தீபக் வோரா
தீபக் வோரா | |
|---|---|
| ஆர்மீனியாவுக்கான இந்தியத் தூதர் | |
| பதவியில் 29 ஆகத்து 2001 – 26 சூலை 2005 | |
| முன்னையவர் | பால் ஆனந்த் |
| பின்னவர் | ரீனா பாண்டே |
| சூடானுக்கான இந்தியத் தூதர் | |
| பதவியில் 26 சூலை 2005 – 18 மார்ச்சு 2010 | |
| முன்னையவர் | அசோக் குமார் |
| பின்னவர் | சஞ்சய் குமார் வர்மா |
| போலந்துக்கான இந்தியத் தூதர் | |
| பதவியில் 18 மார்ச்சு 2010 – நவம்பர் 2011 | |
| முன்னையவர் | ராஜேஷ் வைஷ்ணவ் |
| பின்னவர் | மோனிகா கபில் மோஹ்தா |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 1951 புது தில்லி |
| குடியுரிமை | இந்தியன் |
| துணைவர் | ரேகா வோரா |
| பிள்ளைகள் | 2 |
| பெற்றோர் | ஜெனரல் வோரா |
| முன்னாள் மாணவர் | செயின்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரி, தில்லி தில்லி பல்கலைக்கழகம் தேசிய பாதுகாப்பு கல்லூரி, இந்தியா சோர்போன் பல்கலைக்கழகம் |
| தொழில் | தூதர் |
தீபக் வோரா (Deepak Vohra) ஓர் ஓய்வுபெற்ற இந்திய வெளிநாட்டுப் பணித் துறை அதிகாரியும் தூதருமானவர். இவர் ஆர்மீனியா, போலந்து, சூடான் ஆகிய நாடுகளுக்கான இந்தியத் தூதுவராகப் பணியாற்றியுள்ளார். மேலும், இந்தியாவின் முன்னாள் பிரதமர் பி. வி. நரசிம்ம ராவுக்கு தொழில்நுட்ப ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார்.
கல்வியும் தொடக்கப் பணிக்காலமும்
[தொகு]தீபக் வோரா தில்லியில் உள்ள செயிண்ட் கொலம்பா பள்ளியில் கல்வி பயின்றார். பின்னர், தில்லியில் உள்ள செயிண்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரியில் பட்டம் பெற்றார். அதன்பின், இந்திய தேசிய பாதுகாப்புக் கல்லூரி, பாரிசுபல்கலைக்கழகத்தில் மேற்படிப்பு பயின்றார்.[1][2] இந்திய வெளிநாட்டுப் பணியில் சேர்ந்த பிறகு, அப்போதைய இந்தியப் பிரதமர் பி. வி. நரசிம்ம ராவுக்கு தொழில்நுட்ப ஆலோசகராக இருந்தவரின் சிறப்புப் பணி அலுவலராக பணியாற்றினார்.[3] மேலும், சுலப் இன்டர்நேஷனல் அமைப்பிலும் பணியாற்றியுள்ள இவர், ஆப்பிரிக்காவில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் பல்வேறு பணிகளிலும் பங்கேற்றுள்ளார்.
