உள்ளடக்கத்துக்குச் செல்

தி ஏஜ் ஆஃப் கலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தி ஏஜ் ஆஃப் கலி
நூலாசிரியர்வில்லியம் தால்ரிம்பில்
நாடுஐக்கிய இராச்சியம்
மொழிஆங்கிலம்
பொருண்மைபயணம்
வகைஅபுனைவு
வெளியீட்டாளர்பெங்குயின் புக்ஸ்
வெளியிடப்பட்ட நாள்
1998
பக்கங்கள்400 pp.
ISBN978-0307948908
OCLC1336313297
முன்னைய நூல்ஃபரம் தி ஹோலி மவுண்டன்
அடுத்த நூல்ஒயிட் முகல்ஸ்

தி ஏஜ் ஆஃப் கலி (பொருள்: கலிகாலம்) என்பது 1998 ஆம் ஆண்டு வில்லியம் தால்ரிம்பில் எழுதிய ஒரு பயண நூலாகும். இந்த புத்தகத்தின் கருப்பொருளாக இந்தியத் துணைக்கண்டத்திலும், உலகிலும் பிரச்சனைகள் ஏற்படும் கலி யுகம் குறித்த இந்துக்களின் நம்பிக்கை உள்ளது.

இந்த நூல் வெளியிடப்பட்ட காலத்தில் இந்தப் பிராந்தியத்தில் நிலவிய பல முக்கிய சர்ச்சைகள் குறித்த ஒரு பார்வையை இந்த நூல் தருகிறது. அந்த நிகழ்வுகளில் ஈடுபட்ட மனிதர்களுடனான நேர்காணல்களும் இதில் இடம்பெற்றுள்ளன.

வெளியீடு

[தொகு]

டால்ரிம்பிளின் நான்காவது புத்தகமான தி ஏஜ் ஆஃப் கலி (1998), வழியாக இந்தியா மீதான தனது ஈர்ப்பை மீண்டும் காட்டியுள்ளார். இது இந்தியாவில் அட் தி கோர்ட் ஆஃப் தி ஃபிஷ்-ஐட் காடஸ் (At the Court of the Fish-Eyed Goddess) என்று மறுபெயரிடப்பட்டது. ("ஃபிஷ்-ஐட் காடஸ்" என்பது மதுரை மீனாட்சியைக் குறிக்கிறது.)

அத்தியாயம் வாரியாக சுருக்கம்

[தொகு]

இந்தப் புத்தகம் இந்திய துணைக் கண்டத்தில் கிட்டத்தட்ட பத்தாண்டு காலம் ஆசிரியர் மேற்கொண்ட பயணத்தின் மூலம் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு இடம்பெற்றுள்ளது.

இது சதி, இந்தியாவில் சாதியப் போர்கள், அரசியல் ஊழல், பயங்கரவாதம் போன்ற பல சர்ச்சைக்குரிய விசயங்களைக் கையாள்கிறது.

தி ஏஜ் ஆப் கலி: பட்னா, 1998

[தொகு]

பட்னா பற்றிய இந்த அத்தியாயம், 1992 பிப்ரவரி 13 அன்று பீகாரில் உள்ள பாராவில் மாவோஸ்டுகளால் உயர் சாதியினரான பூமிகார்கள் கொல்லப்பட்டது குறித்தது விவாதங்கள் உள்ளன; ஆனந்த் மோகன் சிங்கின் கைது மற்றும் அரசியல் பாணி; பாட்னாவில் வன்முறை; லாலு பிரசாத் யாதவின் தன்விவரமும், நேர்காணலும் உள்ளடக்கியது.

