துர்காவதி தேவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துர்காவதி தேவி
Durgavati Devi
பிறப்பு(1907-10-07)7 அக்டோபர் 1907
இறப்பு15 அக்டோபர் 1999(1999-10-15) (அகவை 92)
இந்தியா, உத்திரப் பிரதேசம், காசியாபாத் மாவட்டம்
அமைப்பு(கள்)இந்துசுத்தான் சோசலிசக் குடியரசு அமைப்பு, நவஜீவன் பாரத் சபா
அரசியல் இயக்கம்இந்திய விடுதலை இயக்கம்
வாழ்க்கைத்
துணை
பகவதி சரண் வோரா
பிள்ளைகள்சச்சிந்திர வோரா

துர்காவதி தேவி ( துர்கா பாபி ) (7 அக்டோபர் 1907 - அக்டோபர் 15, 1999) என்பவர் இந்திய புரட்சியாளர் மற்றும் விடுதலைப் போராட்ட வீராங்கனையாவார். இந்தியத் துணைக்கண்டத்தை ஆண்டுவந்த பிரித்தானியப் பேரரசுக்கு எதிராக ஆயுதமேந்தி புரட்சியில் தீவிரமாக ஈடுபட்ட சில பெண் புரட்சியாளர்களில் இவரும் ஒருவராவார். பிரித்தானிய அதிகாரியான ஜான் சாண்டர்சை கொன்ற பகத் சிங் மாறுவேடத்தில் தப்பிக்க உதவியதற்காக இவர் சிறப்பாக அறியப்படுகிறார்.[1] இந்துசுதான் சோஷலிசக் குடியரசு அமைப்பின் (HSRA) உறுப்பினராக பகவதி சரண் வோராவின் மனைவியாக இவர் இருந்ததால் இந்த அமைப்பின் மற்ற உறுப்பினர்கள் இவரை பாபி (அண்ணி) என்று குறிப்பிட்டனர். மேலும் இந்திய புரட்சிகர அமைப்பினர் மத்தியில் "துர்கா பாபி" என்று அழைப்பது பிரபலமாக இருந்தது.

வாழ்க்கை[தொகு]

சரண் வேராவை துர்காதேவி தன் பதினொரு வயதில் மணந்தார்.

நவஜீவன் பாரத் சபாவால் 16, நவம்பர் 1926 அன்று லாகூரில் ஈகி கார்த்தார் சிங் சரபாவின் 11 வது நினைவு நாள் நிகழ்வை அனுசரிக்க முடிவு செய்த காலகட்டத்தில் துர்கா தேவி அமைப்புக்குள் வந்தார். ஜான் பி. சாண்டர்சை படுகொலை செய்த பகத் சிங் மற்றும் சிவராம் ராஜகுரு ஆகியோர் காவல் துறையிடம் இருந்து தப்பிக்க தேவி உதவியாக இருந்தார்.

லாகூர் சிறையில் 63 நாட்கள் உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டு இதனால் இறந்த, ஜக்தீந்திர நாத் தாசின் இறுதி ஊர்வலத்தில் கலந்துக் கொண்ட பெரும் திரளான கூட்டத்தில் இவரும் கலந்துகொள்ள கல்கத்தா சென்றார்.[1]

புரட்சிகர நடவடிக்கைகள்[தொகு]

