தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் (National Council for Teacher Education (NCTE) என்பது இந்திய அரசால் இந்திய கல்வி முறையில் தரத்தை, நடைமுறைகள் மற்றும் செயல்முறைகள் மேற்பார்வையிட 1995 இல் இயற்றப்பட்ட தேசிய ஆசிரியர் கல்விக்குழும் சட்டம் (#73, 1993) இன் படி 1995 ஆண்டு அங்கிகாரம் அளிக்கப்பட்ட அமைப்பாகும்.[1][2][3]

வரலாறு[தொகு]

1995 க்கு முன், தே.ஆ.க.குழுமம் என்பது இந்திய ஒன்றிய அரசுக்கு ஆலோசனை கூறுவதற்காக 1973 இல் ஏற்படுத்தப்பட்ட அமைப்பாகும். இது அப்போதைய காலகட்டத்தில் மத்திய மனிதவள அமைச்சகத்தின் கீழ் செயல்படத் தொடங்கியது. ஆசிரியர் பயிற்சிப் படிப்பை மேம்படுத்தவும், தரத்தை உறுதிபடுத்தவும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு என்ற துறையை அரசால் பின்னர் உருவாக்கப்பட்டது. ஆனால் இந்தியா முழுவதும் இந்த அமைப்புக்கு அதிகாரமளிப்பதில் சில சிக்கல்கள் இருந்தன. இதனையடுத்துத் தேசியக் கல்விக் கொள்கை கொண்டுவரப்பட்டு[4] முறையான அதிகாரம் இந்த அமைப்புக்கு 1995 இல் வழங்கப்பட்டது.[5]

நிறுவன அமைப்பு[தொகு]

தேசிய ஆசிரியர் கல்விக் குழுமத்தின் தலைமையகம் புதுதில்லியில் அமைந்துள்ளது. இந்நிறுவனத்தின சட்டபூர்வமான பொறுப்புகளைக் கவனித்துக் கொள்ள அங்கீகரிக்கப்பட்ட நான்கு மண்டலக் குழுமங்களில் வடக்கு மண்டலக் குழுமம், தெற்கு மண்டலக் குழுமம், மேற்கு மண்டக் குழுமம் ஆகியவை புதுதில்லியிலும், கிழக்கு மண்டலக் குழுமம் மட்டும் புவனேஷ்வரிலும் அமைந்துள்ளன.தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் தனக்கு அளிக்கப்பட்ட ஆசிரியர் கல்வியின் ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் புதுமைகளைத் தூண்டுதல் உள்ளிட்ட செயல்பாடுகளை நிகழ்த்துவதற்காக புது தில்லியில் உள்ள தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் மற்றும் அதன் நான்கு மண்டல குழுமங்கள் ஆகியவை நிர்வாகம் மற்றும் கல்விசார் பிரிவுகளைக் கொண்டுள்ளன. இவற்றில் நிர்வாகம் சார்ந்த பிரிவானது நிதி, பணியமைப்பு மற்றும் சட்டபூர்வ விவகாரங்களையும், கல்விசார் பிரிவானது ஆய்வு, கொள்கை திட்டமிடுதல், கண்காணித்தல், கலைத்திட்டம், புதுமைகள், ஒருங்கிணைப்பு, நூலகம் மற்றும் ஆவணப்படுத்துதல் ஆகியவற்றையும் கவனித்துக் கொள்கின்றன. தேசிய ஆசிரியர் கல்விக்குழுமத்தின் தலைமையகமானது அதன் தலைவராலும், மற்ற மண்டலக் குழுக்கள் மண்டல இயக்குநராலும் நிர்வகிக்கப்படுகின்றன.[6]

நோக்கங்கள்[தொகு]

 • நாடு முழுவதும் ஆசிரியர் கல்வி அமைப்பில் திட்டமிட்ட மற்றும் ஒருங்கிணைந்த வளர்ச்சியை அடைதல்.
 • ஆசிரியர் கல்வி முறையிலும், அதனுடன் இணைக்கப்பட்ட விடயங்களிலும் விதிமுறைகள் மற்றும் தரங்களை ஒழுங்குபடுத்துதல் மற்றும் ஒழுங்காக பராமரித்தல்.
 • பள்ளிகளில் முன்பருவ, தொடக்க, இடைநிலை மற்றும் மேல்நிலை கட்டங்கள், முறைசாரா மற்றும் பகுதிநேரக் கல்வி, வயது வந்தோர் கல்வி (அஞ்சல் வழிக் கல்வி) மற்றும் தொலைதூர கல்வி படிப்புகளை கற்பிக்க தனிநபர்களை பயிற்றுவிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

செயல்பாடுகள்[தொகு]

