தேவயானி கோபர்கடே சம்பவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தேவயானி கோபர்கடே சம்பவம் (Devyani Khobragade incident) என்பது இந்தியாவின் அமெரிக்காவுக்கான துணைத் தூதராவார் ஐக்கிய அமெரிக்க அதிகாரிகளினால் நுழைவாணை மோசடி, அமெரிக்காவுக்குள் உள்நுளையவைக்க பொய்க்கூற்றுக்கள் கூறியமை ஆகியவை தொடர்பாக குற்றம்சாட்டப்பட்டு, கைதுசெய்யப்பட்டு வழக்குத் தொடரப்பட்ட நிகழ்வையும், அது சார்ந்து இந்திய அரசு எடுத்த பதில் நடவடிக்கைகளையும் குறிக்கிறது.

பின்புலம்[தொகு]

மும்பையில் பிறந்து வளர்ந்த தேவயானி மவுண்ட் கார்மல் பள்ளியில் படித்து சேத் ஜி எஸ் மருத்துவக் கல்லூரியில் மருத்துவர் பட்டம் பெற்றார். 1999-ம் ஆண்டு இந்திய அரசில் வெளியுறவுத்துறையில் துணைத் தூதுவராக பணியில் சேர்ந்தார். தேவயானி கோப்ரகடேயின் தந்தை உத்தம் கோப்ரகடே மகாராஷ்டிரா மாநில இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர். பாகிஸ்தான், இத்தாலி, ஜெர்மனி நாடுகளில் இந்திய தூதரகங்களின் அரசியல் பிரிவில் பணியாற்றிய பிறகு, 2012-ம் ஆண்டு நியூயார்க்கில் இந்திய தூதரகத்தின் அரசியல், பொருளாதாரம், வணிகம் மற்றும் பெண்கள் விவகாரங்களுக்கான துணைத் துணைத் தூதுவராக நியமிக்கப்பட்டார்.

தன் வீட்டு வேலைகள் செய்வதற்காக ஒரு பணிப்பெண்ணை தேட ஆரம்பித்திருக்கிறார் தேவயானி. சங்கீதா ரிச்சர்ட் என்ற பெண் மும்பையில் உள்ள தேவயானியின் வீட்டில் அவரை சந்தித்திருக்கிறார். அமெரிக்காவில் தனது வீட்டில் தங்கி குழந்தைகளை பார்த்துக் கொள்ளவும், வீட்டு வேலைகள் செய்யவும் ஆள் தேடிக் கொண்டிருப்பதாகவும் ரூ 25,000 சம்பளமும், ரூ 5,000 கூடுதல் நேர ஊதியமாகவும் தருவதாக சொல்லியிருக்கிறார்.[1] தூதரக கடவுச் சீட்டு பெறப் போவதாக சொல்லி சங்கீதாவிற்கு சாதாரண இந்திய கடவுச் சீட்டை தேவயானி வாங்கிக் கொடுத்துள்ளார்.[2] அமெரிக்க அரசின் பணி ஒப்பந்தத்தின் அடிப்படையில், நவம்பர் 14, 2012 அன்று நடந்த நேர்முகத் தேர்வின் போது அமெரிக்க தூதரகம் சங்கீதாவுக்கு விசா வழங்கியிருக்கிறது.[3]

நவம்பர் 24-ம் தேதி தேவயானியும், சங்கீதாவும் நியூயார்க் போய் சேர்கின்றனர். நவம்பர் முதல் ஜூன் வரை தேவயானியின் வீட்டில் வேலை செய்த சங்கீதா ஒரு வாரத்திற்கு 40 மணி நேர பணி என்ற வரம்பை விட அதிக நேரம் வேலை (ஒரு நாளுக்கு 18 மணி நேரம் வரை) செய்திருக்கிறார். சங்கீதாவுக்கு ஒத்துக் கொண்ட ஊதியம் ரூ 30,000-ஐ விட குறைவாகவே கொடுக்கப்பட்டிருக்கிறது. நாட்கள் செல்லச் செல்ல வேலைச் சுமையும், எதிர்பார்த்த ஊதியம் கிடைக்காதது சங்கீதாவுக்கு அதிக மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.[4]

