தொடுவானம் (மின் ஆளுமைத் திட்டம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தொடுவானம்
Thoduvanam.JPG
வெளியீட்டாளர் உ. சகாயம்,
இந்திய ஆட்சிப்பணி அதிகாரி,
மதுரை.
வகை மதுரை மாவட்ட கிராம மக்களின்
விண்ணப்பம், புகார்கள் மற்றும்
மாவட்ட ஆட்சித்தலைவரின் நடவடிக்கைகள்
மாவட்டம் மதுரை
மாநிலம் தமிழ்நாடு
நாடு இந்தியா
தொடர்பு முகவரி உ. சகாயம் இ.ஆ.ப.
மாவட்ட ஆட்சித்தலைவர்,
மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம்
மதுரை - 625 020,
தமிழ்நாடு,
இந்தியா
வலைப்பக்கம் தொடுவானம்

தொடுவானம் என்பது தமிழ்நாட்டில் மாவட்ட நிர்வாகத்திலுள்ள கிராமங்களிலிருந்து அரசு நலத்திட்ட உதவிகளுக்கான விண்ணப்பங்கள், ஊரின் பொதுவான குறைபாடுகள் தீர்க்கக் கோரும் வேண்டுகோள் போன்றவைகளை நேரடியாக மாவட்ட ஆட்சித்தலைவரைச் சந்தித்து அல்லது மாவட்ட அதிகாரிகளைச் சந்தித்து அளிக்கும் முறையை இணைய வழியில் கொண்டு வரும் வழியில் ஏற்படுத்தப்பட்ட மின் ஆளுமைத் திட்டங்களில் ஒன்று. இத்திட்டம் காந்தி கனவு கண்ட கிராம இராஜ்யம் உருவாக, கிராமப்புற மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்பட கிராமப்பகுதி மக்களுக்கு உதவும் நோக்கத்துடன்,இத்திட்டத்தை இந்திய ஆட்சிப் பணி அதிகாரியான உ. சகாயம் மதுரை மாவட்டத்தில் ஆட்சியராக இருந்த போது செயல்படுத்திய ஒரு திட்டமாகும்.

திட்ட உருவாக்கக் கருத்து[தொகு]

உ. சகாயம்

அமெரிக்காவில் வசித்து வரும் ஆல்பர்ட் பெர்னாண்டோ மற்றும் இந்திய ஆட்சிப்பணி அதிகாரியான உ. சகாயம் ஆகியோர் கிராமப்பகுதி மக்களுக்காக எளிமையான முறையில் நலவுதவிகளுக்கான விண்ணப்பம், மக்களின் குறைகளைத் தீர்க்கக் கோரும் புகார்கள் போன்றவற்றை மாவட்ட அலுவலகங்களுக்குச் செல்லாமல் உள்ளூர் ஊராட்சி அலுவலகத்திலேயே கொடுத்து அந்த விண்ணப்பம் மற்றும் குறைகளுக்கு தீர்வு கிடைக்க மேற்கொண்ட முயற்சியே இத்திட்டம் அமைய வழிவகுத்தது.

சகாயம் கருத்து[தொகு]

கிராமப் பகுதியிலிருக்கும் ஒருவர் மாவட்ட அலுவலகங்களில் அளிக்கும் விண்ணப்பம் அல்லது புகார் போன்றவற்றிற்கு அவருடைய கிராமத்திலிருந்து மாவட்ட அலுவலகத்திற்கு பணம் செலவழித்து வர வேணியிருக்கிறது. இதனால் அவருக்கு தேவையற்ற பொருட்செலவு ஆகிறது. இது போல் கிராமத்தில் தினக்கூலிக்குச் செல்லும் அவர் ஒரு நாள் வேலைவாய்ப்பையும், அதற்கான கூலியையும் இழக்க வேண்டியிருக்கிறது. கிராமத்திலிருந்து வரும் அவருக்கு மாவட்ட அலுவலகம் அமைந்திருக்கும் நகரத்தில் உணவுக்கான செலவும் செய்ய வேண்டியிருக்கிறது. இவற்றையெல்லாம் மின்னாளுமைத் திட்டத்தின் கீழ் கொண்டு வந்தால் அவர்களுக்கு எவ்வித செலவும் இல்லாமல் அவர்களுடைய விண்ணப்பம் அல்லது புகாரினை மாவட்ட அலுவலகத்திற்கு எளிமையாக எந்தச் செலவுமின்றி சேர்ப்பிக்க முடியும். இந்நோக்கத்திற்கு தொடுவானம் திட்டம் உதவிகரமாக இருக்கும் என்று இத்திட்டம் உருவாக்கம் மற்றும் செயல்படுத்துவது குறித்து இந்திய ஆட்சிப்பணி அதிகாரி சகாயம் கருத்து தெரிவித்துள்ளார்.

