தி கைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தி கைடு
நூலாசிரியர்ஆர். கே. நாராயணன்
நாடுஇந்தியா
மொழிஆங்கிலம்
வகைமெய்யுணர்வார்ந்த புதினம்
வெளியீட்டாளர்Viking Press (US)
Methuen (UK)
வெளியிடப்பட்ட நாள்
1958
ஊடக வகைPrint (hardcover & paperback)
பக்கங்கள்220 pp
ISBN0-670-35668-9 (first American edition)
OCLC65644730

தி கைடு (The Guide) என்பது 1958 ஆம் ஆண்டு இந்திய எழுத்தாளர் ஆர். கே. நாராயணனால் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட ஒரு புதினம் ஆகும். அவரது பெரும்பாலான படைப்புகளைப் போலவே இந்தப் புதினமும் தென்னிந்தியாவின் கற்பனை நகரமான மால்குடியை அடிப்படையாகக் கொண்டது. கதாநாயகன் ராஜு, ஒரு சுற்றுலா வழிகாட்டியிலிருந்து ஆன்மீக வழிகாட்டியாகவும், பின்னர் இந்தியாவின் மிகப் பெரிய புனிதர்களில் ஒருவராகவும் மாறுவதை புதினம் விவரிக்கிறது.

இந்த புதினம் நாராயணனுக்கு 1960 ஆம் ஆண்டு சாகித்திய அகாதமியின், ஆங்கிலத்திற்கான சாகித்ய அகாதமி விருதை பெற்றுத் தந்தது.[1] 2022 ஆம் ஆண்டில், இரண்டாம் எலிசபெத்தின் எழுபதாம் பிறந்த நாளான பிளாட்டினம் ஜூபிலி கொண்டாடத்தை முன்னிட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட காமன்வெல்த் எழுத்தாளர்களின் 70 புத்தகங்களின் "பிக் ஜூபிலி ரீட்" பட்டியலில் இந்த நூலும் சேர்க்கப்பட்டது.[2]

கதை சுருக்கம்[தொகு]

