தென் திருவண்ணாமலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

[1][2]

தென் திருவண்ணாமலை கோவில்

தென் திருவண்ணாமலை சோழமண்டலத்தில் ராஜராஜ சோழன் உள்ளிட்ட சோழ மன்னர்கள் ஏராளமான சிவாலயங்களை கட்டி உள்ளனர். பாண்டிய மன்னர்களாலும் பல கோவில்கள் கட்டப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா ஆம்பலாப்பட்டு கிராமத்தில் உள்ள அண்ணாமலையார் திருக்கோவில். இந்த ஆலயம் தென் திருவண்ணாமலை என்று அழைக்கப்படுகிறது. இங்குள்ள இறைவன் பெயர் அண்ணாமலையார். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்குச் சென்று நேர்த்திக்கடன் செலுத்த வேண்டிக் கொள்பவர்கள், அங்கு செல்ல முடியாத பட்சத்தில் இந்தக் கோவிலுக்கு வந்து வேண்டுதலை நிறைவேற்றிக் கொள்ளலாம். இந்த திருக்கோவில் 1,300 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.

தல வரலாறு[தொகு]

இந்தக் கோவில் மதுரை பாண்டிய மன்னரோடு தொடர்புடையது. முற்காலத்தில் மதுரையை ஆட்சி செய்த கூன்பாண்டியன் என்ற மன்னர் சமண சமயத்தில் சேர்ந்து சிவனடியார்களுக்கு தீங்குகள் பல செய்து வந்தார். இதைக்கண்டு மன்னரின் மனைவி மங்கையர்க்கரசி மனம் வருந்தினார். தென்னாடுடைய சிவன், எந்நாட்டவர்க்கும் இறைவனான சிவபெருமானின் தீவிர பக்தையான அவர் சைவநெறி தழைத்தோங்க வேண்டும் என்று நினைத்து சொக்கநாதர் கோவிலுக்கு சென்று வழிபட்டார். திருஞானசம்பந்தரை மதுரைக்கு அழைத்து வர திட்டமிட்டார்.திருஞானசம்பந்தர் வேதாரண்யத்தில் இருப்பதை அறிந்து அவரை மதுரைக்கு வரும் படி வேண்டுகோள் விடுத்தார். அதை ஏற்றுக் கொண்ட திருஞானசம்பந்தரும் மதுரைக்கு வந்தார். பின்னர் அவர் சொக்கநாதர் கோவிலுக்கு சென்று அங்குள்ள இறைவனை வழிபட்டார். இதைக்கண்ட சமணர்கள் ஆத்திரமடைந்து பாண்டிய மன்னனிடம் சென்று செய்தியை தெரிவித்தனர். உடனே கூன் பாண்டியன் அவர்களை மதுரையில் இருந்து வெளியேற்றும் படி உத்தரவிட்டான். சமணர்களும் அன்று இரவே திருஞானசம்பந்தர் தங்கி இருந்த மடத்துக்கு தீ வைத்தனர். இந்த தீ வைப்பு சம்பவம் கூன் பாண்டியன் ஏவலால் நடந்த காரணத்தால், திருஞானசம்பந்தர் மன்னர் மீது வேதனைபட்டு இந்தத் தீ பையவே சென்று பாண்டியர்க்கு ஆகவே என்று பாடினார். இதனால் மடத்தில் இட்ட தீ மன்னன் மீது சென்று வெப்பு நோயாக மாறி, மன்னனை மிகவும் வருத்தியது. மன்னருக்கு ஏற்பட்ட வெப்பு நோயைப் போக்கிட, சமணர்கள் எவ்வளவோ முயன்றனர். ஆனால் அவர்கள் முயற்சி பலன் அளிக்கவில்லை. மேலும் நோயின் கொடுமை அதிகரிக்கத்தான் செய்ததேயன்றி குறையவில்லை.இதனால் மங்கையர்க்கரசி மன்னரிடம் சென்று, தாங்கள் திருஞானசம்பந்தருக்கு தீங்கு இளைத்ததால் தான் இந்தக் கடுமையான நோய் ஏற்பட்டு இருக்கிறது. எனவே திருஞானசம்பந்தரை இங்கு வரவழைத்தால் தான் நோய் குணமாகும் என்றார். அதற்கு மன்னனும் சம்மதித்தார். அவரது வேண்டுகோளை ஏற்று திருஞானசம்பந்தர் அரண்மனைக்கு சென்று மந்திரமாவது நீறு என்ற திருநீற்று திருப்பதிகத்தை பாடினார். அப்போது மன்னன் மேனி மீது தம் திருக்கரத்தால் திருநீற்றை பூசி அருளினார். மன்னனின் வெப்பு நோய் முழு அளவில் தணிந்தது. மன்னர் நலம் பெற்றார். இந்த நிகழ்ச்சிகளைக் கண்ட சமணர்கள் வெட்கித் தலைகுனிந்தார்கள். மன்னர் பூரணகுணமாகி உடல் நலம் பெற்றதை அறிந்து மங்கையர்க்கரசியும், அமைச்சர் குலச்சிறையாரும் மனம் மகிழ்ந்தனர். பின்னர் கூன்பாண்டியன் திருஞானசம்பந்தரை வணங்கி நின்றார்.அவரிடம் திருஞானசம்பந்தர், மன்னா இறைவன் அருளால், உன் உடலை அககினியாய் தகித்த வெப்பு நோய் நீங்கியது. இதனால் நீ பஞ்சபூத தலங்களில் நெருப்பு தலமான திருவண்ணாமலை சென்று இறைவனை தரிசனம் செய்து விட்டு வருவாய் என கூறினார். அதன்பேரில் கூன்பாண்டியன் மங்கையர்க்கரசி, குலச்சிறையார் ஆகியோர் திருவண்ணாமலைக்கு புறப்பட்டனர். வரும் வழியில் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகில் உள்ள ஆம்பலாபட்டு என்ற இடத்தில் வந்தபோது இரவு நேரமாகி விட்டதால் அவர்கள் மூவரும் அங்கேயே தங்கும்படி நேர்ந்தது.இரவில் தூக்கத்தில் இருந்தபோது மன்னரின் கனவில் சிவபெருமான் தோன்றி, இங்கு எனக்கு ஒரு ஆலயம் எழுப்பு என்று கட்டளையிட்டது போல் ஒரு உருவொளி காட்சி தெரிந்தது. இதையடுத்து பாண்டிய மன்னன் அவ்விடத்தில் ஒரு கோவிலைக் கட்டினார். இந்த ஆலயமே தற்போது தென் திருவண்ணாமலை என்று வழங்கப்பட்டு வருவதாக தல புராணம் தெரிவிக்கிறது. இக்கோவிலில் பாண்டிய மன்னன் தொடர்பான கல்வெட்டுகள் உள்ளன. மீன் சின்னம் அந்த இடத்தில் உள்ள கல்தூண்களில் பொறிக்கப்பட்டுள்ளது.

