்திகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் என மூன்று அதிகாரங்களைக் கொண்டது. சொல்லதிகாரம் சொற்கள் இணைந்து பொருள் தரும் பாங்கை உணர்த்துகிறது. இந்தப் பாங்கை நாம் வாக்கியம் என வழங்கிவருகிறோம். வினையியல் சொல்லதிகாரத்தில் ஆறாவது இயலாக வருகிறது.

கிளவியாக்கம், வேற்றுமையியல், வேற்றுமை-மயங்கியல், விளிமரபு என்னும் முதல் நான்கு இயல்களும் வாக்கிய அமைப்பை உணர்த்துகின்றன. அடுத்து வரும் பெயரியல், வினையியல், இடையியல், உரியியல் என்னும் நான்கு இயல்களும் வாக்கியத்தில் வரும் சொற்களைப் பாகுபடுத்திக் காட்டுகின்றன. ஒன்பதாவதாக உள்ள எச்சவியல் 8 இயல்களில் சொல்லப்படாத எச்சமிச்சச் செய்திகளைக் கூறுகிறது.

செய்திகள் நூற்பா வரிசை எண்ணுடன் தரப்படுகின்றன

வினையின் செயல்[தொகு]

வினைச்சொல் வேற்றுமை கொள்ளாது காலம் காட்டும் -1-
காலம் மூன்று வகைப்படும் -2-
இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என்னும் மூன்று காலமும் தெரியும்-நிலையிலும், குறிப்பு-நிலையிலும் தோன்றும் -3-
வினைச்சொல்லானது உயர்திணைக்கும், அஃறிணைக்கும், இரண்டிலும் விரவும் பெயர்க்கும் உரிமை உடையது -4-

உயர்திணை[தொகு]

உயர்திணையில் தன்மைப்பன்மை வினைச்சொல் 8 ஈறுகளில் முடியும் -5-

 1. அம் – யாம் வந்தனம்
 2. ஆம் – யாம் வந்தாம்
 3. எம் – யாம் வந்தனெம்
 4. ஏம் – யாம் வந்தேம்
 5. கும் – யாம் உண்கும்
 6. டும் – யாம் உண்டும்
 7. தும் – யாம் வருதும்
 8. றும் – யாம் சேறும்

தன்மை-ஒருமை வினைச்சொல்லின் 7 ஈறு -6-

 1. என் – யான் வந்தனென்
 2. ஏன் – யான் வந்தேன்
 3. அல் – யான் வருவல்
 4. கு – யான் உண்கு
 5. டு – யான் உண்டு (உண்கிறேன்)
 6. து – யான் வருது (வருகிறேன்)
 7. று – யான் சேறு (செல்கிறேன்)

செய்கு வந்தேன் (செய்துகொண்டு வந்தேன்) என மற்றொரு வினை கொண்டும் முடியும் -7- படர்க்கை-ஒருவர் 4 ஈறு கொள்ளும் -8-

 1. அன் – அவன் வந்தனன்
 2. ஆன் – அவன் வந்தான்
 3. அள் – அவன் வந்தனள்
 4. ஆள் – அவள் வந்தாள்

படர்க்கை-பலர் 3 ஈறு கொள்ளும் -9, 10-

 1. அர் – உண்டனர்
 2. ஆர் – உண்டணார்
 3. ப – உண்ப
 4. மார் – ஆர்த்தார் கொண்மார் வந்தார் (ஆரவாரத்தோடு வாங்கிக்கொண்டே வந்தனர்)

இந்த 23 ஈறுகள் பன்மையும் ஒருமையும் ஆகிய பால் உணர்த்திக்கொண்டு உயர்திணையில் வரும். -11-

(மேலே காட்டப்பட்ட 24-ல் மார்-ஈறு பன்மையையோ ஒருமையையோ காட்டாமையால் அது விலக்கப்பட்டு 23 என ஈறு வரையறுக்கப்பட்டது)

