தேசிய நீதி தரவு கட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்திய[தொடர்பிழந்த இணைப்பு] உச்ச நீதிமன்றம் லோகோ

தேசிய நீதி தரவு கட்டம் (என். ஜே. டி. ஜி)[1] (National Judicial Data Grid - NJDG) என்பது மின் நீதிமன்றங்களின் (ஈ-கோர்ட்ஸ்) ஒருங்கிணைந்த பணி பயன்முறை திட்டத்தின் ஒரு பகுதியாக தொடங்கப்பட்ட தரவுகளின் தகவல் சேமிப்பு அமைப்பகும். இது இந்தியாவின் அனைத்து மாவட்ட நீதிமன்றங்களையும் மற்றும் துணை பிரதேச நீதிமன்றங்களையும் உள்ளடக்கியது. இது, இந்திய நீதித்துறை[2] தகவல்களை கணினிமயமாக்குகிறது, பதிவு செய்கிறது மற்றும் வழக்கு பதிவு செய்யப்பட்ட நேரத்திலிருந்து தீர்ப்பளிக்கும் வரை வழக்குகளை கண்காணிக்கிறது.

நோக்கம்[தொகு]

தேசிய நீதி தரவு கட்டம் (என். ஜே. டி. ஜி) தொடங்கப்பட்டதன் நோகமானது மாவட்ட வாரியாக நிலுவையில் உள்ள வழக்குகளின் ஒருங்கிணைந்த புள்ளிவிவரங்கள் இப்போது ஒரு கிளிக்கில் இருக்கும் வகையில் இணைக்கப்பட்டுள்ளது.

பலன்கள்[தொகு]

நாட்டின் மாவட்ட நீதித்துறையில் நிலுவையில் உள்ள வழக்குகளின் ஒருங்கிணைந்த புள்ளிவிவரங்களை இந்த கட்டம் வழக்குரைஞர்களுக்கும் மற்றவர்களுக்கும் வழங்குகிறது. நீதி வழங்கல் அமைப்பில் உள்ள அனைத்து பங்குதாரர்களுக்கும் வெளிப்படைத்தன்மையையும் தகவலுக்கான அணுகலையும் ஊக்குவிக்கும் நோக்கில் இந்த கட்டம் உள்ளது.

இணைய முகப்பு[3][தொகு]

இந்திய[தொடர்பிழந்த இணைப்பு] உச்ச நீதிமன்றம்

தேசிய நீதி தரவு கட்டத்தின் பொது அணுகல் பக்கத்தை தேசிய மின் நீதிமன்றங்களின் இணைய முகப்பான ‘ecourts.gov.in’ இன் மூலம் அணுகலாம்.

வழக்கு தரவுகள்[தொகு]

தேசிய நீதி தரவு கட்டம் உருவாகப்படுவதற்கு முன்பாகவே வழக்குத் தகவல் அமைப்பு உருவாக்கப்பட்டு விட்டது. வழக்கு தகவல் அமைப்பு மூலமாக, ஒவ்வொரு நீதிமன்றத்திலிருந்தும் தரவேற்றம் செய்யப்படும் வழக்குகளின் தகவல்கள் தேசிய நீதி தரவு கட்டத்திற்கு வந்தடைகின்றன. அங்கிருந்து அவை பங்குதாரர்களுக்கு வழங்கப்படுகின்றன.

வழக்கு தகவல் அமைப்பு[4][தொகு]

ஒவ்வொரு நீதிமன்றத்திலிருந்தும் தரவேற்றம் செய்யப்படும் வழக்குகளின் தகவல்கள் தேசிய நீதி தரவு கட்டத்திற்கு வந்தடைகின்றன. அங்கிருந்து அவை பங்குதாரர்களுக்கு வழங்கப்படுகின்றன. இதற்கெனவே தனிப்பட்ட மென்பொருள் வழக்கு தகவல் அமைப்பு (Case Information System -- CIS) உருவாகப்பட்டுள்ளது. இது, இந்திய நீதிமன்றங்களுக்காக பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட ஒரு மென்பொருள் ஆகும்,நீதிமன்றங்களில் வழக்குகள் தாக்கல் செய்வதற்காக இந்திய உச்சநீதிமன்றம் அதன் ஈ-கமிட்டியின் வழிகாட்டுதலின் பேரில் புனேவில் உள்ள தேசிய தகவல் மையம் மூலமாக வழக்குத் தகவல் அமைப்பு CIS (சி. ஐ. எஸ்) உருவாக்கப்பட்டுள்ளது.

