தூத்துக்குடி சதிவழக்கு
தூத்துக்குடி சதிவழக்கு என்பது 1908-ல் வ. உ. சிதம்பரனார், சுப்பிரமணிய சிவா ஆகியோர் மீது தடையை மீறி மேடையில் பேசியதற்காக தொடரப்பட்ட சதிவழக்காகும். இவ்வழக்கில் இவர்கள் இருவரும் குற்றவாளிகளாக்கப்பட்டு சுப்பிரமணிய சிவாவுக்கு 10 ஆண்டுகள் ஆயுள் தண்டனையும், சிவாவுக்கு உதவியதற்காக ஒரு ஆயுள் தண்டனையும் மேடைப்பேச்சிற்காக ஒரு ஆயுள் தண்டனையும் என மொத்தம் 40 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் வ. உ. சிதம்பரனாருக்கு வழங்கப்பட்டது. மேல் முறையீட்டுக்குப் பின்னர் இது குறைக்கப்பட்டது.
விடுதலைத் திருநாள் கூட்டம்
[தொகு]வங்கத்தின் தீவிரவாதத் தலைவர்களில் ஒருவரான விபின்சந்திரபால், அலிப்பூர் சதிவழக்கில் அரவிந்தருக்கு எதிராகச் சாட்சிசொல்ல மறுத்து ஆறுமாதசிறை தண்டனை விதிக்கப்பட்டார். அவர் விடுதலையாகும் 1908 மார்ச் 9 ம் தேதியை நாடெங்கும் விடுதலை தினமாகக் கொண்டாடுவதென்று தேசபக்தர்கள் தீர்மானித்தனர். நெல்லை மாவட்டத்திலும் சிதம்பரனார் அதற்கான ஏற்பாடுகளைச் செய்து வந்தார். இதை அறிந்த அரசு அதிகாரிகள் மார்ச் 9ம் தேதியன்று தூத்துக்குடியில் ஊர்வலமோ பொதுக்கூட்டமோ நடத்தக் கூடாது என்று தடை விதித்தனர். ஆனால், திருநெல்வேலியில் அதே நாளில் கூட்டத்தை நடத்த ஏற்பாடு செய்தார். மாவட்ட ஆட்சியர் விஞ்ச்துரை நெல்லையிலும் தடையுத்தரவை விதித்தார்.
ஆனால், சிதம்பரனாரும் சிவாவும் தடையுத்தரவை மீறி மார்ச் 9 ஆம் தேதியன்று விபின் சந்திரபாலின் விடுதலைத் திருநாள் கூட்டத்தை சிறப்பாக நடத்தினர். பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கு பெற்ற ஊர்வலம் ஒன்றும் நடந்தது.
மறைமுகமான புறக்கணிப்பு
[தொகு]பிரித்தானிய அரசுக்கு ஆதரவளிக்கும் இந்தியர்களுக்கு வீட்டு வேலைக்கு ஆள் கிடைக்கவில்லை. சவரம் செய்வதற்கு சவரத்தொழிலாளி மறுத்தார். சலவைத் தொழிலாளி சலவை செய்ய மறுத்து ஒதுங்கினார். இப்படி யாருமே சொல்லாமல் மக்களே ஒரு மறைமுகமான ஒத்துழையாமை இயக்கத்தைத் துவக்கி நடத்தி வந்தனர். மக்கள் எழுச்சியைக் கண்டு அஞ்சிய அரசாங்கம் சிதம்பரனாரையும், சிவாவையும் எப்படியாவது கைது செய்தே தீரவேண்டும் என்று முடிவு செய்தது.
