தைமீர் மூவலந்தீவு

தைமீர் மூவலந்தீவு (Taymyr Peninsula, Полуостров Таймыр, Таймырский полуостров}), என்பது ரஷ்யாவின் தூர வடக்கில், சைபீரிய கூட்டாட்சிப் பகுதியிலுள்ள ஒரு மூவலந்தீவாகும், காராக் கடலின் யெனிசேய் வளைகுடாவிற்கும் லாப்தேவ் கடலின் கட்டங்கா வளைகுடாவிற்கும் இடையில் அமைந்துள்ளது. அலுவல்முறையில் இது ரஷ்யாவின் கிரஸ்னயோர்ஸ்க் மாகாணத்தின் ஒரு பகுதியாகும்.
நிலவியல்[தொகு]

ரஷ்யாவின் மிகப்பெரிய மூவலந்தீவான (400,000 சதுர கிமீ) தைமீர் மூவலந்தீவு யூரேசியாவின் முதன்மையான நிலப்பகுதியின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது. மேற்பரப்பின் தன்மைக்கு ஏற்ப, இது மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது: வடக்கு சைபீரியத் தாழ்நிலம், பைரங்கா மலைகள் (1,125 மீட்டர் உயரம் வரையுள்ளன), தென்மேற்கில் இருந்து வடகிழக்கு வரை நீண்டு, காராக் கடலின் கரையோரத்தில் உள்ளச் சமவெளி. மூவலந்தீவின் தெற்கு விளிம்பில் புடோரானா உயர்நிலத்தின் வடக்குப் பகுதி உள்ளது[1] யூரேசிய கண்டத்தின் வடக்குப்புள்ளியான செல்யூஷ்கின் முனை, தைமீர் மூவலந்தீவின் வடக்கு முனையில் அமைந்துள்ளது.
தைமீர் மூவலந்தீவில் பாயும் ஆறுகள்: பியாசினா, மேல் மற்றும் கீழ் தைமீர், கட்டங்கா.
தைமீரில் அமைந்துள்ள ஏரிகள்: தைமிர், போர்ட்நாகினோ, குங்கசலா, லாபாஸ், கோகோரா.
தைமீரிலுள்ள விரிகுடாக்கள்: மிடென்டோர்ஃப், பியாசின்ஸ்கி, சிம்ஸ், தைமீர் வளைகுடா, தெரசா கிளாவெனஸ், தாடியஸ், மரியா பிரோன்சிஷ்யேவா வளைகுடா.
சூழலியல்[தொகு]