வந்தனம், வந்தாம் தொடக்கத்தன தன்மையொடு முன்னிலையையும் சேர்த்து உணர்த்தும் -12- யார் என்னும் சொல் 3 பாலுக்கும் உரியது. -13-

அவன் யார், அவள் யார், அவர் யார்

பால் உணரும்படி வந்த உயர்திணை ஈறு மூன்றும் செய்யுளில் ஆ<ஓ ஆகும் -14-

வந்தான் – வந்தோன்
வந்தாள் - வந்தோள்
வந்தார் - வந்தோர்

முன்னிலையில் வரும் ஆய் என்னும் சொல்லும் அவ்வாறு வரும் -15-

வந்தாய் – வந்தோய்

குறிப்பு வினைமுற்று[தொகு]

குறிப்பு வினைமுற்றில் காலம் குறிப்பால் உணர்த்தப்படும் -16-

 1. உடையன், உடையள், உடையர் – அது என்னும் ஆறாம் வேற்றுமை
 2. நிலத்தன், நிலத்தள், நிலத்தர் – கண் என்னும் ஏழாம் வேற்றுமை
 3. பொன் அன்னன், பொன் அன்னள், பொன் அன்னர் – உவமைப் பொருள் பற்றிப் பிறந்தவை
 4. கரியன், கரியள், கரியர் – பண்பு பற்றிப் பிறந்தவை
 5. அல்லன், அல்லள், அல்லர் – அன்மை பற்றியவை
 6. இல்லன், இல்லள், இல்லர் – இன்மை பற்றியவை
 7. உளன், உளள், உளர் – உண்மை பற்றியவை
 8. வல்லன், வல்லள், வல்லர் – வன்மை பற்றியவை
 9. நல்லன், நல்லள், நல்லர் – பிற
 10. தீயன், தீயள், தீயர் – பிற
 11. மூவாட்டையன், மூவாட்டையள், மூவாட்டையர் – பிற
இங்குக் காட்டப்பட்ட படர்க்கைக் குறிப்பு வினைமுற்றுகளைத் தன்மையோடும் ஒட்டிக்கொள்ள வேண்டும்

உயர்திணை வினைமுற்று ஈறுகள் 23 என்று கூற்றப்பட்டன. அவற்றிற்கும் இந்தக் குறிப்பு வினைமுற்று ஈறுகளுக்கும் வேறுபாடு இல்லை. -17-

 1. வடாஅது வேங்கடம்
 2. தெனாஅது குமரி

இவற்றில் வடாது, தெனாது என்பவை குறிப்பு-வினைமுற்று

அஃறிணை[தொகு]

பலவற்றுப் படர்க்கை ஈறுகள் 3. அவை: அ, ஆ, வ – என்பன -18-

 1. உண்டன, தின்றன – அ
 2. உண்ணா, தின்னா – ஆ
 3. உன்குவ, தின்குவ - வ

ஒன்றன் படர்க்கை 3 குற்றியலுகர ஈறுகள். அவை து, டு, று -19-

 1. உண்டது – து
 2. குருதிப் பூவின் குலைக்காந்தட்டு – டு
 3. ஓடிற்று – று

இந்த 6 ஈறுகள் அஃறிணையில் பால் உணர்த்துவன -20-
எவன் அது, எவன் அவை என எவன் என்னும் சொல் ஒன்றன்பாலுக்கும், பலவின்பாலுக்கும் பொதுவாக வரும். -21-

குறிப்பு வினைமுற்று[தொகு]

அஃறிணைக் குறிப்பு வினைமுற்று -22-

 1. கோடின்று, செவியின்று – இன்று-பொருள் (கோடு இல்லாதது)
 2. கோடில, செவியில – இன்மை
 3. கோடுடைய, செவியுடைய – உடைமை
 4. நாய் அன்று, கரி அன்று – அன்று பொருள்
 5. கோடுடைத்து, செவியுடைத்து – உடைமை
 6. உழுந்தல்ல, பயறல்ல – அல்ல பொருள்
 7. கரிது, கரிய – பண்புகொள் பெயர்
 8. உழுந்துள, பயறுள – உள என்னும் கிளவி
 9. குறுங்கோட்டது, குறுங்கோட்டன – பண்பினாகிய சினைமுதல் கிளவி
 10. பொன்னன்னது, பொன்னன்ன – ஒப்பொடு வரூஉம் கிளவி