வழக்குத் தகவல் அமைப்பு CIS (சி. ஐ. எஸ்) மென்பொருளைப் பயன்படுத்துவதன் மூலம், இந்தியாவில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் வழக்குகள் தாக்கல் செய்தல், வழக்குகளை ஆய்வு செய்தல், வழக்குகளை பதிவு செய்தல், வழக்குகளை ஒதுக்கீடு செய்தல், வழக்கு விசாரணை தேதி பட்டியல் உருவாக்குதல் மற்றும் அனைத்து வழக்குகளின் உத்தரவுகள் அல்லது தீர்ப்புகளை இணைய போர்டலில் தரவு ஏற்றுதல் போன்ற அடிப்படை சேவைகளை வழங்க முடிகிறது. வழக்குத் தகவல் அமைப்பு CIS (சி.ஐ.எஸ்) ஸிற்கான தொழில்நுட்ப மற்றும் மேம்பாட்டு ஆதரவு தேசிய தகவல் மையத்தால் வழங்கப்படுகிறது.

மின் குழு (இந்திய உச்ச நீதிமன்றம்)[5][தொகு]

மின் குழு (இந்திய உச்ச நீதிமன்றம்) அல்லது ஈ-கமிட்டி (E-Committee) (இந்திய உச்ச நீதிமன்றம்) என்பது இந்தியாவில் உள்ள நீதிமன்றங்களை மின் நீதிமன்றங்களாக மாற்றும் திட்டத்தை மேற்பார்வையிடுவதற்கு ஏற்படுத்தப்பட்ட ஆளும் குழு ஆகும். நீதிமன்றங்களின் தகவல் மற்றும் தொடர்பு தொழில் நுட்பம் (Information and Communication Technology - ஐ. சி. டி) -ன் மூலமாக நாட்டின் நீதி அமைப்பை கால மாற்றத்திற்கேற்றார் போல் மாற்றுவதே இதன் நோக்கமாகும்.

மின் நீதிமன்றங்கள்[தொகு]

மின் நீதிமன்றங்கள் (E-Courts Services) மூலமான சேவைகள் என்பது இந்தியா அளவிலான நீதிமன்றங்களை மின்னணு சேவைகள் வழங்குவதற்கான ஒரு தேசிய திட்டமாகும். இந்திய உச்ச நீதிமன்றம் இத் திட்டத்திற்கென மின் குழு (இந்திய உச்ச நீதிமன்றம்) ஒன்றை அமைத்துள்ளது. இந்த திட்டமானது இந்திய நீதித்துறை, இந்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம், மற்றும் இந்திய அரசால் கண்காணிக்கப்படுகிறது. இந்தத் திட்டத்திற்கு இந்திய அரசாங்கம் நிதியளிக்கிறது.

மின்னணு முறையில் வழக்கு தாக்கல்[தொகு]

மின்னணு முறையில் வழக்கு தாக்கல் அல்லது மின்-தாக்கல் (E-Filing) என்பது இந்திய உச்ச நீதிமன்றத்தின் ஈ-கமிட்டியால் தொடங்கப்பட்ட புதிய மற்றும் எளிய முறையில் வழக்குகளை நிகழ்நிலை மூலமாக தாக்கல் செய்யும் முறையாகும். இந்திய உச்சநீதிமன்றத்தின் ஈ-கமிட்டியானது, மின்-தாக்கல் முறையைப் பயன்படுத்தி வழக்குகளைத் தாக்கல் செய்வதற்கான புதிய நடைமுறையினை வடிவமைத்துள்ளது. இது சட்ட ஆவணங்களை மின்னணு முறையில் மின் - தாக்கல் செய்ய உதவுகிறது. இந்த நடைமுறையைப் பின்பற்றி அனைத்து உயர் நீதிமன்றங்கள் மற்றும் கீழமை நீதிமன்றங்கள் முன்பாக நேரில் செல்லாமல் வழக்குகளைப் பதிவு செய்யலாம். இந்த மின்-தாக்கல் முறையானது, காகிதமில்லா தாக்கல் செய்வதை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டது. மேலும், இந்தியாவில் நீதிமன்றங்களில் வழக்குகளைத் தாக்கல் செய்வதற்கான தொழில்நுட்பத்தைப் பின்பற்றுவதன் மூலம் நேரத்தையும் செலவையும் சேமிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

மின்னணு செயல்முறையின் தேசிய சேவை மற்றும் கண்காணிப்பு[தொகு]

மின்னணு செயல்முறையின் தேசிய சேவை மற்றும் கண்காணிப்பு என்பது (ஆங்கில சுருக்கெழுத்து NSTEP) ஒரு இந்திய நீதிமன்றத்தின் அழைப்பாணை மற்றும் அறிவிப்புகளை விரைந்து வழங்கும் நடைமுறையாகும். இந்த புதிய நடைமுறையானது ஏற்கனவே இருந்து வந்த நடைமுறையினை விரைவாக செயல்படுத்தும் நோக்கத்தில் வழக்குத் தகவல் அமைப்பு (சி. ஐ. எஸ்) CIS மூலமாக கொண்டு வரப்பட்டுள்ளது.