இன் தி கிங்டம் ஆப் அவத்: லக்னோ, 1998

[தொகு]

இந்த அத்தியாயம் 19 ஆம் நூற்றாண்டின் இலக்னோவின் பண்பாடு; லக்னோவின் வீழ்ச்சி; கவிஞர் மிர் தாகி மிர் ; தில்குஷா அரண்மனை; தவாய்ஃப் (வேசிப் பாடகர்) துணைப் பண்பாடு பற்றிய விவாதங்களைக் கொண்டது. முதிர்ந்த கவிஞரும், தீவிர எழுத்தாளரும், வரலாற்றாசிரியருமான முஷ்டாக் நக்வி மற்றும் இளவரசரான சுலைமான் மஹ்முதாபாத் ஆகியோருடனான நேர்காணல்கள் கட்டுரையில் உள்ளன.

தி சிட்டி ஆப் விடோ: பிருந்தாவன், உத்தரப் பிரதேசம், 1997

[தொகு]

பிருந்தாவனத்தைப் பற்றிய இந்த அத்தியாயம், அங்கு ஓய்வு பெற்ற கைம்பெண்களின் வாழ்க்கையையும், கைம்பெண்களுக்கு உதவி வழங்கும் அமைப்புகளில் உள்ள ஊழலையும் விவாதிக்கிறது.

வாரியர் குயின்: குவாலியர், 1993

[தொகு]

குவாலியரைப் பற்றிய இந்த அத்தியாயத்தில் பாரதிய ஜனதா கட்சியின் இணை நிறுவனர் விஜய ராஜே சிந்தியாவுடனான நேர்காணல் மற்றும் ஜெய் விலாஸ் அரண்மனை மற்றும் பாபர் மசூதி பற்றிய விவாதங்கள் அடங்கியுள்ளன.

ஈஸ்ட் ஆப் ஈட்டன்: லக்னோ, 1997

[தொகு]

இந்த அத்தியாயம் 1997 ஆம் ஆண்டு லக்னோவின் லா மார்டினியர் கல்லூரியில் பயிற்றுவிப்பாளர் ஒருவரின் கொலை பற்றிய விவரங்களைக் கொண்டுள்ளது. இது இந்திய கல்வியில் காலனித்துவ செல்வாக்கை விவரிக்கிறது. மேலும் லக்னோ பல்கலைக்கழக மாணவர் சங்கம் திட்டமிட்ட குற்றங்களை ஏற்பாடு செய்வது பற்றிய சில நிகழ்வுகளை குறிப்பிடுகிறது.

தி சேட் டெல் ஆப் பஹ்வேரி தேவி: பட்டேரி, ஜெய்ப்பூர், 1994

[தொகு]

இந்த அத்தியாயத்தில், தனது பகுதியில் நடக்கும் குழந்தை திருமணத்தைப் பற்றித் தெரிவிக்க அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட சமூகப் பணியாளர் பன்வாரி தேவியுடன் ஒரு நேர்காணல் உள்ளது. அவர் பழிவாங்கும் விதமாக கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை என்று கூறும் அரசியல் ரீதியாக தூண்டப்பட்டவர்களின் நேர்காணல்களும் இதில் அடங்கும்.

கேஸ்ட் வார்ஸ்: ஜோத்பூர், ராஜஸ்தான், 1990

[தொகு]

இந்த அத்தியாயம், இதர பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கான மண்டல் ஆணைக்குழுவின் பரிந்துரைகளை வி. பி. சிங் 1990 இல் செயல்படுத்தியதற்கு எதிர்வினையாக, பிராமண மாணவர் ராஜீவ் கோஸ்வாமியின் தீக்குளிப்பு கதையைக் கூறுகிறது. மேலும் சாதி அரசியலை மேலும் விவாதிக்கிறது.

சதி மாதா: தியோராலா, ஜெய்ப்பூர், 1997

[தொகு]

இந்த அத்தியாயம் 1987 ஆம் ஆண்டு இறந்த கணவரின் இறுதிச் சடங்கின் போது உடன்கட்டை ஏறி இறந்த 18 வயது பெண் ரூப் கன்வரைப் பற்றிப் பேசுகிறது. ஆசிரியர் தியோராலாவில் மக்களை நேர்காணல் செய்து, 19 ஆம் நூற்றாண்டின் உடன்கட்டை நடைமுறையின் வரலாற்றைப் பற்றிய ஒரு விவரிப்பைத் தருகிறார்.

