தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழுவின் சின்னம்

"தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு" (இந்தி:राष्ट्रीय शैक्षिक अनुसंधान और प्रशिक्षण परिषद, ஆங்கிலம்:National Council of Educational Research and Training-NCERT ) இந்தியாவில் தில்லியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் குழு ஆகும்.[1] இது மத்திய, மாநில அரசுகளுக்குக் கல்வி குறித்த ஆலோசனை மற்றும் உதவிகள் வழங்கும் குழுவாக செயல்பட்டு வருகிறது. இக்குழு 1961 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.

நிகர்நிலை பல்கலைக்கழகத் தகுதி[தொகு]

1 செப்டம் 2023 அன்று இந்நிறுவனத்திற்கு இந்திய அரசு நிகர்நிலைப் பல்கலைக்கழகத்திற்கான தகுதி வழங்கியுள்ளது.[2]

வரலாறு[தொகு]

இந்திய அரசின் கல்வி அமைச்சகம் 1961 சூலை 27 அன்று தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழுமம் ஒன்றை நிறுவுவது என தீர்மானித்தது. 1961 ஆம் ஆண்டு செப்டம்பர் 1 ஆம் நாள் இது முறையாக தனது செயல்பாட்டைத் தொடங்கியது. இந்தக் குழுமமானது கல்விக்கான மைய நிறுவனம், பாடநுால் ஆராய்ச்சிக்கான மைய நிறுவனம், இடைநிலைக் கல்வி மற்றும் விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கான இயக்குநரகம், அடிப்படைக் கல்விக்கான தேசிய நிறுவனம், தேசிய அடிப்படைக் கல்விக்கான மையம் மற்றும் தேசிய காட்சி-கேள்வி கல்விக்கான நிறுவனம் போன்ற ஏழு நிறுவனங்களை உள்ளடக்கி ஒருங்கிணைக்கப்பட்டு உருவான நிறுவனம் ஆகும்.[3] இது ஆசிரியர் கல்விக்கான தேசியக் குழுமத்திலிருந்து வேறுபட்டதாகும். தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமானது தேசிய அளவிலான கல்விக்கான பொதுவான அமைப்பினை வடிவமைத்தல், ஆதரித்தல் போன்ற நிலைப்பாடுகளுடன் நிறுவப்பட்டது. பொதுவான கல்வி அமைப்பு என்பது தேசியத்தின் பண்பைக் கொண்டதாகவும் அதே நேரத்தில் நாடு முழுவதும் உள்ள மாறுபட்ட கலாச்சாரத்தை அங்கீகரிப்பதாகவும், ஊக்குவிப்பதாகவும் இருக்க வேண்டும் என்ற உறுதிப்பாட்டையும் கொண்டது. 1964-66 கல்விக் கொள்கையின் பரிந்துரைகளின் அடிப்படையில், கல்வியின் மீதான முதல் தேசிய கொள்கை அறிவிப்பு 1968 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இந்தக் கொள்கை பள்ளிக் கல்வியில் நாடு முழுவதும் ஒரே சீரான 10 ஆண்டு பொதுக்கல்வி மற்றும் 2 ஆண்டு பலதரப்பட்ட விருப்பத் தேர்வின் அடிப்படையிலான கல்வியை ஏற்க வேண்டும் என்ற நெறிமுறையை அறிவித்தது.

பத்தாண்டு பள்ளிக் கல்விக்கான கலைத்திட்டம்[தொகு]

இந்த கலைத்திட்ட வடிவமைப்பானது 1975 ஆம் ஆண்டு வெளிவந்தது. ஆராய்ச்சிகளின் அடிப்படையில் கலைத்திட்டங்கள் வளர்த்தெடுக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியது. ஆகையால் தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமானது, 1970 களில் ஒரு பத்தாண்டுகளை இந்தியச் சூழலில் பாடத்திட்டம் மற்றும் செயல்முறைகளை தொடர்புபடுத்துவதற்காக கலைத்திட்ட ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கையில் செலவிட்டது.

தொடக்க மற்றும் இடைநிலைக் கல்விக்கான தேசிய கலைத்திட்டம்[தொகு]

இந்த திருத்தப்பட்ட கலைத்திட்ட வடிவமைப்பானது, தேசிய கல்விக் கொள்கைக்குப் (1986) பிறகு 1988 ஆம் ஆண்டில் வெளிவந்தது.இது 12 ஆண்டு பள்ளிக் கல்வியை உள்ளடக்கியதோடு கலைத்திட்ட மற்றும் கற்பித்தல் பொருட்களை குழந்தைகளை மையமாகக் கொண்டு மறுசீரமைப்பதை பரிந்துரைத்தது. இந்தக் கொள்கை தேர்வு சீர்திருத்தங்களை கொண்டு வருவதையும், கல்வியின் அனைத்து நிலைகளிலும் தொடர்ச்சியான மற்றும் முழுமையான மதிப்பீட்டை செயல்படுத்துவதையும் பரிந்துரைத்தது.

