தேசத் துரோகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒரு நாட்டின் அரசுக்கு எதிராகப் பேசுதல், எழுதுதல், அரசை அவமதிக்கும விதத்தில் நடத்தல் அல்லது அவ்வாறு நடப்பவர்களை ஊக்குவித்தல், கிளர்ச்சி செய்தல் போன்ற செயல்கள் தேசத்துரோகமாகக் கருதப்படுகின்றன.

1870-இல் பிரித்தானிய இந்தியாவில் தேசத்துரோக வழக்கு சட்டத்தை இயற்றிய ஐக்கிய இராச்சியம், 2009-ஆம் ஆண்டு இந்தச் சட்டத்தைத் தங்கள் நாட்டு நீதித்துறையில் இருந்தே நீக்கிவிட்டது.

தேசத்துரோக வழக்கு[தொகு]

பிரித்தானிய இந்திய அரசு 1860-ஆம் ஆண்டில் இந்திய தண்டனைச் சட்டம் இயற்றப்பட்ட போது, 124ஏ பிரிவு சேர்க்கப்படவில்லை. பின்னர் 1870-ஆம் ஆண்டு சிறப்பு மசோதா இயற்றப்பட்டு, இந்திய தண்டனைச் சட்டத்தில் பிரிவு 124ஏ இணைக்கப்பட்டது. இந்திய தண்டனைச் சட்டத்தில் 124ஏ பிரிவுதான் தேசத்துரோகத்தை வரையறுக்கிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தால் உருவாக்கப்பட்ட அரசுக்கு எதிராகப் பேசுதல், எழுதுதல், அரசை அவமதிக்கும விதத்தில் நடத்தல் அல்லது அவ்வாறு நடப்பவர்களை ஊக்குவித்தல் போன்ற செயல்கள் தேசத்துரோகமாகக் கருதப்படுகின்றன.

தேசத்துரோகக் குற்றத்திற்கான தண்டனைகள்[தொகு]

தேசத்துரோக வழக்கு பதியப்பட்டால், பிணையில் வெளி வர முடியாது. குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால், 3 ஆண்டுகள் குறைந்தபட்ச தண்டனையாகவும் அதிகபட்சமாக ஆயுள் தண்டனையும் கிடைக்கலாம். சில சமயங்களில் அபராதமும் விதிக்கப்படும். அரசுப் பணிகளில் சேரமுடியாது. பாஸ்போர்ட்டை நிரந்தரமாகவோ அல்லது தேவைப்படும் போதோ, நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும்.

பின்னணி[தொகு]

இந்தியர்களை அடக்கி வைக்கவே தேசத்துரோகச் சட்டத்தை பிரித்தானிய இந்திய ஆட்சியாளர்கள் திட்டமிட்டு இயற்றினர் என மகாத்மா காந்தி கருத்து தெரிவித்தார். இந்தியாவை ஆண்ட பிரித்தானிய ஆட்சிக் காலத்தில்தான் பத்திரிகையாளர்கள் மீது தாறுமாறாக தேசத்துரோக வழக்குகள் பாய்ந்துள்ளன. 1891-ஆம் ஆண்டு `பங்கோபாஸி' என்ற பத்திரிகையின் ஆசிரியராக இருந்த ஜோகேந்திர சந்திரபோஸ் மீது தேசத்துரோக வழக்கு பாய்ந்தது. பால கங்காதர திலகர் நடத்திய கேசரி பத்திரிகையில் தொடர்ந்து பிரித்தானிய இந்திய அரசுக்கு எதிராகக் கட்டுரைகளை வெளியிட்டு வந்தார். 1897, 1909, 1916 ஆகிய ஆண்டுகளில் மூன்று முறை திலகர் மீது தேசத்துரோக வழக்குகள் போடப்பட்டது.

இந்தியாவில் தேசத் துரோகம்[தொகு]

பிரித்தானிய இந்திய அரசுக்கு எதிராக இருந்தவர்களைத் `தேசத்துரோகிகள்' என்று அழைத்தனர். பகத்சிங் போன்றவர்கள் தேசத்துரோகிகள் என பிரித்தானிய அரசு அழைத்தனர். தேசத் துரோக வழக்கில் திலகர் 18 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். 1922-ம் ஆண்டு மகாத்மா காந்தி, யங் இந்தியா இதழில் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராகக் கட்டுரை எழுதினார். இதையடுத்து, காந்தி மீதும் `யங் இந்தியா' வெளியீட்டாளர் சங்கர்லால் பாங்கர் மீதும் இந்தச் சட்டம் பாய்ந்தது. ``இந்தியர்கள் மீது அடக்குமுறையைப் பாய்ச்சுவதற்காகவே இந்தச் சட்டம் திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது என்று காந்தி, 124ஏ பிரிவு குறித்து கூறியுள்ளார். ஜவகர்லால் நேரு இச்சட்டப் பிரிவு 124ஏ ஏற்றுக்கொள்ள முடியாத மிகவும் ஆட்சேபனைக்குரிய சட்டம் எனத் தெரிவித்துள்ளார். இந்தியர்களை அடக்கி வைக்கவே தேசத்துரோகச் சட்டத்தை பிரித்தானிய இந்திய ஆட்சியாளர்கள் திட்டமிட்டு இயற்றினர் என மகாத்மா காந்தி கருத்து தெரிவித்தார். தேசத் துரோக வழக்கில் வ. உ. சிதம்பரம்பிள்ளை 1908 முதல் 1912 முடிய வரை சிறையில் அடைக்கப்பட்டார். 2003-ஆம் ஆண்டில் விசுவ இந்து பரிசத் பொதுச் செயலாளர் பிரவீன் தொகாடியா தேசத் துரோக வழக்கில் கைது செய்யப்பட்டார்.[1][2]