 • ஆசிரியர் கல்வியின் அனைத்துக் கூறுகளிலும் கள ஆய்வுகள் மற்றும் கணக்கெடுப்புகளை மேற்கொண்டு மேற்கொண்டு அதனுடன் தொடர்புடைய முடிவுகளை வெளியிடுதல்
 • ஆசிரியர் கல்வித் துறை தொடர்பான பொருத்தமான திட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகளைத் தயாரிப்பதற்கு, இது மாநில மற்றும் மத்திய அரசுகள், பல்கலைக்கழகங்கள், பல்கலைக்கழக மானியக் குழு(யுஜிசி) மற்றும் பிற அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களுக்கும் பரிந்துரைகளை வழங்குகிறது.
 • இது நாடு முழுவதும் ஆசிரியர் கல்வி முறையை ஒருங்கிணைத்து கண்காணிக்கிறது.
 • பள்ளிகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் ஒரு நபர் ஆசிரியராக இருக்க குறைந்தபட்ச தகுதிகளுக்கான வழிகாட்டுதலை இது வகுக்கிறது.
 • அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் பின்பற்றப்பட வேண்டிய இயற்பொருள் மற்றும் கட்டமைப்பு சார்ந்த வசதிகள், பணியாளர் அமைப்பு போன்ற வழிமுறைகளை வகுத்துத் தருகிறது.
 • இது தேர்வுகள், அத்தகைய சேர்க்கைக்கான முதன்மைத் தரநிலைகள் மற்றும் படிப்புகள் அல்லது பயிற்சிக்கான திட்டங்கள் தொடர்பான தரங்களை வகுக்கிறது.
 • இது பள்ளிகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கவும் நடத்தவும் செய்கிறது. பின்னர் அதன் முடிவுகளை பரப்புகிறது.
 • இது முன்னேற்றத்திற்கான அதன் சொந்த வழிகாட்டுதல்கள், விதிமுறைகள் மற்றும் தரங்களை ஆராய்கிறது.
 • இது அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களை அடையாளம் காண்பதோடு, ஆசிரியர் கல்வி முறையின் வளர்ச்சித் திட்டங்களுக்கு புதிய நிறுவனங்களை அமைக்கிறது.
 • ஆசிரியர் கல்வியின் வணிகமயமாக்கலைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளை இது எடுக்கிறது.
 • இது மத்திய அரசால் ஒப்படைக்கப்படுகின்ற தொடர்புடைய பிற செயல்பாடுகளையும் கூட மேற்கொள்கிறது.

தேசிய ஆசிரியர் கல்விக் குழுமத்தால் அங்கீகரிக்கப்பட்ட படிப்புகள்[தொகு]

2014 ஆம் ஆண்டு நவம்பர் 28 ஆம் நாள் பின்வரும் படிப்புகளுக்கான திருத்தப்பட்ட தரம் மற்றும் திட்ட வரையறைகளுக்கான விதிகளை வெளியிட்டது.

 • பள்ளி முன்பருவக் கல்வி பட்டயப்படிப்பு
 • தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயப்படிப்பு
 • இளங்கலை தொடக்கக் கல்வி பட்டப்படிப்பு
 • இளங்கலை கல்வியியல் பட்டப்படிப்பு
 • முதுகலை கல்வியியல் பட்டப்படிப்பு
 • உடற்கல்வி பட்டயப் படிப்பு
 • இளங்கலை உடற்கல்வி பட்டப்படிப்பு
 • முதுகலை உடற்கல்வி பட்டப்படிப்பு
 • தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயப்படிப்பு (தொலைதூரக் கல்வி அல்லது திறந்ந நிலைக் கல்வி)
 • இளங்கலை கல்வியியல் பட்டப்படிப்பு (தொலைதூரக் கல்வி அல்லது திறந்ந நிலைக் கல்வி)
 • கலைக்கல்வி பட்டயப்படிப்பு (காட்சிக் கலை, நிகழ்த்து கலை)
 • 4-ஆண்டு ஒருங்கிணைந்த கல்வியியல் படிப்புகள் ( கலை மற்றும் அறிவியல் பிரிவு)
 • 3-ஆண்டு பகுதிநேர கல்வியியல் பட்டப்படிப்பு
 • 3-ஆண்டு ஒருங்கிணைந்த கல்வியியல் முதுகலைப் பட்டப்படிப்பு[7]

தற்போதைய வாய்ப்பளவு[தொகு]

தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் இந்திய அரசாங்கத்திற்காக, மிகவும் மாறுபட்ட கட்மைப்பை உடைய, ஆசிரியர் கல்வி்கான தேசிய கலைத்திட்ட வடிவமைப்பு 2009 ஐ தயாரித்துள்ளது. இதே கலைத்திட்ட வடிவமைப்பிற்கான வரைவையும் இந்நிறுவனம் அந்த ஆண்டில் உருவாக்கியுள்ளனது.[8]

2007 ஆம் ஆண்டின் நிலவரப்படி, தேசிய ஆசிரியர் கல்விக் குழுமமானது தனது தலைமையகத்தை புதுதில்லியில் கொண்டிருந்ததோடு தனது மண்டல பிரதிநிதிகனை இன்னும் பல நகரங்களிலும் கொண்டிருந்தது.[9] அலுவல் ரீதியான நான்கு மண்டல குழுக்கள் செய்ப்பூர், பெங்களூர், புவனேசுவரம் மற்றும் போபால் ஆகிய நகரங்களிலிருந்து முறையே வடக்கு, தெற்கு, கிழக்கு மற்றும் மேற்கு மண்டலங்களை கவனித்துக் கொள்கின்றன. இந்தக் குழுமங்கள் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களை அங்கீகாரம் செய்வதற்குப் பொறுப்பினை உடையவை ஆகும்.1 சனவரி 2007இன் படி 9045 படிப்புகளை வழங்கும் 7461 ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களை அங்கீகரித்துள்ளன. இதன் படி அங்கீகரிக்கப்பட்ட ஆசிரியப் பயிற்சி மாணவர்களின் எண்ணிக்கை 7.72 இலட்சமாகும்.

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்ம்[தொகு]

மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம், சமூகக் கல்வி மற்றும் எழுத்தறிவிற்கான அமைச்சகம் ஆகியவை குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்விக்கான உரிமைச் சட்டம் பிரிவு 7, உட்பிரிவு 6 இன் கீழ் தொடக்கக் கல்விக்கான கலைத்திட்டம் மற்றும் மதிப்பிடல் நடைமுறைகளை தேசிய கலைத்திட்ட வடிவமைப்பிற்குட்பட்டு உருவாக்கித்தர இந்நிறுவனத்திற்கு அதிகாரம் வழங்கியுள்ளன.[10]

மேற்கோள்கள்[தொகு]