இந்திய வெளிநாட்டுப் பணி
[தொகு]தீபக் வோரா பிரான்சு, துனிசியா, அமெரிக்கா, உருசியா, சாட், கேமரூன், பப்புவா நியூ கினியா, எசுப்பானியா, ஆர்மீனியா, சூடான், போலந்து ஆகிய நாடுகளில் பணியாற்றியுள்ளார். 1995 ஆம் ஆண்டு கோலாலம்பூரில் இந்தியாவின் துணை உயர்ஸ்தானிகராகப் பணியாற்றினார். பின்னர் போலந்திற்கான இந்தியத் தூதுவராகவும் இருந்தார்.[4]
பின்னைய பணிக்காலம்
[தொகு]2012 ஆம் ஆண்டு தெற்கு சூடான் அரசின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார். தனது பணிக்காலத்தின் தொடக்கத்தில், தூர்தர்ஷனில் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராகவும் பணியாற்றினார். கார்கிலில் அமைந்துள்ள அபதி போர் நினைவகத்தை இவர் திறந்து வைத்தார்.[5][6] 2025 ஆம் ஆண்டு செப்டம்பரில், தில்லியில் உள்ள லேடி ஸ்ரீராம் கல்லூரியில் அவர் நிகழ்த்திய உரையில் பெண்களை இழிவுபடுத்தும், பிற்போக்கான கருத்துகள் இடம்பெற்றதாகக் கூறி, மாணவர்கள் குழு இவரது கருத்துகளை கண்டித்து, மன்னிப்பு கோர வேண்டும் என்று வலியுறுத்தியது.[7]
ஊழலும் பிற குற்றச்சாட்டுகளும்
[தொகு]தீபக் வோரா மீது ஊழல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. 2022 ஆம் ஆண்டு, இவர் சூடானில் பணியாற்றிய காலத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க மத்திய புலனாய்வு அமைப்பிற்கு இந்திய அரசு அனுமதி வழங்கியது. பொய்யான பயணச் செலவுக் கணக்குகளைச் சமர்ப்பித்தல், சந்தை விலையை விட அதிக விலைக்கு டீசல் வாங்குதல், இந்தியத் துணைத் தூதரக அலுவலகத்தை வாடகைக்கு எடுக்க கற்பனை நபர் அல்லது முகவருக்கு முகவர் கட்டணம் வழங்குதல், அதிக வாடகையில் அலுவலகக் கட்டடத்தை வாடகைக்கு எடுத்தல், அதிகாரப்பூர்வ வாகனம் இருந்தபோதும் தனியார் வாகனத்தை வாடகைக்கு எடுத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் இதில் அடங்கும்.[8] மேலும், சலுகைக் கடன் மோசடி தொடர்பாகவும் அவர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த அரசியல்வாதிகளுக்கு கையூட்டு வழங்கப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில், சில இந்திய நிறுவனங்கள் சலுகைக் கடன்களைப் பெற இடைத்தரகராக செயல்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டதையடுத்து, அமலாக்க இயக்குநரகமும் அவரது இல்லத்தில் சோதனை நடத்தியது.[9]
விருதுகள்
[தொகு]2013 ஆம் ஆண்டு, சூடான் நாட்டின் அதிபரால் வழங்கப்படும் அந்த நாட்டின் உயரிய குடிமக்கள் விருதான இரு நைல் ஆறுகளின் விருது (முதல் வகுப்பு) தீபக் வோராவுக்கு வழங்கப்பட்டது.[10]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Deepak Vohra" (PDF). Retrieved 3 January 2016. [தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Juba Airport officers accused of harassing Indian Ambassador - Sudan Tribune: Plural news and views on Sudan". 31 January 2009.
- ↑ "Surprise role". India Today. 23 May 2012. https://www.indiatoday.in/india/north/story/ex-diplomat-deepak-vohra-adviser-of-south-sudan-government-103084-2012-05-23. பார்த்த நாள்: 23 October 2018.
- ↑ "Shri Deepak Vohra appointed as the next Ambassador of India to Poland". Ministry of external affairs Government of India. Retrieved 3 January 2016.
- ↑ "Revisiting 20 Old Doordarshan News Readers and Anchors – AbhiSays.com".
- ↑ "Ambassador Deepak Vohra inaugurates Apati War Memorial at Kargil". Archived from the original on 2015-08-09.
- ↑ https://indianexpress.com/article/cities/delhi/lsr-students-slam-misogynistic-derogatory-remarks-by-ex-diplomat-deepak-vohra-during-lecture-demand-apology-10254810/
- ↑ https://economictimes.indiatimes.com/news/india/cbi-gets-govt-nod-to-prosecute-former-sudan-ambassador-deepak-vohra-in-financial-bungling-case/articleshow/89401994.cms?from=mdr
- ↑ https://economictimes.indiatimes.com/news/india/cbi-gets-govt-nod-to-prosecute-former-sudan-ambassador-deepak-vohra-in-financial-bungling-case/articleshow/89401994.cms?utm_source=contentofinterest&utm_medium=text&utm_campaign=cppst
- ↑ "Seminar on global mega trends held". Tribune India. 23 August 2023 இம் மூலத்தில் இருந்து 23 August 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230823080102/https://m.tribuneindia.com/2013/20130125/jaltrib.htm#8.