ராஜு (புனைப்பெயர்: ரயில்வே ராஜு) சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமான ஒரு மோசடி சுற்றுலா வழிகாட்டியாக உள்ளார். அவர் தொல்லியல் ஆய்வாளர் மார்கோவின் மனைவியான ரோசி என்ற அழகான நடனக் கலைஞரைக் காதலிக்கிறார். தென்னிந்தியாவின் கற்பனை நகரமான மால்குடிக்கு சுற்றுலாப் பயணிகளாக அவர்கள் வந்துள்ளனர். ரோசியின் நடன ஆர்வத்தை மார்கோ ஏற்கவில்லை. ரோசியின் நடன ஆர்வத்தை ராஜு ஊக்குவிக்கிறார். இதனால் ரோஸி, தன் கனவுகளை நனவாக்க நடன வாழ்க்கையைத் தொடங்க முடிவு செய்கிறாள். இச் செயல்பாட்டில், அவர்கள் இருவரும் நெருக்கமாகிறார்கள். அவர்களின் உறவை அறிந்த மார்கோ, ரோசியை மால்குடியிலேயே விட்டுவிட்டு தனியாக மதராஸ் செல்கிறார். ரோசி ராஜுவின் வீட்டிற்கு வருகிறார், அவர்கள் ஒன்றாக வாழத் தொடங்குகிறார்கள். ஆனால் ராஜுவின் தாய் இவர்களது உறவை ஏற்காமல் அவர்களை விட்டு பிரிந்து செல்கிறார். ராஜு ரோசியின் கலைவாழ்வின் மேலாளராகிறார். விரைவில், ராஜுவின் சந்தைப்படுத்தல் உத்திகளின் உதவியுடன், ரோசி ஒரு வெற்றிகரமான நடனக் கலைஞராக மாறுகிறார். இந்நிலையில் ராஜு, தற்செருக்கு உடையவராகவும், பணத்தாசை கொண்டவராகவும் மாறுகிறார். பின்னர் ரோசியின் கையெழுத்தை போலியாக போட்ட வழக்கில் ராஜு சிக்குகிறார். அவரைக் காப்பாற்ற ரோசி எவ்வளவோ முயற்சி செய்த போதிலும் இரண்டு ஆண்டு சிறைத்தண்டனையை ராஜு பெறுகிறார். தண்டனை காலம் முடிந்த முடித்த பிறகு, ராஜு மங்கள் என்ற கிராமத்தை கடந்து செல்கிறார், அங்கு அவரை ஒரு சாது என்று தவறாக நினைக்கிறார்கள். அவமானத்துடன் மால்குடிக்குத் திரும்ப விரும்பாததால், அ்ந்த கிராமத்திற்கு அருகாமையில் உள்ள பாழடைந்த கோவிலில் தங்க முடிவு செய்கிறார். அங்கு அவர் சாதுவாக நடிக்கிறார். கிராம மக்களிடையே பிரசங்கங்கள் செய்கிறார். மேலும் அவர்களின் அன்றாட பிரச்சனைகள் மற்றும் தகராறுகளை தீர்க்கிறார். அதன்பிறகான காலத்தில் கிராமத்தில் பஞ்சம் ஏற்படுகிறது. கிராமத்தில் மழைபொழிய வேண்டும் என்பதற்காக ராஜு உண்ணாநோன்பு இருப்பார் என்ற கருத்து கிராம மக்களிடையே ஏற்படுகிறது. ராஜுவை கோவிலில் முதன்முதலில் பார்த்து, மற்ற கிராமவாசிகளைப் போலவே அவர் மீது நம்பிக்கையை வளர்த்துக் கொண்ட வேலனிடம் ராஜு தனது கடந்த கால உண்மையைப் பற்றிய கூறுகிறார். அவரின் அந்த வாக்குமூலத்தால் வேலனின் நடத்தையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. ராஜு உண்ணாநோன்பை மேற்கொள்ள முடிவு செய்கிறார். அவரது உண்ணாநோன்பு குறித்து ஊடகங்கள் வெளியிட்டதால், அவரது உண்ணாவிரதத்தைப் பார்க்க பெரும் கூட்டம் கூடுகிறது. நோன்பின் பதினோராம் நாள் காலையில், அவர் தனது அன்றாட சடங்குகளின் ஒரு பகுதியாக ஆற்றங்கரைக்குச் செல்கிறார். தொலைவில் உள்ள மலைகளில் மழை பெய்வதை உணர்கிறார், அவர் மூழ்குகிறார். மழை பெய்ததா, அல்லது ராஜு இறந்தாரா என்பது தெரியவில்லை. இது வாசகரின் கற்பனைக்கே விடப்படுகிறது.

தழுவல்கள்[தொகு]

இப் புதினத்தை அடிப்படையாகக் கொண்டு 1965 இல் கைடு திரைப்படம் வெளியானது.[3] இதை விஜய் ஆனந்த் இயக்கியிருந்தார். இதில் ராஜுவாக தேவ் ஆனந்த், ரோசியாக வஹீதா ரெஹ்மான் மற்றும் முக்கிய வேத்தில் லீலா சிட்னீஸ் நடித்தனர். படத்திற்கான இசையை எஸ். டி. பர்மன் அமைத்திருந்தார். திரைப்படத்தின் முடிவு புதினத்தின் முடிவிலிருந்து வேறுபட்டதாக இருந்தது.

120 நிமிட அமெரிக்க பதிப்பை பேர்ல் எஸ். பக் எழுதினார், மேலும் டாட் டேனிலெவ்ஸ்கி இயக்கி தயாரித்தார். இப்படம் வெளியான 42 ஆண்டுகளுக்குப் பிறகு 2007 கான் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.

இந்த புதினத்தை தழுவி 1968 இல் நாடகம் உருவாக்கப்பட்டது.[4] இந்த நாடகம் வில்லியம் கோல்ட்மேன் நூலான தி சீசன்: எ கேண்டிட் லுக் அட் பிராட்வேயில் விவரிக்கப்பட்டது.

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தி_கைடு&oldid=3747754" இருந்து மீள்விக்கப்பட்டது