விரவுவினை[தொகு]

விரவுத்திணைப் பெயர்கள் -23-

 1. முன்னிலை
 2. வியங்கோள்
 3. வினையெஞ்சு கிளவி (வினையெச்சம்)
 4. இன்மை செப்பல்
 5. வேறு –என்னும் கிளவி
 6. செய்ம்மன
 7. செய்யும்
 8. செய்த
ஆகிய 8 சொல்

ஒருவற்கும் ஒன்றற்கும் பொது -24-

 1. நீ உண்டி, நீ தின்றி – இ
 2. நீ உண்டனை, நீ தின்றனை – ஐ
 3. நீ உண்டாய், நீ தின்றாய் – ஆய்
 4. நீ உண்மின், நீ தின்மின் - மின்

பல்லோர்க்கும் பலவற்றுக்கும் பொது -25-

 1. நீவிர் உண்டனிர், தின்றனிர் – இர்
 2. நீவிர் உண்டீர், தின்றீர் – ஈர்
 3. நீவிர் உண்மின், தின்மின் – மின

முன்னிலை அல்லாத ஏனை ஏழும் 5 பாலுக்கும் உரியன -26-

 1. யான் செல்க, (யாம் செல்க என்று சொல்வதில்லை), நீ செல்க, நீயிர் செல்க, அவன் செல்க, அவள் செல்க, அவர் செல்க, அது செல்க, அவை செல்க – வியங்கோள்
 2. யான் செய்த பொருள், யாம் செய்த பொருள், நீ செய்த பொருள், நீயிர் செய்த பொருள், அவன் செய்த பொருள், அவள் செய்த பொருள், அவர் செய்த பொருள், அது செய்த பொருள், அவை செய்த பொருள், - வினையெச்சம்.
 3. யான் இல்லை, யாம் இல்லை, நீ இல்லை, நீயிர் இல்லை, அவன் இல்லை, அவள் இல்லை, அவர் இல்லை, அது இல்லை, அவை இல்லை, - இன்மை செப்பும் சொல்
 4. யான் வேறு, யாம் வேறு, நீ வேறு, நீயிர் வேறு, அவன் வேறு, அவள் வேறு, அவர் வேறு, அது வேறு, அவை வேறு, - வேறு என்னும் சொல்
 5. யான் செய்ம்மன, யாம் செய்ம்மன, நீ செய்ம்மன, நீயிர் செய்ம்மன, அவன் செய்ம்மன, அவள் செய்ம்மன, அவர் செய்ம்மன, அது செய்ம்மன, அவை செய்ம்மன, - மன ஈறு
 6. யான் செய்யும் பொருள், யாம் செய்யும் பொருள், நீ செய்யும் பொருள், நீயிர் செய்யும் பொருள், அவன் செய்யும் பொருள், அவள் செய்யும் பொருள், அவர் செய்யும் பொருள், அது செய்யும் பொருள், அவை செய்யும் பொருள், - செய்யும் என்னும் பெயரெச்சம்
 7. யான் செய்த பொருள், யாம் செய்த பொருள், நீ செய்த பொருள், நீயிர் செய்த பொருள், அவன் செய்த பொருள், அவள் செய்த பொருள், அவர் செய்த பொருள், அது செய்த பொருள், அவை செய்த பொருள், - செய்த என்னும் பெயரெச்சம்.

வியங்கோள் மன்னா இடம் (சிறுபான்மையாக வருமிடம்) தன்மை, முன்னிலை -27-

யான் செல்க, நீ செல்க, நீர் செல்க

செய்யும் என்னும் நிகழ்காலச்சொல் வருமிடம் -28-

அவன் உண்ணும், அவள் உன்னும், அது உண்ணும், அவை உண்ணும் –ஆகிய நான்கில் மட்டுமே வரும்.

