துளஜாஜி
துளஜாஜி Thuljaji | |
---|---|
மராட்டியப் பேரரசின் சத்ரபதி | |
ஆட்சிக்காலம் | 1763 முதல் 1773 வரை மற்றும் 1776 முதல் 1787 வரை |
முன்னையவர் | பிரதாபசிம்மன் |
பின்னையவர் | இரண்டாம் சரபோஜி |
பிறப்பு | 1738 |
இறப்பு | 1787 |
மரபு | போன்சலே |
தந்தை | பிரதாபசிம்மன் |
மதம் | இந்து |
துளஜேந்திர ராஜா அல்லது துளஜாஜி போன்சலே (Thuljaji Bhonsle (மராத்தி: तुळजाजी) (1738–1787) என்பவர் பிரதாபசிம்மனின் மூத்தமகனும், தஞ்சாவூர் போன்சலே மரபின் மன்னராக 1763 முதல் 1773 மற்றும் 1776 முதல் 1787 வரை இருந்தவராவார். இவர் மிகவும் தாராள மனமுள்ளவராக இருந்தபோதிலும், பலவீனமான மனமுள்ள அரசராக இருந்தார். இவரது ஆட்சிக்காலமானது தஞ்சாவூரானது பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனிக்கு அனுசரணையான ஒப்பந்தங்களை மேற்கொண்டதற்காக அறியப்படுகிறது.
இராமநாதபுரத்தின்மீது படையெடுப்பும், ஆற்காடு நவாப்பின் ஆக்கிரமிப்பும்
[தொகு]1771ஆம் ஆண்டு இராமநாதபுரம் பாளையத்தினுடன் ஏற்பட்ட ஒரு பிரச்சனையால் அதன்மீது துளஜாஜி படையெடுத்து, அந்தப் பாளையத்துக்கு உட்பட்ட அனுமான்குடியைக் கைப்பற்றிக் கொண்டார்.[1] ஆற்காடு நவாப்புக்கு செலுத்தவேண்டிய கப்பத் தொகையை தஞ்சாவூர் செலுத்தாமல் இருந்தது. இதனால் நவாப் தன் மகனின் தலைமையில் தஞ்சையைக் கைப்பற்ற படையை அனுப்பினார். இதையடுத்து சமாதானமாக போக விரும்பிய துளஜாஜி மீது ஒரு அவமானகரமான ஒப்பந்தம் திணிக்கப்பட்டது, பின்னர் இது பிரித்தானிய கிழக்கு இந்திய கம்பனியின் அதிகாரிகளாலும் அங்கீகரிக்கப்பட்டது.[2] ஆற்காடு நவாப்புக்கு பாக்கியாக வைத்திருந்த எண்பது இலட்சம் அல்லாமல் போர் செலவுத் தொகையாக முப்பத்திரண்டு இலட்சத்தை செலுத்த வேண்டி இருந்தது. மேலும் தஞ்சாவூர்குக் சொந்தமான இரண்டு சுபா பகுதிகளை நவாப் கைப்பற்றிக்கொண்டார். இராமநாதபுரத்திடம் இருந்து கைப்பற்றிய அரணி மற்றும் அனுமன்குடி ஆகியவையும் தஞ்சை அரசரிடம் இருந்து எடுத்துக்கொள்ளப்பட்டன.
ஒப்பந்த விதிகளால் அவமதிப்புக்கும், அதிர்ச்சிக்கும் ஆளான, துளஜாஜி தனக்கு உதவுமாறு பேஷ்வாவை வேண்டினார். இதையடுத்து தஞ்சாவூருக்கு உதவ ஒரு பெரிய படையை ராகோபாவின் தலைமையில் பேஷ்வா அனுப்பினார். ஆனால் சதாராவின் அரசவை ஆலோசனையின்படி படைகள் திரும்ப அழைக்கப்பட்டன. இதன்பிறகு ஆற்காடு படைகள் தஞ்சாவூரைக் கைப்பற்றின. இதையடுத்து துளஜாஜியை ஆற்காடு நவாப் பதவியில் இருந்து நீக்கினார். இதன்பிறகு தஞ்சாவூரானது மூன்று ஆண்டுகள் ( 1773 முதல் 1776 வரை) ஆற்காடு நவாப்பின் ஆட்சியின்கீழ் இருந்தது.
