தைலக்களிம்பு
தைலக்களிம்பு (Vaseline) என்பது பெட்ரோலியப் பாகிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு நீர்மக்கரிமங்களின் கலவை.[1] இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து தேன் மெழுகு மற்றும் வேறு வகையான மெழுகுகளில் கலந்து, உதடு மற்றும் தோல் வறண்டு போகாமல் இருக்கப் பயன்படும் வாசனைத் திரவியங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.[2]
பெயர் மூலம்
[தொகு]‘வாசலின்’ என்பது யூனிலிவர் என்னும் ஆங்கில-டச்சு நிறுவனத்தால் தயாரிக்கப்படும் தைலக்களிம்பின் வணிகப்பெயராகும். வாசலின் என்ற பெயர் நீர் எனும் பொருள் கொண்ட செர்மானியச் சொல்லான “வாசர்’ (Wasser) மற்றும் ஆலிவ் எண்ணெய் எனும் பொருள் கொண்ட கிரேக்கச் சொல்லான ஏலையன் (έλαιον, பலுக்கம்:Elaion) என்ற இரண்டு சொற்களின் சேர்க்கையில் உருவானது.[3]
வரலாறு
[தொகு]பெட்ரோலியப் பாகிற்காக பூமியில் ஆழ்துளைக் கிணறு இடும் பொழுது கிடைத்த மெழுகிலிருந்து கோல் மெழுகு கிடைக்கப்பெற்றது. எண்ணெய்க் கிணறுகளில் பணிபுரியும் மக்கள் தீக்காயங்களுக்கு இதைப் பயன்படுத்திவந்ததைக் கண்ட இங்கிலாந்து நாட்டில் பிறந்த அமெரிக்க வேதியலர் ராபர்ட் சேசுபரோ (1837-1933) (Robert Chesebrough), தீப்புண் மற்றும் வெட்டுக் காயங்களுக்குப் பயன்படும் இதன் பண்பைக் கண்டுணர்ந்து, இம்மெழுகைக் காய்ச்சி வடித்து அதன் எச்சத்தை எலும்புக் கரியினால் வடிகட்டித் தைலக்களிம்பைத் தயாரித்தார். சேசுரோ இக்கண்டுபிடிப்பிற்கு அமெரிக்கக் காப்புரிமையை (US Patent 127,568) 1872 ஆம் ஆண்டு பெற்றார்.
சேசுபரோ அமெரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து, தீயினால் எற்பட்ட காயங்களுக்கும், வெட்டுக் காயங்களுக்கும் தைலக்களிம்பு சிறந்த மருந்து எனக் கூறி, இதன் மருத்துவ குணங்களை விளக்கி விளம்பரம் செய்தார். தைலக்களிம்பைத் தடவுவதால் கிருமிகளிலிருந்தும் ஈரத்திலிருந்தும் பாதுகாக்கப்படுவதால் காயம் விரைவில் குணமாவதற்கு வழியுண்டு. எனினும் இதற்கு ஆராய்ச்சி முறையில் சான்று எதுவும் இருக்கவில்லை. எனவே இவர் தன் கையில் அமிலத்தினாலோ அல்லது தீயினாலோ காயம் ஏற்படுத்திக்கொண்டு அதன்மீது தைலக்களிம்பைத் தடவி அது சரியான பின் எப்படியிருக்கும் என்பதை எற்கனவே தம் கையில் உள்ள வடுவைக் காட்டி விளக்கி வந்தார்.
சேசுபரோ 96 வயது வரை வாழ்ந்தார், இவர் தினமும் ஒரு தேக்கரண்டி தைலக்களிம்பை உட்கொண்டதாகவும்[4], தமக்கு நுரையீரல் உறையழற்சி (Pleurisy) ஏற்பட்ட போது தமது உடலை தைலக்களிம்பினால் பூசி முழுவதும் மறைத்துக் கொண்டதாகவும் அதனால் அவர் விரைவில் குணமடைந்தர் என்றும் கூறப்படுவதுண்டு.[5]
தைலக்களிம்பை உற்பத்தி செய்யும் முதல் தொழிற்சாலை சேசுபரோ உற்பத்தி நிறுவனம் என்ற பெயரில் 1870 ஆம் ஆண்டு நியூயார்க் நகரம், புரூக்லினில் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம் ஐரோப்பாவில் 1911 ஆம் ஆண்டு உற்பத்தியைத் தொடங்கியது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1001 Inventions that Changed the World, General Editor Jack Challoner, Hacette Book publishing India Pvt. Ltd, (2009), Page 392, ISBN 978-93-5009- 685-7
- ↑ The History of Vaseline Petroleum Jelly began in the Pennsylvania Oil Fields!, Drake Well Museum pamphlet, copyright 1996 by Holigan Group Ltd, Dallas, Texas
- ↑ Webster's Unabridged Dictionary (1913)
- ↑ Schwager, E.. "From Petroleum Jelly to Riches". Drug News & Perspectives 11 (2): 127.
- ↑ Moskowitz, Milton; Michael Katz; Robert Levering (1980). Everybody's Business: An Almanac : an Irreverent Guide to Corporate America. Harper & Row. p. 199. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-06-250620-X.