மன உளைச்சல் காரணமாக 2013, ஜூன் மாதம் பொருட்கள் வாங்க கடைக்குப் போன சங்கீதா தேவயானியின் வீட்டுக்குத் திரும்பவில்லை. ஜூலை 8-ம் தேதி சங்கீதா நியூயார்க்கின் மன்ஹாட்டனில் உள்ள ஒரு குடியேற்றங்கள் தொடர்பான வழக்கறிஞரின் அலுவலகத்துக்குப் போயிருக்கிறார். அதைத் தொடர்ந்து இந்திய தூதரகத்திலிருந்து 4 அதிகாரிகள் அங்கு போய் சேர்ந்திருக்கின்றனர். அங்கு நடந்த பேச்சு வார்த்தையின் போது தான் செய்த வேலைக்கான சம்பளமாக ஒரு தொகையையும், தனது சாதாரண இந்திய கடவுச் சீட்டை தந்து விடும்படி சங்கீதா கோரிக்கை வைத்துள்ளார்.

கைது[தொகு]

12 திசம்பர் 2013 அன்று தேவயானி கோபர்கடே தனது குழந்தைகளை பள்ளிக்கூடத்தில் விடும்போது அமெரிக்க மைய்ய அரசின் காவலர்களால் கைது செய்யப்பட்டார். கைதுசெய்யப்பட்ட தேவயானி கோபர்கடே துணைத்தூதருக்குறிய விதிவிலக்குகளும் சலுகைளும் அளிக்கப்படாமல் சிறையிலிடப்பட்டதாகவும், உடைகளை முற்றிலும் களைந்து சோதனை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.[5] இந்த நிகழ்வு இந்திய-அமெரிக்க உறவில் பெரும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அரசியல்வாதிகள் பலரும் இதற்கு தமது கண்டனங்களை வெளியிட்டனர்[6][7].

இதேவேளை தேவயானி கோபரகடே தனக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்து, நுழைவாணை மோசடியில் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. தேவயானி கோபர்கடே தனது வீட்டிற்காக ஒரு பணிபெண்ணை அமர்த்தி அவரிற்கு 4500 அமெரிக்க டாலர்களை மாதம் வழங்குவதாகத் தெரிவித்தார். ஆயினும் உண்மையில் 573 டாலர்களையே செலுத்தியுள்ளார்[8]. இவ்வாறு அமெரிக்க அரசிற்கு பொய்க் கணக்கு காட்டியமை ஒரு தீவிரமான தவறு என்று அமெரிக்கா கூறியுள்ளது.[9] அத்துடன் இத்தகைய பிழை செய்பவர்களுக்கு அமெரிக்காவில் 15 வருடங்கள் சிறைத் தண்டனை கிடைக்கலாம் என்பதும் குறிப்பித்தக்கது. அமெரிக்க வெளியுறவுத் துறை அதிகாரி இது தொடர்பாக தாங்கள் ஆய்வு நடத்துவதாக அறிவித்துள்ளார்[10]. ஆயினும் ஒரு தூதரக அதிகாரியை நடத்தவேண்டிய வரம்புகளை மீறி அமெரிக்க அதிகாரிகள் நடந்துள்ளதாக இந்திய அரசு குற்றம்சாட்டியுள்ளது. அத்துடன் இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளின் பல்வேறு சலுகைகளையும் இந்திய அரசு ரத்துச் செய்துள்ளது.

