உள்ளடக்கத்துக்குச் செல்

தேசிய முதியோர் நல மருத்துவ மையம், கிண்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தேசிய முதியோர் நல மருத்துவ மையம், சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ளது. இதனை இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி 25 பிப்ரவரி 2024 அன்று காணொளி மூலம் திறந்து வைத்தார்.[1][2] இம்மருத்துவ மையம் மூத்த குடிமக்களின் நலனுக்காக செயல்படும் சிறப்பு மருத்துவமனை ஆகும். தேசிய முதியோர் நல மருத்துவ மையத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட 276 பணியாளர்கள் உள்ளனர்.

பின்னணி

[தொகு]

இந்திய அரசின் 2014-2015-ஆம் ஆண்டிற்கான வரவு-செலவு திட்ட உரையின் போது சென்னையில் தேசிய முதியோர் நல மருத்துவமனை நிறுவப்படும் என்ற அறிவிப்பு வெளியானது. அதன் அடிப்படையில், 2016-ஆம் ஆண்டு கிண்டி கிங் நோய்த் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில், முதியோர் நல மருத்துவ மையம் நிறுவுவதற்கான செலவில் இந்திய அரசின் பங்கு 60%, தமிழ்நாடு அரசின் பங்கு 40% என்கிற அடிப்படையில் இந்திய ரூபாய் 313.60 கோடி மதிப்பில் இம்மருத்துவமனை நிறுவப்பட்டது.

இம்மையத்திற்கான கட்டுமானப் பணியை 2016-ஆம் ஆண்டு தொடங்கி 2019-ஆம் ஆண்டு முடித்தனர். இருப்பினும், உடனடிப் பயன்பாட்டிற்கு வராமல் இருந்த நிலையில், 2020-ஆம் ஆண்டு ஏற்பட்ட கரோனா பெருந்தொற்று காரணமாக அவசரகால மருத்துவமனையாக திறக்கப்பட்டு செயல்பட்டு வந்தது. பின்னர், 2022-ஆம் ஆண்டு மே மாதம் கரோனா பெருந்தொற்று மருத்துவமனை செயல்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டது.

வழங்கப்படும் சிகிச்சைகள் மற்றும் ஆராய்ச்சி

[தொகு]
  1. புறநோயாளிகள் பிரிவு
  2. எலும்பு, கண், காது, மூக்கு, தொண்டை, சிறுநீரக அறுவை சிகிச்சைகள்
  3. இதய மருத்துவம்
  4. சிறுநீரக மருத்துவம்
  5. எலும்பு தன்மையை உறுதிப்படுத்தல்
  6. எலும்பு தேய்மானம் சிகிச்சை
  7. சிறுநீர் கட்டுப்படுத்த முடியாத முதியவர்களுக்கு சிகிச்சை
  8. நாள்பட்ட வலி மற்றும் பிரச்சினைகளுக்கான சிகிச்சை
  9. மூளை நரம்பியல் சிகிச்சை
  10. அறிவுத்திறன் குறைபாடு சிகிச்சை
  11. மனநல மருத்துவம்
  12. இயன்முறை மருத்துவம்
  13. புனர்வாழ்வு மருத்துவம்
  14. சித்தா, யோகா, யுனானி, ஓமியோபதி மருத்துவ சிகிச்சைகள்

முதியோர் மருத்துவம் மட்டுமின்றி முதுமையியல், முதியோர் மருத்துவம் சார்ந்த ஆராய்ச்சிகளும் இந்த மருத்துவமனை மேற்கொள்கிறது.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Venkatesan,DIN (2024-02-25). "கிங்ஸ் மருத்துவமனை தேசிய முதியோர் மையத்தை காணொளியில் திறந்து வைத்தார் மோடி!". Dinamani. Retrieved 2025-04-23.
  2. "சென்னை கிண்டியில் கட்டப்பட்டுள்ள தேசிய முதியோர் நல மருத்துவமனையை திறந்தார் பிரதமர் மோடி". Hindu Tamil Thisai. 2024-02-26. Retrieved 2025-04-23.
  3. "கிண்டி தேசிய முதியோர் நல மருத்துவமனையில் ஒரு மாதத்தில் 8,673 பேருக்கு சிகிச்சை". Hindu Tamil Thisai. 2024-03-30. Retrieved 2025-04-23.