தொல்காப்பியம் இளம்பூரணர் உரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இளம்பூரணர் உரை தொல்காப்பியம் நூல் முழுமைக்கும் உள்ளது. உரை தோன்றிய காலம் 11 ஆம் நூற்றாண்டு. இளம்பூரணரின் தொல்காப்பிய உரையைப் பின்பற்றி இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பின்னர் நன்னூல் என்னும் இலக்கண நூல் தோன்றியது. தொல்காப்பியத்துக்கு எழுதப்பட்ட பழைய உரை ஒன்று உண்டு. 15 ஆம் நூற்றாண்டில் தோன்றிய இது தொல்காப்பியம் சொல்லதிகாரத்தில் ஒரு பகுதிக்கு மட்டும் கிடைத்துள்ளது.

உரைநலம் - பிறர் உட்புகுந்து காணமுடியாவண்ணம் இருண்டு கிடந்த தொல்காப்பியம் என்னும் சரக்கு அறையுள் தம் அறிவு என்னும் அவியா விளக்கைக் கொண்டு துருவி, ஆங்கே குவிந்து கிடந்த அரிதான குவியல்களை உலகிற்கு முதலில் விளக்கிக் காட்டிய பெருந்தகை என இளம்பூரணரை மு. இராகவையங்கார் பாராட்டியுள்ளார்.

இளம்பூரணர் தரும் விளக்கம்[தொகு]

இளம்பூரணர் தமக்குச் சுமார் 1500 ஆண்டுகள் முற்பட்ட நூல் தொலகாப்பியத்துக்கு கண்டிருக்கும் விளக்கங்கள் மிகவும் நுட்பமானவை. அவற்றுள் சில இங்கு எடுத்துக்காட்டுகளாகத் தர்ரப்படுகின்றன.

  • நூன்மரபு இயல் – இதனுள் கூறுகின்ற இலக்கணம் மொழியிடை நின்ற எழுத்திற்கு அன்றித் தனி (நின்ற) எழுத்திற்கு என உணர்ந்துகொள்க.
  • மொழிமரபு இயல் – இதனுள் கூறுகின்றது, தனி நின்ற எயுத்திற்கு அன்றி மொழியிடை (நின்ற) எழுத்திற்கு என உணர்க.
  • தொகைமரபு இயல் – 24 ஈற்றில் முடிவனவற்றை எல்லாம் தொகுத்து முடித்தலின் தொகைமரபு எனப்பட்டது.
  • உருபியல் – (சாரியை முதலான) உருபுகளோடு பெயர் புணரும் இயல்பு.
  • உயிர் மயங்கியல் – உருபுப் புணர்ச்சி கூறிய பின் பொருள்-புணர்ச்சி கூறுவது.
  • எச்சவியல் – எல்லா ஓத்தினுள்ளும் எஞ்சிய பொருள் உணர்த்துவது.
  • பொருள் அதிகாரம் – சொல்லால் உணரப்படும் பொருள் பற்றிக் கூறுவது.
  • மரபியல் – பொருளைக் குறிக்கும் மரபு.

பதிப்பு[தொகு]

தொல்காப்பியம் பொருளதிகாரத்துக்கு இருந்த ஓலை ஒன்றே ஒன்று. அது கனகசுந்தரம் பிள்ளையிடமிருந்து பெறப்பட்டது. அதனைப் பெற்று வ. உ. சிதம்பரம்பிள்ளை படியெடுத்து அகத்திணையியல், புறத்திணையியல் ஆகிய இரண்டு இயல்களை மட்டும் 1928-ல் பதிப்பித்தார். உதவியவர் வாவின்ன. இராமசாமி சாஸ்திருலு அண்ட் சன்ஸ் நிறுவனத்தின் தலைவராயிருந்த இராமசாமி சாஸ்திருலு மகன் வெங்கடேஸ்வர சாஸ்திருலு. (தெலுங்கர்) ரா. இராகவையங்காரிடம் இருந்த சொல்காப்பியம் செய்யுளியல் ஓலையை வாங்கிப் படியெடுக்கும்போது வ.உ.சி. சிறையில் அடைக்கப்பட்டார். சிறையிலிருந்து வெளிவந்ததும் மனம் நொந்துபோயிருந்த இவரிடமிருந்த ஓலையை வாங்கி, ஒப்புநோக்கி, சு. வையாபுரிப்பிள்ளை தொல்காப்பியம் பொருளதிகாரம் முழுமைக்குமான இளம்பூரணர் உரையைப் பதிப்பித்தார்.

கருவிநூல்[தொகு]

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, ஒன்பதாம் நூற்றாண்டு, முதல் பாகம், பதிப்பு 2005
  • தொல்காப்பியம் (எழுத்து சொல் பொருள்) மூலமும் உரையும், உரையாசிரியர் இளம்பூரணர், சாரதா பதிப்பகம், சென்னை 14, 2010

அடிக்குறிப்பு[தொகு]