தொட்டஹூண்டி நிசீதிகை கல்வெட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கி.பி. 840 அல்லது 869 ஆம் ஆண்டு தேதியிட்ட பழைய கன்னட கல்வெட்டுடன், தொட்டஹூண்டி நிசீதிகை கல்வெட்டு மேலைக் கங்க மன்னர் நீதிமார்கனின் மரணத்தை சித்தரிக்கிறது.

தொட்டஹூண்டி நிசீதிகை கல்வெட்டு (Doddahundi nishidhi inscription) என்பது கர்நாடக மாநிலத்தின், மைசூர் மாவட்டம், திருமாக்கூடல் நரசிபுரம் வட்டம், தொட்டஹூண்டி குக்கிராமத்திலிருந்து கண்டறியப்பட்ட வீரக்கல் எனப்படும் நடுகல் ஆகும். இந்த வீரக்கல்லில் தேதியிடப்படாத பழைய கன்னட மொழியில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது. வரலாற்று ஆசிரியர்களான ஃப்ளீட், ஜே.எஃப், சர்மா, ஐ.கே, ரைஸ், ஈ.பி. ஆகியோர் இக்கல்வெட்டின் காலம் கி.பி. 840 அல்லது 869 என்று கணித்துள்ளனர்.[1][2]

நிசீதிகை[தொகு]

சமணத் துறவிகள் வாழ்ந்த குகைப்பள்ளிகள் பாழி, பள்ளி, அதிட்டானம் என்று பெயர் பெற்றன. சமண சமயத்தில், நிசீதிகை (நிசிதி, நிசிதியா, நிசாதி, என்று பல பெயர்கள் உள்ளன) என்பது ஒரு சமணத் துறவி, அரசன் அல்லது அரசி போன்றோர் தாமாக சல்லேகனை நோன்பிருந்து உயிர் துறந்த இடம் அல்லது தகனம் செய்யப்பட்ட இடம் அல்லது அஸ்தி புதைக்கப்பட்ட இடமாகும்.[3] நிசீதிகைகளில் உயிர் துறந்து அழியாப்புகழ் பெற்ற ஆண் அல்லது பெண்ணின் அறிவார்ந்த அல்லது புனிதமான சாதனைகளை விவரிக்கும் கல்வெட்டுகள் பொறிக்கப்படுவது வழக்கமாயிற்று.பத்திரபாகு முனிவர், கவுந்தியடிகள் முதலான சமணத் துறவிகள் சல்லேகனை முறையில் உயிர்துறந்தவர்கள்.[4][5]

சல்லேகனை என்ற சொல் வீடுபேறு அடைவதற்காக சமணத் துறவிகள் மேற்கொள்ளும் உண்ணாநிலையைக் குறிக்கும். சல்லேகனை என்ற சொல்லுக்கு மெலிதல் என்பது பொருள்.[5][6]

”இடையூறு ஒழிவில்நோய் மூப்பிவை வந்தால்
கடைதுறத்தல் சல்லே கனை.”

பிறர் தரும் தாங்கவொன்னாத் தொல்லை, நாட்பட்ட நோய், முதுமை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சல்லேகனை நோன்பிருந்து உயர் துறக்கலாம் என்று அருங்கலச்செப்பு என்ற சமண நூல் குறிப்பிடுகிறது.[7] இந்தச் சடங்கில் உண்ணா நோன்பு இருப்போர் தொடக்கத்தில் திட உணவுகளை நீக்கி பால் போன்ற நீர் உணவுகளை மட்டும் அருந்துவர். இதற்கு சாந்தாரா, சாமடி மரணம், சன்யாசன மரணம் போன்ற வேறு பெயர்களும் உள்ளன.[5][6]

விழுப்புரம் மாவட்டம் திருநாதர்குன்றில் பொறிக்கப்பட்ட வட்டெழுத்துக் கல்வெட்டில் இந்த உண்ணா நோன்பைக் குறிக்க "அனசனம்" என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

“ஐம்பத் தேழன சனந் நோற்ற சந்திர நந்தி ஆ சிரிகரு நிசீதிகை”

ஆசனம் என்றால் உண்ணுதல் என்று பொருள். அன்+அசனம்=அனசனம் என்றால் உண்ணாமல் இருத்தல் என்று பொருள். வீடுபேறு அடைவதற்காக சமணத் துறவிகள் மேற்கொள்ளும் உண்ணாநிலை அனசனத் தவம் என்று அழைப்பட்டுள்ளது.[5]

மேலைக் கங்க மன்னனின் நிசீதிகை வீரக்கல்[தொகு]

கன்னட மொழிக் கல்வெட்டுடன் 14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நிசீதிகைக் கல்வெட்டுக்கான எடுத்துக்காட்டு

