உள்ளடக்கத்துக்குச் செல்

தொண்டூர் சமணர் குகையில் தமிழ் பிராமி கல்வெட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தொண்டூர் சமணர் குகை
தொண்டூர் சமணர் குகையில் தமிழ் பிராமி கல்வெட்டு is located in இந்தியா
தொண்டூர் சமணர் குகையில் தமிழ் பிராமி கல்வெட்டு
தமிழ்நாடு, இந்தியா
அமைவிடம்தொண்டூர், இந்தியா
ஆள்கூற்றுகள்12°21′04″N 79°28′44″E / 12.3511°N 79.4788°E / 12.3511; 79.4788

தொண்டூர் சமணர் குகையில் தமிழ் பிராமி கல்வெட்டு என்பது விழுப்புரம் மாவட்டம், வல்லம் வட்டம், தொண்டூர் கிராமத்தையொட்டி அமைந்துள்ள பஞ்சனாப்பாடி குன்றில் உள்ள பாறையில் பொறிக்கப்பட்டுள்ள தமிழ் பிராமி கல்வெட்டைக் குறிக்கும். [1] தொண்டூரைச் சுற்றி பெரிய பாறைகள் கொண்ட குன்றுகள் சூழ்ந்துள்ளன. இவ்வூர் வல்லத்திலிருந்து 10 கி.மீ. தொலைவிலும், செஞ்சியிலிருந்து 22 கி.மீ. தொலைவிலும், திண்டிவனத்திலிருந்து 34 கி.மீ. தொலைவிலும், விழுப்புரம் மாவட்டத் தலைமையகத்திலிருந்து வடக்கு நோக்கி 51 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. இவ்வூர் விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களுக்கான எல்லையில் அமைந்துள்ளது. [2] சீயமங்கலம், தேசூர், விடல், அகலூர், மேல்சித்தாமூர் சமண மடம் ஆகிய சமணப்பதிகள் இவ்வூருக்கு அருகே அமைந்துள்ளன.

சமணர் படுக்கைகள்

[தொகு]

பஞ்சனாப்பாடி மலைக்குன்றில் இயற்கையான சமணர் குகைத் தளம் காணப்படுகிறது. குகைத்தளத்திற்குச் செல்வதற்காக பாறையில் படிக்கட்டுகள் செதுக்கப்பட்டுள்ளன. சமண முனிவர்கள் இங்கு வாழ்ந்ததற்கான சான்றுகள் இங்கு காணக்கிடைக்கின்றன. இங்குள்ள குகைத்தளத்தில் வழவழப்பான மூன்று கற்படுக்கைகள் தலையணைகளுடன் காணப்படுகின்றன. இவை சமண துறவிகள் தங்குவதற்காக பாறையில் செதுக்கப்பட்டுள்ளன.

கல்வெட்டு

[தொகு]

இந்த மூன்று படுக்கைகளையொட்டி கால்மாட்டிற்கு சற்று கீழே உள்ள சரிவான பாறையில் ஒரு தமிழ் பிராமி கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு இரண்டு வரிகள் கொண்டது. கல்வெட்டு மிகவும் தேய்ந்துள்ளாதால் சற்று தெளிவில்லாமல் காணப்படுகிறது.[3]

கல்வெட்டு பாடம்

[தொகு]
  [இ] ளங்காயிபன் ஏவ அகழ் ஊர் அறம்
  மோசி செய்த அதிட்டானம்

என்பது கல்வெட்டு பாடம் ஆகும்..[3]

