தி பிக் ஸ்லீப்
| தி பிக் ஸ்லீப் The Big Sleep | |
|---|---|
Theatrical release lobby card | |
| இயக்கம் | ஹோவர்ட் ஹாக்ஸ் |
| தயாரிப்பு | ஹோவர்ட் ஹாக்ஸ் |
| திரைக்கதை | வில்லியம் பால்க்னர் லீ பிராக்கெட் ஜூல்ஸ் ஃபர்த்மன் |
| இசை | மேக்ஸ் ஸ்டைனர் |
| நடிப்பு |
|
| ஒளிப்பதிவு | சிட்னி ஹிக்காக்ஸ் |
| படத்தொகுப்பு | கிறிஸ்டியன் நைபி |
| கலையகம் | வார்னர் புரோஸ். பிக்சர்ஸ் |
| விநியோகம் | வார்னர் புரோஸ். பிக்சர்ஸ் |
| வெளியீடு | ஆகத்து 23, 1946 (நியூயார்க்கு நகரம் premiere) ஆகத்து 31, 1946 (US) |
| ஓட்டம் |
|
| நாடு | அமெரிக்கா |
| மொழி | ஆங்கிலம் |
| ஆக்கச்செலவு | $1.6 மில்லியன்[1] |
| மொத்த வருவாய் | $4.9 மில்லியன்[1] |
தி பிக் ஸ்லீப் (The Big Sleep) என்பது ஹோவர்ட் ஹாக்ஸ் இயக்கிய 1946 ஆம் ஆண்டு அமெரிக்க குற்றவியல் திரைப்படம் ஆகும். இப்படத்திற்கு வில்லியம் பால்க்னர், லீ பிராக்கெட் , ஜூல்ஸ் ஃபர்த்மேன் ஆகியோர் இணைந்து திரைக்கதையை எழுதினர். இது ரேமண்ட் சாண்ட்லரின் 1939 ஆண்டு புதினத்தைத் தழுவி எடுக்கப்பட்டது. மிரட்டலுடன் தொடங்கி பல கொலைகளுக்கு வழிவகுக்கும் இக்கதையில், தனியார் துப்பறிவாளர் பிலிப் மார்லோவாக ஹம்பிறி போகார்ட்டும், விவியன் ரட்லெட்ஜாக லாரன் பக்காலும் நடித்துள்ளனர்.
1944-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தயாரிக்கப்பட்ட இந்தப் படத்தின் வெளியீடு ஒரு ஆண்டுக்கும் மேலாகத் தாமதமானது. ஏனெனில் இரண்டாம் உலகப் போர் முடிவடையும் என்ற எதிர்பார்ப்பில் தயாரிப்பு நிறுவனம் போர் படங்களை வெளியிட விரும்பியது. படம் முழுமையாக முடிவடைந்த சிறிது காலத்திலேயே, 1945-ஆம் ஆண்டில், வெளிநாடுகளில் பணியில் இருந்த படைவீரர்களுக்காகப் படத்தின் ஒரு சிறப்புத் தொகுப்பு வெளியிடப்பட்டது. இந்தத் தாமதத்தக் கால இடைவெளியில், போகார்ட்டும் பக்காலும் திருமணம் செய்துகொண்டனர், மேலும் பக்கால் கான்ஃபிடென்ஷியல் ஏஜென்ட் படத்தில் நடிக்கத் ஒப்பந்தம் செய்யபட்டார். அந்தப் படம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, "போகி மற்றும் பக்கால்" இணையின் மீதான பொதுமக்களின் ஈர்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளும் நோக்கில், 1946-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தி பிக் ஸ்லீப் படத்தின் சிலகாட்சிகள் மீண்டும் படமாக்கபட்டன.
தி பிக் ஸ்லீப் திரைப்படம் இறுதியாக வார்னர் புரோஸ். பிக்சர்ஸ் நிறுவனத்தால் 1946 ஆகத்து 31 வெளியிடப்பட்டது. இப்படம் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றி வெற்றி பெற்றதுடன், வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தின் மேலும் இரண்டு "போகி மற்றும் பக்கால்" திரைப்படங்களான டார்க் பாசேஜ் (1947), கீ லார்கோ (1948) ஆகியவை வெளிவர வழிவகுத்தது. 1997 ஆம் ஆண்டில், 1945 ஆம் ஆண்டின் அசல் பதிப்பு மீட்டெடுக்கப்பட்டு வெளியிடப்பட்டது. அதே ஆண்டில், அமெரிக்காவின் காங்கிரஸ் நூலகம் இப்படத்தை "பண்பாட்டு ரீதியாக, வரலாற்று ரீதியாக அல்லது அழகியல் ரீதியாக குறிப்பிடத்தக்கது" என்று கருதி, தேசிய திரைப்படப் பதிவேட்டில் சேர்த்தது. [2] [3]
கதைக்களம்
[தொகு]லாஸ் ஏஞ்சல்சில் பகழ்பெற்ற தனியார் துப்பறிவாளரான பிலிப் மார்லோ, ஜெனரல் ஸ்டெர்ன்வுட்டின் மாளிகைக்கு அழைக்கப்படுகிறார். புத்தக விற்பனையாளர் ஆர்தர் கெய்கருக்குத் தன் மகள் கார்மென் செலுத்த வேண்டிய சூதாட்டக் கடன்கள் குறித்த சிக்கல்களைத் தீர்க்க அவர் விரும்புகிறார். மார்லோ அங்கிருந்து புறப்படும்போது, ஸ்டெர்ன்வுட்டின் மூத்த மகள் விவியன் அவரை சந்திக்கிறாள். ஒரு மாதத்திற்கு முன்பு காணாமல் போன தன் தந்தையின் நண்பர் ஷான் ரீகனைக் கண்டுபிடிக்கத்தான், தன் தந்தை மார்லோவை அழைத்திருக்கும் காரணமாக இருக்குமோ என்று அவள் சந்தேகிக்கிறாள்.