டூ பாம்பே போர்ட்ரைட்டிஸ்: பம்பாய் 1993 அண்ட் 1992

[தொகு]

இந்த அத்தியாயம் இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளது. முதல் பகுதி இந்திய சொல்லிசை பாபா சேகலின் படைப்புகளைப் பற்றி விவாதிக்கிறது. இது இந்திய இசைத் துறையையும் விவரிக்கிறது மேலும் ரெமோ பெர்னாண்டஸ், ஸ்டார் தொ.கா நெட்வொர்க், சாஜன் திரைப்படத்தின் இசைப்பதிவின் வெற்றியைப் பற்றி விவாதிக்கிறது.

இரண்டாம் பகுதி இந்திய ஊடகங்களில் பாலியல் சித்தரிப்பு பற்றி விவாதிக்கிறது. மேலும் பெண் கதாபாத்திரங்கள் மும்பையில் பாலியல் சந்திப்புகளைத் தேடுவது குறித்து காமப் புதினங்களை எழுதும் எழுத்தாளர் சோபா டேவின் நேர்காணலைக் கொண்டுள்ளது. இது மும்பை உயர் சமூக விருந்து காட்சியையும் திறனாய்வு செய்கிறது.

பெங்களூர் அண்ட் பாஸ்ட்-புட் இன்வாடர்ஸ்: பெங்களூர், 1997

[தொகு]

இந்த அத்தியாயத்தின் கருப்பொருளாக இந்திய ஏழை மக்களின் வாழ்க்கையில் உலகமயமாக்கல் தலையிடுவது குறித்து உள்ளது. பெங்களூர் கிராமப்புறத்தைச் சேர்ந்த 200 விவசாயிகள், நகரத்தில் உள்ள ஒரு கே எப் சி உணவகத்தை, அது இந்தியருடையது அல்ல என்றும், இறைச்சி பரிமாறுகிறது என்றும் சூறையாடிய ஒரு நிகழ்வோடு இது தொடங்குகிறது. அமெரிக்க உணவு நிறுவனமாக கார்கில் இந்தியாவில் இருப்பது, பெங்களூரில் உள்ள பணக்காரர்களின் நவீன பண்பாடு, வெளிநாட்டு வர்த்தகம் மற்றும் பெங்களூரில் 1996 ஆம் ஆண்டு உலக அழகி போட்டியை நடத்தியது குறித்த சர்ச்சை ஆகிய பிற தலைப்புகள் குறித்து விவாதிக்கபட்டுள்ளன. உலகமயமாக்கல் குறித்து கருநாடக மாநில விவசாயிகள் சங்கத்தின் தலைவர் பேராசிரியர் எம்.டி. நஞ்சுண்டசாமியை ஆசிரியர் நேர்காணல் செய்துள்ளார்.

அட் தி கோர்ட் ஆப் தி ஃபிஷ்-ஐடி காடிஸ்: மதுரை 1998

[தொகு]

மதுரையில் வழிபடப்படும் மீனாட்சி, பெயரிலான இந்த அத்தியாயத்தில் இப்பகுதியின் அரசியலின் வரலாற்றையும், நவீன காலத்தில் படித்த மக்கள் எவ்வாறு சமயத்தை மதிக்கத் தொடங்கினர் என்பதையும் விவாதிக்கிறது. இந்த அத்தியாயத்தில் கிமு 300 ஆம் ஆண்டு செங்கடல் செலவு என்ற ஆவணம், சிலப்பதிகாரக் காவியம், மீனாட்சி அம்மன் கோயில் ஆகியவற்றைப் பற்றியும் விவாதிக்கிறது.