தூத்துக்குடியில் வைத்துக் கைது செய்தால் மக்கள் கலகம் செய்வார்கள் என்று அஞ்சிய மாவட்ட கலெக்டர் விஞ்ச்துரை, உடனே தம்மைச் சந்திக்குமாறு, வ. உ. .சி., சுப்பிரமணிய சிவா ஆகியோருக்கு அழைப்பு விடுத்தார். சிதம்பரனாரும், சுப்பிரமணிய சிவாவும் 1908 மார்ச் 12-ஆம் தேதியன்று திருநெல்வேலிக்குச் சென்று ஆட்சியர் விஞ்ச் துரையைச் சந்தித்தனர். அப்போது அவருக்கும் சிதம்பரனாருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
கைது நடவடிக்கை
[தொகு]சிதம்பரனாரும் சிவாவும் நெல்லை மாவட்டத்தை விட்டு உடனே வெளியேறச் சம்மதிக்கவேண்டும்; அரசியல் கிளர்ச்சிகளில் ஈடுபடுவதில்லை என்று நன்னடத்தை ஜாமீன் தரவேண்டும் என்று விஞ்ச் ஆணவத்தோடு உத்தரவிட்டார். அதற்கு மறுத்துவிட்டு எழுந்தார் சிதம்பரனார். ஆனால் ஆட்சியர் முன்னிலையிலேயே சிதம்பரனாரும், சிவாவும் கைது செய்யப்பட்டனர். சிதம்பரனாரின் வீட்டையும் தூத்துக்குடியில் போலீசார் சோதனையிட்டு சில கடிதங்களைக் கைப்பற்றினர்.
சிதம்பரனாரும், சிவாவும் கைது செய்யப்பட்ட செய்தி திருநெல்வேலி நகரில் காட்டுத்தீ போல் பரவியது நெல்லை மக்கள் கொதித்தெழுந்தனர். மறுநாளான மார்ச் 13ம் தேதியன்று கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. மாணவர்கள் பள்ளிக்கும் கல்லூரிக்கும் செல்லாமல் தலைவர்களை விடுதலை செய்யக்கோரி ஊர்வலம் புறப்பட்டனர்
தேசபக்தர்களின் கோபம் அளவு கடந்தது. திருநெல்வேலி இந்துக்கல்லூரி மாணவர்கள் கடுங்கோபத்தோடு வகுப்புக்களை விட்டு வெளியேறி வீதியில் புகுந்து முழக்கமிட்டவாறே ஊர்வலமாகச் சென்றனர். சிவாவையும், சிதம்பரனாரையும் அடைத்து வைத்துள்ள பாளையங்கோட்டை சிறைச்சாலையை உடைத்து நொறுக்கி விட்டு அவர்களை மீட்டுவருவோம்' என்று இளைஞர் கூட்டம் ஒன்று கிளம்பியது. கிராம நிர்வாக அலுவலகம், சார்பதிவாளர் அலுவலகம், நகரசபை எண்ணெய்க் கிடங்கு ஆகியவற்றைத் தாக்கி ஒரு கும்பல் நெருப்பிட்டது மக்களின் ஆவேசமும், ஆர்ப்பாட்டமும்அளவு கடந்தன.
காவலர்கள் நிலைமையைச் சமாளிக்க முடியாமல் தடுமாறினார்கள். தலைமைக் காவலர் குருநாத ஐயர் என்பவர் தேசபக்தர்களோடு சேர்ந்து கொண்டு தலைவர்களை விடுதலை செய் என்று முழக்கமிட்டார். அதனால் பின்னர் வேலையை இழந்தார்.
ஆஷ் துரை
[தொகு]துணை ஆட்சியராக இருந்த ஆஷ்துரை என்பவன் அப்போது பெரும் காவலர் படையோடு களத்தில் இறங்கினான். வீதியில் கூடியமக்களை கண் மண் தெரியாமல் தடியடி செய்து கலைந்தோட வைத்தான். கலைய மறுத்த மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் 4 பேர் மரணமடைந்தனர். துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த நால்வரின் பிணங்களும் அன்று மாலை வரை சாலையோரத்திலேயே கிடந்தன. அவற்றை அப்புறப்படுத்தக்கூட ஆஷ்துரை அனுமதிக்கவில்லை. அதனைப் பார்த்தாவது கலகம் செய்கிறவர்களுக்கு புத்தி வரட்டும் என்று கொக்கரித்தான். மறுநாள் தூத்துக்குடிக்கும், தச்சநல்லூருக்கும் கலகம் பரவியது. தொடர்ந்து 4 நாட்கள் வரை கலவரம் நீடித்தது. இதனால் பாதுகாப்புப் படையை வரவழைத்து கலவரத்தை அடக்கினர். கலவரம் நடந்த பகுதி மக்களே பாதுகாப்புப்படையின் செலவை ஈடுகட்ட வேண்டும் என்று கூறி தண்டத் தீர்வையும் விதித்தான் ஆஷ்.
