தொல்காப்பியம் பெயரியல் செய்திகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

உலகிலுள்ள அனைத்து மொழிகளிலும் பெயர், வினை என்னும் சொல் பாகுபாடு உண்டு. இயற்கைப் பொருள்களுக்கும் செயற்கைப் பொருள்களுக்கும் மொழி பெயரிட்டு வழங்குகிறது. இது பெயர். பெயரின் இயக்கம் வினை.

தமிழிலுள்ள பெயர்ச்சொற்களை விளக்குவது பெயரியல். இது தொல்காப்பியம் சொல்லதிகாரத்தில் ஐந்தாவது இயல். இதில் சொல்லப்படும் செய்திகள் நூற்பா வரிசையெண் குறிப்புடன் இக்கட்டுரையில் தொகுக்கப்பட்டுள்ளன.

பொதுச் செய்தி[தொகு]

மொழியிலுள்ள எல்லாச் சொல்லுக்கும் பொருள் உண்டு -1-

பொருளைத் தெரிவித்தல், சொல்லைத் தெரிவித்தல் ஆகியவை சொல்லின் செயல் -2-

பொருள் தெரிவித்தல்
சாத்தன் வந்தான் (பெயர், வினை), அணங்குகொல் (கொல் – இடைச்சொல்), உறுபொருள் கொடுத்தான் (உறு – உரிச்சொல்)
சொல்லைச் சுட்டல்
மரப்பெயர்க் கிளவி (பெயர்), செய்து என் கிளவி (வினை), தஞ்சக் கிளவி (இடை), கடி என் கிளவி (உரி)

சொல்லின் செயலானது தெரிபுவேறு நிலையல், குறிப்பில் தோன்றல் எனப் பொருள்-தோன்று-நிலை இரு வகைப்படும் -3-

தெரிபு வேறு நிலையல்
அவன், இவன், சென்றான், வந்தான்
குறிப்பில் தோன்றல்
ஒருவர் வந்தார் (ஆணோ, பெண்ணோ), உணவில் உள்ள கல்லைக் கடித்த ஒருவன் ‘கல்லோடு நன்கு சமைத்துள்ளாய்’ என்னும்போது ‘நன்றாகச் சமைக்கவில்லை’ என்னும் பொருள் குறிப்பால் உணர்த்தப்பட்டது.

சொல்லின் வகைகள்: பெயர், வினை என்று சொல் இரண்டு வகைப்படும் -4-

அவற்றின் வழியே இடைச்சொல், உரிச்சொல் ஆகியவை தோன்றும் -5-

உயர்திணைச்சொல், அஃறிணைச்சொல், இருதிணைக்கும் உரிய சொல் –எனப் பெயர்ச்சொல் 3 வகைப்படும் -6-

இரு திணைக்கு உரிய சொற்கள் 5 பாலில் வரும் -7-

உயர்திணை[தொகு]

பால் அறிய வந்த உயர்திணைச் சொற்கள் 15 -8-

1. அவன்,
2. இவன்,
3. உவன் – இவை மூன்றும் ஆண்பால்
4. அவள்,
5. இவள்,
6. உவள் – இவை மூன்றும் பெண்பால்
7. அவர்,
8. இவர்,
9. உவர் – இவை மூன்றும் பலர்பால்
10. யான்,
11. யாம்,
12. நாம்
13. யாவன்,
14. யாவள்,
15. யாவர்

மேலும் 15 சொற்கள் உயர்திணைக்கு உரியவை -9-

1. ஆண்மகன்,
2. பெண்மகள்,
3. பெண்டாட்டி,
4. நம்பி,
5. நங்கை,
6. மகன்,
7. மகள்,
8. மாந்தர்,
9. மக்கள்
10. ஆடூஉ,
11. மகடூஉ,
12. அவ்வாளன், இவ்வாளன், உவ்வாளன்,
13. அம்மாட்டான், இம்மாட்டான், உம்மாட்டான்,
14. அப்பெண்டு, இப்பெண்டு, உப்பெண்டு,
15. பொன்னன்னான், பொன்னன்னாள், பொன்னன்னார் – போன்று வருபவை.

