தொகைமொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சொற்கள் "இணையும்போது" ஒரு தொடர் உருவாகும். சொற்கள் தொடராகும்போது இரு சொற்களுக்கிடையே வேற்றுமை, வினை, உவமை, முதலானவற்றுள் ஏதேனும் ஒன்று மறைந்து வந்தால், அத்தொடர்களைத் "தொகைநிலைத் தொடர்கள்" என்பர். தமிழில் தொகைநிலைத்தொடர் தொகைமொழி எனப்படுகிறது. இந்தத் தொடர்களில் உள்ள சொற்கள் ஒன்றை ஒன்று அவாவிக் கிடக்கும். பிரித்தால் அவாவுநிலை இருக்காது.

தமிழ் படி – இது ஒரு தொகைநிலைத்தொடர். தமிழைப் படி – இது மேலதன் தொகாநிலைத்தொடர்.

‘எல்லாத் தொகையும் ஒருசொல் நடைய’ என்று தொல்காப்பியர் இதனைக் குறிப்பிடுகிறார்.

தமிழில் தொகைமொழி ஆறு வகையில் அமையும்.

  1. வேற்றுமைத்தொகை
  2. வினைத்தொகை
  3. பண்புத்தொகை
  4. உவமைத்தொகை
  5. உம்மைத்தொகை
  6. அன்மொழித்தொகை

வேற்றுமைத்தொகை

கனி தந்தான் – (கனியைத் தந்தான்) - இரண்டாம் வேற்றுமைத்தொகை
பொற்குடம் – (பொன்னால் ஆய குடம்) – மூன்றாம் வேற்றுமைத்தொகை
கருப்பு வேலி – (கரும்புக்கு வேலி) – நான்காம் வேற்றுமைத்தொகை
மலைவீழ் அருவி – (மலையிலிருந்து வீழும் அருவி) – ஐந்தாம் வேற்றுமைத்தொகை
சாத்தன் கை – (சாத்தனது கை) – ஆறாம் வேற்றுமைத்தொகை
குன்றக் கூகை – (குன்றத்துக்கண் கூகை) – ஏழாம் வேற்றுமைத்தொகை – போன்றன.

வினைத்தொகை என்பது காலம் கரந்த பெயரெச்சம்

ஊறுகாய் – ஊறிய காய், ஊறுகின்ற காய், ஊறும் காய் போல்வன - (காலம் ஒளிந்துகொண்டு உள்ளது.)

பண்புத்தொகை

பசுந்தாள் உரம் – பசுமையான தாள்
இன்சொல் – இனிமையான சொல்
வட்டப்பலகை – வட்டமாக உள்ள பலகை – போல்வன.

உவமைத்தொகை

துடியிடை – துடியைப் போன்ற இடை
பான்மொழி – பால் போல் இனிக்கும் மொழி. – போல்வன.

உம்மைத்தொகை

கபிலபரணர் – கபிலரும் பரணரும்
பொரிகடலை – பொரியும் கடலையும் – போல்வன.

அன்மொழித் தொகை

தேன்மொழி வந்தாள் – தேன் போல் மொழிபவள் வந்தாள்.
குறுந்தொகை படி – குறும்பாடல் தொகுப்பாகிய குறுந்தொகை நூலைப் படி. – போல்வன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தொகைமொழி&oldid=3478796" இலிருந்து மீள்விக்கப்பட்டது