தூத்துக்குடியில் வசித்து வந்த ஆங்கிலேயர்கள் இரவு நேரங்களில் தங்கப் பயந்து, தூத்துக்குடிக்கு அருகில் உள்ள முயல் தீவுக்கு படகில் சென்று தங்கிவிட்டு பகலில் மட்டும் நகருக்குள் தக்க பாதுகாப்போடு வந்து போயினர்.
பாரதியார் கண்டனம்
[தொகு]சிதம்பரனாரும், சிவாவும் கைது செய்யப்பட்டதை அறிந்த பாரதியார் சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு வந்து அவர்களைப் பார்த்துவிட்டுச் சென்று, `இந்தியா' பத்திரிகையில் காரசாரமாகக் கட்டுரை எழுதினார். திருநெல்வேலி, தூத்துக்குடி, தச்சநல்லூர் கலவரங்களில் ஈடுபட்டவர்கள் என்று கூறி சுமார் நூறு பேரைக் கைது செய்து காவலில் வைத்து சித்திரவதை செய்ய ஆஷ் ஏற்பாடு செய்தான். அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டு அனைவர் மீதும் வழக்குத்தொடரப்பட்டு, பல்வேறு தண்டனைகளும் வழங்கப்பட்டன.
விசாரணை
[தொகு]வ.உ. சிதம்பரனார், சுப்பிரமணியசிவா ஆகியோர் மீது தொடரப்பட்ட தூத்துக்குடி சதிவழக்கு திருநெல்வேலி துணை அமர்வு நீதிமன்றத்தின் சிறப்பு நீதிபதி ஏ. எம். பின்ஹே என்பவர் முன்னிலையில் 1908 மார்ச் மாதம் 28-ஆம் தேதியன்று விசாரணைக்கு வந்தது.
குற்றச்சாட்டு
[தொகு]1908 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 23, 26, ஆம் தேதிகளிலும், மார்ச் 1, 3 தேதிகளிலும் சிதம்பரனார் தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய இடங்களில் பேசிய பேச்சுக்கள் அரசாங்கத்திற்கு எதிரானவை என்றும், இந்திய மக்களை பிரித்தானிய மக்களுக்கும் மன்னர் பிரானுக்கும்எதிராகத் தூண்டிவிட்டு போர் புரிய ஆயத்தம் செய்யக் கூடியவை என்றும், அரசாங்கத்திற்கு எதிரான பேச்சாளரும் கலகக்காரருமான சுப்பிரமணிய சிவாவுக்கு தங்கும் இடமும், உணவும் அளித்துக் காப்பாற்றி இந்தியன் பீனல்கோடு 155-ஏ பிரிவுப்படி சிதம்பரனார் குற்றம் செய்திருக்கிறார் என்றும், சிதம்பரனாரும் சிவாவும் சேர்ந்து பிரித்தானிய ஆட்சிக்கு எதிராகச் சதி செய்தார்கள் என்றும் குற்றம் சாட்டினர். சுப்பிரமணிய சிவாவின் மீதும் அரசாங்கத்திற்கு எதிரான சொற்பொழிவுக்காகத் தனிக்குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்தனர்.
பாரதியார் சாட்சியம்
[தொகு]வழக்கு விசாரணை சுமார் இரண்டு மாதகாலம் நடந்தது. சிதம்பரனாருக்காகவும், சுப்பிரமணிய சிவாவுக்காகவும் துவக்கத்தில் தஞ்சை என். கே. ராமசாமி ஐயரும் பின்னர் சடகோபாச்சாரியாரும் வாதாடினர். அரசுத் தரப்பில் பாரிஸ்டர் ரிச்பண்ட் என்பவர் வழக்காடினார். ஏராளமான சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். சிதம்பரனார் தரப்பில் மகாகவி பாரதியார் நீதிமன்றத்துக்கு வந்து சாட்சியம் அளித்தார். பாரதியார் நீதிமன்றத்தின் படியேறியது அதுதான் முதலும் கடைசியுமாகும். வழக்கு விசாரணை முடிந்து 1908 ஜுலை மாதம் 7 ஆம் தேதியன்று நீதிபதி பின்ஹே தீர்ப்புக் கூறினார்.