அண்டர் தி சார் மினார்: ஐதராபாத், 1998

[தொகு]

இந்த அத்தியாயம், ஐதராபாத் நிசாமின் இறுதி அரசாங்கத்தின் போது துணைப் பிரதமராகவும், கட்டட ஆர்வலராகவும் இருந்த ஃபக்ரூல் முல்கின் பேரன் மிர் மோசம் உசைனின் நேர்காணலைக் கொண்டுள்ளது. மிர் ஹுசைன் போலோ நடவடிக்கையை நினைவு கூர்கிறார், மேலும் இந்தக் காலத்தில் உள்ளூரில் சூனியம் வைக்கும் நடைமுறைகள் பற்றியும் பேசுகிறார். ஆசிரியர் பழைய ஐதராபாத் இராச்சியத்தை கதையில் கூறப்படும் ருரிடானியாவுடன் ஒப்பிடுகிறார்.

பராசக்தி: கொச்சின், 1993

[தொகு]

கேரள அரசு மின் வாரியத்தின் ஓய்வுபெற்ற பொறியாளரான வேணுகோபால், நூலாசிரியரை சோட்டாணிக்கரைக்கு ஒரு சுற்றுப்பயணம் அழைத்துச் செல்கிறார். அங்கு மக்கள் பராசக்தியை வழிபடுவதற்கான காரணங்களைப் பற்றி விவாதிக்கின்றனர்.

அட் டோனா ஜார்ஜினாஸ்: ஃபோர்ட் அகுவாடா, கோவா, 1993

[தொகு]

இந்த அத்தியாயம், கோவாவின் போர்த்துகல் காலனித்துவத்தை அறிமுகப்படுத்துகிறது. அதில் அவர் டோனா ஜார்ஜினா என்ற வயதான கோவா பிரபுத்துவப் பெண்ணை நேர்காணல் செய்கிறார். டோனா ஜார்ஜினா கோவாவின் இரண்டு படையெடுப்புகளான - 1961 ஆம் ஆண்டு கோவாவை இந்தியாவுடன் இணைத்தது மற்றும் மேற்கத்திய கிப்பிகள் தங்கள் கடற்கரைகளுக்கு சுற்றுலாப் பயணிகளாக இடம்பெயர்ந்தது குறித்து விவாதிக்கிறார்.

அப் தி டைகர் பாத்: ஜாப்ணா, லங்கா, 1990

[தொகு]

ஆசிரியர் யாழ்ப்பாணத்திற்குச் சென்று தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களை நேர்காணல் செய்கிறார். பெண்கள் படைப்பிரிவு, சுதந்திரப் பறவைகள், இளைஞர்கள், படையின் தரவரிசை அமைப்புகள், அவர்களின் இராணுவ முகாம்கள் போன்றவை குறித்து கவனம் செலுத்துகிறார். இந்திய அமைதி காக்கும் படை இலங்கையை விட்டு வெளியேறும் நேரத்தில், ஆசிரியர் அன்ரன் பாலசிங்கம் மற்றும் பிற விடுதலைப் புலி உறுப்பினர்களை நேர்காணல் செய்கிறார்.

தி சோர்சரர்ஸ் கிரேவ்: செயிண்ட்-டெனிஸ், ரீயூனியன், 1998

[தொகு]

இந்த அத்தியாயம் ஆலிவர் லெவாசியரின் கதையையும், அவரது கல்லறையுடன் தொடர்புடைய ஆன்மீக சக்தி தொடர்பாக உள்ளூர் மக்களின் நம்பிக்கையை குறித்தும் உள்ளது. ரீயூனியன் பிரெஞ்சுத்தன்மையையும், இந்தியப் பண்பாட்டுடன் அதன் கலவை குறித்து ஆசிரியர் எழுதுகிறார். புனித எக்ஸ்பெடிடஸின் கதை கொடுக்கப்பட்டுள்ளது.

