துவக்கப்பிழை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

விளையாட்டுப் போட்டிகளில், துவக்கப்பிழை (அ) பிழை துவக்கம் என்பது, விளையாட்டின் துவக்க விதியை மீறும் விதமாக, துவக்கத்தைக் குறிக்கும் சைகைக்கு முன்னதாக (சில் சமயம், பின்னதாகவும்), போட்டியாளர்கள் அசையும் விதி மீறலைக் குறிக்கும். இத்தகைய விதிமீறலில் ஈடுபடும் வீரர் அல்லது அணியின் களநிலை அபராதத்திற்குள்ளாக்கப்பட்டு, விதிமீறல் தொடருமாயின் தகுதியிழக்க நேரும் என்று எச்சரிக்கப்படும். சில சமயம் உடனடி தகுதி நீக்கத்திற்கும் வழி வகை இருப்பதும் உண்டு.

நீச்சற்போட்டி, தடகளம், விரைவோட்டம்,  வாகனப்பந்தய விளையாட்டுகள் போன்ற பந்தய விளையாட்டுக்களில் துவக்கப்பிழை பொதுவாகக் காணப்படும். இத்தகைய போட்டிகளில் சிறு அனுக்கூறளவு நேரமும் போட்டி முடிவுகளைப் பெரிதும் பாதிப்பதாகவும், சிறந்த துவக்கத்திற்கான பதற்றம் போட்டியாளரின் செயல்திறனைப் பாதிப்பதாகவும் இருக்கும்.

மாறாக, பந்தயங்களில் பிழையற்ற துவக்கங்கள் பொதுவாக சுத்தமான அல்லது சரியான துவக்கம் என்று வழங்கப்படும்.

தடகளம்[தொகு]

2007 பான் அமெரிக்க விளையாட்டுகளின் 100 மீ பந்தயத்தின் துவக்கக் கோட்டில் வைக்கப்பட்டிருக்கும் அழுத்தமுணர் துவக்கப் பாளங்கள்.

விரைவோட்டப் பந்தயங்களில், தடகள விளையாட்டுகளின் ஆளுமை அமைப்பான ஐ.ஏ.ஏ.எஃபின் விதிகளின்படி, போட்டி துவத்திற்கான துப்பாக்கி வெடித்த 0.1 நொடிகளுக்குள் ஒரு வீரர் அசைந்தால் அவர் பிழையாகத் துவங்கியதாகக் கருதப்படுவார்.[1] மனித மூளையால் தான் கேட்ட ஒலித் தகவலை 0.1 நொடிகளுக்குள் ஆய்ந்தறிய முடியாது என வலியுறுத்தும் சோதனைகளின் அடிப்படையில் எதிர்வினைக்கான காலம் 0.1 நொடிகளாக வைக்கப்பட்டது.[2] முழு தானியக்க விசை/அசைவுணர் கருவிகள் பொருத்தப்பட்டு, கணினி மூலம் துப்பாக்கியோடு இணைக்கப்பட்ட துவக்கப்பாளங்கள் பயன்படுத்தப்படும் உயர்மட்ட போட்டிகளில் மட்டுமே இவ்விதி செயல்படுத்தப்படுகிறது. பெரும்பான்மையான கீழ்மட்ட போட்டிகளில் துவக்கப்பிழைகளை நடுவர்கள் கண்கூடாகவே தீர்மானிக்கின்றனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. 2008 IAAF Rule Book - Chapter 5, Rule 161 Part 2
  2. "Reaction times & false starts in sprints". Condellpark.com (2002-09-21). பார்த்த நாள் 2011-04-24.
"https://ta.wikipedia.org/w/index.php?title=துவக்கப்பிழை&oldid=2193446" இருந்து மீள்விக்கப்பட்டது