தீர்ப்பு
[தொகு]"அரசாங்கத்திற்கு எதிரான குற்றத்திற்கு ஓர் ஆயுள் தண்டனையும் சிவாவுக்கு உதவிய குற்றத்திற்கு மற்றுமோர் ஆயுள் தண்டனையுமாக மொத்தம் 40 ஆண்டு தீவாந்திர சிட்சை தண்டனை வழங்கி, இரண்டையும் அடுத்தடுத்து அனுபவிக்க வேண்டும்" என்று நீதிபதி பின்ஹே தீர்ப்பளித்தார். சுப்பிரமணிய சிவாவுக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
கண்டனங்கள்
[தொகு]வ.உ. சிதம்பரனாரின் சாதாரண மேடைப் பேச்சுக்கு இரண்டு ஆயுள் தண்டனைகள் அதையும் அந்தமான் சிறையில் அனுபவிக்க வேண்டும். அடுத்தடுத்து அனுபவிக்க வேண்டும்(40 ஆண்டுகள்) என்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. சிதம்பரனாருக்கு விதிக்கப்பட்ட கடுமையான தண்டனையைக் கேள்விப்பட்டு தேச மக்களும், தலைவர்களும் கொதித்து எழுந்தனர். நாடெங்கும் கண்டனக் கூட்டங்களும், கண்டனத் தீர்மானங்களும் போடப்பட்டன. சுதேசமித்திரன், ஸ்டேட்ஸ்மேன், வங்காளி ஆகிய இந்திய இதழ்களும் பிரித்தானிய இதழ்களும் கண்டனத் தலையங்கங்களை எழுதின. அநியாயத் தீர்ப்பு எனக் கண்டித்தனர். இங்கிலாந்து அமைச்சரவையில் இந்தியாவிற்கான மந்திரியாக இருந்த லார்டு மோர்லி என்பவரே இந்தத் தண்டனையைக் கேட்டு அதிர்ச்சியடைந்து, "ஒரேயொரு சொற்பொழிவுக்காக 40 ஆண்டுகள் சிறைத் தண்டனையா? இது என்ன நீதி? " என்று இந்திய வைசிராயான லார்டு மிண்டோவுக்கு ஒரு கண்டனக் கடிதத்தை எழுதினார்.
உயர்நீதிமன்ற மேல் முறையீடு
[தொகு]பின்ஹேவின் தீர்ப்பை எதிர்த்து சிதம்பரனார், சிவா ஆகியோர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அதன் மீதான விசாரணை 1908 அக்டோபர் 13-ல் முதன்மை நீதிபதி. ஆர்னால்ட் ரைட், நீதிபதி மன்றோ ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது சிதம்பரனாருக்காக வழக்கறிஞர்கள் சடகோபாச்சாரியார், நரசிம்மாச்சாரியார் ஆகியோர் வாதாடினர். உயர்நீதி மன்றம் குற்றங்கள் அனைத்தையும் சிதம்பரனாரும், சுப்பிரமணிய சிவாவும் செய்திருக்கின்றனர் என்பதை உறுதிப்படுத்தினாலும், தண்டனைக் காலத்தை 6 ஆண்டு, 3 ஆண்டு என்று குறைத்து, இரண்டையும் ஏக காலத்தில், அதாவது 9 ஆண்டுகள் அனுபவித்தால் போதும் என்று தீர்ப்பளித்தது. ஆனால், அதிலும் நிறைவடையாத சிதம்பரனாரின் நண்பர்கள், பிரிவி கவுன்சிலுக்கு மேல் முறையீடு செய்தனர். பிரிவி கவுன்சிலும் 6 ஆண்டு தண்டனையை உறுதிப்படுத்திற்று. ஆனால், அதை அந்தமான் சிறையில் அனுபவிக்க வேண்டும் என்று இருந்ததை மாற்றி, உள்நாட்டு சிறையில் கழித்தால் போதும் என்று தீர்ப்பளித்தது.
உசாத்துணை
[தொகு]- கோமல் அன்பரசன், தூத்துக்குடி சதி வழக்கு (கொலை, கொலையாம் ..காரணமாம்..) , விகடன் பிரசுரம்
- சிவலை இளமதி, விடுதலைப் போரில் தமிழகச் சதிவழக்குகள் (விடுதலை வேள்வியில் தமிழகம் பக் 526), மனிதம் பதிப்பகம்.
- ஜே. பால்பாஸ்கர், புகழ்மிக்க விசாரணைகள்[தொடர்பிழந்த இணைப்பு]
- தீராத பக்கங்கள்