1929 சட்டசபை குண்டு வீச்சு நிகழ்வில் ஈடுபட்ட பகத் சிங் சரணடைந்த பிறகு, ஹெயலி பிரபுவை கொலை செய்ய துர்கா தேவி முயன்றார். இந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. துர்கா தேவி பிடிபடாமல் தப்பினார், என்றாலும் இவரது கூட்டாளிகளில் பலர் இறந்தனர். பின்னர் காவல்துறையினரால் இவர் பிடிபட்டார் இந்தக் கொலை முயற்சிக்காக இவர் மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டணைப் பெற்று சிறையில் அடைக்கப்பட்டார். பகத்சிங் மற்றும் அவரது தோழர்கள் மீது நடத்தப்பட்ட வழக்கின் போது அவர்களைக் காக்க இவர் ரூபாய் 3,000 மதிப்புள்ள தனது ஆபரணங்களை விற்றார்.   [ சான்று தேவை ] இ.சோ.கு. அமைப்பின் உறுப்பினர்களில் ஒருவரான விமல் பிரசாத் ஜெயின் என்பவர் தில்லியில், வெடிகுண்டுகளைத் தயாரிக்க ஏதுவாக நடத்திவந்த 'இமாலயன் டாய்லெட்ஸ் என்ற தொழிற்சாலைக்கு துர்கா தேவி அவரது கணவருடன் சேர்ந்து உதவினார். இந்த தொழிற்சாலையில், இவர்கள் பைக்ரிக் அமிலம், நைட்ரோகிளிசரைன் மற்றும் பாதரசத்தின் பல்மினேற்று ஆகியவற்றைக் கையாண்டனர்.   [ சான்று தேவை ] 1928 டிசம்பர் 19 இல் சாண்டர்ஸ்சைக் கொன்ற இரண்டு நாட்களுக்குப் பிறகு, தேவியின் உதவியை சுக்தேவ் நாடினார். அவருக்கு உதவ தேவி ஒப்புக்கொண்டார். லாகூரில் இருந்து புறப்பட்டு ஹவுராவுக்கு (கல்கத்தா) பதிந்தா வழியாகச் செல்லும் தொடர்வண்டியை அடுத்த நாள் அதிகாலையில் பிடிக்க முடிவு செய்தனர். பகத் சிங்கின் மனைவிபோல அவர் நடித்ததுடன், தன் மகன் சச்சினையும் தனது மடியில் வைத்தார், அதே நேரத்தில் ராஜ்குரு அவர்களின் பணியாளராக நடித்தார். பிறர் தன்னை அடையாளம் காணக்கூடாது என்பதற்காக, பகத் சிங் அதற்கு முந்தைய நாளே தனது தாடியை மழித்தும், முடியை ஒட்ட வெட்டிக்கொண்டு மேற்கத்திய ஆடை அணிந்தபடி இருந்தார். உண்மையில், பகத் சிங் மற்றும் சுக்தேவ் ஆகியோர் 1928 திசம்பர் 19 அன்று இரவு தேவியின் வீட்டுக்கு வந்தபோதுதான், புதிய நண்பராக பகத் சிங் அறிமுகமானார். பகத் சிங்கை தேவியால் அடையாளம் காண இயலவில்லை. சுகதேவ் தேவியிடம் உண்மையைச் சொன்ன போது, பகத் சிங்கை அவர் நன்கு அறிந்திருந்தும், மீண்டும் மீண்டும் பார்த்தார். ஏனென்றால் ஒரு சீக்கியரான பகத் சிங்கை தேடும் காவல் துறையினரால் அடையாளம் காண இயலாதவாறு தாடியை மழித்திருந்தார்.   [ சான்று தேவை ] அடுத்த நாள் அதிகாலையில் அவர்கள் வீட்டை விட்டு வெளியேறினர். அந்த நிலையத்தில், தன் தோற்றத்தை மறைத்திருந்த பகத் சிங், கான்பூருக்கு மூன்று சீட்டுகள் வாங்கினார். தேவிக்கும் தனக்கும் என இரண்டு முதல் வகுப்பு சீட்டுகளும், வேலைக்காரனாக நடிக்கும் ராஜகுருவுக்கு சந்தேகம் வராதபடிக்கு மூன்றாம் வகுப்பு சீட்டும் எடுத்தார். யாரும் சந்தேகம் வராதபடி அவர்கள் இருவரும் சுற்றிவந்து ஏற்றினர். அவர்கள் காவல் துறையினரால் அடையாளம் காண இயலாதவாறு தொடர்வண்டியில் பயணம் செய்தனர். லாகூரில் இருந்து தொடர்ந்து பயணித்தவர்கள் ஹவுரா தொடர்வண்டி நிலையத்தில் சி.ஐ.டி.யினரால் கண்டுபிடிப்பதில் இருந்து தப்ப அவர்கள் இலக்னோவுக்கு பயணித்தனர். பனாரசில் ராஜ்குருவை தனியாக விட்டு பகத் சிங், தேவி மற்றும் குழந்தை ஆகியோர் ஹவுரா சென்றார். ஒரு சில நாட்களுக்குப் பின்னர், தேவி லாகூருக்குத் திரும்பினார்.[2]

பிற்கால வாழ்வு[தொகு]

மற்ற சுதந்திர போராளிகளைப் போலல்லாமல், இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு துர்கா ஒரு சாதாரண குடிமகளாக காசியாபாத்தில் யாரென்று தெரியாதவராக அமைதியாக மற்றவர்களிடமிருந்து விலகி வாழ்ந்து வந்தார். பின்னர் இவர் லக்னோவில் ஏழைக் குழந்தைகளுக்கு ஒரு பள்ளியைத் திறந்தார்.

1999 அக்டோபர் 15 அன்று துர்கா காசியாபாத்தில் தன் 92 ஆம் வயதில் இறந்தார்.[1]

மேலும் காண்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "The Tribune...Sunday Reading". Tribuneindia.com. பார்க்கப்பட்ட நாள் 9 November 2012.
  2. Bakshi, S. R. (1988). Revolutionaries and the British Raj. Atlantic Publishers. பக். 61. https://books.google.com/books?id=7_rWWDEgIQMC&pg=PA61. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=துர்காவதி_தேவி&oldid=2764593" இலிருந்து மீள்விக்கப்பட்டது