2010-இல் எழுத்தாளர் அருந்ததி ராய் காஷ்மீர் பிரிவினைவாதம் மற்றும் மாவோயிஸ்டுகளுக்கு ஆதரவாகவும், இந்திய அரசுக்கு எதிராகவும் எழுதியதற்கு தேசத் துரோக வழக்கில் குற்றம் சாட்டப்பட்டார். [3]

தேசத் துரோக சட்டம் குறித்தான விமர்சனங்கள்[தொகு]

ஆதரவான கருத்துக்கள்[தொகு]

இந்திய தண்டனைச் சட்டம், பிரிவு 124 ஏ தேசப் பிரிவினைவாதிகள் மற்றும் தீவிரவாதிகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்படுகிறது. வன்முறை மற்றும் சட்டவிரோதமாக அரசை அகற்றுவதற்கான முயற்சிகள் நடந்தால், அவற்றிலிருந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை இந்தச் சட்டம் பாதுகாக்கிறது. அரசின் நிலையான தன்மை, தேசத்தின் ஒற்றுமைக்கும் பொருளாதாரத்துக்கும் முக்கியமானதாகும். நீதிமன்ற அவமதிப்பு செய்தால், தண்டனை வழங்கப்படுவது போல அரசை அவமதித்தால் தண்டனை கிடைக்கும் என்பதை இந்தச் சட்டம் உறுதி செய்கிறது' என இதன் ஆதரவாளர்கள் கருதுகின்றனர். பல மாநிலங்களில் மாவோயிஸ்ட்டுகள் கிளர்ச்சி செய்து வருகின்றனர். இவர்கள் அரசைக் கவிழ்க்க முயன்று, பல்வேறு கிளர்ச்சிகளில் ஈடுபடுவதாகக் கூறப்படுகிறது. இவற்றைத் தடுத்து, அரசை நிலைநாட்ட இந்தச் சட்டம் பயன் படுத்தப்படுவதாக இதன் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

3 சூலை 2019 அன்று நாடாளுமன்றத்தில் பேசிய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய், ``எந்தக் காரணத்தைக் கொண்டும் தேசத்துரோக சட்டம் ரத்து செய்யப்படாது, தேச விரோத, பிரிவினைவாத மற்றும் பயங்கரவாதிகளைத் திறம்பட எதிர்த்துப் போராடுவதற்காகவே இந்தச் சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது என்றார்.

எதிர் கருத்துகள்[தொகு]

தேசத்துரோகச் சட்டம், காலனிய ஆதிக்கத்தின் நினைவாக இன்னும் இந்தியாவில் இருந்து கொண்டிருக்கிறது. ஜனநாயக நாட்டுக்கு இதுபோன்ற சட்டங்கள் பொருந்தாது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் தன் குடிமக்களுக்குத் தந்த பேச்சு சுதந்திரத்தை இந்தச் சட்டம் பறிக்கிறது' என்று இந்தச் சட்டத்தை எதிர்ப்பவர்கள் கூறுகின்றனர். அரசின் கருத்துக்கு எதிராக நிலைப்பாட்டைக் கொண்டிருப்பது, விவாதம் நடத்துவது ஜனநாயகத்திற்குத் தேவையான அத்தியாவசியமான விஷயங்கள். ஆட்சியாளர்களைக் கேள்வி கேட்கும் உரிமை, விமர்சிக்கும் உரிமை மக்களின் அடிப்படைத் தேவை. ``தேசத்துரோக வழக்கை வைத்து இந்தியர்கள் மீது அடக்குமுறையை ஏவிய, பிரிட்டன் தன் நாட்டில் தேசத்துரோக சட்டத்தையே ரத்து செய்து விட்டது. இந்தியாவில் இந்தச் சட்டம் இன்னும் பயன்பாட்டில் இருப்பது ஏன்?" என்கிற கேள்வியும் இந்தச் சட்டத்தை எதிர்ப்பவர்களிடம் எழுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Apr 17, TNN /; 2003; Ist, 02:39. "Sedition charge against Togadia | India News - Times of India". The Times of India (ஆங்கிலம்). 2021-06-11 அன்று பார்க்கப்பட்டது.
  2. Apr 17, Nilanjana Bhaduri Jha / TNN /; 2003; Ist, 17:32. "Will sedition charge stick on Togadia? | India News - Times of India". The Times of India (ஆங்கிலம்). 2021-06-11 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Sedition and treason: the difference between the two". News18 (ஆங்கிலம்). IBNLive.com. 2012-09-11. 2021-03-05 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: others (link)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தேசத்_துரோகம்&oldid=3196714" இருந்து மீள்விக்கப்பட்டது