உள்ளடக்கத்துக்குச் செல்

தேங்காய் சீனிவாசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(தேங்காய் ஸ்ரீநிவாசன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தேங்காய் சீனிவாசன்
பிறப்புஸ்ரீநிவாசன்
(1937-10-21)21 அக்டோபர் 1937
தமிழ்நாடு, இந்தியா
இறப்பு9 நவம்பர் 1987(1987-11-09) (அகவை 50)
கர்நாடகம், இந்தியா
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1965 - 1987
பெற்றோர்
  • இராஜவேல் முதலியார் (தந்தை)
  • சுப்பம்மாள் (தாய்)
வாழ்க்கைத்
துணை
லக்‌ஷ்மி
பிள்ளைகள்
  • கீதா
  • ராஜேஸ்வரி
  • சிவசங்கர்

தேங்காய் சீனிவாசன் (Thengai Srinivasan, 21 அக்டோபர் 1937 – 9 நவம்பர் 1987) 1970-களிலும், 1980-களிலும் பிரபலமாக இருந்த தமிழ் நடிகர் ஆவார். இவர் கல் மனம் என்னும் நாடகத்தில் தேங்காய் வியாபாரியாக நடித்ததால் தேங்காய் ஸ்ரீநிவாசன் என்று பரவலாக அறியப்பட்டார். இவர் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும், கதையின் நாயகனாக, எதிர் நாயகனாக, குணசித்திரக் கதாபாத்திரங்களிலும் நடித்தார்.[1]

வாழ்க்கைக் குறிப்பு

[தொகு]

தேங்காய் ஸ்ரீநிவாசன், சென்னையைச் சேர்ந்த இராஜவேல் முதலியார் என்பவருக்கும், தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருவைகுண்டத்தைச் சேர்ந்த சுப்பம்மாள் என்பவருக்கும் மகனாக 1937-ஆம் ஆண்டு அக்டோபர் 21-ஆம் நாள் பிறந்தார். தன்னுடைய தந்தையைப் போல தானும் நடிகராக வேண்டுமென்ற ஆசையுடன் அதற்கான முயற்சி செய்து வந்தார். அவருடைய தந்தை எழுதிய 'கலாட்டா கல்யாணம்' மேடை நாடகத்தில் அறிமுகமானார். அதற்குப்பிறகு, ரவிந்தர், கே. கண்ணன் உட்பட பல்வேறு எழுத்தாளர்களின் பல்வேறு நாடகங்களில் நடித்தார். இவர் கே. கண்ணனின் கல் மணம் நாடகத்தில், தேங்காய் வியாபாரியாக சிறப்பாக நடித்திருந்தார். அதற்காக அந்நாடகத்தைப் பார்க்க வந்திருந்த கே. ஏ. தங்கவேலு, இவரை தேங்காய் ஸ்ரீநிவாசன் என்றே எல்லாரும் அழைக்க வேண்டும் என்று கூறினார்; அவ்வாறே அழைக்கப்பட்டார்.[1]

திரைத்துறை

[தொகு]

தேங்காய் ஸ்ரீநிவாசன், ஒரு விரல் திரைப்படத்தின் மூலமாக திரைத்துறையில் அறிமுகமானார். இவர் ம. கோ. இராமச்சந்திரன், சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி உள்ளார். சுமார் 900 படங்களுக்கு மேல் நடித்துள்ள இவர், சிவாஜி கணேசன் நடித்த கிருஷ்ணன் வந்தான் என்ற திரைப்படத்தைத் தயாரித்தார்.[1]

மண வாழ்க்கை

[தொகு]

ஸ்ரீநிவாசன் லக்‌ஷ்மி என்பவரை மணந்து கொண்டார். இவர்களுக்கு கீதா, ராஜேஸ்வரி என்று இரு மகள்களும், சிவசங்கர் என்ற மகனும் உள்ளனர். கீதாவுடைய மகன் யோகி / சுவரூப்பும், சிவசங்கரின் மகள் ஸ்ருதிகாவும் திரைத்துறையில் நுழைந்தனர்.[1]

இறப்பு

[தொகு]

தேங்காய் ஸ்ரீநிவாசன் தன்னுடைய உறவினரின் ஈமச் சடங்கிற்காக பெங்களூருவிற்குச் சென்றபோது, மூளை குருதிப்பெருக்கு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைப் பலனின்றி, 50-வது அகவையில் 1987-ஆம் ஆண்டு நவம்பர் 9-ஆம் நாள் உயிரிழந்தார்.[1]

குறிப்பிடத்தக்கத் திரைப்படங்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேங்காய்_சீனிவாசன்&oldid=3817271" இலிருந்து மீள்விக்கப்பட்டது