வலைத்தளம்[தொகு]

இந்தத் திட்டத்திற்காக உ. சகாயம் தனியாக ஒரு வலைத்தளத்தை உருவாக்கியுள்ளார். தொடுவானம் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த வலைத்தளத்தில் கிராமப் பொதுப் பிரச்சனைகள், நலத்திட்ட விண்ணப்பங்கள் போன்றவற்றை உடனுக்குடன் பதிவு செய்துவிட முடியும். இந்தப் புகார் அல்லது விண்ணப்பத்தைப் பரிசீலிக்க தொடுவானம் அலுவலருக்கான இணைப்பு, தமிழ் தட்டச்சுப் பயிற்சி, மாவட்ட ஆட்சித் தலைவருடன் காணொளியில் கலந்துரையாடுவதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்தத் தளத்தில் பெறப்படும் புகார் அல்லது விண்ணப்பத்திற்கு பதிவு செய்யப்பட்டவுடன் ஒரு எண் அளிக்கப்படும். இந்த எண்ணைக் கொண்டு அதன் மேல் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விபரங்களைத் தெரிந்து கொள்ள வழி வகை செய்யப்பட்டுள்ளது.[1]

பயிற்சி[தொகு]

தொடுவானம் பயிற்சி

தொடுவானம் இணையதளத்தின் வழியாகக் கிராமப்பகுதி மக்கள் எப்படி பயன்படுத்துவது என்பதற்காக, ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள ஊராட்சி அலுவலக எழுத்தருடன் ஏதாவதொரு சமூக அமைப்பு அல்லது தொண்டு நிறுவனத்தின் உறுப்பினர், தன்னார்வலர்கள் என்று ஐந்து நபர்கள் இப்பயிற்சிக்காகத் தேர்வு செய்யப்படுகின்றனர். இவர்களுக்குத் தொடுவானம் இணையதளத்தில் எளிமையாகத் தமிழில் தட்டச்சு செய்வதற்கும், எப்படி புகார் அளிப்பது அல்லது விண்ணப்பம் அளிப்பது என்பது குறித்தும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இந்தத் தொடுவானம் இணையதளத்தில் பெறப்பட்ட புகார் அல்லது விண்ணப்பத்திற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விவரங்களை அலுவலர்கள் எப்படி பதிவு செய்வது என்பது போன்ற பயிற்சிகள் அலுவலர்களுக்கும் அளிக்கப்படுகிறது. தமிழ் உலகம் அறக்கட்டளை உறுப்பினர்கள் உதவியுடன் இந்தப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

திட்டத்திற்கான தேவைகள்[தொகு]

இத்திட்டத்திற்கு கணினியும், இணைய வசதியும் அவசியத் தேவைகளாக உள்ளன. தமிழ்நாட்டில் ஒவ்வொரு கிராம ஊராட்சிக்கும் தனித்தனியாக கணினி வசதி செய்யப்பட்டுள்ளது. எனவே கணினி எதுவும் புதிதாக வாங்க வேண்டிய செலவுகள் எதுவும் இல்லை. மதுரை மாவட்டத்தில் சில கிராம ஊராட்சிகளில் உள்ள கணினிகளுக்கு முன்பே இணைய இணைப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. இணைய வசதி இல்லாத சில கிராம ஊராட்சிகளுக்கு மட்டும் இணைய வசதி செய்யப்பட வேண்டும்.

திட்டத்தின் பயன்கள்[தொகு]

அரசுக்கான பயன்கள்[தொகு]

 • இத்திட்டத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காகிதப் பணிகள் குறையும்.
 • மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் நடைபெறும் மனுநீதி நாள் திட்டத்திற்கு வரும் கூட்டம் குறையும். மேலும் அன்றைய அனைத்துத் துறை அலுவலர்களின் பணிப்பளுவும் குறையும்.

பயனாளர்களுக்கான பயன்கள்[தொகு]

 • புகார்/விண்ணப்பம் அளிப்பவர்களுக்கு புகார் மனு எழுதுவதற்கான அடிப்படைச் செலவுகள் எதுவும் இல்லை
 • புகார்/விண்ணப்பம் அளிப்பவர்கள் அரசு அலுவலகங்களுக்குச் செல்வதற்கான செலவுகள் இல்லை.
 • புகார்/விண்ணப்பம் அளிப்பவர்களது தினசரி வேலைக்கு இடையூறுகள் எதுவும் இல்லை.
 • புகார்/விண்ணப்பம் அளிப்பவர்களுக்கு பதிவு செய்தவுடன் உடனடியாக பதிவு எண் அளிக்கப்படுகிறது. (தற்போது கிராமத்தில் கூட நகர்பேசி பயன்பாடு அதிக அளவிலுள்ளதால் புகார்/விண்ணப்பம் அளிப்பவரின் நகர்பேசி எண்ணைப் பெற்று அந்த நகர்பேசிக்கு “தங்கள் விண்ணப்பம் பதிவு செய்யப்பட்டது. தங்களுடைய பதிவு எண்.....” என்று ஒரு குறுஞ்செய்தி அளிக்கும் வசதி செய்யலாம்)
 • புகார்/விண்ணப்பத்தின் பதிவு எண்ணைக் கொண்டு அதன் மேல் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விவரத்தை இணையத்தில் அறிந்து கொள்ள முடியும்.
 • புகார்/விண்ணப்பம் உடனுக்குடன் சம்பந்தப்பட்ட துறை நடவடிக்கைக்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து மின்னஞ்சலில் அனுப்பப்பட்டு விடுகிறது. இதனால் பயனாளர்களுக்கு மிக விரைவாகத் தீர்வுகள் கிடைக்கும்.