தைமீர் மூவலந்தீவு வட அமெரிக்காவிற்கு வெளியே இயற்கையான வெளியில் கடைசியாக அறியப்பட்ட, சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்து போன கத்தூரி எருதுகளின் வாழிடமாகும்.[2] இருபதாம் நூற்றாண்டின் 70 களின் நடுப்பகுதியில், முன்னர் இங்கு வாழ்ந்த எருதுளை மீண்டும் இயற்கையுடன் பழக்கப்படுத்துவது பற்றிய ஒரு சோதனை தைமீரில் தொடங்கியது. அச்சோதனை வெற்றிபெற்றதன் விளைவாக 1975 இல் கத்தூரி எருதுகள் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டன.[3] 2002 ஆம் ஆண்டில் அவற்றின் எண்ணிக்கை 2,500 விலங்குகளாகப் பெருகியது, 2010 இல் 6,500 ஆக அதிகரித்தது.[4] 2012 ஆம் ஆண்டில், சில மதிப்பீடுகளின்படி, தைமீர் தூந்திராவில் சுமார் 8 ஆயிரம் கஸ்தூரி எருதுகள் இருந்தன.[5]
தைமீர் மூவலந்தீவு எர்மைன் கீரி, ஆர்க்டிக் ஓநாய், கறுநிறமான்கள், ஆர்க்டிக் நரி, கடற்கரையில் துருவக் கரடி போன்ற விலங்குகள்; வாத்துக்கள், மீன்கொத்திகள், கர்மரண்ட்ஸ், பார்ட்ரிட்ஜ்கள், துருவ ஆந்தைகள், பருந்துகள் போன்ற பறவைகள்; வெண்மீன், ஸ்டர்ஜன், கிரேலிங், தைமென் போன்ற மீன்கள் போன்ற பல்வேறு வகையான விலங்கினங்களைக் கொண்டுள்ளது. வடக்கின் பழங்குடி மக்களின் கால்நடைப் பண்பாட்டின் அடிப்படையான துருவ மான்களும், சுபுக் எனப்படும்பெருங்கொம்பு ஆடுகளும் இங்கு வாழ்கின்றன. தைமீர் கடல்களில் சீல்கள், கடல் முயல், வால்ரஸ்கள் மற்றும் வெள்ளைத் திமிங்கிலங்கள் உள்ளன.
காலநிலை[தொகு]
தைமீர் மூவலந்தீவு ஆர்க்டிக் மற்றும் துணை ஆர்க்டிக் மண்டலங்களில் அமைந்துள்ளது, இது உள்ளூர் காலநிலையின் தீவிரத்தை தீர்மானிக்கிறது. வடகிழக்கில் லாப்டேவ் கடலின் கரையில். மூவலந்தீவின் உட்புறத்தில் உள்ள காலநிலை கண்டக் காலநிலையாகும். தைமீர் நீண்ட குளிர்காலம் மற்றும் குறுகிய குளிர்கொண்ட கோடைகாலங்களைக் கொண்டதாக வகைப்படுத்தப்படுகிறது. ஆண்டின் பெரும்பகுதி, சராசரியாக செப்டம்பர் மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில், கடலோரப்பகுதிகள் உறைந்திருக்கும். பலத்த காற்று எப்போதும் வீசும், சில நேரங்களில் பல வாரங்கள் வரை நீடிக்கும் பனிப்புயல் என்பது அடிக்கடி ஏற்படும் நிகழ்வாகும்.
தைமீர் மூவலந்தீவு, தூந்திரா, களி மற்றும் ஆர்க்டிக் மணல்களைக் கொண்டுள்ளது. தைமீரின் நிலப்பரப்பு, நிலத்தடி உறைபனி மண்டலத்திற்கு உரித்தானது. தைமீரில் மிகக் குறைந்த வெப்பநிலையான −62 °C கிரேமியாக் மற்றும் இமாங்டேவில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
மூவலந்தீவின் தீவிர வடக்குப்புள்ளியான செல்யூஷ்கின் முனையின், சராசரி ஆண்டு வெப்பநிலை −14.5 °C, ஜனவரி மாத சராசரி வெப்பநிலை −28.2 °C, ஜூலை +1.4 °C, மற்றும் முழுமையான குறைந்தபட்ச வெப்பநிலை −48.8 °C ஆகும்.[6] டுடீன்காவில், சராசரி வெப்பநிலை முறையே: −9.4 °C; −26.8 °C; +13.8 °C, முழுமையான குறைந்தபட்ச வெப்பநிலை −56.1 °C டிகிரி ஆகும். கட்டங்காவில்: −12.4 °C; −31.5 °C; +12.5 °C, முழுமையான குறைந்தபட்ச வெப்பநிலை −59 °C ஆகும்.
பெரும்பாலான மழைப்பொழிவு கோடையில் நிகழும். கோடையில், வடகிழக்கு காற்றும் குளிர்காலத்தில் தென்கிழக்குக் காற்றும் வீசும். பல அட்லாண்டிக் சூறாவளிகள் தைமீரில் வலுவிழந்து முடிவடைகின்றன, அதனால் இந்தப்பகுதி பெரும் சூறாவளிகளின் கல்லறை என்று அழைக்கப்படுகிறது.
மக்கள்[தொகு]