வழக்குகள் நிர்வாகம்[தொகு]

வழக்குகளின் நிலுவையை அடையாளம் காணவும், நிர்வகிக்கவும் மற்றும் குறைக்கவும் ஒரு கண்காணிப்பு கருவியாக தேசிய நீதி தரவு கட்டம் செயல்படுகிறது. வழக்குகளின் விசாரணையில் தாமதம் மற்றும் நிலுவையில் உள்ள வழக்குகளை குறைப்பதற்கான கொள்கை முடிவுகளை சரியான நேரத்தில் எடுப்பதற்கான கணினி உள்ளீடுகளை வழங்கவும், நீதிமன்ற செயல்திறன் மற்றும் முறையான இடையூறுகளை நன்கு கண்காணிக்கவும், மேலும் சிறந்த வள நிர்வாகத்தை எளிதாக்கவும் தேசிய நீதி தரவு கட்டம் உதவுகிறது. சிறார் நீதி அமைப்பு தொடர்பான வழக்குகள் உட்பட அனைத்து வகை வழக்குகளையும் தேசிய நீதி தரவு கட்டம் (என். ஜே. டி. ஜி) உள்ளடக்கி உள்ளது.

நிலுவை வழக்குகள்[தொகு]

தற்போது, ​​மத்தியப் பிரதேசம் மற்றும் டெல்லி தவிர நாட்டின் அனைத்து உயர் நீதிமன்றங்களின் கீழ் மாவட்ட நீதித்துறையின் சுமார் 2.7 கோடி வழக்குகளில் 1.94 கோடி நிலுவையில் உள்ள வழக்குகள் பற்றிய தகவல்களை தேசிய நீதி தரவு கட்டம் (என். ஜே. டி. ஜி) கொண்டுள்ளது, அங்கு வழக்குத் தரவு மென்பொருள் மென்பொருளின் தேசிய பதிப்பிற்கு இடம்பெயர்ந்து வருகிறது. நீதிமன்றங்களை கணினிமயமாக்குவதன் முக்கிய நன்மைகளில் ஒன்று வழக்கு நிர்வாகத்தின் ஆட்டோமேஷன் ஆகும். மேலும், அனைத்து நீதிமன்றங்களும் ஒரு தேசிய நீதித்துறை தரவு கட்டத்தின் ஒரு பகுதியாக இணைக்கப்பட வேண்டும், இதன் விளைவாக ஒரு தேசிய அளவிலான நிலுவை கட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

குடிமக்கள் பயன்பாடு[தொகு]

ஒவ்வொரு நீதிமன்ற வளாகத்திலும் குடிமக்கள் நீதித்துறை சேவை மையம் மூலம் சேவைகளைப் பெற முடியும். வழக்குகளைத் தாக்கல் செய்தல், உத்தரவுகள் மற்றும் தீர்ப்புகளின் சான்றளிக்கப்பட்ட நகல்கள் கிடைப்பது, வழக்கு நிலை பற்றிய தகவல்கள் போன்றவை இதில் அடங்கும். கணினிமயமாக்கலில் ஆந்திரா மாநிலம் மற்ற மாநிலங்களை விட மிகவும் முன்னிலையில் உள்ளது. வழக்கு மேலாண்மை அமைப்பு என்பது ஒரு செயல்முறையாகும், இது கணிசமான சிக்கல்களை அடையாளம் காண்பதில் நீதி கட்டுப்பாட்டை அதிகரிக்கிறது மற்றும் வழக்குகளின் நடைமுறை நடவடிக்கைகளை முடிக்க தேவையான நேரத்தை மேம்படுத்துகிறது.

மேலும் காண்க[தொகு]

https://www.hindustantimes.com/india-news/3-7-million-cases-pending-in-courts-for-over-10-years-data/story-ytI7P0rm5Plwe5r8ubNVyJ.html

மேற்கோள்கள்[தொகு]

  1. "Welcome to NJDG - National Judicial Data Grid". njdg.ecourts.gov.in. 2021-01-14 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Home | SUPREME COURT OF INDIA". main.sci.gov.in. 2021-01-14 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Welcome to NJDG - National Judicial Data Grid". njdg.ecourts.gov.in. 2021-01-14 அன்று பார்க்கப்பட்டது.
  4. "Home - eCourt India Services". ecourts.gov.in. 2021-01-14 அன்று பார்க்கப்பட்டது.
  5. "Official Website of e-Committee, Supreme Court of India | India" (ஆங்கிலம்). 2021-01-14 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

https://indianexpress.com/article/opinion/the-unrealised-potential-of-judicial-data-7110258/