வினையெச்சம் -29-

 1. செய்து
 2. செய்யூ
 3. செய்பு
 4. செய்தென
 5. செய்யியர்
 6. செய்யிய
 7. செயின்
 8. செய
 9. செயற்கு
ஆகிய 9 வாய்பாட்டுச் சொற்கள்

மேலும் வினையெச்ச ஈறுகள் -30-

 1. பின்
 2. முன்
 3. கால்
 4. கடை
 5. வழி
 6. இடம்
ஆகிய 6

செய்து, செய்யூ, செய்பு ஆகிய 3 வினையெச்சங்கள் வினைமுதல் வினை கொண்டு முடியும் -31-

 1. உழுது வந்தான்
 2. உண்ணூ வந்தான்
 3. நகுபு வந்தான் (= சிரித்துக்கொண்டே வந்தான்)

இவை மூன்றும் சினையொடு முடியா -32-

 1. அது கை இற்று வீழ்ந்தது
 2. அது கை இறூ வீழ்ந்தது
 3. அது கை இறுபு வீழ்ந்தது

செய்தென என்னும் வினையெச்சம் -33-

 1. மழை பெய்தென வளம் பெற்றது
 2. மழை பெய்யப் பயிர் எழுந்தது
 3. மழை பெய்தென உலகம் மலர்ந்தது
 4. மழை பெய்தென மரம் குழைத்தது
 5. உழுது வருதல்
 6. உழுது வந்தேன்

வினையெச்சங்கள் பலவாகவும் வரும் -34-

உழுது உண்டுத் தின்று ஓடிப் பாய்ந்து வந்தான்

செய்யும், செய்த – பெயரெச்சங்கள் -35-

 1. அவன் உண்ணும் இல்லம், அவள் உண்ணும் இல்லம், அது உண்ணும் இல்லம், அவை உண்ணும் இல்லம் – பொருளொடு முடிதல்
 2. அவன் உண்ணும் காலை – காலமொடு முடிதல்
 3. அவன் எறியும் கருவி – கருவியொடு முடிதல்
 4. உண்ணும் அவன் – வினைமுதலொடு முடிதல்
 5. அவன் உண்ணும் ஊண் – ஊண் என்னும் வினைப்பெயரொடு முடிதல்
 1. அவன் உண்ட இல்லம் (இதனை முறையானே ‘செய்த’ வாய்பாட்டுப் பெயரெச்சத்துக்கும் பொருத்திக்கொள்க)

மூவிடப் பெயர்க்கும் கொள்க -36-

 1. யான் உண்ட இல்லம்
 2. நீ உண்ட இல்லம்
 3. அவன் உண்ட இல்லம்

பெயரெச்சமும், வினையெச்சமும் எதிர்மறையில் வந்தாலும் காட்டிய வழியில் இயையும் -37-

 1. உண்ணாச் சாத்தன் – பெயரெச்சம்
 2. உண்ணாது வந்தான் – வினையெச்சம்

இவற்றிற்கு இடையில் வேறு சொல்லும் வரும் -38-

 1. உப்பின்று புற்கை உண்கமா கொற்கையானே – இலைதழை உணவைக் குறிக்கும் புற்கை என்னும் சொல் வினையெச்சத்துக்கு இடையே வந்தது.
 2. அட்ட செந்நெற் சோறு – இதில் செந்நெல் என்னும் சொல் பெயரெச்சத்துக்கு இடையே வந்தது.