வீடுபேரை அடைய விரும்பிய சமணத் துறவிகள் தாமாக முன்வந்து சல்லேகனை என்னும் கடுமையான உண்ணாநிலை மேற்கொண்டு உயிர்துறந்தோரின் நினைவாக இது போன்ற நிசீதிகைகள் எழுப்பப்பட்டதை இடைக்கால இந்திய வரலாற்று நூல்கள் பதிவு செய்துள்ளன. மேலைக் கங்கர்களின் ஆட்சிக் காலத்தில் நேர்த்தியாகச் செதுக்கிய கம்பீரமான தூண்கள் மட்டுமின்றி, குறிப்பிடத்தக்க வீரக்கற்கள் தனிச்சிறப்பு வாய்ந்த புடைப்புச் சிற்பங்களுடன் உருவாக்கப்பட்டன.[8][9]7 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியைச் சேர்ந்த நிசீதிகள் சரவணபெலகுளா மலைகளில் காணக்கிடைக்கின்றன. தொட்டஹூண்டி நிசீதிகை என்பது மேற்கு கங்கை காலத்திலிருந்து காணப்படும் குறிப்பிடத்தக்க சான்றுகளில் ஒன்றாகும். [3]

மேலைக் கங்க கோமரபைத் சேர்ந்த மன்னர் முதலாம் இரிகங்கா நிதிமார்கன் (Ereganga Nitimarga I) (ஆட்சி ஆண்டுகள்: கி.பி. 853-869) உண்ணா நோன்பிருந்து உயிர் துறக்கும் சமண சமயச் சடங்கான சல்லேகனை நோன்பு மேற்கொண்டுள்ள காட்சி தொட்டஹூண்டி நிசீதிகை வீரக்கல்லில் சிற்பமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. தொட்டஹூண்டி நிசீதிகை கல்லின் ஒரு சதுர சட்டத்திற்குள் (panel) அதன் குறுஞ்சிற்பங்கள் (frieze) செதுக்கப்பட்டுள்ளன. புதைகுழியை நினைவுறுத்தும் வகையில், சட்டத்தின் விளிம்புகளில் தீ சுவாலை பொறிப்பு காட்டப்பட்டுள்ளது. இறக்கும் தருவாயில் காணப்படும் மன்னன் இரட்டைத் தலையணையில் தலையை வைத்து ஒரு மஞ்சத்தில் படுத்துள்ளான். முகத்தோற்றம் அமைதியையும் கனிவையும் வெளிப்படுத்துகிறது . மன்னனின் தனிப் பாதுகாவலனாகிய அகரய்யா அவனுக்குப் பணிவிடைகள் செய்கிறான்.

குறுஞ்சிற்பத்திற்குக் கீழே பொறிக்கப்பட்ட பழைய கன்னட மொழிக் கல்வெட்டில், "அர்ஹத் பட்டரகாவின் ஜோடி தாமைரைப் பாதங்களில்" என்று பொறிக்கப்பட்டுள்ளது.[10] தொட்டஹூண்டி நிசீதிகைக் கல்வெட்டை, வரலாற்றாசிரியரும் கல்வெட்டு அறிஞருமான ஜே.எஃப். ஃப்ளீட் என்பவர் தொகுத்து ஆய்வு செய்துள்ளார். இக்கல்வெட்டில் இடம்பெற்றுள்ள பெயர்கள் தனிநபர் பெயரல்ல என்றும், இவை கங்க மன்னரின் பட்டங்களைக் குறிக்கும் பெயர்கள் ஆகும் என்று ஃப்ளீட் கருதுகிறார்.[2] இக்கல்வெட்டில் இடம்பெற்றுள்ள நிதிமார்கன் உண்மையில் மேலைக் கங்க மன்னன் சிறீபுருசனின் (ஆட்சியாண்டு கி.பி. 726-788) மைந்தன் இரணவிக்கிரமன் என்றும் ஃப்ளீட் கருதுகிறார். இந்தக் கருத்துடன் இக்கல்வெட்டின் காலம் கி.பி. 840 என்று கால அளவீடு செய்துள்ளார். இம்மன்னனின் மகனான சாத்தியவாக்கியன் என்பவன் மன்னன் சல்லேகனை நோற்று உயிர்துறந்த நிசீதிகையில் இந்த வீரக்கல்லை எடுப்பித்துள்ளான்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Rice, E.P. (1921), p.13
  2. 2.0 2.1 2.2 Fleet (1905), p. 53
  3. 3.0 3.1 Sarma (1992), p.202
  4. சமணமும் தமிழும் -மயிலை சீனி. வேங்கடசாமி - வடக்கிருத்தல்
  5. 5.0 5.1 5.2 5.3 வீரசங்காதப் பெரும்பள்ளி. இரா.மணிமேகலை தினமணி, செப்டம்பர் 06, 2020
  6. 6.0 6.1 சல்லேகனை விக்கிபீடியா
  7. வடக்கிருத்தல் மேகலா இராமமூர்த்தி. வல்லமை
  8. Sarma (1992), p.17
  9. Sarma (1992), p.204
  10. Sarma (1992), p. 204

உசாத்துணை[தொகு]