துன்ப அலைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

துன்ப அலைகள் வடமொழியில் துக்கத்திரயங்கள் எனப்படும். மக்களின் துன்ப அலைகளை மூன்று கோணங்களில் பார்ப்பது வழக்கம் என்பதை மறைஞான தேசிகர் சிவதருமோத்தர உரை என்னும் நூலில் மூன்று மேற்கோள் பாடல்களால் சுட்டுகிறார்.

பிறவி, சூழல், உயிரினம் என்னும் மும்முனைத் தாக்கங்கள் அவை. இவற்றை முறையே ஆதி-தைவிகம், ஆதி-பவுதிகம், ஆதியாத்மிகம் என்று வடநூலார் குறிப்பிடுகின்றனர். இவை எவை என்பதை விளக்கும் பாடல்கள்: [1]

1 பிறவியில் வரும் ஆதி-தைவிகம்

கருவில் துயர் செனிக்குங்காலை துயர் மெய்
திரை நரை மூப்பில் திளைத்துச் செத்து – நரகத்தின்
ஆழும் துயர் புவியை ஆள் இன்பு ஆதி எலாம்
ஊழ் உதவு தைவிகம் என்று ஓர்.

2 சூழலால் வரும் ஆதி-பவுதிகம்

பனியால் இடியால் படர் வாடையினால்
துனி தென்றலினாம் சுகமும் – தனை அணைய
நீரின் ஆம் இன்பு இன்னலும் நெருப்பின் ஆம் துயரின்
போரில் பவுதிகம் ஆகும்.

3 உயிரினங்களால் வரும் ஆதியாத்மியம்

தன்னால் பிறரால் தனக்கு வரும் தீங்கு நலம்
இன்னா விலங்கு அரவம் தேள் எறும்பு – செல் முதல் நீர்
அட்டை அலவன் முதலை மீன் அரவம் ஆதியின் ஆம்
கட்டம் இங்கு ஆத்மிகமே காண்

கருவிநூல்[தொகு]

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, மூன்றாம் பாகம், பதிப்பு 2005

அடிக்குறிப்பு[தொகு]

  1. வெண்பா யாப்பில் உள்ள இந்தப் பாடல்கள் பொருள் விளங்குமாறு சொற்பிரிப்பு செய்யப்பட்டுள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=துன்ப_அலைகள்&oldid=1289336" இலிருந்து மீள்விக்கப்பட்டது