துக்காச்சி ஆபத்சகாயேசுவரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிதிலமடைந்த நிலையில் ராஜகோபுரம்

துக்காச்சி ஆபத்சகாயேசுவரர் கோயில் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் வட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும்.

கோயில் உள்ள சோழர் காலக் கல்வெட்டுகளில் இக்கோயிலின் பெயர் திருக்காலத்தி மகாதேவர் கோயில் என்றும், ஊரின் பெயர் குலோத்துங்க சோழ நல்லூர் என்றும், இவ்வூர் உய்யக்கொண்டார் வளநாட்டில் இருந்தது என்றும் அறியவருகிறது.

அமைவிடம்[தொகு]

இக்கோயில் கும்பகோணத்திலிருந்து நாச்சியார்கோயில் வழியாக, அரசலாற்றங்கரைக்கு வடக்கே துக்காச்சி என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது. இரண்டாம் நந்திவர்ம பல்லவனின் (கி.பி. 730-795) பட்டப்பெயரான விடேல் விடுகு என்பதன் அடிப்படையில் துக்காச்சி என்று அழைக்கப்பட்டு வருகிறது. சோழ அரசர்களால் அமைக்கப்பட்ட இக்கோயில் சுமார் 1300 ஆண்டுகள் பழைமை வாய்ந்த பெருமையுடையதாகும்.[1]

தென் திருக்காளத்தி[தொகு]

இக்கோயில் தென் திருக்காளத்தி என்றும் அழைக்கப்படுகிறது. ஆந்திர மாநிலத்தில் உள்ள திருக்காளத்தி என்ற தலமானது காற்று பூத தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டதைப் போல இக்கோயில் அதற்கு இணையாக தென் காளத்தியாக விளங்குகிறது.[1]

இறைவன், இறைவி[தொகு]

இத்தலத்தின் மூலவர் ஆபத்சகாயேசுவரர் ஆவார். இறைவி சௌந்தர நாயகி என்றழைக்கப்படுகிறார்.[1]

அமைப்பு[தொகு]

சிற்ப வேலைப்பாடு மிக்க இக்கோயில் முன்னர் ஏழு திருச்சுற்றுகளைக் கொண்டிருந்ததாகவும், தற்போது மூன்று திருச்சுற்றுகளே உள்ளதாகவும் கூறப்படுகிறது. இங்குள்ள சரபேசுவரர் சன்னதி கும்பகோணம் வட்டத்திலுள்ள சரபேசுவரர் சன்னதிகளில் முதலாவது என்ற பெருமையுடையது.[2][3] மூலவரின் கருவறை விமானம் தாராசுரம் ஐராவதேசுவரர் கோயில் கருவறை விமானத்தின் அமைப்பைப் போல உள்ளது. மூலவர் கிழக்கு நோக்கிய நிலையில் உள்ளார். இறைவி தென்திசை நோக்கி நின்ற கோலத்தில் உள்ளார். முதல் திருச்சுற்றில் உள்ள துர்க்கை பிற கோயில்களில் உள்ளவாறு வடக்கு நோக்கி அமையாமல் தென்முகம் நோக்கி உள்ளார். மகாமண்டபத்தில் சரபேசுவரர் தென் திசை நோக்கி உள்ளார். இக்கோயிலில் குபேரன், வராகி, ஜேஷ்டா தேவி, சப்தகன்னிகள், தட்சிணாமூர்த்தி, கற்பக விநாயகர், வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகன், மகாலட்சுமி, லிங்கோத்பவர் ஆகியோர் உள்ளனர். சண்டிகேஸ்வரர் தென்திசை நோக்கி தனிச் சன்னதியில் உள்ளார்.[2]

குடமுழுக்கு[தொகு]

இக்கோயிலின் குடமுழுக்கு 3 செப்டம்பர் 2023இல் நடைபெற்றது. [4] [5]

மேற்கோள்கள்[தொகு]

படத்தொகுப்பு[தொகு]