தேடியதேட்டம் (தேசவழமை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வட இலங்கையின் மரபுவழிச் சட்டமான தேசவழமையின்படி 'தேடியதேட்டம் என்பது, ஒரு ஆணும், ஒரு பெண்ணும் மணம் புரிந்து கொண்டு ஒன்றாக வாழும் காலத்தில் கணவனோ, மனைவியோ சம்பாதித்த சொத்துக்களைக் குறிக்கும். தேசவழமை, இத்தகைய சொத்துக்களை, குறித்த ஆணுக்கோ, பெண்ணுக்கோ அவர்களது முன்னோரிடமிருந்து வரும் சொத்துக்களிலிருந்து வேறுபடுத்துகிறது. இவ்வாறு ஆணுக்கு வரும் சொத்தை முதுசொம் எனவும், பெண்ணுக்கு வரும் சொத்தை சீதனம் எனவும் தேசவழமை குறிப்பிடுகிறது.[1]

பழைய வழக்கின்படி பெண் கொண்டுவந்த சொத்து அவர்களில் பெண் பிள்ளைகளுக்கும் அவர்கள் வழி வரும் பெண் வாரிசுகளுக்கும் மட்டுமே உரியது. அது போலவே ஆண் கொண்டுவரும் சொத்துக்கு அவர்களுடையை ஆண் பிள்ளைகளும் அவர்களது ஆண் வாரிசுகளுமே உரித்து உடையவர்கள். ஆனால், தேடியதேட்டத்தில் இரு பாலாருக்குமே சம பங்கு உண்டு. ஆனாலும், பெண் பிள்ளைகளுக்குச் சற்றுக் கூடிய பங்கு கொடுப்பதற்கு ஆண் பிள்ளைகள் எப்போதும் சம்மதிக்க வேண்டும் என்கிறது தேசவழமை.

வரைவிலக்கணங்கள்[தொகு]

தேசவழமை கூறும் தேடியதேட்டம் என்பதற்குப் பல வரைவிலக்கணங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. 1911 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட "யாழ்ப்பாண திருமண வாழ்க்கை உரிமைகள் மற்றும் மரபு வாரிசுரிமைச் சட்டம்" இதைப் பின்வருமாறு வரையறுக்கிறது:

1. ஒன்றாக வாழும் காலத்தில் கணவன் அல்லது மனைவி பெறுமதியான விலை கொடுத்துப் பெற்றுக்கொண்ட சொத்து.
2. ஒன்றாக வாழும் காலத்தில் கணவன் அல்லது மனைவியின் சொத்திலிருந்து கிடைக்கும் இலாபம்.

ஆனால், 1947 ஆம் ஆண்டின் 58 ஆம் இலக்கச் சட்டமான யாழ்ப்பாண திருமண வாழ்க்கை உரிமைகள் மற்றும் மரபு வாரிசுரிமைத் திருத்தச் சட்டம், இதை எதிர்மறையான முறையில் வரையறுக்கிறது. இதன்படி, ஒன்றாக வாழும் காலத்தில் வாழ்க்கைத்துணை ஒருவரின் தனியான சொத்தையோ அதன் ஒரு பகுதியையோ பயன்படுத்தாமல், பெற்றுக்கொள்ளப்பட்ட சொத்தையும், அக்காலத்தில் குறிப்பிட்ட வாழ்க்கைத் துணைவரின் சொத்திலிருந்து கிடைக்கும் இலாபத்தையும் தவிர்த்த எதுவும் தேடியதேட்டமாகக் கொள்ளப்படமாட்டாது.

தேசவழமையின்படி, ஒன்றாக வாழும் காலத்தில் கணவன் அல்லது மனைவியின் தனியான சொத்துக்களை விற்று வாங்கிய சொத்துக்களையும் தேடியதேட்டமாகக் கருதமுடியும். ஆனால், 1947 ஆம் ஆண்டின் திருத்தச் சட்டத்தின் மூலம் இவ்வாறு வாங்கப்பட்ட சொத்துக்கள் தேடியதேட்டத்துள் சேராது என்பது தெளிவாக்கப்பட்டுள்ளது.

அடிக்குறிப்புகள்[தொகு]

  1. பத்மநாதன், சி., இலங்கைத் தமிழர் தேச வழமைகளும் சமூக வழமைகளும், குமரன் புத்தக இல்லம், கொழும்பு, 2002. பக். 85.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேடியதேட்டம்_(தேசவழமை)&oldid=1447682" இலிருந்து மீள்விக்கப்பட்டது