பள்ளிக் கல்விக்கான தேசிய கலைத்திட்ட வடிவமைப்பு[தொகு]

இந்த கலைத்திட்டம் 2000 ஆம் ஆண்டில் வெளிவந்தது. இது ஒரு ஆரோக்கியமான, மகிழ்ந்து அனுபவிக்கும் வகையிலான, மன அழுத்தம் அற்ற, கலைத்திட்ட சுமையற்ற கல்வியை பரிந்துரைத்தது. ஆகையால் ஒரு ஒருங்கிணைந்த, கருத்தியலான அணுகுமுறையானது பரிந்துரைக்கப்பட்டது. சூழலியல் கல்வியானது வலியுறுத்தப்பட்டது. மேலும், மொழி மற்றும் கணிதம் ஆகியவை முதல் இரண்டாண்டு பள்ளிக்கல்வியில் ஒருங்கிணைக்கப்பட்டது.

தேசிய கலைத்திட்ட வடிவமைப்பு: இந்த கலைத்திட்ட வடிவமைப்பு 2005 ஆம் ஆண்டில் வெளிவந்தது. தேசிய அளவிலான மாற்றத்திற்கான குழு இதை வரைவு செய்தது. இந்தச் செயல்முறை 5 வழிகாட்டு நெறிமுறைகளை அடிப்படையாகக் கொண்டது:

 1. வகுப்பறைக் கற்றலை வெளிஉலக வாழ்க்கையோடு தொடர்புபடுத்தல்
 2. குருட்டு மனப்பாட முறையில் கற்பதிலிருந்து வெளிவரச் செய்தல்
 3. பாடப்புத்தகங்களுக்கு வெளியேயும் சென்று குழந்தைகளின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கான கலைத்திட்டத்தை வளப்படுத்துவது
 4. தேர்வுகளை நெகிழ்வுத்தன்மை மிக்கதாகவும் வகுப்பறை மற்றும் வாழ்க்கைச் செயல்பாடுகளுடனும் ஒருங்கிணைந்ததாக ஆக்குதல்
 5. பரிவுடன் அக்கறை காட்டும் அமைப்புகளால் அறிவிக்கப்பட்ட அடையாளத்தை வளர்த்தெடுப்பது.[4]

இலச்சினை[தொகு]

தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இலச்சினையானது கி.மு. 3ஆம் நூற்றாண்டைச் சார்ந்த அசோகர் காலத்து தொல்பொருள் எச்சத்திலிருந்து எடுக்கப்பட்டது. இந்த தொல்பொருள் எச்சமானது கர்நாடக மாநிலம், ராய்ச்சூர் மாவட்டத்தில் உள்ள மாஸ்கி என்ற இடத்திற்கு அருகில் நிகழ்ந்த அகழ்வாய்வின் போது கண்டறியப்பட்டதாகும். இந்த நிறுவனத்தின குறிக்கோளானது ஈசா வாஸ்ய உபநிடதத்திலிருந்து எடுக்கப்பட்டதாகும். இதன் பொருள் 'கற்றல் மூலம் நித்திய வாழ்க்கை' என்பதாகும். ஒன்றோடொன்று பின்னப்பட்ட வளையங்கள் இந்தக் குழுமத்தின் மூன்று கூறுகளின் ஒருங்கிணைப்பைக் குறிப்பதாகும். தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் மூன்று கூறுகள்:

 • ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு
 • பயிற்சி
 • விரிவாக்கம்[5]

குறிக்கோள்கள்[தொகு]

 • தேசிய பாடத்திட்ட கட்டமைப்புகளை நடைமுறைப்படுத்துதல்.
 • அனைவருக்கும் பொதுவான தொடக்கக் கல்வியை வழங்குதல்.
 • தொழிற்கல்வி வழங்குதல்
 • சிறப்புத் தேவைகளுக்கென தனி குழுக்கள்
 • மழலைக் கல்வி மற்றும் பெண்குழந்தைக் காண கல்வி வழங்குதல்.
 • மாணவர்களின் சிந்தனைத் திறனை மேம்படுத்துதல்.
 • ஆசியர்களின் கல்வி அறிவை மேம்படுத்துதல் ஆகியன இவ்வமைப்பின் குறிகோள்கள் ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

 1. "Public Information Services." National Council of Educational Research and Training. Retrieved on 25 August 2012. "National Council of Educational Research and Training," Sri Aurbindo Marg, New Delhi-110016"
 2. என்.சி.இ.ஆர்.டி.,க்கு பல்கலை அந்தஸ்து
 3. Leading the Change: 50 years of NCERT, NCERT, 19 August 2011
 4. "leading_the_change" (PDF). NCERT.
 5. "leading_the_change" (PDF). www.ncert.nic.in.

வெளியிணைப்புகள்[தொகு]