தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு நாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு நாள் (National Cancer Awareness Day) புற்றுநோய் குறித்து இந்தியாவில் விழிப்புணர்வை ஏற்படுத்த தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு நாள் நவம்பர் மாதம் 7-ஆம் தேதி நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. உலகளவில் புகையிலை அதிகம் விற்பனை செய்யப்படும் நாடுகளில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. அதனால் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையிலும் இந்தியா தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. ஆனால், இந்தியா போன்ற நாடுகளில் புற்றுநோய் சிகிச்சை பற்றியும், நோயின் தாக்கத்தை பற்றியும் போதிய விழிப்புணர்வு இல்லை. எனவே இந்திய மக்களிடம் விழிப்புணர்வு உண்டாக்கும் நோக்கத்துடன் இந்நாள் அனுசரிக்கப்படுகிறது.[1]

புற்றுநோய்[தொகு]

உடலில் செல்களின் வளர்ச்சி மற்றும் இறப்பினை கட்டுப்படுத்தும் மரபணுக்களில் ஏற்படும் மாற்றங்களால் புற்றுநோய் ஏற்படுகிறது. தேவையற்ற பல புதிய செல்கள் தோன்றுவதாலும், பழைய செல்கள் இறக்காமல் இருந்தாலும், அவை ஒன்று சேர்ந்து புற்றுநோய்க் கட்டியாக மாறலாம். புற்றுநோய் உடலின் மற்ற பகுதிகளுக்கும் பரவும் தன்மை கொண்டதாகும்.[2]

புகைப்பழக்கம் அல்லது மாசு அதிகம் உள்ள காற்றை அதிகம் சுவாசிப்பதாலும் புற்றுநோய் தோன்றுகிறது. புகையிலை, குட்கா, பான்மசாலா போன்றவை உட்கொள்வதால் ஆண்களுக்கு வாய்ப்புற்றுநோய் வருகிறது. கார்சினோசன்கள் எனப்படும் ஒருவகையான புற்றுநோய் ஊக்கிகள்தான் நமது உடம்பில் புற்றுநோய் வருவதற்கு காரணமாக இருக்கின்றன. புகையிலையில் மட்டுமின்றி நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுப் பொருட்கள் வழியாகவும் இவை உடலுக்குள் நுழைகின்றன. செயற்கை வேதிப்பொருட்களான சோடியம் பென்சோயேட்டு, சோடியம் நைட்ரேட்டு ஆகியவை குழந்தைகளைப் பாதிக்கின்றன. பெரியவர்களுக்கு வயிற்றுப் புற்றுநோய் வரவும் இவை காரணமாகின்றன. மரபுவழி, உணவுப் பழக்கம், வாழ்க்கை முறை உள்ளிட்ட பல காரணிகள் ஒரு கட்டியை சாதாரண கட்டியா அல்லது புற்றுநோய்க்கான கட்டியா என்று தீர்மானிக்கின்றன. ஆரம்ப நிலையில் புற்றுநோய் நோய் கண்டறியப்பட்டால் நோயை குணப்படுத்துவதும், கட்டுப்படுத்துவதும் எளிதாகும். எந்த அளவுக்கு புற்றுநோய் பாதிப்பு, குணப்படுத்தும் சாத்தியம், சிக்கிச்சை பலனளிக்க எவ்வளவு காலமாகும் என்பதையெல்லாம் புற்றுநோயின் காலம்தான் முடிவு செய்யும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு நாள்". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2022-11-07.
  2. தினத்தந்தி (2021-11-08). "தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்". www.dailythanthi.com. பார்க்கப்பட்ட நாள் 2022-11-08.