உள்ளடக்கத்துக்குச் செல்

துடுப்பு நீராவிக் கப்பல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
1850களைச் சேர்ந்த ஒரு துடுப்பு நீராவிக் கப்பல்
ஐக்கிய அமெரிக்காவின் பிரான்சனில் டேபிள் ராக் ஏரியில் பயன்படும் ஒரு துடுப்பு நீராவிக் கப்பல். பின்புறம் துடுப்புச்சில்லு கொண்டது.

துடுப்பு நீராவிக் கப்பல் (paddle steamer) என்பது, உந்துவதற்காக துடுப்புச் சில்லுகளைப் பயன்படுத்தும் நீராவிக் கப்பல் ஆகும். உந்துகோல், துடுப்பு, பாய் போன்றவற்றின் வளர்ச்சிக்குப் பின்னர் துடுப்புச்சில்லு உருவானது. தொடக்ககாலத் துடுப்புச்சில்லுகள் விலங்கு அல்லது மனித ஆற்றலைப் பயன்படுத்தி இயக்கப்பட்டன. தற்காலத் துடுப்புச்சில்லுகள் டீசல் எந்திரங்களினால் இயக்கப்படுகின்றன. சுற்றுலாத் தேவைகளுக்கான படகுகளையும், பிற கேளிக்கைகளுக்கான சிறிய படகுகளையும் தவிர தற்காலத்தில் துடுப்புச் சில்லுகள் பயன்படுவதில்லை. தற்காலத்தில் கப்பல்களில், சிறப்பாக திறந்த கடலில் செல்லும் கப்பல்களில், துடுப்புந்திகளுக்குப் பதிலாக, கூடுதல் செயற்றிறன் கொண்ட திருகுமுறை உந்திகளும், கடல்சார்ந்த பிற உந்தி வகைகளும் பயன்படுகின்றன.

துடுப்புச்சில்லுகள்[தொகு]

துடுப்புச்சில்லுகள், எஃகுச் சட்டக அமைப்பிலான பெரிய சில்லு ஆகும். இதன் வெளிப்பக்க விளிம்பில் எஃகிலாலான பல துடுப்பு அலகுகள் வரிசையாகப் பொருத்தப்பட்டிருக்கும். கப்பல் கடலில் செல்லும்போது அதில் பொருத்தப்பட்டிருக்கும் துடுப்புச்சில்லின் கீழ் காற்பகுதி கடலுக்குள் அமிழ்ந்திருக்கும். சில்லைச் சுற்றுவதன் மூலம் உருவாகும் உந்துவிசை கப்பலை முன்புறம் அல்லது பின்புறமாகத் தள்ளுகிறது. தற்காலச் சில்லுகளில் துடுப்பு அலகுகள் நீருக்குள் இருக்கும் போது ஏறத்தாழ நிலைக்குத்தாக இருக்குமாறு வடிவமைக்கப்படுகின்றன. இது செயற்றிறனைக் கூட்டுகிறது. நீர் தெறிப்பதைத் தவிர்ப்பதற்காகத் துடுப்புச்சில்லின் மேற்பகுதி மூடப்பட்டிருப்பது வழக்கம்.

துடுப்பு நீராவிக் கப்பலின் வகைகள்[தொகு]

நீராவிக் கப்பலில் துடுப்புச்சில்லுகளைப் பொருத்தும் அடிப்படையான முறைகள் இரண்டு. ஒற்றைத் துடுப்புச்சில்லை கப்பலின் பின்பகுதியில் பொருத்துவது ஒரு வகை. இரண்டு பக்கங்களிலும், பக்கத்துக்கு ஒன்றாக இரண்டு சில்லுகளைப் பொருத்துவது இரண்டாவது முறை. பக்கவாட்டில் இரண்டு சில்லுகள் கூடுதலாக இருப்பதனால், இரண்டாவது வகைக் கப்பல்கள் அகலம் கூடியவை. பக்கச்சில்லுகள் ஒவ்வொன்றும் தனித்தனியாக வெவ்வேறு வேகங்களில் இயங்கவல்லவை. அத்துடன், இரண்டும் ஒன்றுக்கொன்று எதிர்த் திசையிலும் இயங்க முடியும். இது கப்பல் விரைவாகத் திரும்புவதற்கு உதவுகிறது.