தெகிவளை விலங்கியல் பூங்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

தெகிவளை விலங்கியல் பூங்கா கொழும்பு நகரின் புறநகர்ப் பகுதியான தெகிவளைப் பிரதேசத்தில் அமைந்துள்ளது. இந்த விலங்கியல் பூங்கா தேசிய விலங்கியல் பூங்கா என்றும் அழைக்கப்படுகின்றது. 1936 ஆம் ஆண்டு இந்த விலங்கியல் பூங்கா அமைக்கப்பட்டது. 2005 ஆம் ஆண்டு நிலவரப்படி பூங்காவில் 3000 விலங்குகளும், 350 இனங்களும் காணப்படுகின்றது. அத்துடன் பூங்காவின் ஆண்டு வருமானம் சுமார் நாற்பது மில்லியன் இலங்கை ரூபாய்களாகும்.

இந்த விலங்கியல் பூங்கா ஏனைய விலங்கியல் பூங்காக்களுடன் விலங்கினங்களின் இனப்பெருக்கத்திற்காக விலங்குகளைப் பரிமாறிக்கொள்வதுண்டு.

வரலாறு[தொகு]

1920களில் ஜோன் கெகன்பேக் என்பவரால் இந்த பூங்கா முதலில் ஸ்தாபிக்கப்பட்டது. ஆயினும் 1939இல் உலக யுத்தம் இரண்டுக் காலப்பகுதியில் இந்த விலங்கியல் பூங்கா மூடப்பட்டது. இதற்கான காரணம் இதன் தாபகர் ஒரு ஜேர்மன் நாட்டவர் என்பதனாலாகும். இந்த நிறுவனம் மூடப்படவுடன் இந்த நிறுவனத்தின் பல பகுதிகளை அரசுடமையாக்கி தெகிவளை விலங்கியல் பூங்காவிற்கு அரசு மாற்றியது. 1939இல் இந்தப் பூங்கா உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டாலும் அதற்குப் பல வருடங்களுக்குமுன்பே ஜோன் கெகன்பேக் கம்பனியில் இருந்து பெறப்பட்ட விலங்குகளுடன் மக்கள் பார்வைக்குத் தொழிற்படத் தொடங்கியிருந்தது.

மேஜர் அவ்பிரே நெயில் வெய்மென், ஓபிஇ என்பவரே இந்த விலங்கியில் பூங்காவின் முதல் நிர்வாகியாவார். இவரது காலப்பகுதியில் பல புதிய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விலங்கினங்கள் விலங்கியல் பூங்காவிற்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டன.

1960 ஆகும் போது பெரும்பாலான முலையூட்டிகள் இங்கு இருந்ததுடன், விலங்கியல் பூங்காவின் பாதி விலங்குகள் உள்நாட்டிற்கு உரியவையாகும். 1973 இல் 158 முலையூட்டிகள், 259 பறவை இனங்கள், 56 ஊர்வன மற்றும் ஏழு மீன் இனங்கள் இங்கே பராமரிக்கப்பட்டன. 1980 வரை விலங்கியல் பூங்காவின் வளர்ச்சியில் பெரிய மாற்றங்கள் ஏற்படவில்லை.

மிருகக்காட்சி சாலை[தொகு]

விலங்கியல் பூங்காவில் உள்ள வங்காளப் புலி

தெகிவளை விலங்கியல் பூங்கா ஆசியாவின் மிகப்பழைய மிருகக்காட்சி சாலைகளில் ஒன்றாகும். ஆண்டு முழுவதும் இது பொதுமக்கள் பார்வைக்காகத் திறக்கப்பட்டு இருப்பதுடன், பொதுப் போக்குவரத்து முறைகளினூடாக மிருகக்காட்சி சாலையை இலகுவாக அடைந்துவிடலாம்.

தெகிவளை விலங்கியல் பூங்காவின் மேலும் ஒரு சிறப்பான விடயம் அங்குள்ள வண்ணாத்திப்பூச்சித் தோட்டம். இங்கு 30 வகையான வண்ணாத்திப் பூச்சிகள் வாழ்ந்து வருவதுடன், கல்வியியல் தேவைகளுக்காக பல்வேறு பருவநிலையில் உள்ள வண்ணாத்திப் பூச்சிகளையும் அவதானிக்கலாம்.

தெகிவளை விலங்கியல் பூங்கா
# பகுப்பு இனம் எண்ணிக்கை
[1] முலையூட்டிகள் 100 450
[2] பறவைகள் 110 1000-1500
[3] மீன்கள் 65 1000
[4] ஊர்வன 34 250
[5] ஈரூடகவாளி 3 20
[6] வண்ணாத்திப்பூச்சி 30 100
[7] Marine Invertebrates 10 25