தீர்த்தச் செம்பு
தீர்த்தத்தினை வழங்கும் செம்பு தீர்த்தச் செம்பென அழைக்கப்பட்டது. இதுவும் செம்பு வகையைச் சார்ந்திருந்தாலும் அதன் வடிவமும் தோற்றமும் தனித்துவமானது. இது மூடி, மூக்கு, பிடி ஆகியவற்றோடு மேற்புறம் ஒடுங்கி கீழே வர வர அகன்று அழுத்தமான அடிப்புறத்தைக் கொண்டிருக்கும்.
பயன்பாடு
[தொகு]ஆலயங்களில் தீர்த்தத்தினை வழங்குகின்ற ஆலயக் குருக்கள் அதனைப் பக்குவமாக ஒரு கையால் பாத்திரத்தின் பிடியினையும் மறு கரத்தால் நுனிப்புற மூடியையும் பிடித்த படி பக்குவமாக அத் தீர்த்தத்தினைப் பக்தர்களுக்கு வழங்குவார். பாரமும் தனித்துவமான தோற்றப்பாட்டினையும் கொண்டிருந்த இவ்வகைத் தீர்த்தச் செம்புகள் தற்காலங்களில் பாவனையில் இருந்து மறைந்து பாவனைக்கு இலகுவாகச் சிறு கிண்ணமும் கரண்டியும் கொண்ட பொருளாக மாற்றமடைந்து வருவதைக் காணலாம்.
இந்து மக்களின் பாரம்பரியத்தில் ஆலயங்களில் மாத்திரமன்றி சில இல்லங்களிலும் இவை பாவனையில் இருந்ததை அறிய முடிகிறது. வீடுகளில் நடைபெறும் சமய சம்பந்தமான கிரியைகளின் போதும்; குறிப்பாக சமய ஆசாரியார்கள் வீடுகளுக்கு வந்து நிகழ்த்தும் திவசம், ஆட்டத்திவசம், துடக்குக் கழிவுகள், மற்றும் மங்கல அமங்கல நிகழ்வுகளின் போதும் ஆசாரியாரின் தீர்த்தம் முதலானவற்றின் பாவனைக்காக இவை பாவிக்கப்பட்டன.
பித்தளையினாலான பலமான அடிப்புறமும் காத்திரமான பலமும் கொண்ட இப்பாத்திரமும் இப்போது பாவனையில் இருந்து மறைந்து வருகிறது.
வரலாறு
[தொகு]கி.பி.13ம் நூற்றாண்டின் இறுதியிலும் 14ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் இந்தியாவுக்கு வந்த முஸ்லிம்களின் வருகையோடு சித்திரவேலைப்பாடுகளும் இதனையொத்ததும் அதே நேரம் சற்றே வேறுபாடான அமைப்பினைக் கொண்டதுமான இப்பாத்திர வகைகள் இந்தியாவுக்கு அறிமுகப்படுத்தப்பட்டதாக நம்பப் படுகிறது. இந்திய ஓவியங்களில் இவ்வகையான பாத்திரங்கள் 17. ம் நூற்றாண்டுகளில் வெளிப்பட ஆரம்பித்திருக்கின்றன. அவை பின்னர் அலங்காரம், தோற்றப்பாடு, வடிவங்களில் இந்தியப் பாரம்பரியத்தோடும் இணைந்து பல்வேறு வடிவங்களில் வெளிப்பட்டது.
அக்காலங்களில் இவ்வகையான பாத்திரங்களை இஸ்லாமிய வாழ்க்கை முறையைப் பின்பற்றிய பாரத மக்கள் தம் வீட்டுக்கு வருகின்ற விருந்தினர்களை உபசரித்து அவர்களின் கைகளையும் கால்களையும் கழுவுவதற்கு இவ்வகையான பாத்திரங்களில் தண்ணீருக்கு வாசனையூட்டிப் பயன் படுத்தியதாக ஒரு குறிப்புக் காணப்படுகிறது.[1]
அங்கிருந்து பின்னர் ஏனைய நாடுகளுக்கு அவ் அவ் நாடுகளின் பயன்பாட்டு இயல்புகளுக்கு ஏற்றபடி உருமாறி இப் பாத்திர வடிவமைப்புகள் மற்றும் பாத்திரப் பயன்பாடுகள் பரவி இருக்கலாம்.