தற்போது தேவயானி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவில் அவருக்கு எதிராக வழக்குகளை நடத்த முடியாது என்று தேவயானியின் வழக்கறிஞர் டானியர் அர்ஷக் தெரிவித்துள்ளார். அத்துடன் தேவயானியை மறுபடியும் அமெரிக்க அரசு கைது செய்வதைத் தடுக்க அவரை நியூ யோர்க்கில் உள்ள ஐ.நா விற்கான இந்திய அரசின் தூதராக இந்திய அரசு நியமித்துள்ளது[11]. தில்லி, லூதியானா, போபால் போன்ற இடங்களில் பொது மக்கள் அமெரிக்க அதிகாரிகளுக்கு எதிராக ஆர்ப்பாடங்களை நடத்தினர்[12].

வழக்கு[தொகு]

அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மேரி ஹார்ப் வாஷிங்டனில் அளித்த பேட்டி ஒன்றில் தேவயானி கோப்ரகடே மீதான வழக்கை வாபஸ் பெறவோ, மன்னிப்பு கோரவோ மாட்டோம் என்று தனது அறிக்கையில் அவர் கூறியுள்ளார். [13] இந்திய அரசு தற்சமய ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தர தூதராக நியமனம் செய்ததால் நீதிமன்றத்தில் நேரில் கலந்துகொள்ளுவதிலிருந்து விலக்குஅளிக்கப்பட்டிள்ளது. [14]

குற்றப்பத்திரிக்கை (indictment)[தொகு]

அமெரிக்க நடுவண் சான்றாயர் (jury) குழு தேவயானி கோபர்கடே மீதான குற்றப்பத்திரிகையை ஏற்றுக் கொண்டுள்ளது. இவர் நீதிமன்றத்துக்கு சமூகம் அளிக்கும் வரையில் இவர் மீதான குற்றச்சாட்டுக்கள் நிலுவையில் இருக்கும்.[15]

இந்தியா திருப்பி அனுப்பப்படல்[தொகு]

இந்தியா திரும்பியமை பற்றிய அமெரிக்க அறிக்கை

அமெரிக்க அரசு தங்கள் நாட்டை விட்டு வெளியேறுமாறு கூறியதைத் தொடர்ந்து அமெரிக்காவில் இருந்து யுனைட்டெட் ஏர்லைன்ஸ் நிறுவன விமானம் மூலம் தில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை இரவு தேவயானி வந்து சேர்ந்தார்[16][17].[18]

சங்கீதாவின் நிலை[தொகு]

இச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவராகக் கருதப்படும் சங்கீதாவும் அவரது குடும்பவும் ஐக்கிய அமெரிக்க நீதித்துறைப் பாதுகாப்பில் உள்ளனர். அவர்கள் மீது இந்திய அரசு சட்ட நடவடிக்கைகள் எடுக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

பதில் நடவடிக்கைகள்[தொகு]

தேவயானியின் அறிக்கை[தொகு]

தேவயானியை அவரது குழந்தைகள் முன்பு அமெரிக்க காவல்துறையினர் கைது செய்ததாகவும், கை விலங்கு இட்டு அழைத்துச் சென்றதாகவும், போதை மருந்து பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டவர்களுடனும், பாலியல் குற்றவாளிகளுடனும் சேர்த்து தன்னையும் வைத்திருந்ததாகவும், நிர்வாணமாக்கி சோதனை செய்ததாகவும் தேவயானி குற்றம் சாட்டியிருக்கிறார். தனக்கு தூதரக ஊழியர்களுக்கான விதி விலக்கு இருப்பதாக பல முறை கூறியும் அமெரிக்க காவல்துறை அதிகாரிகள் அதற்கு செவி சாய்க்கவில்லை என்று தேவயானி அமெரிக்க அதிகாரிகள் மீது குற்றச்சாட்டுகள் கூறியிருக்கிறார்.