மீண்டும் அரசதிகாரம்
[தொகு]1776 ஆம் ஆண்டு பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் இயக்குநர் குழுவானது, துளஜாஜியை மீண்டும் அரசராக உத்தரவிட்டது.[3] இதன் பிறகு பட்டமேற்ற துளஜாஜி விரைவில் பிரித்தானியருடன் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொண்டனர். அதன்படி தஞ்சாவூர் படைகள் கலைக்கப்பட்டு, அதற்கு பதில் கம்பெனி படைகள் நிலை நிறுத்தப்பட்டன. மேலும் நவாப் மற்றும் கம்பெனி ஆகிய இரு தரப்புக்கும் அரசர் கப்பம் செலுத்த வேண்டும்.
இரண்டாம் மைசூர் போர்
[தொகு]இரண்டாம் மைசூர் போரானது 1780 ஆம் ஆண்டுஐதர் அலி மற்றும் கம்பெனி இடையே துவங்கியது. இதற்கு அடுத்த ஆண்டு, அவர் திப்பு சுல்தானுடன் தஞ்சாவூர் மீது படையெடுத்தார். மைசூர் படைகள் ஆறு மாதங்கள் இராச்சியத்தை ஆக்கிரமித்து இருந்தன. இதனால் இப்பகுதி சூறையாடப்பட்டு மக்கள் வெளியேற்றப்பட்டனர். 1784 ஆம் ஆண்டு தஞ்சாவூரில் இருந்து 20,000 குழந்தைகள் திப்புசுல்தானால் கடத்தப்பட்டதாக மிஷனரியான ஸ்க்வார்ட்ஸ் என்பவர் பதிவு செய்துள்ளார். இந்த சூறையாடல்களால் தஞ்சாவூர் பகுதியில் உற்பத்தி சரிந்து, பேரழிவு ஏற்பட்டது. 19 ஆம் நூற்றாண்டின் துவக்கம் வரை திப்புவின் படையெடுப்பின் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து தாஞ்சவூர் மீளவில்லை.
இறப்பு
[தொகு]துளஜாஜி 1787 ஆம் ஆண்டு 49 வயதில் இறந்தார். இவர் இறந்த பிறகு இவரது இரண்டு மனைவிகள் உடன்கட்டை ஏறினர். இவரது இரு மகன்கள் ஒருவர் பின் ஒருவர் இறந்ததால், இவர் போன்சலே குடும்பத்தின் கிளைரல் குடும்பத்தைச் சேர்ந்த சரபோஜியை தத்தெடுத்திருந்தார். இரண்டாம் சரபோஜி தன் 10 வயதில் அரியணை ஏறினார். சரபோஜியின் அரசப் பிரதிநிதியாக துளஜாஜியின் தம்பியான அமர்சிங் இருந்து ஆட்சி செய்தார்.[4]
மேலும் காண்க
[தொகு]- போன்சலே
- மராட்டியப் பேரரசு
- மராத்திய அரச குலங்கள் மற்றும் அரசுகள் பட்டியல்
- தஞ்சாவூர் மராத்திய அரசு
- திப்பு சுல்தான்
- ஆற்காடு நவாப்
அடிக்குறிப்புகள்
[தொகு]- ↑ Subramanian , Pg 60
- ↑ Subramanian , Pg 61
- ↑ Subramanian , Pg 62
- ↑ Subramanian, Pg 67
மேற்கோள்கள்
[தொகு]- K. R. Subramanian(1928). The Maratha Rajas of Tanjore
- Thuljaji II in Saraswathi Mahal Library website