மண்டபங்கள்[தொகு]

கோவிலில் மூலவர் அருணாசலேஸ்வரர் சிவலிங்க வடிவில் காட்சி தந்து பக்தர்களுக்கு அருளாசிபுரிகிறார். அம்பாள் நாமம் உண்ணாமுலையம்மன். அர்த்தமண்டபம், முக்திமண்டபம், ஞான சண்டிகேஸ்வரர், சொர்ணபைரவர், சனீஸ்வரர், கணபதி, முருகன், ஆகியவற்றுக்கு தனி சன்னிதிகள் உள்ளன. பாண்டிய சிற்ப கலைக்கு எடுத்துகாட்டாக கலைநயம் மிகுந்த பல்வேறு சிற்பங்கள் இந்தக் கோவிலை அலங்கரிக்கின்றன. இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் அமையபெற்ற இந்த ஆலயத்தை புனரமைப்பு செய்து கடந்த 2006–ம் ஆண்டில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது.தற்போது ரூ.2 கோடி செலவில் 7 அடுக்கு கொண்ட வகையில் 126 அடி உயரத்தில் ராஜகோபுரம் கட்டும் பணி நடைபெற்று நிறைவடைந்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுபாட்டின் கீழும், கிராம மக்கள் முன்னிலையிலும் சித்தர் ராஜமகேந்திரசுவாமி முன்னிலையிலும் திருப்பணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

வழிபாடு[தொகு]

இக்கோவிலில் உள்ள சொர்ண பைரவரை தேய்பிறை அஷ்டமி அன்று வழிபட்டால் பொன், பொருள் சேரும் என தலபுராணம் கூறுகிறது. நந்திகேசுவரருக்கு பிரதோஷ வழிபாடு நடைபெற்று வருகிறது. தினமும் அதிகாலை 5.30 மணிக்கு நடைதிறக்கப்படுகிறது. காலையிலும், மாலையிலும் 2 கால பூஜைகள் நடத்தப்படுகிறது. மாசிமாதம் சிவராத்திரி, சித்திராபவுர்ணமி தீர்த்தவாரி, பவுர்ணமி கிரிவலம், ஐப்பசி மாதம் அன்னாபிஷேகம், கார்த்திகை தீபம் ஆகிய விழாக்கள் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

போக்குவரத்து[தொகு]

திருவண்ணாமலைக்கு செல்ல முடியாத பக்தர்கள் இந்தக் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்து செல்கின்றனர். அண்ணாமலையாரை வணங்கி சொர்ணபைரவரை வழிபட்டால் தீராத கடன் தீரும் என பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். கோவிலுக்கு செல்ல தஞ்சாவூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, மயிலாடுதுறை ஆகிய இடங்களில் இருந்து பஸ்வசதி உள்ளது.

மண்சோறு[தொகு]

தென் திருவண்ணாமலை கோவிலில் குழந்தை வரம் கேட்டு பக்தர்கள் மண்சோறு சாப்பிடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. தைப்பூசம், கார்த்திகை மாதம், சோமவாரம் ஆகிய தினங்களில், ஒரு நாள் முழுவதும் விரதம் இருந்து இறைவழிபாடு செய்து மண்சோறு சாப்பிடுகின்றனர். இப்படி செய்தால் வேண்டுதல் அனைத்தும் நிறைவேறும் என்பது பக்தர்களின் தீர்க்கமான நம்பிக்கையாக உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]
  1. http://www.dinamalar.com/More_picture.asp?News_id=605&lang=anmegam&news_head=மலைமீது%20தினமும்%20ஜோதி%20தரிசனம்:%20தென்%20திருவண்ணாமலை&detectflash=false
  2. http://www.dailythanthi.com/Others/Devotional/2015/08/20172517/Golden-Material-Gives-South-Tiruvannamalai.vpf
"https://ta.wikipedia.org/w/index.php?title=தென்_திருவண்ணாமலை&oldid=2724572" இருந்து மீள்விக்கப்பட்டது