கெய்கரின் புத்தகக் கடைக்குச் செல்லும் மார்லோ, கெய்கரைப் பின்தொடர்ந்து அவர் வீடுவரை செல்கிறார். திடீரென துப்பாக்கிச் சத்தமும், ஒரு பெண்ணின் அலறல் சத்தத்தையும் கேட்டு, மார்லோ உள்ளே நுழைகிறார். அங்கே கெய்கர் பிணமாக கிடக்கிறார். அங்கே போதையில் இருந்த கார்மெனையும், படச்சுருள் இல்லாத ஒரு மறைக்கப்பட்ட ஒளிப்படமியையும் (கேமரா) காண்கிறார். கார்மெனை விவியனின் வீட்டிற்கு அழைத்துச் சென்று விட்டுவிட்டு பிறகு திரும்பி வந்து மார்லோ பார்க்கும்போது, கெய்கரின் பிணம் அங்கு இல்லை. அடுத்த நாள் ஸ்டெர்ன்வுட்டின் ஓட்டுநரான ஓவன் டெய்லர் கடலில் இருந்து பிணமாக மீட்கப்படுகிறான்.
இதற்கிடையில் கார்மனின் ஆபாச ஒளிப்படங்களை வைத்து ஒரு கும்பல் மிரட்டுவதாக மார்லோவிடம் விவியன் முறையிடுகிறாள்.
விசாரணையில், சூதாட்டக்காரரான ஜோ பிரோடி அந்த ஒளிப்படங்களை ஓவன் டெய்லரிடமிருந்து பறித்து, தன் காதலி ஆக்னஸ் மூலம் மிரட்டியுள்ளான் என்று தெரியவருகிறது. விசாரணையின் போதே கெய்கரின் ஒட்டுநர் கரோல் ஜே பிரோடியைச் சுட்டுக் கொல்கிறான். மார்லோ அவனைக் கைது செய்ய உதவுகிறார்.
விவியன் மூலம் ஷான் ரீகனுக்கும், நிழலுகத் தலைவர் எடி மார்சின் மனைவி மனோவுக்கும் தொடர்பு இருப்பதை மார்லோ அறிகிறார். மார்லோ, மார்சின் சூதாட்ட விடுதிக்குச் சென்று, மார்சின் மனைவியுடன் ரீகன் ஓடிப்போனதைப் பற்றி விசாரிக்கையில் எடி மார்ஸ் ஆத்திரம் கொள்கிறான். பின்னர் ஹாரி என்வன் மூலம் ஆக்னசைச் சந்திக்கும் மார்லோ, மானோ மறைந்திருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்கிறார்.

ஆனால், மார்சின் கையாளான கனினோ, ஹாரியை நஞ்சு கொடுத்து கொல்கிறான்.
ரியாலிட்டோ என்ற ஊரில் மானோவைச் சந்திக்கும் மார்லோ, ஷான் ரீகன் மனோவுடன் ஓடிப்போகவில்லை, அது எடியால் கிளப்பி விடபட்ட கட்டுக் கதை என்பதை அறிகிறார். ஷான் ரீகனை விரும்பிய கார்மென், தன்னை ஏற்க கறுத்த அவனை போதையில் கொன்றுவிட்டாள். இதை வைத்தே எடி மார்ஸ், விவியனை மிரட்டி பணம் பறித்து வந்துள்ளான்.
ஜெனரல் ஸ்டெர்ன்வுட் குடும்பத்தின் மரியாதையைக் காக்க, ஷான் ரீகனை எடி மார்ஸ் கொன்றதாக காவல் துறைக்கு மார்லோ தகவல் கொடுக்கிறார். விவியனும் மார்லோவும் இணைகின்றனர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Warner Bros financial information in The William Schaefer Ledger. See "Appendix 1", Historical Journal of Film, Radio and Television (1995), 15:sup1, p. 26 எஆசு:10.1080/01439689508604551.
- ↑ "Complete National Film Registry Listing". National Film Preservation Board. Library of Congress. Retrieved 2020-09-17.
- ↑ "New to the National Film Registry (December 1997)". Library of Congress Information Bulletin. Retrieved 2020-09-17.