இந்திய அரசின் பதிலுரையும் நடவடிக்கைகளும்[தொகு]

இந்த நிகழ்வுக்கு காரணமாக இருந்த, சங்கீதா ரிச்சர்ட்ஸ் என்ற பெண்ணின் கணவர் மீது இந்தியா நீதிமன்றம் வழியாக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அமெரிக்காவிடம் இந்தியா தெரிவித்திருந்தும், அவருக்கு விசா வழங்கி கடந்த டிசம்பர் 10-ம் தேதி அவர் அமெரிக்காவிற்கு தப்பி செல்ல வழி வகை செய்ததன் மூலம், இந்தக் கைது நடவடிக்கை திட்டமிடப்பட்டதாகக் கருதுவதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது.[19]

தேவயானியை கைது செய்தது இந்தியர்களுக்கு இழைக்கப்பட்ட அவமானம் என்று இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகள் கருதினர். இந்நிலையில் இந்தியாவிற்கு வருகை புரிந்த அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களின் தூதுக்குழுவை சந்திப்பதற்கு நாடாளுமன்ற சபாநாயகர் மீரா குமார் மறுத்திருக்கிறார். காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியும், பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியும் அவர்களை பார்க்க மறுத்து விட்டிருக்கின்றனர்.

அமெரிக்காவில் இந்தியத் தூதர் நடத்தப்பட்டதற்கு பதிலடியாக இந்தியாவில் அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கான சிறப்பு சலுகைகளை ரத்து செய்திருக்கிறது இந்திய அரசு. அமெரிக்க தூதரக அதிகாரிகளும், அவர்களது குடும்பத்தினரும் சிறப்பு தூதரக அடையாள அட்டைகளை திரும்பக் கொடுத்து விடுமாறு உத்தரவிட்டுள்ளது. அமெரிக்க தூதரகங்கள் இறக்குமதி செய்யும் வெளிநாட்டு மதுவகைகள் இனிமேல் அனுமதிக்கப்படாது என்றும் அறிவித்திருக்கிறது. அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கான சிறப்பு விமான நிலைய அனுமதிச் சீட்டும் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.

அமெரிக்க தூதரகங்களில் பணி புரியும் இந்திய ஊழியர்கள், அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் இவற்றின் விபரங்களை கேட்டிருக்கிறது இந்திய நடுவண் அரசு. இந்தியாவில் உள்ள அமெரிக்க பள்ளிகளில் பணி புரியும் ஊழியர்களின் பட்டியலையும் கேட்டிருக்கிறது.

இந்நிலையில் தேவயானியை ஐ. நா., அவையில் இந்திய அரசின் நிரந்தர அதிகாரியாக பணி மாற்றம் செய்து இந்திய அரசு அணையிட்டுள்ளது.[20]இவ்வழக்கின் தொடர்பாக ஜனவரி, 2014ம் ஆண்டு 16ம் தேதிமுதல் அமெரிக்க தூதரங்களில் நடக்கும் வர்த்தக நடவடிக்கைகளை நிறுத்தவும், அமெரிக்க வாகனங்கள் விதிமுறை மீறலில் பிடிபட்டால் அபராதம் விதிக்கப்படும் எனவும் இந்தியா உத்தரவு பிறப்பித்துள்ளது.[21]

தேவயானியை வியன்னா உடன்படிக்கையின்படி தூதராக கருதப்பட்டு கைது செய்திருக்கக் கூடாது என்கிறது இந்திய அரசு. வெளிநாட்டு தூதரக நடவடிக்கைகள் வியன்னா உடன்படிக்கையில் வரும்.[22] இந்திய தூதர் தேவயானியை கைவிலங்கு இட்டது, நிர்வாண சோதனை செய்தது போன்ற செயல் வியன்னா உடன்படிக்கைக்கு எதிரானது என்று இந்திய அரசு குற்றம் சாட்டியுள்ளது.