மேலும் இவை உயர்திணைக்கு உரியவை -10-

1. எல்லாரும்
2. எல்லீரும்
3. பெண்மகன்

மேலும் இவை உயர்திணைக்கு உரியவை -11-

1. நிலப்பெயர் – அருவாளன், சோழியன்
2. குடிப்பெயர் – மலையமான், சேரமான்
3. குழுவின் பெயர் – அவையத்தார்,
4. வினைப்பெயர் – தச்சன், கொல்லன்
5. உடைப்பெயர் – அம்பர் கிழான், போரூர் கிழான், வெற்பன், சேர்ப்பன்
6. பண்புகொள் பெயர் – கரியான், செய்யான்
7. பல்லோர்க் குறித்த முறைநிலைப் பெயர் – தந்தையர், தாயர்
8. பல்லோர்க் குறித்த சினைநிலைப் பெயர் – பெருங்காலர், பெருந்தோளர்
9. பல்லோர்க் குறித்த திணைநிலைப் பெயர் – ஆயர், வேட்டுவர்
10. கூடிவரு வழக்கின் ஆடியற் பெயர் – பட்டி, கூத்தர்
11. இன்று இவர் என்னும் எண்ணியல்-பெயர் – இருவர், நால்வர், பதின்மர்

அன்ன பிற -12-

ஏனாதி, காவிதி, எட்டி, வாயிலான், வண்ணத்தான், பிறன், பிறள், பிறர், மற்றையான், மற்றையாள், மற்றையார் – தொடக்கத்தன.

அஃறிணை[தொகு]

பால் அறிய வந்த அஃறிணைப் பெயர்கள் 15 -13-

அது, இது, உது
அஃது, இஃது, உஃது
அவை, இவை, உவை
அவ், இவ், உவ்
யாது, யா, யாவை

மேலும் 9 அஃறிணைப் பெயர் -14-

பல்ல, பல, சில (தம்மை உணர்த்தி நின்றன) -3
உள்ள, இல்ல (தம்மை உணர்த்தி நின்றன) -2
வருவ, செல்வ –வினைப்பெயர்க் கிளவி- -1
கரிது, கரிய -பண்புகொள் பெயர் -1
ஒன்று, பத்து –எண்ணுக்குறிப் பெயர் -1
பொன்னன்னது, பொன்னன்ன –ஒப்பினாகிய பெயர் -1 (ஆக மொத்தம் 9)

‘கள்’ளொடு சிவணும் பெயர் பல-அறி சொல்லாக வரும் -15-

ஆ, நாய், குதிரை, கழுதை, தெங்கு, பலா, மலை, கடல் – தொடக்கத்தன.
இனத்தைக் குறிக்கும் இவை ஒருமைக்கும், பன்மைக்கும் பொதுவானவை.
தொல்காப்பியர் இவற்றை ‘இயற்பெயர்’ என்று குறிப்பிடுகிறார்.
(உரையாசிரியர் இளம்பூரணர் இவற்றைச் ‘சாதிப்பெயர்’ என்று குறிப்பிடுகிறார்)

பல-அறி சொல்

ஆக்கள், குதிரைகள், மலைகள்

அன்ன பிற -16-

பிறிது, பிற, மற்றையது, மற்றையவை, பல்லவை, சில்லவை, உள்ளது, இல்லது, உள்ளன, இல்லன –என்னும் தொடக்கத்தன

அஃறிணை விரவுப்பெயர்[தொகு]

அஃறிணை விரவுப்பெயர் வினையொடு வரும்போது பால் உணர்த்தும் -17-

ஆ வந்தது, குதிரை வந்தது – ஒருமை
ஆ வந்தன, குதிரை வந்தன – பன்மை

விரவுப்பெயர் (இரு திணையிலும் வரும் பெயர்) வினையொடு வரும்போதுதான் பால் உணர்த்தும் -18-

சாத்தன் வந்தான், முடவன் வந்தான் – உயர்திணை
சாத்தன் வந்தது, முடவன் வந்தது – அஃறிணை

செயல்படுவதாலும் பால் உணரப்படும் -19-

சாத்தன் யாழ் இசைக்கும்
சாத்தி சாந்து அரைக்கும்

பெயர்ச்சொல் வகைப்பாடு[தொகு]

பெயர்ச்சொல் 10 வகை இயற்பெயர் 4, சினைப்பெயர் 4, முறைப்பெயர் 2 (நூற்பா 20 முதல் 25)

ஆண்பெயர், பெண்பெயர், ஒன்றன் பெயர், பலவற்றின் பெயர் என இயற்பெயர் 4 வகை
ஆண் சினைப்பெயர், பெண் சினைப்பெயர், ஒன்றன் சினைப்பெயர், பலவற்றின் சினைப்பெயர், எனச் சினைப்பெயர் 4 வகை
ஆண் முறைப்பெயர், பெண் முறைப்பெயர் என முறைப்பெயர் 2 வகை

பெண்பெயர் ஒருத்திக்கும், ஒன்றன் சினைப்பெயருக்கும், ஒன்றன் முறைப்பெயருக்கும் பொது -26-

சாத்தி வந்தாள், சாத்தி வந்தது - இயற்பெயர்
முடத்தி வந்தாள், முடத்தி வந்தது - சினைப்பெயர்
முடக்கொற்றி வந்தாள், முடக்கொற்றி வந்தது – ஒன்றன் சினைப்பெயர்
தாய் வந்தாள், தாய் வந்தது –ஒன்றன் முறைப்பெயர்

என வரும்

ஆண் பெயர் -27-

சாத்தன் வந்தான், சாத்தன் வந்தது
முடவன் வந்தான், முடவன் வந்தது
முடக்கொற்றன் வந்தான், முடக்கொற்றன் வந்தது
தந்தை வந்தான், தந்தை வந்தது

என வரும்.

