உள்ளடக்கத்துக்குச் செல்

தீனபந்து (மராத்தி இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தீனபந்து (Deenbandhu) என்பது பிரித்தானிய இந்தியாவின் புனேவிலிருந்து மராத்திய மொழியில் அச்சிட்டு வாராந்திர வெளியீடாக ஜனவரி 1877 இல் வெளிவந்த செய்தித்தாள் ஆகும்.[1] இது முதன்முறையாக உழைக்கும் மக்களைப்பற்றிய வெளிப்படையான செய்திகளை வெளியிட்டது.[2] விவசாயிகள், தொழிலாளர்களின் குறைகளையும் இது வெளிப்படுத்தியது.[3]

வரலாறு

[தொகு]

தீனபந்து, கிருஷ்ணராவ் பாண்டுரங்க பாலேக்கர் என்பவரால் (1850-1910) நிறுவப்பட்டது. மேலும், ஜோதிராவ் புலேவின் சத்யசோதாக் சமாஜம் (பொருள்: உண்மையைத் தேடுவோரின் சமூகம்) எனும் அமைப்பின் கருத்துகளை வெளியிடும் ஒரு கருவியாக பணியாற்றியது. பாலேக்கர் ஏறக்குறைய தீனபந்துவை ஏப்ரல் 1880 வரை நடத்தினார். அதன் பிறகு பத்திரிகை நிதி சிக்கல்கள் காரணமாக மும்பையிலிருந்து வெளிவந்தது. ஏற்கனவே பத்திரிக்கைக்காக எழுதிக் கொண்டிருந்த நாராயண் மேகாஜி லோகண்டே மும்பையிலிருந்து 1880 முதல் செய்தித்தாளை வெளியிட்டார். 1884 ஆம் ஆண்டில் தீனபந்து வாரத்திற்கு 1650 பிரதிகள் விற்றது. இதனால் கேசரிக்குப் பிறகு மும்பை மாகாணத்தில் வெளியாகும் மராத்தி அல்லது ஆங்கில-மராத்தி செய்தித்தாள்களில் இரண்டாவது இடத்தைப் பிடித்தது.

வாசுதேவ் பிர்ஜே என்பவர் 1903இல் பரோடாவை விட்டு மும்பைக்கு சென்ற பிறகு செய்தித்தாளின் ஆசிரியரானார். வாந்திபேயால் ஏற்பட்ட பிர்ஜேவின் அகால மரணத்திற்குப் பிறகு, 32 வயதேயான அவரது மனைவி தனுபாய் பிர்ஜே சொந்தமாக செய்தித்தாளை நடத்தும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். தனுபாய் பிர்ஜே 1908 முதல் 1913இல் இறக்கும் வரை தீனபந்துவை வெளியிட்டு வந்தார். ஸ்ரீராம் குண்டேகரின் கருத்துப்படி, பிராமணரல்லாதோ வெளியிட்ட பத்திரிகை வரலாற்றில் முதல் பெண் ஆசிரியர் தனுபாய் பிர்ஜே ஆவார். மராத்தி இதழில் அவர் முதல் பெண் ஆசிரியராகவும் இருந்தார். [4]

தற்போதைய நிலை

[தொகு]

லோகண்டே மும்பையிலிருந்து தீனபந்துவை வெளியிட்ட போது, ​​புலேவின் அபிமானரான விட்டல் மருத்ராவ் நவ்லே புனேவில் ஒரு பதிப்பை வெளியிடும் உரிமையை வாங்கினார். அவர் ஒகையோவிலிருந்து ஒரு அச்சு இயந்திரத்தை இறக்குமதி செய்தார். அது 1970களில் வெளியிடுவதை நிறுத்தும் வரை செய்தித்தாளைத் தயாரித்தது. இந்த அச்சகம் 2013 வரை புனேயில் இருந்தது. அது இன்னும் நவ்லே குடும்பத்திற்கு சொந்தமாக இருக்கிறது. எனினும், அது கணிசமான சிதைவு, பழுதுபட்ட நிலையில் இருந்தது. அதை பாதுகாக்க முடியுமா என்று மாநில அரசு பரிசீலித்து வந்தது.[5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. O'Hanlon, Rosalind (2002). Caste, Conflict and Ideology: Mahatma Jotirao Phule and Low Caste Protest in Nineteenth-Century Western India (Reprinted, revised ed.). Cambridge University Press. p. 244. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-52152-308-0.
  2. Kidambi, Prashant (2016). The Making of an Indian Metropolis: Colonial Governance and Public Culture in Bombay, 1890-1920. Routledge. p. 271. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-35188-624-6.
  3. Phadke, Y. D. Social Reformers of Maharashtra. Maharashtra Information Centre.
  4. "तानुबाई बिर्जे : शतकापूर्वीची मराठी स्त्री-संपादक". Loksatta (in மராத்தி). 2016-03-06. பார்க்கப்பட்ட நாள் 2020-02-03.
  5. "Once the voice of Phule, Deenbandhu press rusting away into oblivion". 22 September 2013. http://archive.indianexpress.com/news/once-the-voice-of-phule-deenbandhu-press-rusting-away-into-oblivion/1172532/0. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தீனபந்து_(மராத்தி_இதழ்)&oldid=3212159" இலிருந்து மீள்விக்கப்பட்டது