உள்ளடக்கத்துக்குச் செல்

தொட்டியம் மதுரை காளியம்மன் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மதுரகாளியம்மன் கோயிலின் கோபுரம்

மதுரை காளியம்மன் கோயில் அல்லது மதுரகாளியம்மன் கோயில் தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள தொட்டியம் எனும் ஊரில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் மூலவராக மதுரகாளியம்மன் உள்ளார். வெண் குதிரை வாகனம் பலிபீடத்திற்கு அருகே உள்ளது. மதுரை வீரன் சந்நிதியும் இத்தலத்தில் உள்ளது.

தல புராணம்

[தொகு]

சின்னானின் பறை இசையில் மயங்கிய மதுரை காளி, அவனுடன் அவன் ஊரான தொட்டியத்திற்கு வர சித்தம் கொண்டு, ஈ வடிவெடுத்துச் சென்றாள். சின்னான் மாடுகள் மேய்க்கும் பொழுது அடிக்கும் பறை இசையை தினமும் ஆனந்தித்துக் கேட்டாள். ஒருநாள் அப்பகுதியை ஆண்ட குறுநில மன்னரின் சகோதரன் குதிரையில் வந்தபோது குதிரையின் குளம்படி பட்டு, புதரிலிருந்த புற்று சிதைந்தது. புற்றிலிருந்த அன்னை கோபமுற்றதால், சகோத ரன் அந்த கணமே மதி இழந்தான். செய்வதறியாது திகைத்த மன்னரின் கனவில் தோன்றிய மதுரை காளி, மதுரையில் இருந்து இசைக்கு மயங்கி வந்து தொட்டியத்தில் தான் சங்கமித்துள்ளதை சொன்னாள். உடனே அரசன் காளிக்கு திருக்கோயில் எழுப்பி உற்சவம் நடத்தினான். சகோதரனின் சி த்தமும் தெளிந்தது. பறையடிக்கும் தொழிலை மேற்கொண்டிருந்த சின்னானுக்கும், அவன் சகோதரன் செல்லானுக்கும் கோயிலினுள் சிலை அமைத் தான். எதிரிகளால் ஏற்படும் துயரம் நீங்க தொட்டியம் மதுரை காளியம்மனை வடைமாலை சாற்றி வழிபடலாம். திருச்சி-முசிறி வழியாக நாமக்கல் செல் லும் சாலையில் தொட்டியம் அமைந்துள்ளது.

தேர்த் திருவிழா

[தொகு]

மதுரகாளியம்மனுக்கு நடைபெறும் திருவிழாவும், தேரோட்டமும் முக்கியமானவையாகும். தை மாதம் இரண்டாம் தேதி முகூர்த்தம் செய்யப்பட்ட நாளிலிருந்து திருவிழா ஏற்பாடுகள் தொடங்கி, பங்குனி மாதம் தேரோட்டம் முடியும் வரை தொட்டியம் அமர்க்களப்படும. இந்த விழாவின் முக்கியமானது இரட்டைத் தேரோட்டம். பிரம்மாண்டமாகக் காட்சியளிக்கும் 32 அடி உயரம் கொண்ட பெரிய தேர், 30 அடி உயரம் கொண்ட சிறிய தேர், இரண்டும சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு வீதியுலா வரும். தமிழகத்திலேயே தோளால் தூக்கிச் செல்லப்படும் மிக உயரமான தேர் இதுவாகத் தான் இருக்கும். இரண்டு தேரும் ஒரே நேரத்தில் வீதிவலம் வருவதால், சுமார் 200பேர் தேரைச் சுமந்து செல்கின்றனர். [1]

இந்த இரு தேர்களையும் தூக்குவதற்காகவே கவுத்தரசநல்லூர், சித்தூர், அரங்கூர், கிளிஞ்சநத்தம், அயினாப்பட்டி, ஏரிகுளம், பாலசமுத்திரம், தொட்டியம் கோட்டமேடு, சந்தப்பேட்டை, கொசவம்பட்டி, காமலாபுரம்புதர், தோளூர்ப்பட்டி, ஏலூர்ப்பட்டி, குண்டுமணிப்பட்டி, மாராச்சிப்பட்டி, உடையாகுளம்புத்தூர், நத்தம், புத்தூர், தொட்டியப்பட்டி,கார்த்திகைப்பட்டி என 18 பட்டி கிராம மக்கள் திருவிழாவில் ஒன்று கூடுகின்றனர். சிறிய தேரில் மதுர காளி அம்மனும், பெரிய தேரில் ஓலைப்பிடாரிகளும் எழுந்தருளி வீதிகளில் வலம் வருவர். [1]

சான்றுகள்

[தொகு]
  1. 1.0 1.1 தினமணி புத்தாண்டு மலர் 2013