அமெரிக்க அரசு வழக்கறிஞர் பிரீத் பராரா அறிக்கை[தொகு]

நியூயார்க் நகர நீதித் துறை அரசு வழக்கறிஞர் பிரீத் பராரா (இந்திய வம்சவழி அமெரிக்கர்), “தேவயானி குழந்தைகள் முன்பு கைது செய்யப்படவில்லை என்றும் அவருக்கு கை விலங்கு இடப்படவில்லை என்றும் அவரது தொலைபேசி கைப்பற்றப்படவில்லை என்றும் சுமார் இரண்டு மணி நேரத்துக்கு பல இடங்களுக்கு தொலைபேசியில் தொடர்பு கொள்ள காவல்துறையினர் அனுமதித்திருக்கின்றனர் என்று தனது அறிக்கை விடுத்துள்ளார்.

தேவயானியை அவரது காரிலே அமர வைத்து தொலைபேசி அழைப்புகளை செய்ய ஏற்பாடு செய்த காவலர்கள், அவருக்கு காபி கொண்டு கொடுத்ததுடன், சாப்பிடுவதற்கான உணவும் வாங்கித் தருவதாக கூறியிருக்கின்றனர். அமெரிக்க காவல்துறை நடைமுறையின்படி தேவயானி தனி அறையில் ஒரு பெண் அதிகாரியால் முழுமையாக சோதனை செய்யப்பட்டார். தனக்கோ, சக கைதிகளுக்கு ஊறு விளைவிக்கும்படியான எந்த பொருளையும் உடலில் மறைத்து வைத்திருக்கக் கூடாது என்பதை உறுதிப்படுத்தும் விதமாக இந்த சோதனை செய்யப்பட்டது” என்று அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.[23]

வழக்கு தள்ளுபடி[தொகு]

14.03.2014ம் ஆண்டு தேவயானி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த வழக்கில் கூறப்பட்டுள்ள 14 பக்கங்கள் கொண்ட தீர்ப்பில், 'இவர் ஜனவரி மாதம் 8ம் தேதி 5.47 நிமிடங்களுக்கு முழு பாதுகாப்பு பெற்றுள்ளார். ஆனால் இவர் மீது ஜனவரி 9ம் தேதி குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் இவர் மீது விசா மோசடி குற்றச்சாட்டு பதிய முகாந்திரம் இல்லை. ஆகையால் இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது' என்று கூறப்பட்டுள்ளது. [24]

புதிய வழக்கு பதிவு[தொகு]

தேவயானி கோபர்கடே மீது ஏற்கனவே தொடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் அமெரிக்க நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், மீண்டும் அவர் மீது அமெரிக்க அரசு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது [25]

நாடாளுமன்ற விவாதம்[தொகு]

வெளி நாடுகளில் இவரைப்போன்ற தூதுவர்களுக்கு நேர்ந்த துயர சம்பவங்கள் பற்றி பேசப்பட்டது. ஸ்லோவேனியா, ருமேனியா, அல்பேனியா போன்ற நாடுகளில் இந்தியாவின் சார்பாக இருந்த தூதுவர்களுக்கு நேர்ந்த சம்பவமங்கள் பற்றிப்பேசப்பட்டது. [26]

மேற்கோள்கள்[தொகு]