இம்ரான் கான் - டக் அவுட்: லாகூர், 1989 அண்ட் 1996

[தொகு]

இந்த அத்தியாயம் இரண்டு பகுதிகளாக உள்ளது. இரண்டிலும் இம்ரான் கானின் நேர்காணல்கள் உள்ளன. முதலாவது 1989 ஆம் ஆண்டு இம்ரான் பாக்கித்தான் துடுப்பாட்ட அணியில் ஒரு நட்சத்திர வீரராக இருந்தபோதும், இரண்டாவது கான் பாக்கித்தான் தெகுரீக்கே இன்சாபு என்ற அரசியல் கட்சியை நிறுவியபோதும் என உள்ளது.

ஆன் தி ஃபிரண்டியர்: பெஷாவர், 1989

[தொகு]

இன்று கைபர் பக்துன்க்வா என்று அழைக்கப்படும் வடமேற்கு எல்லைப் பகுதிக்கு நூலாசிரியர் சென்று, பின்னர் பழங்குடியினருக்கு ஏகே-47 துப்பாக்கிகளை விற்ற ஒரு இராணுவப் பொருட்கள் கடையின் உரிமையாளரை நேர்காணல் செய்கிறார். அவர் முன்னர் ஆப்கானிய உள்நாட்டுப் போர் மற்றும் பிற இராணுவ நடவடிக்கைகளில் பங்கேற்றவர்களுக்கு அதை வழங்கினார். அவர் கோதாலுக்குச் சென்று அங்குள்ள அபின் வணிகத்தை ஆய்வு செய்கிறார். 2300 ஆண்டுகளுக்கு முன்பு பேரரசர் அலெக்சாந்தர் அந்தப் பகுதியில் வாழ்ந்த காந்தாரத்தில் உள்ள கிரேக்க இடிபாடுகளின் வரலாற்றை இவர் கூறுகிறார்.

பிளட் ஆன் தி டிராக்: லாகூர், 1997

[தொகு]

இந்தியப் பிரிவினையின் போது தனக்கு ஏற்பட்ட அனுபவத்தைப் பற்றி ஓய்வுபெற்ற பாக்கித்தான் ரயில்வே ஊழியருடன் ஆசிரியர் பேசுகிறார். பிரிவினை பற்றிய மேலும் விவாதம் தொடர்கிறது.

பெனாசிர் பூட்டோ - மில்ஸ் & பூன் இன் கராச்சி: கராச்சி, 1994

[தொகு]

பெனசீர் பூட்டோவையும் அவரது தாய் நுஸ்ரத் பூட்டோவையும் அவர்கள் தனித்தனியாக வசிக்கும் வீடுகளில் நூலாசிரியர் நேர்காணல் செய்கிறார். அவர் அவர்களின் வீடுகள் பற்றிய விளக்கத்தையும் அவர்களின் வாழ்க்கை வரலாற்றின் சில பகுதிகளையும் விவரிக்கிறார். பெனாசிர் பூட்டோ ரசித்த காதல் நாவல்களின் தொடரான மில்ஸ் & பூன் தொடர்களைப் பற்றி கூறுகிறார்.

விமர்சனங்கள்

[தொகு]

இந்தப் புத்தகத்தை திறனாய்வு செய்த ராபர்ட் ட்விகர், "டால்ரிம்பிள் இந்தியாவின் குரலாக பி.பி.சியின் ஊடகவியலாளரான மார்க் டல்லியை முந்திச் சென்ற ஒரு பெரிய ஊடகவியலாளராக மாறிவிட்டார், மேலும் இந்தப் புத்தகம் இந்திய துணைக் கண்டத்தில் அல்லது அதற்கு அருகில் அமைந்துள்ள இடங்களையும், மக்களையும் பற்றிய 19 கட்டுரைகளின் தொகுப்பாக உள்ளது" என்று கூறினார். [1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Robert Twigger (9 January 1999). "A sure foot in both camps". findarticles.com. Retrieved 20 October 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தி_ஏஜ்_ஆஃப்_கலி&oldid=4343116" இலிருந்து மீள்விக்கப்பட்டது