சமோயீடுகள் என்று அறியப்படும் நெனெத் மக்கள், வடக்கு ஆர்க்டிக் ரஷ்யாவில் ஒரு பழங்குடி மக்கள் ஆவர். தைமீர் மூவலந்தீவு உட்பட மையச்சைபீரியாவில் வாழும் பழங்குடி சமோயெடிக் மக்களான ஙானாசன் மக்களில் சிலர் தைமீர் மூவலந்தீவில் வாழ்கின்றனர். ரஷ்ய கூட்டமைப்பில், அவர்கள் ரஷ்ய வடக்கின் பழங்குடி மக்களில் ஒருவராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் முதன்மையாக கிரஸ்னயோர்ஸ்க் மாகாணத்தின் தைமீர்ஸ்கி டோல்கனோ-நெனெட்ஸ்கி மாவட்டத்தில் உள்ள ஊஸ்ட்-அவாம், வோலச்சன்கா மற்றும் நோவயா ஆகிய குடியிருப்புகளில் வாழ்கின்றனர், சிறிய அளவில் மக்கள் துடீன்கா மற்றும் நோரில்ஸ்க் நகரங்களில் வாழ்கின்றனர். ஙானாசன் மக்களின் தனிமைப்படுத்தப்பட்ட இடம், இருபதாம் நூற்றாண்டிலும் அவர்கள் ஷாமனிய வாழ்கைமுறைகளை கடைபிடிக்க உதவுகிறது.
மூவலந்தீவில் நகரங்கள் இல்லை. அருகிலுள்ள நகரம் நோரில்ஸ்க் மாவட்டத்தில் உள்ள தல்நாக், இது தெற்கே அமைந்துள்ளது. மொத்த எண்ணிக்கை ஐந்தாயிரம் பேருக்கு மிகாமல் உள்ள மக்கள் பெரும்பாலும் சிற்றூர்கள் மற்றும் நகரியக் குடியிருப்புகளில் வாழ்கின்றனர்.
பின்வரும் குடியேற்றங்கள் மூவலந்தீவில் அமைந்துள்ளன: டிக்சோன், கரவூல், வொரன்ட்சோவொ, ஊஸ்ட்-அவாம், பைகாலவ்ஸ்க், முங்குய் மற்றும் ஊஸ்ட்-போர்ட். மூவலந்தீவில் முக்கியமாக கைவிடப்பட்ட குடியேற்றங்கள் யெனிசேய் வளைகுடாவின் கரையின் மேற்கில் அமைந்துள்ளன. துருவ மற்றும் வானிலை நிலையங்கள் செல்யூஷ்கினின் ஸ்தெர்லேகவாவில் உள்ளன.
பொருளாதாரம்[தொகு]

எம். எம். சி நோரில்ஸ்க் நிக்கல் இப்பகுதியில் சுரங்க நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது. இந்நிறுவனம் மூவலந்தீவிற்கு அருகிலுள்ள நோரில்ஸ்க் நகரின் பகுதியில் நிக்கல் உருக்காலை நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. நிறுவனத்தின் நிக்கல் தாதுச் செறிவு மற்றும் பிற தயாரிப்புகள் ஒரு குறுகிய இரயில் பாதை வழியாக யெனிசேய் ஆற்றிலுள்ள துறைமுக நகரமான டுடீன்காவுக்கும், பிறகு அங்கிருந்து படகு மூலம் மூர்மன்ஸ்க் மற்றும் பிற துறைமுகங்களுக்கும் கொண்டு செல்லப்படுகின்றன.
மேலும் காண்க[தொகு]
சான்றுகள்[தொகு]
- ↑ Таймыр. Archived from the original on 2012-07-19. https://archive.today/20120719131342/http://slovari.yandex.ru/~%D0%BA%D0%BD%D0%B8%D0%B3%D0%B8/%D0%91%D0%A1%D0%AD/%D0%A2%D0%B0%D0%B9%D0%BC%D1%8B%D1%80%20(%D0%BF%D0%BE%D0%BB%D1%83%D0%BE%D1%81%D1%82%D1%80%D0%BE%D0%B2)/. பார்த்த நாள்: 2022-04-21.
- ↑ BioMed Central (6 October 2005). "Muskox Suffered Loss Of Genetic Diversity At Pleistocene/Holocene Transition" – Science Daily வழியாக.
- ↑ "Greenland Muskox". Bovids. Safari Club International. 2007-09-27 அன்று மூலம் பரணிடப்பட்டது.
- ↑ Dr. Taras Sipko. "Reintroduction of Musk Ox in the Northern Russia". Large Herbivore Network. 2015-09-05 அன்று மூலம் பரணிடப்பட்டது.
- ↑ Численность арктических овцебыков в РФ за 40 лет выросла в тысячу раз
- ↑ "Climate Data for Mys Chelyuskin". World climate Guide. April 1, 2012 அன்று பார்க்கப்பட்டது.
நூற்கருவிகள்[தொகு]
- Hoppál, Mihály (2005) (in Hungarian). Sámánok Eurázsiában.. Budapest: Akadémiai Kiadó. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9630582953. (The title means “Shamans in Eurasia”, the book is written in Hungarian, but it is published also in German, Estonian and Finnish: Site of publisher with short description on the book (in Hungarian) பரணிடப்பட்டது 2010-01-02 at the வந்தவழி இயந்திரம்.)