பொருள்: தொண்டூரை அடுத்துள்ள அகழ் ஊரைச் சேர்ந்த அறம் மோசி, இளங்காயிபன் விடுத்த கட்டளையை ஏற்று சமணத் துறவிகளுக்கு கற்படுக்கை அமைத்த செய்தியினை இந்தத் தமிழ் பிராமி கல்வெட்டு பதிவு செய்துள்ளது. .[3] காயிபன் என்ற சொல், புகழூர் மற்றும் யானைமலை சமணர் குகைகளில் பொறிக்கப்பட்டுள்ள தமிழ் பிராமி கல்வெட்டுகளில் இடம்பெற்றுள்ளன. புகளூர் தமிழ் பிராமி கல்வெட்டில் செங்காயிபன் என்ற சமணத்துறவியின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. [4] யானைமலை தமிழ் பிராமி கல்வெட்டிலும் இப்பெயர் காணப்படுகிறது. "அத்துவாயி அரட்டக்காயிபன்" என்பது ஒரு சமணத் துறவியின் பெயர். [5] தமிழ்-பிராமி எழுத்து முறையிலிருந்து வட்டெழுத்தாக வளரும் நிலையில் இக்கல்வெட்டு உள்ளது. இக்கல்வெட்டில் மூன்றாவது எழுத்தாக வரும் ஙகர மெய் புள்ளி பெற்றுள்ளது. [6][7] கல்வெட்டின் முடிவில் மூன்று படுக்கைக் கோடுகள் ஒன்றன் கீழ் ஒன்றாகப் பொறிக்கப்பட்டுள்ளன. இக்குறியீடு மூன்று என்ற எண்ணைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது. இங்குள்ள மூன்று படுக்கைகளைக் குறிக்கிறதா? என்பது உறுதியாகத் தெரியவில்லை. இக்கல்வெட்டு கி.பி. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிறது. .[3] அகலூர் என்ற ஊர் செஞ்சி வட்டத்தில் அமைந்துள்ளது. [8]

பார்சுவநாதர்: 23 ஆம் சமண தீர்த்தங்கரரின் சிற்பம்

[தொகு]

சமணப் படுக்கை அமைந்துள்ள பாறையின் அருகே உள்ள மற்றொரு பாறையில் செதுக்கப்பட்டுள்ள புடைப்புச் சிற்பம் சமண சமயத்தைச் சேர்ந்த 23 ஆம் தீர்தங்கரான பார்சுவனாதரின் சிற்பமாகும். பார்சுவநாதர் ஐந்து தலை நாகம் அமைத்துள்ள குடையின் கீழ் அமர்ந்த நிலையில் காணப்படுகிறார். கி.பி. எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று கருதப்படும் இச்சிற்பம் இப்பகுதி மக்களின் வழிபாட்டிற்குரிய தெய்வமாகவும் திகழ்கிறது.

மேலும் சில சமணர் படுக்கைகள்

[தொகு]

குகையிலிருந்து தென்பகுதியில் படிக்கட்டுகள் வழியே ஏறிச்சென்றால், சமணத் துறவிகளுக்காக வெட்டப்பட்ட ஐந்து கற்படுக்கைகளை மற்றொரு குகைத்தளத்தில் காணலாம். குன்றின் உச்சியில் மேலும் இரண்டு கற்படுக்கைகள் அமைக்கப்-பட்டுள்ளன

மேற்கோள்கள்

[தொகு]
  1. Ban on illegal blasting and quarrying in Negunurpatti and Thondur villages: Villupuram Collector The Hindu August 18, 2020
  2. Thondur Onefivenine
  3. 3.0 3.1 3.2 3.3 தொண்டூர் தமிழிணையம் தமிழர் தகவலாறறுப்படை
  4. புகளூர் கல்வெட்டு மா.பவானி கல்வெட்டியல் துறை. தமிழிணையம் தமிழர் தகவலாறறுப்படை
  5. https://www.dinamani.com/travel/2013/apr/16/%E0%AE%8E%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-663566.html எழில்மிகு யானை மலை!] தினமணி ஏப்ரல் 15, 2013
  6. Sridhar, T. S. (2006) "Tamil-Brahmi Kalvettukal", First edition, State Department of Archaeology, Chennai
  7. சங்ககாலத் தமிழ் எழுத்துக்கள் பவானி, மா. கல்வெட்டியல் துறை. தமிழிணையம்
  8. Agalur Onefivenine