தென் கொங்குநாடு: தமிழரின் வரலாற்றுக் கருவூலம் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தென் கொங்குநாடு: தமிழரின் வரலாற்றுக் கருவூலம்
நூல் பெயர்:தென் கொங்குநாடு: தமிழரின் வரலாற்றுக் கருவூலம்
ஆசிரியர்(கள்):டாக்டர் துரை அங்குசாமி
வகை:வரலாறு
துறை:ஆய்வு நூல்
இடம்:விஜய கோகுலம் பப்ளிகேஷன்ஸ்,
A2 அண்ணா குடியிருப்பு,
உடுமலைபேட்டை - 624 126.
விநியோகஸ்தர்கள்: விஜயா பதிப்பகம், கோயமுத்தூர்
மொழி:தமிழ்
பக்கங்கள்:x,272,ii
பதிப்பகர்:விஜய கோகுலம் பப்ளிகேஷன்ஸ்
பதிப்பு:முதற்பதிப்பு: ஜூன்2010
ஆக்க அனுமதி:நூல் ஆசிரியருக்கு

தென் கொங்குநாடு: தமிழரின் வரலாற்றுக் கருவூலம் (நூல்) டாக்டர் துரை அங்குசாமி எழுதிய ஒரு தமிழ் வரலாற்று நூல். 2010ம் ஆண்டு விஜய கோகுலம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

அணிந்துரை[தொகு]

தமிழ் நாடு அரசின் தொல்பொருள் ஆய்வுத்துறை முன்னாள் இயக்குனர் கலைமாமணி டாக்டர் இரா.நாகசாமி இந்நூலுக்கு அணிந்துரை வழங்கியுள்ளார். அணிந்துரையில் முத்தாய்ப்பாக இவர் சொல்லும் செய்தி இது: வரலாற்றுக் காலத்து செய்திகள் பெரும்பாலும் ஆதாரத்தின் அடிப்படையிலேயே எழுதப்பட்டுள்ளது. ‘தென் கொங்குநாடு - தமிழரின் வரலாற்றுக் கருவூலம்’ வரலாற்றுச் சான்றுகளை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்ட இந்த ஆய்வு நூல் 272 பக்கங்களுடன் இந்திய மதிப்பில் ரூபாய் 150 எனும் விலையில் வெளியிடப்பட்டது.

உள்ளடக்கம்[தொகு]

கொங்கு நாடு[தொகு]

பதினெட்டு விரிவான கட்டுரைகள் மூலம் தென் கொங்கு நாட்டின் வரலாற்றை நூல் விளக்குகிறது. பண்டைத்தமிழகம் சேர நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு, தொண்டை நாடு, கொங்கு நாடு என ஐந்து பிரிவுகளாக இருந்தன. குறிஞ்சி நிலமும், முல்லை வளமும், மறுத்த நிலமும் கொண்டது கொங்கு நாடு. கொங்கு நாடு சோழர் ஆட்சியில் கொங்கு மண்டலம் என வழங்கப்பட்டது. பிற்காலச் சோழர்கள் தங்கள் நாட்டை ஏழு மண்டலங்களாகப் பிரித்தனர். இன்றைய கோவை, ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியது கொங்கு நாடு. கொங்கு நாட்டில் பூந்துறை நாடு, பொங்கலூர் நாடு, வராக நாடு, அரிய நாடு, வெங்கல நாடு, ஆனைமலை நாடு, கஞ்சிக்கோவில் நாடு, குரும்ப நாடு… என மொத்தம் 24 நாடுகள் இருந்தன.

தென் கொங்கு[தொகு]

தென் கொங்கு எனப்படுவது பொள்ளாச்சி, பல்லடம், உடுமலை, தாராபுரம், பழநியின் மேற்கு பகுதி என்பவற்றை உள்ளடக்கியது. வட கொங்கு நாட்டைக் காட்டிலும் இயற்கை வளம் நிறைந்த நாடு. தென் கொங்கு மண்ணின் வரலாற்றை, பண்பாட்டை, கலாச்சாரத்தை அகழ்வாய்வுகள், கல்வெட்டுகள், செப்பேடுகள், வரலாறு வழியாக கிடைத்துள்ள சான்றாதாரங்களின் அடிபடையில் விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அதன் அடிப்படையில் இந்தப் புத்தகம் தொகுத்து எழுதப்பட்டுள்ளது. ஆசிரியர் கொங்கு நாட்டின் இரு பிரிவுகளான வடகொங்கு தென்கொங்கு பற்றிய தனி நூல் இதுவரை வரவில்லை என்ற குறையைத் தீர்க்கவே இந்நூலை எழுதத் துணிந்ததாகக் கூறுகிறார்.

சான்றாதாரங்களின் அடிபடையில் கொங்கு மண்ணின் புவியியல், ஆறுகள், கனிம வளங்கள், மலைவாழ் மக்கள் மற்றும் கால்நடை வளர்ப்பு, பற்றி ஐந்து கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. வரலாற்றுக்கும் முற்பட்ட தொல்பழங்காலம் மற்றும் பெருங்கல் பண்பாடு பற்றி விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. பண்டைய வ்ணிகம் மற்றும் வணிகப் பெருவழிகள் பற்றி செய்திகள் உள்ளன. ஏனைய கட்டுரைகளில் தென் கொங்கு நாட்டின் சமயம் மற்றும் சமூக மாற்றம், நிலக்கொடைகள், பிரம்மதேயக் (பிராமணர் குடியிருப்புகள்) கொடைகள், சம்மோக சபைகள், நாட்டார் சபை பற்றி எல்லாம் விரிவாக ஆய்வு மேற்கொள்ளப் பட்டுள்ளது. வரலாற்றுச் செய்திகள, தென் கொங்கில் இடப்பெயர்கள், வரலாற்றுச் சிறப்புமிக்க ஊர்கள், கொழுமம், நெகமம், காரைத்தொழுவு போன்ற ஊர்களுக்கான பெயர் காரணங்களையும் ஆராய்ந்து முடிவுகள் அளித்துள்ளார்.