செய்யும் என்பது செய்ம் எனவும் வரும் -39-

வாம் புரவி (வாவும் புரவி) (வாவும் = தாவும்)

செய்து என்பது நிகழ்கால வினையெச்சம். இது எதிர்காலத்துக்கும் வரும் -40-

உழுதுவரும் சாத்தன்

இயற்கை நிலையை நிகழ்காலத்தால் சொல்லவேண்டும் -41-

மலை நிற்கும்

விரைவு கருதி நிகழ்காலத்தையும், எதிர்காலத்தையும் இறந்தகாலத்தால் சொல்லலாம். -42-

வந்தேன் (வருகின்ற ஒருவன், அல்லது வரப்போகும் ஒருவன் விரைவு கருதி இவ்வாறு சொல்வான்

உறுதிப்பொருளை நிகழ்காலத்தால் சொல்லவேண்டும் -43-

அளவறிந்து உண்பான் நலம் பெறும் (இதில் பெறும் என்பது நிகழ்காலம்) அறம் செய்தான் சுவர்க்கம் புகும் என்பது உரையாசிரியர் இளம்பூரணர் தரும் எடுத்துக்காட்டு)

இது செயல்வேண்டும் – என்று சொன்னால் அது செய்வானையும், அதற்குத் துணைநிற்கும்படி பிறரையும் வேண்டிக்கொள்வதாக அமையும். -44-

சாத்தன் ஓதல் வேண்டும் – என்று சொன்னால் அது சாத்தன் ஓதல் வேண்டும் என்பதோடு, பெற்றோர், ஆசிரியர் முதலானோர் அவன் ஓத உறுதுணை புரிதல் வேண்டும் என்பதனையும் உணர்த்தும்.

வற்புறுத்த வரும் வினாவிடை எதிர்மறுக்கும் பொருளையும் உணர்த்தும் -45-

 1. வைதேனோ – என்பது வைதது தற்செயலாய் நிகழ்ந்ததை உணர்த்தும்
 2. வைதேனா – என்பது வையவில்லை என்னும் பொருளை உணர்த்தும்

இறந்தகாலத்தால் கூறப்படுவன -46-

 1. எறும்பு முட்டை கொண்டு தெற்றி ஏறின் ‘மழை பெய்த்து’ – இது தெளிவு பற்றியது
 2. முள்ளுக்காட்டில் செல்லின் ‘துணி மாட்டிக்கொண்டான்’ – இது இயற்கை

செயப்படு பொருள் செய்தது போலவும் சொல்லப்படும் -47-

இல்லம் மெழுகிற்று, சோறு அட்டது

மயங்குமொழிக் கிளவி இறந்த-காலத்தையும், எதிர்காலத்தையும் உணர்த்தும் -48-

யாம் பண்டு விளையாடுவது இக்கா – என்னும்போது பண்டு என்னும் இறந்தகாலத்தையும், விளையாடுவது என்பது எதிர்காலத்தையும் உணர்த்திக் காலம் மயங்கிற்று.

மயங்குமொழிக் கிளவியில் நிகழ்காலமும் மயங்கும் -49-

யாம் பண்டு விளையாடும் கா இது – என்னும்போது பண்டு என்பது இறந்தகாலம். விளையாடும் என்பது நிகழ்காலம்

கருவிநூல்[தொகு]

 1. தொல்காப்பியம் சொல்லதிகாரம் இளம்பூரணர் உரை, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடு, 1963
 2. தொல்காப்பியம் சொல்லதிகாரம் சேனாவரையர் உரை, ஆறுமுகநாவலர் பதிப்பு, 1934
 3. தொல்காப்பியச் சொல்லதிகாரக் குறிப்பு, டாக்டர் P.S. சுப்பிரமணிய சாஸ்திரி எழுதியது, பிரமோத ஆண்டு, 1932
 4. தொல்காப்பியம் சொல்லதிகாரம் நச்சினார்க்கினியர் உரை, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடு, 1962
 5. தொல்காப்பியம் சொல்லதிகாரம் கல்லாடனார் விருத்தி உரையும் பழைய உரையும், சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடு, 1964
 6. தொல்காப்பியம் சொல்லதிகாரம் தெய்வச்சிலையார் உரை, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடு, 1963

இணைப்பு[தொகு]

 1. தொல்காப்பியம் மூலம்
 2. தொல்காப்பியம் வினையியல் மூலமும் செய்தியும்
 3. தொல்காப்பியம் மூலம்