பன்மைப்பெயர் ஒன்றன்-பாலுக்கும், பலவின்-பாலுக்கும், ஒருவருக்கும் உரிமை பெற்று வரும் -28-

யானை வந்தது, யானை வந்தன, யானை வந்தான், யானை வந்தாள்
நெடுங்கழுத்தல் வந்தது, நெடுங்கழுத்தல் வந்தன, நெடுங்கழுத்தல் வந்தான், நெடுங்கழுத்தல் வந்தாள்
பெருங்கால் யானை வந்தது, பெருங்கால் யானை வந்தன, பெருங்கால் யானை வந்தான், பெருங்கால் யானை வந்தாள்

ஒருமைச் சுட்டிய பெயர் ஒன்றற்கும், ஒருவர்க்கும் பொருந்தும் -29-

கோதை வந்தது, கோதை வந்தான், கோதை வந்தாள்
சொவியிலி வந்தது, செவியிலி வந்தான், செவியிலி வந்தாள்
நெடும்புற மருதி வந்தது, நெடும்புற மருதி வந்தான், நெடும்புற மருதி வந்தாள்

தாம் என்பது பன்மைக்கு உரியது -30-

தாம் வந்தார், தாம் வந்தன

தான் என்பது ஒருமைக்கு உரியது -31-

தான் வந்தான், தான் வந்தாள், தான் வந்தது

எல்லாம் என்பது மூவிடத்துக்கும் உரியது -32-

எல்லாம் வந்தேம், எல்லாம் வந்தீர், எல்லாம் வந்தார்

உயர்திணையில் தன்னை உள்ளிட்ட பன்மைக்கே இது உரியது. படர்க்கைப் பனமைக்கு எல்லாம் என்னும் சொல் வரக்கூடாது. -33-

(ஆனால் இக்காலத்தில் யானையெல்லாம் வந்தன என்று வழங்கிவருகிறோம்)

நீயிர், நீ என்னும் சொற்களுக்குப் பால் இல்லை -34-

நீயிர் வந்தீர், நீ வந்தாய்

நீ ஒருமைக்கு உரியது -35-

நீயிர் பன்மைக்கு உரியது -36-

ஒருவர் என்னும் சொல் ஆண்பாலுக்கும், பெண்பாலுக்கும் உரியது -37-

ஒருவர் என்னும் சொல் தன்மையை உணர்த்துமானால் அப்போது அது பன்மை -38-

இவற்றையெல்லாம் உன்னிப்பாக முன்னத்தால் உணர்ந்துகொள்ள வேண்டும் -39-

பெண்மகன் என்னும் சொல் பெண்மகன் வந்தாள் என்று சொல்லப்படும் -40-

செய்யுளில் ஆன்-ஈறு ஓன்-ஈறு ஆகும் -41-

வில்லான் – வில்லோன்

செய்யுளில் இறைச்சிப்பொருளை (கருப்பொருளை)ச் சுட்டும் பெயர் உயர்திணையை உணர்த்தாது -42-

கடுவன் முதுமகன் கல்லா மூலற்கு
வதுவை வந்த வன்பறழ்க் குமரி
இதில் கடுவன், முதுமகன், மூலன், குமரி என்னும் சொற்கள் உயர்திணை அன்று.
கடுவன் என்பது ஆண் குரங்கையும், மூலன் என்பது பெண்குரங்கையும், குமரி என்பது குரங்குக் குட்டியையும் உணர்த்துகின்றன.

கருவிநூல்[தொகு]

  1. தொல்காப்பியம் சொல்லதிகாரம் இளம்பூரணர் உரை, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடு, 1963
  2. தொல்காப்பியம் சொல்லதிகாரம் சேனாவரையர் உரை, ஆறுமுகநாவலர் பதிப்பு, 1934
  3. தொல்காப்பியச் சொல்லதிகாரக் குறிப்பு, டாக்டர் P.S. சுப்பிரமணிய சாஸ்திரி எழுதியது, பிரமோத ஆண்டு, 1932
  4. தொல்காப்பியம் சொல்லதிகாரம் நச்சினார்க்கினியர் உரை, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடு, 1962
  5. தொல்காப்பியம் சொல்லதிகாரம் கல்லாடனார் விருத்தி உரையும் பழைய உரையும், சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடு, 1964
  6. தொல்காப்பியம் சொல்லதிகாரம் தெய்வச்சிலையார் உரை, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடு, 1963
  7. தொல்காப்பியம் மூலம்
  8. தொல்காப்பியம் மூலம்