திட்டத்தின் குறைகள்[தொகு]

அரசு வழி குறைகள்[தொகு]

 • மாவட்டத்திலுள்ள துறை அலுவலர்கள் பயனாளர்களை நேரில் சந்திக்காமல் இருப்பதால் இத்திட்டத்தைச் செயல்படுத்துவதில் தயக்கம் காட்டக் கூடும்.
 • மாவட்டத்தின் பல துறை அலுவலர்களின் ஒத்துழைப்பில் குறைபாடுகள் வரக்கூடும்.
 • மாவட்டத்தின் பல்வேறு துறை அலுவலர்கள் இணைய வசதியைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படும். இதனால் இதற்கு எதிர்ப்புகள் வரலாம்.
 • கிராம அளவில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் நிலையில் கிராம நிர்வாக அலுவலர், கிராம நிர்வாக உதவியாளர்கள் (தலையாரிகள்) போன்றோர் தங்கள் பணி அதிகாரம் பாதிக்கப்படும் என்கிற அச்சத்தில் எதிர்க்கக் கூடும்.

பயனாளர் குறைகள்[தொகு]

 • இத்திட்டம் முதலில் செயல்படுத்தும் நிலையில் பயனாளர்களுக்கு நேரடியாக அதிகாரிகள் எவரையும் சந்திக்காமல் இணையம் வழியில் செயல்படுவதால் நம்பிக்கை குறைவாக இருக்கும்.(இத்திட்டம் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டால் பின்னர் இக்குறை நீங்கிவிடும்)
 • இத்திட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் இதற்கென நியமிக்கப்படும் அலுவலர் அல்லது பணியாளர் பரிசீலனைக்குப் பின்பு, அந்தப் புகார் கடிதம்/விண்ணப்பம் துறை அலுவலர்களுக்கு அனுப்பப்படும்படியாக மென்பொருள் வசதி செய்யப்பட்டுள்ளது. இதனாலும் கால தாமதம் ஏற்படும். (இத்திட்டத்திற்கான மென்பொருளில் துறைகள் தேர்வு செய்யப்படும் வசதி இருப்பதால், புகார் பதிவு செய்யப்பட்டவுடன் அந்தத் துறைக்கான மாவட்டத் தலைமை அலுவலகத்திற்கு புகார் கடிதம்/விண்ணப்பத்துடன் மாவட்ட ஆட்சியரிடமிருந்து தானியக்கமாக மின்னஞ்சல் அனுப்பப்படும் வசதி செய்யப்பட்டால் இந்தக் காலதாமதத்தையும் குறைக்கலாம்)

முந்தைய திட்டம்[தொகு]

உ. சகாயம் நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவராக இருந்த போது இதுபோன்று இணைய வழியில் விண்ணப்பம்/புகார் அளிக்கும் திட்டம் ஒன்றைக் கடந்த ஜனவரி 2010 ல் நாமக்கல் மாவட்டத்தில் தொடங்கினார். இந்தத் திட்டம் நாமக்கல் மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு அங்குள்ள கிராமப்பகுதிகளிலிலிருந்து இரண்டு மாதங்களுக்குள்ளாக 1817 விண்ணப்பம் மற்றும் புகார்கள் வரப்பெற்று அதில் 1514 விண்ணப்பம் மற்றும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அரசு நலத்திட்ட உதவிகள் அளிக்கப்பட்டதுடன் பல குறைகளும் சரி செய்யப்பட்டன என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. ஆனால் இவர் பதவி மாற்றம் செய்யப்பட்ட பின்பு இந்தத் திட்டம் அம்மாவட்டத்தில் முடங்கிப் போனது என்பதும் இங்கு கவனிக்கத் தகுந்தது.

தொடக்கம்[தொகு]

இந்தத் திட்டம் கடந்த ஆகஸ்ட் 20, 2011-ம் தேதி மாலை 4 மணிக்கு மதுரை மாநகராட்சி ஆணையர் அவர்களால் குத்து விளக்கேற்றி இனிதே துவக்கப்பட்டது.

முடக்கம்[தொகு]

இந்தத் திட்டம் கடந்த ஆண்டு மாவட்ட ஆட்சியர் உ. சகாயம் பணிமாற்றம் செய்த மறுநாள் முடக்கம் செய்யப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]