 1. வழக்கு வாபஸ் இல்லை: அமெரிக்கா திட்டவட்டம்
 2. கண்காணிக்கும் பட்டியலில் தேவயானி பெயர்: அமெரிக்கா
 3. கண்காணிக்கும் பட்டியலில் தேவயானி பெயர்: அமெரிக்கா
 4. வழக்கு: அமெரிக்காவின் அதிகாரபூர்வ பதிலுக்குக் காத்திருக்கிறோம்'
 5. "Devyani Khobragade incident: Both sides of the story". சிஎன்என் ஐபின். மூல முகவரியிலிருந்து 2013-12-20 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 18 திசம்பர் 2013.
 6. "இந்திய துணைத் தூதர் நடத்தப்பட்ட விதம் வருத்தத்துக்குரியது: மன்மோகன்சிங்" (18 திசம்பர் 2013). பார்த்த நாள் 18 திசம்பர் 2013.[தொடர்பிழந்த இணைப்பு]
 7. "வெளியுறவுக் கொள்கைகளில் மறு ஆய்வு: கனிமொழி வலியுறுத்தல்". விகடன்.காம் (18 திசம்பர் 2013). பார்த்த நாள் 18 திசம்பர் 2013.[தொடர்பிழந்த இணைப்பு]
 8. "தூதரக அதிகாரிக்கு கைவிலங்கு: யு.எஸ். தூதரக அதிகாரியிடம் இந்தியா கண்டனம்!". விகடன்.காம் (13 திசம்பர் 2013). பார்த்த நாள் 18 திசம்பர் 2013.[தொடர்பிழந்த இணைப்பு]
 9. "தவறு தவறு தானே - தலையங்கம்". தினமணி. பார்த்த நாள் 18 திசம்பர் 2013.
 10. "இந்திய துணைத்தூதர் கைது குறித்து ஆய்வு: அமெரிக்கா சொல்கிறது". விகடன்.காம் (18 திசம்பர் 2013). பார்த்த நாள் 18 திசம்பர் 2013.[தொடர்பிழந்த இணைப்பு]
 11. "இந்திய தூதரை மீண்டும் கைது செய்யும் யு.எஸ். திட்டம் முறியடிப்பு; ஐ.நா. பணிக்கு மாற்றம்!". விகடன்.காம் (18 திசம்பர் 2013). பார்த்த நாள் 18 திசம்பர் 2013.[தொடர்பிழந்த இணைப்பு]
 12. "அமெரிக்க தூதரகங்கள் முன் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்!". விகடன்.காம் (18 திசம்பர் 2013). பார்த்த நாள் 18 திசம்பர் 2013.[தொடர்பிழந்த இணைப்பு]
 13. விவகாரம்: மன்னிப்பு கோரவோ, வழக்கை வாபஸ் பெறவோ முடியாது - அமெரிக்கா
 14. மோசடி வழக்கு: நீதிமன்றத்தில் ஆஜராவதில் தேவயானிக்கு விலக்கு
 15. Devyani Khobragade, indicted India diplomat, flies home from U.S.
 16. "நாடு திரும்பினார் தேவயானி". தினமணி. பார்த்த நாள் 11 சனவரி 2014.
 17. "Indian diplomat Devyani Khobragade thanks India, reunites with family in India; father Uttam says she is fine and not depressed Read more at: http://indiatoday.intoday.in/story/devyani-khobragade-reaches-india-from-us-visa-fraud-case-sangeeta-richard/1/335550.html". IndiaToday Read more at: http://indiatoday.intoday.in/story/devyani-khobragade-reaches-india-from-us-visa-fraud-case-sangeeta-richard/1/335550.html.+பார்த்த நாள் 11 சனவரி 2014.
 18. விசா மோசடி: இந்தியா திரும்பினார் தேவயானி
 19. "தேவயானி கைது --- மன்மோஹன் சிங் கண்டனம்". பி பி சி. பார்த்த நாள் 18 திசம்பர் 2013.
 20. http://www.thehindu.com/news/national/devyani-posted-to-un-for-full-immunity/article5474522.ece
 21. விவகாரம்: அமெரிக்காவுக்கு இந்தியா புதிய கட்டுப்பாடு
 22. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". மூல முகவரியிலிருந்து 2013-11-02 அன்று பரணிடப்பட்டது.
 23. "தேவயானி கோப்ரகடே ஒரு அசல் குற்றவாளி". tamil.webdunia. பார்த்த நாள் 23 திசம்பர் 2013.
 24. மீதான விசா மோசடி குற்றச்சாட்டு தள்ளுபடி: அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு
 25. கோபரகடே மீது புதிய வழக்கு பதிவு http://www.bbc.co.uk/tamil/global/2014/03/140314_devyanicharged.shtml
 26. நாடாளுமன்ற துளிகள்: தேவயானி கோப்ரகடே விவகாரத்தில் பேச்சு

வெளி இணைப்புகள்[தொகு]